கொலைக்குப் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும்: கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: ஆந்திர அரசு பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்ததுடன், வெளியே வந்த வழக்கறிஞர்கள் ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை காலணியால் அடித்து, உருவ பொம்மையை எரித்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு முற்றிலும் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து கரூர் நீதிமன்றத்தில், இன்றும், நாளையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.