
மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கிய இரும்பு பெண்மணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று ஆறாம் ஆண்டு அஞ்சலி.அவரின் வாழ்க்கை வரலாற்றை (Jayalalithaa Biography) தெரிந்து கொள்வதில் இக்கால இளைஞர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
செல்வி. ஜெயலலிதா-வின் இயற் பெயர் கோமளவல்லி ஜெயராம். இவர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாகவும், அரசியல் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
இளமை காலம் (Jayalalithaa Early life & Education):
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி (Jayaram and Vedavalli) பெற்றோருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த அவரது அன்னை வேதவல்லி என்ற தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர்கள் பெங்களூரில் வசித்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பிறகு சென்னைக்கு வந்த அவர்கள் 1958-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் 10-ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் (Stella Maris College, Chennai) படிக்க அனுமதி கிடைத்தது. அதே சமயம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே தனது படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய “வெண்ணிற ஆடை”(Vennira Aadai) என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதா பற்றி அவரது தாயார் “சிறு குழந்தையாக இருக்கும் போதே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் முகவும் கெட்டிக்காரி. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசுக் கூடியவர்” என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971-ம் ஆண்டு காலமானார்.
திரைபயணம் (Jayalalithaa’s Cinema Career):
பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் துவங்கியவர் ஜெயலலிதா. அவர்கள் மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல் “சின்னடா கொம்பே” (Chinnada Gombe) என்ற கன்னட படம் மூலம் திரை உலகில் நுழைந்தார். இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அடுத்தடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் எம்.ஜி.ஆர் (MGR) உடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார்.
சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். 1968-ம் ஆண்டில் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தெலுங்கு கதாநாயக நடிகரான சோபன் பாபுவை மணக்க விரும்பிய ஜெயலிதாவுக்கு அது இயலாமல் போனது.
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். இவரின் 100-வது படமான “திருமாங்கல்யம்” 1977-ல் வெளிவந்தது. ஜெயலலிதாவின் 100 ஆவது படத்தைப் பாராட்டிய அப்போதைய முதல்வர் கருணாநிதி (M. Karunanidhi) “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்” என்று பாராட்டி பேசியது சரித்திரம். அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்ட அவர் அரசியலில் சேரும் முன் தனது கடைசி படம் 1980-ல் வெளியானது. அது “நதியை தேடி வந்த கடல்
அரசியல் (Political Journey):
ஜெயலலிதா நிறைய வாசிப்பவர். நாவல் எழுதியவர். சிறுகதைகள் எழுதியவர். துக்ளக் பத்திரிகையில் கட்டுரைகளையும், புத்தக விமர்சனங்களையும் எழுதியவர். 1980-ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பிரச்சார செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார். மேலும் 1983-ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அ.இ.அ.தி.மு.க. கட்சியின் எதிர்கால வாரிசு இவர்தான் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஜெயலலிதாவை, 1984-ல் ராஜ்ய சபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித் தந்தன. அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான். இயல்பான ஒரு வளர்ச்சியாக ஜெயலலிதாவின் முன்னேற்றம் இருந்தது. 1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா.
அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது. 1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு கட்சியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. ஆனால் 1989 தேர்தலில் ஜெயலலிதா தான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு, அடுத்த தலைவர் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இதையடுத்து ஜானகி விலகிக் கொண்டார்.
அதிமுக (AIADMK) ஒரே கட்சியாக மீண்டும் இணைந்தது. ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடை போட ஆரம்பித்தது அதிமுக. 1989-ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தான். 27 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.
சட்டசபையில் எப்போதும் புயல்தான். 1989-ம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1991-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேரதல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலிதா.
இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தார். 1991 முதல் 1996 வரை அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குதான் இவரை சிறைக்கும் அனுப்பி வைத்தது. அவர் தான் முதல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1996-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006-ல் பறி கொடுத்தார். ஆனாலும் 2011 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில் தான் 2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக (Chief Minister of Tamil Nadu) பதவி ஏற்றுக்கொண்டார்.
2016 சட்டசபைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதை இதிலும் நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.
விருதுகள் (List of awards received by Jayalalithaa):
தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் மேற்கொண்ட பணிகளை பலரும் பாராட்டக்கூடிய அளவிற்கு செய்து முடிப்பவர். அவர் வாழ்கையில் பெற்றுள்ள விருதுகளை பற்றித் தெரிந்துக்கொளுங்கள்.
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” பெற்றுக்கொடுத்தது.
‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற தெலுங்கு படம் சிறந்த தெலுங்கு நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
‘சூர்யகாந்தி’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” பெற்றுக்கொடுத்தது.
‘கலைமாமணி’ விருது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கி இவரை கௌரவித்தது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ இலக்கியத்தில் சென்னை பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார்.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான அவருக்கு வழங்கியது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்காக அவருக்கு கிடைத்தது.
‘கவுரவ டாக்டர் பட்டம்’ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் சட்டத்திற்கான அவருக்கு வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டம்’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது.