விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 45 அறைகள் உள்ளன. 80 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி உணவு இடைவேளைக்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசு அறைக்கு வெளியே பேன்சி ரக பட்டாசு தயாரிக்க பயன்படும் மணி மருந்து காய வைக்கப்பட்டிருந்தது.
அப்போது மணி மருந்தில் ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 க்கு மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தில் சத்திரப் பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் தொழிலாளியும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த சங்கர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் 16க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து சிவகாசி மற்றும் சாத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 3 தொழிலாளர்கள் 100 சதவீத தீக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்த நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் மேலும் சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (26) என்பவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அடுத்து பட்டசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இது குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.