அதிமுக வில் விஸ்வரூபம் எடுக்கும் ஒற்றை தலைமை ..ஜூன் 23ல் தெளிவான முடிவு எட்டப்படலாம்..

ஒற்றை தலைமை வேண்டும் என்று திடீரென்று அதிமுகவினர் குரல் சத்தமாக எழுப்பியுள்ள நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் – எடப்பாடி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் சென்னையில் தங்களது ஆதரவாளர்களுடன் 3வது நாளாக இன்று ஆலோசனை நடத்திவருகின்றனர். ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்தி செல்ல இரட்டை தலைமைக்கு (ஓபிஎஸ் – இபிஎஸ்) பதில் ஒற்றை தலைமையே சிறந்தது. அதனால் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பதவி முறையை மீண்டும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும். எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை உருவாக வேண்டும் என்ற கருத்தையே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசியுள்ளனர். வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே தற்போதுள்ள இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர். செங்கோட்டையன் உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும். ஆனால் யார் என்பதை தலைமை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று நடுநிலை வகித்தனர். செல்லூர் ராஜூ உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பினர் கூறும்போது, ‘‘பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் அதிகம் பேர் அமர முடியாததால், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்று கூட்டம் தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து வைத்தார். அதன்பிறகு பேசிய முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒற்றை தலைமை முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இதில் இருந்து தெளிவாக தெரிகிறது, எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக அதிமுக கட்சியை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதனால், தனது ஆதரவாளர்களை வைத்து கூட்டத்தில் பேச வைத்துள்ளார்.

இதற்கு முன் அதே மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500
பேரை கூட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே அதிமுக பொதுக்குழுவை நடத்தியுள்ளார். இப்போது அவர்களுக்கு (எடப்பாடி அணிக்கு) பிரச்னை என்னவென்றால், ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றினால் சிறப்பு அழைப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பொதுக்குழுவில் பிரச்னை ஏற்படும் என்ற பயம்தான் காரணம். இதுபோன்ற கட்சியின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரை கட்சியில் இருந்து ஓரங்கட்ட எடப்பாடி தரப்பினர் திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார்கள்’’ என்றனர்.

செவ்வாய் கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். கூட்டம் முடிந்ததும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், மற்றும் மனோஜ்பாண்டியன், வேளச்சேரி அசோக் உள்ளிட்ட சில தலைவர்கள் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். நேற்று 2வது நாளாகவும் ஆலோசனை தொடர்ந்தது.

ALSO READ:  அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

அப்போது அதிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்தும், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியை கைப்பற்ற எடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. எடப்பாடி கோஷ்டியினர் திட்டத்தை முறியடிக்க தொடர்ந்து ஓபிஎஸ் இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். குறிப்பாக வைத்திலிங்கம் மற்றும் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்ட தர்மர், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், சுப்புரத்தினம் ஆகியோர் ஓபிஎஸ்சுடன் சந்தித்து பேசினர்.

அதில் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து அணி மாறியுள்ளனர். இதனால், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசவும், கட்சியில் தனக்கு எதிராக நடைபெற்று வரும் சதித்திட்டத்தை முறியடிக்கவும் ஓபிஎஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சில மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனைக்கு பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூறும்போது, ‘ஒற்றை தலைமை வேண்டும் என்றும், இரட்டை தலைமையே நீடிக்கலாம் என்ற கருத்தும் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் விவாதித்து வருகிறார்கள். தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதுவே இறுதியானது’ என்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலாவும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை கோரிக்கையை முன் வைத்து, அதிமுக கட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறார். இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, சத்தியா, ராஜேஷ்  உள்ளிட்டோர் பகிரங்க ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மறைமுகமாக பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த எடப்பாடி தரப்பில் சில முன்னாள் அமைச்சர்கள் முயன்று வருகிறார்கள். அதன்படி, அதிமுகவில் ஒற்றை தலைமை அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை மீண்டும் பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீங்களே பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். உங்களுக்கு (ஓபிஎஸ்சுக்கு) அதிமுக கட்சியின் அவைத்தலைவர் அல்லது பொருளாளர் பதவி வழங்கப்படும். அதேநேரத்தில், 2024ம் ஆண்டு எம்பி தேர்தலில் உங்கள் மகனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, பாஜ மேலிடத்தில் பேசி ஒன்றிய அமைச்சர் பதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சமரச திட்டத்தை முன் வைத்தனர். இந்த சமரச திட்டத்தை ஓபிஎஸ் நிராகரித்து விட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நேற்று தமிழகத்தில் சென்னை, ராமநாபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், ‘‘அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தான் அதிமுகவை வழிநடத்தி செல்ல வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். அதேநேரம், அதிமுக 2ம், 3ம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சியில் தற்போது என்ன நடக்கிறது என்று தெரியமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அதிமுகவை வழிநடத்தி செல்ல ஒற்றை தலைமைதான் தேவை என்றால், தலைமை கழக நிர்வாகிகளோ அல்லது மாவட்ட செயலாளர்கள் மூலமோ தேர்ந்தெடுக்க கூடாது. கட்சியின் அடிப்படை தொண்டர்களே கட்சியின் ஒற்றை தலைமையை அதாவது பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களை திரட்ட தொடங்கியுள்ளதால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா அல்லது இருவரும் தனித்தனி பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார்களா என்ற பதற்றமும் ஏற்பட்டுள்ளது.  அதிமுகவில் பதவி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

எடப்பாடி, ஓபிஎஸ் வேண்டாம் 3வது தலைமைதான் வேண்டும்
அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சியின் பொருளாளர் ஆகிய பதவிகளை வகிக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமே கட்சிக்கு பொறுப்பாளர்களாக இருக்க வேண்டுமா, புதியவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோஷம் எழுப்ப தொடங்கியுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி, மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சமுதாய தலைவராகத்தான் உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சமுதாயத் தலைவராகத்தான் உள்ளார்.

இருவரும் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் கட்சி பதவிகளை வழங்குகின்றனர். மற்ற சமூக நிர்வாகிகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செல்லும் இளம் தலைவர் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி மேற்கு மண்டலத்தில் வேலுமணி தலைமையிலும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலும் ஒரு பிரிவினர் ரகசிய ஆலோசனையை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று அவர்களது ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதுடன், கட்சி தலைமைக்கும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலைமறியல்
அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்னையை கிளப்பி விட்டு, கட்சியை முழுவதுமாக கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி களம் இறங்கியுள்ளார். கடந்த காலங்களிலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளர் நான் தான் என்றும், பின்னர் எதிர்க்கட்சி தலைவராக நான்தான் இருப்பேன் என்றும் எடப்பாடி அடம் பிடித்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து, பின்னர் சமரசம் ஆகி பதவிகளை எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்தார். தற்போது, ஒற்றை தலைமை என்றும், அதுவும் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையும் ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தால் அதிமுகவில் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், ‘தொண்டர்களின் பாதுகாவலர் ஓபிஎஸ்’ என்று சென்னையில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சுவரொட்டி ஒட்டி இருந்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீடு அருகே ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இதை கண்டித்து ஓபிஎஸ் வீடு அமைந்துள்ள சாலை முன் அமர்ந்து அவரது ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அன்று உதயகுமார்; இன்று ஜெயக்குமார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சசிகலா முதல்வர் பதவியையும் பிடிக்க திட்டமிட்டார். இதனால் ஓபிஎஸ் – சசிகலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில், அப்போது அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் தான் முதன்முதலாக, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, ‘‘எங்களை போன்ற அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்காக முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும். கட்சியையும், ஆட்சியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு பேட்டி அளித்தபோது, ‘‘அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமை (ஓபிஎஸ் – இபிஎஸ்) வேண்டாம். ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். அதனால் ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றார். ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்
அதிமுக தொண்டர்கள் தயவு செய்து அமைதி காக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் அனைவரையும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிவிட்டரில் கூறியுள்ளார்.

அதிமுக இரண்டாக உடையுமா?
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை கோஷம் மேலோங்கியுள்ளது. இதனால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வகித்து வந்த பதவிக்கு பதில், பொதுச்செயலாளர் என்ற ஒரே பதவி உருவாக வாய்ப்புள்ளது. அப்படி வரும்போது, ஓபிஎஸ் அல்லது எடப்பாடி ஆகியோரில் ஒருவர்தான் இந்த பதவியை வகிக்க முடியும். அவரது தலைமையின் கீழ் தான் அதிமுக கட்சி செயல்படும். தற்போது, ஒற்றை தலைமை பதவியை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய இரண்டு பேரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அப்படியே ஒருவருக்கு அந்த பதவி கிடைத்தால், மற்றொருவர் போட்டி அதிமுகவாக செயல்பட வாய்ப்புள்ளது. அப்படி தனியாக செயல்பட்டால் கட்சியின் கொடி மற்றும் சின்னம் முடக்கப்படலாம். இதெல்லாம் நடக்காமல், இரண்டு தலைவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு, மீண்டும் அதிமுக இரட்டை தலைமையின் (ஓபிஎஸ் – இபிஎஸ்) கீழ் செயல்படவும் வாய்ப்புள்ளது.

1712818 epsops - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories