ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஏராளமான விருந்தினர்களுக்காக சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலியாகினர். 49 பேர் காயமடைந்தனர்.
சமையல் செய்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி முழுவதும், சிலிண்டர் வெடித்த தாக்கத்தால் இடிந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்கு 80 முதல் 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணமகன் சுரேந்திர சிங் வீட்டில் ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்காக உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே சமையல் சிலிண்டர்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏற்பட்ட எரிவாயுக் கசிவால் மிகப்பெரிய வெடிவிபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். 49 பேர் காயமடைந்தனர். இவர்களில் 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
