அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்.
தமிழக மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. * த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கவேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரசுக்கே கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.