சென்னை:
ஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம், திருமஞ்சனம், சிறப்பு ராஜ அலங்காரம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த விசேஷ தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வண்ணாரப்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் உள்ள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் லட்சுமி யாகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மாலையில் புஷ்பாஞ்சலி, சிறப்புத் தீபாராதனையும் நடைபெற்றது.
சென்னை, நாமக்கல், ஸ்ரீரங்கம், உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களிலும் இன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றுதல், வெற்றிலை மாலை சாற்றுதல், வெண்ணெய்க் காப்பு அலங்காரம் என கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அனுமனை வழிபட்டு வருகின்றனர்.
ஹனுமத் ஜயந்தி: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு
திருமலை நாயக்கர் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: ஜெயலலிதா
சென்னை:
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் மணிமண்டபங்களை அரசு ஏற்படுத்தி பராமரித்து வருகிறது.
பல்வேறு பெருமக்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரட்டைமலை சீனிவாசன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டதன் பேரில் ஆண்டுதோறும் இவ்விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கர் அவர்கள் 1584 ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளன்று பிறந்தார்.
அவர் வீர உணர்வு மிக்கவர். எதிலும் தொடர்ந்து போரிடும் மனவலிமை வாய்ந்தவர். அவர் சிறந்த அறநெறியாளரும் ஆவார்.
மன்னர் திருமலைநாயக்கர் சிறந்த சமய நெறியாளர். நாட்டில் நிலவி வந்த பண்புக்கும் மரபுக்கும் மதிப்பளித்தவர். மதுரை மாநகரை விழா நகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தவர்.
திருமலை நாயக்கர் சிறந்த கட்டடக் கலை வல்லுநர். அவரால் எழுப்பப்பட்ட ராஜகோபுரங்களும், மண்டபங்களும், கோயில்களும் மற்றும் அவரது அரண்மனையும் இன்றும் இதனைப் பறைசாற்றி வருகின்றன.
திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரண்மனை தான் திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற வகையிலும், மன்னர் திருமலை நாயக்கரின் நினைவைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையிலும், மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள், அவர் பிறந்த நாளான தைப்பூசத் திருநாள் அன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக மதுரையில் கொண்டாடப்படும்.
இதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருநாளான 24.1.2016 அன்று மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் மதுரையில் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளேன்.
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆய்வாளரின் உரையாடல்!
தமிழக காவல் துறையில் திருவண்ணமலை மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றும் பழனி என்று கூறப்படுவர் ஒரு குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.
அந்த ஒலிப்பதிவில் காவல் ஆய்வாளர் அநாகரீகமான கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் வெளியான ஆய்வாளர் ஒலிப்பதிவுடன் கூறப்படும் இருவிதமான தகவல்களாவது :-
1) பணம் கொடுத்தால் கொலை செய்யகூட ரூட் போட்டு கொடுப்பாரு போல ஆய்வாளர் பழனி. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி.
டுபாக்கூர் வக்கீல்…லஞ்சப் பணத்தை அருமையாக பிரித்து கொடுக்கும் அழகு…கீழ்த்தரமான வார்த்தைகள் நாக்கில் நடனம்…எஸ்.பி க்கு நெருக்கம்…..கேடி புத்தி…..கிரிமினல் சகவாசம்….
2) மேற்கண்ட இன்ஸ்பெக்டர் உளுந்தூர்பேட்டை யில் பல்வேறு புகாரின் அடிப்படையில் தான் திருவண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டார் .இந்த ஆடியோவை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சி.டி போட்டு பொதுமக்களிடம் வினியோகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக காவல் துறையில் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் சில அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால், பலர் காட்டுதர்பார் செய்து கொண்டு பண பேரம் செய்து வருகின்றனர் என்பது இது போன்று வெளியாகும் ஆடியோக்களால் வெளியில் தெரிகிறது.
தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண வேட்டை நடத்த சட்டத்திற்கு புறம்பான செயல்களில் சிலர் , தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேதனை தரக்கூடியது.
மக்களின் வரி பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு அரசாங்க பணியில் பணியாற்றுபவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
வாட்ஸ் ஆப்பில் தற்போது வைரலாகப் பரவி வரும் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஆளுநர் ஆட்சி அமல்
ஜம்மு :
காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும் மறைந்த முதல்வர் முப்தி முகம்மது சயீத்தின் மகளுமான மெகபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார். இதனால், அவர் முதல்வராக பதவியேற்கும் வரை ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கும் என அம்மாநில ஆளுநர் என்.என். வோரா அறிவித்துள்ளார்.
காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மெகபூபா முப்தி தான் அடுத்த முதல்வராக வர உள்ளார் என கூறப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜ.,வும் ஆதரவு தெரிவித்தது. இதனால் மெகபூபா காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக அவர் பதவியேற்பார் என்று கூறப்பட்டது. இவ்விழாவில் பா.ஜ., பொதுச் செயலாளர் ராம் மாதவ் கலந்து கொள்ள உள்ளதாகவும்கூறப்பட்டது.
இந்நிலையில், தாம் முதல்வராக பதவியேற்க மெகபூபா மறுப்பு தெரிவித்துள்ளார். சயீத் மறைவைத் தொடர்ந்து காஷ்மீரில் 4 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த துக்க காலம் முடிந்த பிறகே பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக மெகபூபா கூறி உள்ளார். இதனால் ஜனவரி 10 ம் தேதி மாலை அல்லது ஜனவரி 11ம் தேதி மெகபூபா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகபூபா தனது தந்தையில் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உள்ளார். அந்த இழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வர அவருக்கு சில காலம் ஆகும் என மெகபூபாவின் அலுவலக தகல்களும் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 3வது அணி ஆட்சியமைக்கும் என்பது பகல் கனவு: பா.ஜ.கூட்டணியில் இருந்து விலகிய ஈஸ்வரன்
கரூர்:
தமிழகத்தில் 3 ஆவது அணி ஆட்சி அமைக்கும் என்பது பகல் கனவு என்று கூறிய கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், பா.ஜ.கூட்டணியில் இருந்து விலகுவதாக கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக் குழுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என முடிவு செய்ய மாநில துணை பொதுச்செயலாளர்கள் சக்திகோச் நடராஜ், சேலம் தங்கவேல்,பொருளாளர் கேகேசி. பாலு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதை கொமதேக வரவேற்கிறது. பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது போல சேவல் சண்டையையும் நடத்த அனுமதிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசலுடன் எத்தனாலை கலந்து விற்றால் கரும்பு விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். விரைவில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இதில்,விவசாய கடன்கள் வட்டியில்லாமல் வழங்கும் வகையிலும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது, கொமதேக எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தோம். ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கூட்டணியினர் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டவில்லை. கலந்து ஆலோசிக்கவும் இல்லை. இனி,பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை.
தமிழகத்தில் 3-ஆவது அணி என்பது பகல் கனவு. 4 சதவீத வாக்கு எங்கள் கட்சிக்கு உள்ளது. வரும் பிப். 7 ஆம் தேதி ஈரோட்டில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்றார்.
பேட்டியின்போது மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் சக்திகோச் நடராஜ், சேலம் தங்கவேல்,தலைமை நிலையச் செயலர் சூரியமூர்த்தி,பொருளாளர் கேகேசி.பாலு, மாவட்டத் தலைவர் விசா சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அல்-குவைதாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரஸா பள்ளி ஆசிரியர் கைது
புதுடில்லி:
அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரைச் சேர்ந்த மதரசா பள்ளி ஆசிரியரை, தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
அல் – குவைதா பயங்கரவாத அமைப்பை இந்தியாவில் துவங்கியவர்களில் ஒருவராகக் கருதப்படும், முகமது ஆசிப்(41) என்பவர், சில மாதங்களுக்கு முன் தில்லியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், ஒடிசா, உ.பி., மாநிலங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அனைவரும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, அல் – குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த, பெங்களூரில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியரான மௌலானா அன்சார் ஷா என்பவரை, இரு தினங்களுக்கு முன், தில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும், 20ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்சார் ஷா கைது பற்றி தில்லி போலீசார் கூறியபோது, பெங்களூரில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்சார் ஷாவை, ஆசிப் சந்தித்துள்ளார். அல் – குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார். இதன்பின், ஆசிப் மற்றும் இதர அல் – குவைதா ஆதரவாளர்களுடன், அன்சார் ஷா நட்பை வளர்த்துள்ளார்; இவர்களுக்கு இடையே பண பரிமாற்றமும் நடந்துள்ளது. வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால், அன்சார் ஷாவை கைது செய்துள்ளோம் என்று கூறினர்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்
புது தில்லி:
மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்பட ஆறு பேருக்கு எதிராக தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரது நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
2011ஆம் ஆண்டில், இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் சிபிஐயில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2013-இல் சிபிஐ வழக்குத் தொடுத்தது.
“ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன் மூலம் தனது அதிகாரத்தை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ., தொடர்ந்த இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட் டிவி, சௌத் ஏசியா எஃப்எம், எஸ்ஏம்டிஎல் (மோரீஷியஸ்), ஏஎச் மல்டிசாஃப்ட் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜன.8 வெள்ளிக்கிழமை மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், “வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் டிவி நிறுவனத்துடன் மேக்சிஸ் நிறுவனம் மேற்கொண்ட நிதிப் பரிவர்த்தனையில் அன்னியச் செலாவணி மோசடி நடந்துள்ளது’ என்று கூறியுள்ளது. மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியதில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், இதில் சிதம்பரத்தின் பங்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உள்ள பங்கு குறித்து விசாரித்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை கூறியுள்ளது.
திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி
சென்னை:
திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 1.5 ஏக்கர் நிலம் ஆளுங்கட்சி மேலிடத்திற்கு நெருக்கமான தொழிலதிபருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த விதிமீறல் மற்றும் நிலம் தாரைவார்ப்பு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் நோக்குடன், வேலூரில் செயல்பட்டு வந்த சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புக்கான விரிவாக்க மையம் கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவள்ளுவர் பெயரில் தனிப்பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பல்கலைக்கழகம் நிரந்தரக்கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் சேர்க்காட்டில் உள்ள வளாகத்திற்கு மாற்றப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் செயல்பட்டு வரும் இடம் முழுக்க முழுக்க புறம்போக்கு நிலமாகும். அந்த நிலம் தொடர்பாக இதுவரை எந்தவித சர்ச்சையும் எழாத நிலையில், இப்போது அ.தி.மு.க. மேலிடத்திற்கு சொந்தமான சேகர் ரெட்டி என்பவர், பல்கலைக்கழக வளாகத்தில் தமக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருப்பதாக உரிமை கோரியிருக்கிறார். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகத்தில் பெங்களூர்&சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஒன்றரை ஏக்கர் நிலத்தை வளைத்த சேகர் ரெட்டியும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பெரு மரங்களை வெட்டி வீழ்த்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். அந்த இடத்திற்கு செல்ல பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை தனியார் சேகர் ரெட்டி ஆக்கிரமித்திருப்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் ஆகியோரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடையே உள்ள வணிகத் தொடர்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. சேகர் ரெட்டியும், வேலூர் ஆட்சியர் நந்தகோபாலும் கூட்டாக சேர்ந்து நில வணிகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கெல்லாம் மேலாக சேகர்ரெட்டி தமிழக ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் இவருக்குத் தான் வழங்கப் பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் அறங்காவலராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆட்சியாளர்களின் வீட்டுத்தேவை அனைத்தையும் இவர் தான் கவனித்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒப்பந்தங்களும் இவர் கைக்காட்டுபவருக்கே கிடைக்கிறது என்றால் இவரது செல்வாக்கு எந்தளவு தழைத்தோங்கியிருக்கிறது என்பதை அறியலாம்.
சேகர் ரெட்டிக்கு ஆளுங்கட்சியிலும், ஆட்சியிலும் எவ்வளவு செல்வாக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. சேர்க்காடு வளாகம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இத்தனை ஆண்டுகளும் அதில் தமது நிலம் இருப்பதாக உரிமை கோராத ஒருவர் திடீரென உரிமை கோருவதும், அது உண்மையா, பொய்யா என்பதைக் கூட ஆய்வு செய்யாமல் அந்த நிலத்தை சேகர் ரெட்டி கைப்பற்றிக் கொள்ள அனுமதிப்பதும் அருவறுக்கத்தக்க கேலிக்கூத்து ஆகும். ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகை வளாகத்தில் தலித்துகளுக்கு சொந்தமான நிலங்கள் இருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், தங்களது நிலத்தை திரும்ப ஒப்படைக்கோரி தலித்துகளும், அவர்கள் ஆதரவு அமைப்புகளும் போராட்டம் நடத்திய போது காவல்துறையை வைத்து விரட்டியடித்த ஜெயலலிதா, இப்போது பல்கலைக்கழக நிலத்தை ஆதாரம் இல்லாமல் ஒருவருக்கு தாரை வார்க்கிறார் என்பதிலிருந்தே அவரது சுயநலத்தையும், அரசு சொத்துக்களை தாரை வார்க்கும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்தில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக நிலம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அதற்குரிய விலையை சட்டப்படி வழங்குவது தான் முறையாகும். அதற்கு மாறாக நிலத்தை அவருக்கு தாரை வார்த்தால் நாளையே அரசினர் தோட்டத்திற்கு நடுவில் 5 ஏக்கர் நிலம் இருப்பதாக எவரேனும் உரிமை கோரினால் அரசு என்ன செய்யும்? இதையெல்லாம் யோசிக்காமல் அரசு நிலத்தை மணல் கொள்ளையருக்கு தாரை வார்க்கிறார் என்றால், தமது தவறுகளை யாராலும் தட்டிக் கேட்க முடியாது என்ற அதிகார மமதை தான் காரணம். இந்த மமதைக்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பெருமைகளை உணர்த்தி தடையை நீக்கியவர் முதலமைச்சர் ஜெயலிதா : மருத்துவர் சேதுராமன்
ஜல்லிக்கட்டு அனுமதி: ராமதாஸ் பாராட்டு
சென்னை:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்ததற்கு மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா… நடைபெறாதா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக நிலவி வந்த ஐயமும், படபடப்பும், பதற்றமும் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த ஆணையைக் காரணம் காட்டி அப்போட்டிகளை நடத்த 2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். அன்புமணி கடந்த மாதம் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனுமதி அளிப்பதாக நரேந்திர மோடியும் வாக்குறுதி அளித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனும், ஜல்லிக்கட்டு பேரவையும் இச்சிக்கல் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இந்த விஷயத்தில் பல்வேறு காரணங்களால் சில மாதங்களாக இழுபறி நிலவினாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது உறுதியாகி விட்டது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சியில் கூத்தாடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுய்ற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

