
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழகம் காவி நாடு அல்ல திராவிட நாடு என வழக்கம் போல பிரிவினையை தூண்டி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்! ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தைப் போற்றுகின்ற மாநிலம் தமிழகம்! என்று இந்து முன்னணிஅமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று (17/05/2025) நடந்த “மத யானை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது காவி நாடு அல்ல திராவிட நாடு என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தினுடைய ஆன்ம பலமே ஆன்மீக பலம் தான் என்பதை முதல்வர் அவர்கள் உணராமல் இவ்வாறு பேசியிருக்கிறார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழகம். அப்படிப்பட்ட திருக்குறள் ஆன்மீகத்தை தான் பறைசாற்றுகிறது.
திராவிட நாடு என்பது ஒரு மாயை தானே தவிர அது உண்மையல்ல.
திமுக ஆரம்ப காலம் முதலே திராவிடம் என்ற மாயையை கையில் எடுத்து தமிழகத்தில் நாத்திகம் என்ற பெயரில் இந்து விரோதம் தான் பேசி வருகிறது. இந்து மத இதிகாசங்களையும் இந்து மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கேலியும் கிண்டலும் பேசியதும் தி.மு.க தலைவர்களே.
தேர்தல் நேரத்தில் மொழி பிரிவினையைப் பேசி தமிழகத்தில் தேசிய சிந்தனையை எதிர்க்கும் நோக்கோடு செயல்பட்ட கட்சி திமுக. காவியை எதிர்ப்பதாக சொல்லி திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார் முதல்வர்.
காவி என்பதை ஒரு கட்சியினுடைய அடையாளமாக ஸ்டாலின் அவர்கள் பார்க்கிறார். ஆனால் காவி என்பது தியாகத்தின் அடையாளம். சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என வாய் கிழிய பேசும்
திமுகவினர் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் ஆன்மீகம் தான் போதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழகத்தில் தான் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி இன்னும் பலவிதமான பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறது.
பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன. ஆன்மீகத்தோடு பின்னிப்பிணைந்த கலாச்சாரமும் பண்பாடும் தமிழகத்தில் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் அறியாத திராவிட மாடல் அரசு ஆன்மீகப் பெரியோர்களான
ஔவை பாட்டி, அருள் பிரகாச வள்ளலார், திருவள்ளுவர் ஆகியோர் நெற்றியில் இருந்த இந்து மத அடையாளங்களை அழித்து தங்களது இந்து விரோத போலி நாத்திக கருத்தைத் திணித்தது. அது மட்டுமல்லாமல் சனாதனத்தை அழிப்பேன் என திமுக தலைவர்களை பேச வைத்தது.
திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பை குறிக்கும் சொல்தானே தவிர அது இனத்தை, மொழியை குறிப்பதல்ல. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் குறிக்கும் இந்த திராவிடம் என்ற சொல் தமிழனின் மாண்பை மறைத்து ஆங்கிலேயன் மேற்கத்திய நாகரிகத்தை திணிக்கும் கோட்பாடு என்பதுதான் நிதர்சனமான உண்மை.
திராவிடம் என்று உங்களால் வரையறுக்கப்பட்ட அண்டை மாநிலங்கள் ஆன கேரளாவிலோ கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ திராவிடம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதே இல்லை. திமுக தங்களது சுய லாபத்திற்காக இந்து மதத்தை அழிக்கும் நோக்கோடு இது காவி நாடல்ல என பேசி வருகிறது . தேசிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மாணவர்களும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி, தாய்மொழி வழி கல்வியை இலவசமாக தருவதை உறுதி செய்கிறது. மேலும் பிற மொழிகளையும் கற்கவும் வாய்ப்பு தருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வலியுறுத்துகிறது.
இதுநாள் வரை தமிழக மாணவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் சரித்திரத்தை அறிய விடாமல் முகலாய ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை தான் திணித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று தமிழ் மன்னர்கள் ஆளுமையை வரலாற்றை படிக்கும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி தருகிறது. அதை சகிக்க முடியாமல் தேசிய கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுவது அபத்தத்திலும் அபத்தம்.
திராவிட மாடல் தமிழ் வளர்த்த லட்சணம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தவர்கள் வெறும் எட்டு நபர்கள் மட்டுமே. ஆனால் ஆங்கில மொழியில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் மிகப் பலர் அந்த வகையில் திராவிடம் தமிழை வளர்த்ததா? அல்லது ஆங்கிலத்தை திணித்துள்ளதா? என்பதை அறிய முடிகிறது.
தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசும் பொழுது சம்பந்தமே இல்லாமல் காவி என்ற புனித வார்த்தையை ஏதோ தீண்டாத வார்த்தை போல தமிழக முதல்வர் சித்தரித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை பார்த்து முதல்வர் அவர்கள் அச்சத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். பல ஆன்மீகவாதிகளும் ரிஷிகளும் முனிவர்களும் தேசியத்தை உயிரெனக் கொண்ட வ.உ.சி., மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா இன்னும் பல தேச பக்தர்களும் அவதரித்த பூமி தமிழகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அனைத்து மதத்தினரின் வாக்குகளை வாங்கிக் கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் காழ்புணர்ச்சியோடு இது காவி நாடு அல்ல என பேசி இருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தனது பேச்சினை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது
எப்போதெல்லாம் திமுகவின் ஊழலும் லஞ்சமும் அம்பலபடுத்த படுகிறதோ அப்போதெல்லாம் திராவிடம், வடக்கு தெற்கு, தமிழ் இந்தி என வாய்க்கு வந்த படி பிரிவினை பேசுவது திமுகவின் வாடிக்கை
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை மற்றும் துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் அமலாக்க துறை சோதனை என்றவுடன் திமுகவின் லஞ்சம் ஊழல் அம்பலப்படுவதை திசை திருப்ப முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்..




