கூட்டணிச் சிக்கலே வேண்டாம்; தனித்தே களம் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக் கிறார் திருமாவளவன் என்கிறார்கள்  அவருக்கு நெருக்கமானவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்த கொங்குநாடு ஈஸ்வரன், கூட்டணிக் கட்சியாகவும் இல்லாமல், தோழமைக் கட்சியாகவும் இல்லாமல் வெளியில் ஏதோ ஓர் கட்சியாக இருந்தார். ஆனால், அவரை அழைத்து தொகுதிப் பங்கீடு பேசி முடித்துக் கொண்டது திமுக., அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதையும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தார் ஈஸ்வரன்.

முன்னதாக, கொங்கு மண்டலத்தில் ஒரு கூட்டம் நடத்தி, அரை சதவீதம் இருக்கும்
திருமாவளவனுக்காக, பத்து சதவீத வாக்கு  வங்கி இருக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சியை இழந்துவிடாதீர்கள்! உங்களுக்கு அரை சதவீதம் வாக்கு வங்கி உள்ளவர்கள் முக்கியமா, பத்து சதவீத வாக்கு வங்கி கொண்ட நாங்கள் முக்கியமா? கூட்டணி பேசுபவர்கள் விவேகமான முடிவு எடுப்பார்கள் என்று பேசினார்.

காண்க… ஈஸ்வரன் பேச்சு…

தற்போது, ஈஸ்வரன் திமுக., கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், தோழமைக் கட்சிகள் தான் என்று துரை முருகனால் அடையாளம் காட்டப்பட்ட திருமாவளவனும் வைகோவும் இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் தலா ஒரு தொகுதிதான் என்று உறுதியாகப் பேசப்பட, அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் என்று கூறப்பட இப்போது இரு தரப்புமே யோசித்துக் கொண்டிருக்கிறது!

ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

2004ல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார் திருமாவளவன். அதன் பின்னர், 2006 தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி, 2009ல் திமுகவுடன் கூட்டணி,
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி, 2014 தேர்தலிலும் திமுக.,வுடன் கூட்டணி என பெரும்பாலான தேர்தல்களிலும் திமுக.,வுடன் கூட்டணியைத் தொடர்ந்தவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு பிரேக் போட்டது. மக்கள் நலக் கூட்டணி என மூன்றாம் அணியில் களம் இறங்கி, படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். மேலும், 2009 தேர்தலில் ஒரே ஒரு எம்.பி சீட்டை வென்ற திருமாவளவன், அதன் பின்னர் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதும் விடுதலைச் சிறுத்தைகளின் ட்ராக் ரெகார்ட்!

இந்நிலையில், கூட்டணி இல்லையேல் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்ற எண்ணத்தில்தான், மீண்டும் திமுக கூட்டணிக்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் திருமாவளவன். ஆனால் அவரை கூட்டணி எனக் கூட்டாக்காமல், தோழமை என தழுவிக் கொண்டது திமுக.!

முன்னர் பாமக.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, திருமாவை சற்று ஒதுக்கி வைத்திருந்தது திமுக., தரப்பு. ஆனால் பாமக., இல்லை என்றான பின்னர் திமுக., கூட்டணியில் திருமாவளவனின் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த இடத்தை கொங்கு ஈஸ்வரன் பிடித்து விட்டதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக.,வில் வாய்ப்பு மங்கிக் கொண்டே வருகிறது.

அதனால்தான், ஒரே ஒரு தொகுதி, அதுவும் உதயசூரியன் சின்னம் என்று கறார் காட்டுகிறது திமுக., இது நிச்சயம் சிறுத்தைகளை உசுப்பேற்றி வெளியேற்றும் முயற்சி என்று பரவலாகக் கூறப் பட்ட நிலையில், திருமாவளவனும் அதனை உள்ளூர உணர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த 2009, 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டும் விடுதலைச் சிறுத்தைகள், இப்போதும் அதே 2 தொகுதிகளைக் கேட்கிறார்கள். ஆனால் சீமானின் பாணியில் “வாய்ப்பில்ல ராஜா” என்று சொல்லிவிட்டது திமுக.,!

இதனால், வேறு கூட்டணியில் சேர இயலாமல், தனித்தே களம் காணலாம் என்று கட்சியினர் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருக்கிறார் திருமா. மேலும், கமல் அல்லது தினகரன் என்று கூட்டணி சேர்வதற்கு பதில், தனித்தே இறங்கலாம் என்கின்றனர் கட்சியினர்.

ஆக… ஆக… சிறுத்த சிங்கிளா களம் இறங்க போவுது..!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...