Home Blog Page 5869

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை கடும் காட்டமாக விமர்சித்த சிறுமி : எச்சரிக்கை விடுத்து மிரட்டிய காவல் துறையினர்

 

என்னம்மா! நீங்க! இப்படி! பண்ணுறீங்களேமா?? !!
 

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்து ஆட்சி நடத்தி வருகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி, மாறி திராவிடக் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவித்து பெரும்பாலான பொது மக்களை முட்டாள்களாக ஆக்கி ஆட்சியைப் பிடித்து அதிகாரக் கட்டிலில் அமர்ந்துள்ளனர்.
அத்துடன் மக்களது வரிப்பணத்தை செலவிட்டு இலவச திட்டங்களை வழங்கியும் அதன்மூலம் அரசியல்வாதிகள் சுயவிளம்பரம் தேடிக் கொண்டு தமிழகத்தை சீரழித்து குப்பைமேடாக மாற்றியும், பொதுமக்களின் வரிப்பணத்தை பல்வேறு முறைகேடுகள் செய்து கொள்ளையடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற சகாயம் – 2016 இளைஞர் எழுச்சி மாநாட்டில் பேசிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்னும் சிறுமி இலவசத் திட்டங்களை எதிர்த்து பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து ஜெயலலிதாவின் ஆட்சியை கடும் காட்டமாக விமர்சித்துள்ளார் .
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறையை சேர்ந்த உளவுப் பிரிவினர் அச்சிறுமியைப் பேசக் கூடாது என சகாயம் – 2016 மாநாட்டை சேர்ந்த அமைப்பாளர் சிலரிடம் சிறுமி பிரியதர்ஷினியின் பேச்சை நிறுத்த சொல்லி எச்சரிக்கை விடுத்து மிரட்டியதாகவும் தாகவும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பரவலாக பேசியது குறிப்பிடதக்கது .
என்னம்மா! நீங்க! இப்படி! பண்ணுறீங்களேமா?? !!
அந்த மாநாட்டில் சிறுமி பேசிய ஒலிப்பதிவு வாட்ஸ் ஆப்பில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அந்த ஒலிப்பதிவுடன் சிறுமியின் புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கலாச்சாரம் குறித்த உரை: கண்கலங்கிய ஒபாமா!

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாசாரம் மற்றும் அதன் மூலமான வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான உரையினை அந்நாட்டு அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

அமெரிக்காவில் சமீப காலமாக பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கு துப்பாக்கி விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ”துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பதற்காக அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைக்கும்போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது” என்றார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட அவரது கண்களில் இருந்து  கண்ணீர் பெருகியது. பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்த பேசிய அவர், ”இதற்குப் பிறகும் காரணங்களைக் கூறி சமாளிக்கக் கூடாது. துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் அதிபர்கள் வேண்டுமானால், அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால், அவர்களால் அமெரிக்காவைக் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.

 

விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக மோடியிடம் நவாஸ் ஷெரிப் உறுதி

புது தில்லி:

பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைக்கு பாகிஸ்தான் தனது முழு ஒத்துழைப்பையும் இந்தியாவுக்கு அளிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூறியுள்ளார்.

இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நவாஸ் ஷெரிப், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுடன் பாகிஸ்தான் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். பதான்கோட் தாக்குதல் குறித்து மோடியும், நவாஸ் ஷெரிப்பிடம் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை: அருண் ஜேட்லி வாக்குமூலம்

புது தில்லி:

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஊழல் செய்ததாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறி, கேஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, நேற்று தில்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டு சஞ்சய் கனக்வால் முன்னிலையில் அருண் ஜேட்லி ஆஜராகி சுமார் 70 நிமிடங்களுக்கு தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அப்போது அவர், ‘‘தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது நான் யாரிடம் இருந்தும் பணம் பெற்றதில்லை. தன்னுடன் பணியாற்றும் குறிப்பிட்ட ஓர் அதிகாரி மீதான சி.பி.ஐ. விசாரணையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். எனது பதவிக் காலத்தில் பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டபோது நான் பணம் பெற்றதாக கேஜ்ரிவால் கூறியது தவறானது. அந்தப் பணியை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. நான் அதில் உறுப்பினர் இல்லை’’ என்று அருண் ஜேட்லி கூறினார்.

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிசிஐடிக்கு மேலும் 2 மாத அவகாசம்

மதுரை:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாத கால அவகாசத்தை அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பலமுறை விசாரணைக்கு வந்தும், சிபிசிஐடி போலீஸார் மேலும் மேலும் அவகாசம் கோரி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நேற்று இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி போலீஸார் முக்கியத் தடயம் கிடைத்துள்ளதாகக் கூறி கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்த மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸாருக்கு ஒவ்வொரு முறையும் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் அளிக்க முடியாது எனக்கூறி 2 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

இன்று சர்வதேச வேட்டி தினம்: பாரம்பரியத்தைக் காக்க வேண்டுகோள்

சென்னை:
இன்று சர்வதேச வேட்டி தினம் என்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும் என்று பல தரப்பிலும் வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்க தலைவர் கணேசன் கூறும்போது, தலைமைச் செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றுகிறார்கள். வேட்டி தினத்தை யொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேட்டி அணிவதை, ஜனவரி 6-ந் தேதி சர்வதேச வேட்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்து, உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் உடையான வேட்டியை கட்ட வேண்டும் என்பதற்காக ஒரு விழா நடத்துவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் ஆகும். அந்நிய நாட்டவர்கள், நம் தேசத்தின் தொன்மையை கேள்வியுற்று, அவற்றை காண பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளாக தினமும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் நம் கலாசார பழக்க வழக்கங்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு நம்மை போல் வேட்டி, சேலை ஆகியவற்றை அணிந்து மகிழ்கிறார்கள். ஆனால், நம்முடைய பாரம்பரியத்தை நாம் முற்றிலும் மறந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே, நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்துவிட வில்லை என்பதை உணர்த்தும் விதமாக சர்வதேச வேட்டி தினத்தன்று, முதியோர், இளைஞர் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் நமது பாரம்பரிய உடையான வேட்டியை உடுத்த வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை, ஜன.6-

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தால் யாரும் இறக்கவில்லை என்றும், எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திண்டிவனத்தை சேர்ந்த பாண்டுரங்கன், குன்றத்தூரை சேர்ந்த மண்ணம்மாள், ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜா ஆகிய மூவரும் தீவிபத்தினால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம் சாட்டி, இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்துள்ளனர். ஆனால் அரசு அதை மூடிமறைக்க முயற்சி செய்கிறது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்புகூட இதே பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும், அரசு மருத்துவமனை நிர்வாகமும்தான் இந்த தீவிபத்திற்கும், உயிரிழப்பிற்கும் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

மழை வெள்ள பாதிப்பின்போது சென்னை தனியார் மருத்துவமனையில் மின்தடையால் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை இந்த அரசு மூடிமறைத்தது. அதுபோன்று இதையும் மறைக்காமல், அரசு மருத்துவமனையில் தீவிபத்தால் உயிரிழந்தவர்கள் ஏழை, எளிய மக்கள். எனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியும், அதில் கவனக்குறைவாக செயல்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு

புது தில்லி:

பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்கும் வகையில் அடுத்த மாதம் வெளிச்சந்தையில் விநியோகம் செய்யும் திட்டத்துடன் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கானஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி வெளியிட்டுள்ளது. எம்எம்டிசி நிறுவனம் கடந்த ஆண்டில் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்தது. ஆனால், உளுந்தம் பருப்பு தொடர்பாக அந்நிறுவனம் விடுத்த ஒப்பந்தப் புள்ளிக்கு போதிய வரவேற்பில்லை.

இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் துவரம் பருப்பை இறக்கு மதி செய்வது குறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறியபோது…

2015ஆம் ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைவாக இருந்ததால், பருப்பு வகைகளின் விலை பலமடங்கு அதிகரித்தது. இதை குறைப்பதற்கு, பருப்பு பதுக்கல்காரர்களின் கிடங்குகளில் சோதனையும், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதியும் செய்யப்பட்டன. இருப்பினும், துவரம் பருப்பு விலை கிலோவுக்கு தற்போது ரூ.180ஆக உள்ளது.

இந்நிலையில், பருப்பு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், 2016ஆம் ஆண்டிலும் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் உள்நாட்டு சந்தையில் துவரம் பருப்பை விநியோகத்தில் விடும் திட்டத்துடன் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியான்மர், மலாவி, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எம்எம்டிசி நிறுவன அதிகாரிகள் தரப்பு கூறுகையில், “குறைந்தப்பட்சம் 2,000 டன் துவரம் பருப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. அதையடுத்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்துக்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியும், சென்னை துறைமுகத்துக்கு மார்ச் மாதம் 15ஆம் தேதியும் வந்தடையும்’ என்றனர்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி

ஈரோடு:

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் குறித்த அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களின் ஆவணங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.

ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மொத்தம் 900 டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமம், இருப்பிடம், முகவரி, கைரேகைகள், ரத்த வகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மாவட்ட காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல இன்னும் 3 மாதங்களில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு விடும். பின்னர் ஒவ்வொரு ஆட்டோ மற்றும் டாக்ஸியின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் அடிப்படையில் தனித்தனியே எண்கள் வழங்கப்படும்.

அந்த எண்ணை சம்பந்தப்பட்ட டாக்ஸி மற்றும் ஆட்டோவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த எண்ணுடன் அவசர உதவி எண்ணும் குறிப்பிடப்படும். குறிப்பிட்ட அந்த வாகனத்தில் சவாரி செய்பவர்களிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ அல்லது அவர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கேட்டாலோ உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட்டு உதவி மையத்துக்கு புகார் செய்தாலே சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரின் அனைத்துத் தகவல்களையும் எளிதில் சேகரித்து விடலாம்.

இதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி மூலமாக நடைபெறும் குற்றச்செயல்கள் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

பள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளத்தூரைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி மாயாண்டி. இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் பிரகாஷ், அருகில் உள்ள பள்ளத்தூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், வேதியியல் ஆசிரியர் செபஸ்திராஜ், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த பிரகாஷ் உள்ளிட்ட மாணவர்களைக் கண்டித்துள்ளார்.

சக மாணவ, மாணவியர் முன்னிலையில் கண்டித்ததால் அவமானம் அடைந்த பிரகாஷ், பள்ளி இடைவேளையில் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். ஆய்வகத்தில் இருந்து புகை வெளியேறியதால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் அங்கிருந்தோர், பிரகாஷ் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்தனர்.

தகவலறிந்த மாணவரின் உறவினர்களும், பொதுமக்களும் பள்ளியின் முன்பாக திரண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். மேலும், அந்தப் பகுதி எம்எல்ஏவான கே.ஆர். பெரியகருப்பன், கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர், மாணவரின் சடலத்தை பள்ளத்தூர் காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் செபஸ்திராஜை கைது செய்தனர்.