வர்தா புயல்: சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை:

வர்தா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றமும், சில ரயில்களின் சேவை தற்காலிகமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் புயல் பழவேற்காடு- கும்மிடிப்பூண்டி இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வர்தா புயல் காரணமாக சென்னையில் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் சூளூர்பேட்டையிலிருந்து புறப்படும் சூளூர்பேட்டை – சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லூரில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் ரயில் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை நேரம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், பிற்பகலில் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை எந்த மாற்றமின்றி, வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சென்னை புறநகர் மின் ரயில்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தாற்காலிகமாக தாம்பரம் செல்லும் ரயில் சேவையும் நிறுத்தப் பட்டது.