Home Blog Page 5870

கூடுதல் நிவாரண நிதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்தியக் குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினரிடம், நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மேலும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், “வெள்ள நிவாரண-சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.25,912 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இதையடுத்து, உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் வெள்ளச் சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட வருகை தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

முதல்வர் அவர்களிடம் பேசியபோது…

“பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழை ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நவம்பர் மாத இறுதியில் மத்தியக் குழுவினர் வந்தனர். இந்நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் வரலாறு காணாத கன மழை பெய்தது. அதில், சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போர்க்கால அடிப்படையில்…: உடனடியாக மீட்பு-நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், மிகப்பெரிய அளவில் சொத்துகளுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

டிசம்பரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு துணை அறிக்கையை தயார் செய்து அளிக்கும் என்று சென்னைக்கு டிசம்பர் 3-இல் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 22-ஆம் தேதியன்று துணை அறிக்கையும் அளிக்கப்பட்டது.

வெள்ளப் பாதிப்புகளை, தாற்காலிக, நிரந்தர அடிப்படையில் மீட்பு-சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.17 ஆயிரத்து 431 கோடியே 51 லட்சம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. முதலில் அளிக்கப்பட்ட அறிக்கையில் மீட்பு-நிவாரணப் பணிக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி தேவை எனக் கோரப்பட்டிருந்தது. எனவே நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் ரூ.25,912 கோடி தேவை.

மழை-வெள்ள பாதிப்பை “கடுமையான இயற்கை பாதிப்பு’ என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கும், மீண்டும் மத்தியக் குழுவை அனுப்பி வைத்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போதை நிலையில், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் நிதி ஆதாரங்களைத் தாண்டி, கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே, இதற்கான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் விரைந்து அளிக்க வேண்டும்…

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுதில்லி:

காற்று மாசைக் கட்டுப்படுத்த தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லியில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தில்லி மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை 15 நாட்களுக்கு தில்லி அரசு அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் ஜன.1ம் தேதி முதல் தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை 15 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

பெண்களால் ஓட்டப்படும் கார்கள், சி.என்.ஜி. வாயு என்ஜின் பொருத்தப்பட்ட கார்கள், பேட்டரியால் இயங்கும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்சு வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்‌ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கனரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய உச்ச நீதிமன்றம் தடைவிதித்து செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 2,10.58 மற்றும் தில்லி நெடுஞ்சாலை 57 ஆகியவற்றின் வழியாக தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மட்டும் காற்று மாசுபாட்டுக்கான அபராதவரி செலுத்தி தில்லிக்குள் நுழையலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் சி.சி.க்கும் அதிகமான இழுவைத்திறன் கொண்ட டீசல் வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாகன உற்பத்தியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.

டெங்கு காய்ச்சலை பரவவிடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசாங்கம்

 
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளது சத்துணவு கூட தெருவில் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .
மேற்படி தெருவின் அருகிலேயே மாங்குடி பஞ்சாயத்தின் தலைவராக இருந்து வரும் செல்வரத்தினமும் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் செல்வரத்தினத்தின் உறவினரும், அதே மாங்குடி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான சமுத்திரம் என்பவரும் மேற்சொன்ன தெருவின் அருகிலேயே சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
செல்வரத்தினம் மற்றும் சமுத்திரம் ஆகிய இருவருக்கும் முன்பகை இருந்து வருவதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
 
முன்பகை காரணமாக பஞ்சாயத்து தலைவர் செல்வரத்தினம் அந்த தெரு முழுவதும் ஆங்காங்கே பள்ளத்தை தோண்டி சாக்கடை நீரைத் தேங்க விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அவர் அப்பகுதியில் தேங்கும் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்த செல்லும் சுகாதார ஊழியர்களை தடுத்து அதை அப்புறப்படுத்த விடாமலும் தடுத்து வருவதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
அதன் காரணமாக மாங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது என கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வரும் மருத்துவ ஊழியர்களிடம் அவர் தகறாறு செய்து திருப்பி அனுப்பி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சிறு குழந்தைகள், மாரிமுத்து என்பவரின் மகன் ஜான் கென்னடி, சிங்கராஜ் என்பவரின் மகள் சோனியா, கணேசன் என்பவரின் மகன் வெள்ளைமுத்து, மாரியப்பன் என்பவரின் மகன் வெனில் ஆகிய நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இன்று இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தனராம்.
அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் மற்றும் அரசு மருத்துவரும் பணியில் இல்லாத காரணத்தால் அவர்கள் அனைவரையும் மருத்துவமனை செவிலியர் விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறதாம் .
மாங்குடி பஞ்சாயத்தின் தலைவர் செல்வரத்தினம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து பணத்தை சுருட்டி உள்ளதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
செல்வரத்தினம் செயலால் அவர்மீது வெறுப்படைந்த பொதுமக்கள் சிலரால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி செல்வரத்தினத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

தல-தளபதி ரசிகர்களின் அனல் பறக்கும் விவாதம்: வெல்லப் போவது யார்?

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 9 மணிக்கு கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் இதர சம்பவங்கள் குறித்து இரு தரப்பினர் விவாதிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றி சண்டை வரை சென்றது என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் பங்குபெற்ற அனல் பறக்கும் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி அந்த முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. எனவே விஜய், அஜித் ரசிகர்கள் இதை பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

12,10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: முறையே மார்ச்4, 15ல் தொடங்குகிறது

சென்னை:
பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ஸி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், தேர்வுத் தேதிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. அதனால் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி வழக்கமாக நடைபெறுவதை விட ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

12ம் வகுப்பு அட்டவணை:
மார்ச் 4 தமிழ் 1
மார்ச் 7 தமிழ் 2
மார்ச் 9 ஆங்கிலம் 1
மார்ச் 10 ஆங்கிலம் 2
மார்ச் 14 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

மார்ச் 17 வணிகம், மனவியல்

மார்ச் 18 கணக்கு உயிரியல் நுண்ணுயிரியல் சத்துணவு

மார்ச் 21 கணினி அறிவியல் உயிரியல் வேதியில்

மார்ச் 23 அரசியல் நர்சிங் பொதுபுள்ளியல்

மார்ச் 28 பௌதிகம்

ஏப்ரல் 1 இயற்பியல் பொருளாதாரம்

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தமிழ் 1 – 15.03.2016
தமிழ் 2- 16.03.2016
ஆங்கிலம் – 22
ஆங்கிலம் -29

கணிதம் ஏப்ரல் 4

அறிவியல் ஏப்ரல் 7

சமூகஅறிவியல் 11

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர தொலைபேசி எண் 100யை எடுக்காத காவல் துறையினர்

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 9 தனியார், அரசு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
 
சென்னை கோவளம் பகுதியிலுள்ள ஸ்செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மாணவர்கள் வெளியேற்றப் பட்டனர். மேலும் அந்த ஆசாமி தொலைபேசியில் பேசியபோது “உங்கள் பள்ளியிலும், சென்னையின் பத்து இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்த தனியார் தொலைகாட்சி ஒன்று கோவளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பதிற்க்கு பதில் அமைந்தகரை பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக தவறான செய்தியை வெளியிட்டதாக சொல்லப் படுகிறது.
மிரட்டல் சம்பவம் வைரலாக பரவியதால் பெற்றோர்கள் பதறி அடித்து கொன்டு பள்ளியை முற்றுகையிட்டனர். ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரையில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
 
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து தகவல் அறிய பொது மக்கள் மற்றும் ஊடகதுறையினர் பலர் காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள அவசர தொலைபேசி எண் 100யை தொடர்புகொள்ள முயன்றபோது எவரும் தொலைபேசியை எடுக்கவில்லை எனும் குற்றசாட்டும் எழும்பியது குறிப்பிடதக்கது.

மத்திய அமைச்சரை பதம் பார்த்த ஜல்லிக்கட்டு காளை

 
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அரியலுார் மாவட்டம், பாளையப்பாடி மற்றும் அரியலுாரில்நடந்த பாரதீய ஜனதா கட்சியின் கேந்திரிய கூட்டத்தில் பங்கேற்க, திருச்சியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அரியலுார் மாவட்டம் குலமாணிக்கம் அருகே உள்ள செம்பியக்குடி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி, அவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மாடுகளையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.அப்போது, பொன். அமைச்சர் ராதா கிருஷ்ணன், ஜல்லிக்கட்டு மாட்டின் மூக்கணாங் கயிறு பிடித்து மாடுகளை பார்வையிட்டபோது , காளை திமிறியதில் அவரது வலது உள்ளங்கையில் லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த திருமானுார் வட்டஅரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பாளையப்பாடியில் நடந்த கூட்டத்துக்கு நேரில் வந்து அமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர். நடைபெற்ற சம்பவத்தால் அப்குதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணை கோரி திமுக ஆர்ப்பாட்டம்: 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திமுக., சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்த பெருமழையால் விவசாயம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளினாலும், மெத்தனத்தினாலும் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோக, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க. அரசு உயிர்ச் சேதம் குறித்த எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்காமல், திட்டமிட்டு உண்மை நிலையை மறைத்து வருகிறது.

கடந்த 15.10.2015 அன்று மத்திய வானியல் ஆய்வு மையம் தமிழக அரசுக்கு வழங்கிய தகவலின்படி, டிசம்பர்-1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வழக்கத்தைக் காட்டிலும் 112 சதவிகிதம் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்பதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருந்ததாகவும், முதலமைச்சரும் அக்கறையின்றி நடந்து கொண்ட காரணத்தினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று ஏறத்தாழ 33,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தினால்தான் வீடுகளில் வெள்ளம் புகுந்து பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் வாழ்வாதாரச் சிதைவும் ஏற்பட்டன என நீர் மேலாண்மை வல்லுனர்களும், ஊடகங்களும், ஏனைய கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். வழக்கத்துக்கு மிகவும் அதிகமாகப் பெய்யக்கூடிய மழையால் பெறக் கூடிய அதிகமான நீர்வரத்தை எதிர்பார்த்து, அதற்கேற்றவாறு கொள்ளளவைக் குறைத்து ஏரிகளைப் பாதுகாப்பதுதான் ஒரு நல்ல அரசின் கடமை.

ஆனால், கையாலாகாத அ.தி.மு.க. அரசு, முதலமைச்சரின் அக்கறையற்ற நடவடிக்கையால் மக்களுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் மிகப் பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது.

இந்தப் பேரிழப்பு ஏற்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்தும், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் தமிழக அரசு இதுவரை ஏன் எந்த விளக்கமும் வெளியிட முன்வரவில்லை என்பது குறித்து விசாரிப்பதற்கு தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றினை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கருணாநிதி நேரடியாகச் சென்று வழங்கிய மனுமீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும்:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் உயிரிழந்த, உடைமைகளை இழந்த, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும் உடனடி நிவாரணம் வழங்கிடவும், மத்திய அரசு இதுவரை ரூ.1,939 கோடி உதவி நிதி அளித்துள்ளது.

மேலும், கர்நாடக அரசு, ஆந்திர அரசு, ஒரிசா அரசு, உத்திரபிரதேச அரசு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் உதவிநிதி வழங்கியுள்ளன. அத்தோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கியுள்ளனர்.கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக ரூ. 1 கோடி நிதி வழங்கினார்.

அத்துடன் தலைவர் கலைஞர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அது தவிர, தனியார் நிறுவனங்கள் பலவும், பொதுமக்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த நிதியை முறையாக பாதிப்புக்கு ஆளான மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்காமல், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, வெள்ள நிவாரணம் பாதிப்புக்கு ஆளான அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி முறையாகப் போய்ச் சேருவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அவர்கள் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

சென்னை நகருக்குள் மறு குடியமர்த்த வேண்டும்:

தமிழக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் போதிய அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு, தற்போது அடையாற்றின் கரையோரம் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது.

இன்னும் நான்கு மாத காலத்தில் இந்தப் பகுதிகளைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பலரும் பணிக்குச் செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த மக்களை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பேரணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

– என்று மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். டி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் சற்குண பாண்டியன், கீதா ஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நடிகர் குமரிமுத்து, கே.கே.நகர் தனசேகரன், சேப்பாக்கம் பகுதி செய லாளர் மதன்மோகன், மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை:

ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த உரை இப்போது செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசிகள் மூலம் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உரை தொடக்கத்தில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தொலைபேசி அழைப்பு மணி திடீரென ஒலிக்கிறது. எவரேனும் முக்கியமான நண்பர்கள் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் எடுத்தால், ‘‘ வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’’ எனத் தொடங்கி ஜெயலலிதாவின் முழு உரையும் ஒலிக்கிறது. தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி தான் என்ற போதிலும் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசி பயன்படுத்துவதால் கிட்டத்தட்ட 10 கோடி செல்பேசி இணைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர 2 கோடிக்கும் அதிகமான தரை வழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இந்த அனைத்து தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கும் குறைந்தது 5 முறையாவது ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை சென்றடைய வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆணையிடப்பட்டிருப்பதால் அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ அழைத்து பொதுமக்களை எரிச்சலூட்டுகிறார்.

ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தான் மேற்கொண்டு வருகிறது. நோய்டாவில் உள்ள அழைப்பு மையங்கள் மூலம் மேற்கொள்ளப் படும் இந்த பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். ஆனால், ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரையில் என்ன திட்டம் அல்லது பயனுள்ள தகவல் இருப்பதாக எண்ணி அதை மக்களிடம் கொண்டு செல்ல கோடிக்கணக்கில் வரிப்பணத்தை அரசு செலவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

மழை – வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்த போது முதலமைச்சரோ, அமைச்சர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் முதலமைச்சர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு,‘‘ உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்’’ என்று உருக்கமாக பேசி மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயல்கிறார். உண்மையில் மக்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் ஜெயலலிதா சுமக்கவில்லை; மாறாக ஜெயலலிதா அரசின் பாவ மூட்டைகளைத் தான் ஒரு பாவமும் செய்யாத தமிழக மக்கள் தங்களின் தலை மீது சுமந்து கொண்டிருக்கிறார்கள். ‘‘எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்’’ என்பது முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் அடுத்த வசனம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஊழல் செய்து வளைத்து போட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த நம்பிக்கையில் தனக்கென தனி வாழ்க்கை எதுவுமில்லை என்று ஏமாற்று வசனம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை.

இன்றைய சூழலில் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை என்பது முன்கூட்டியே தொடங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்காக செலவிடப்படும் பணத்துடன் இன்னொரு மடங்கு சேர்த்தால் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை அமைத்து ஆண்டுக்கு 100 முதல் 150 மருத்துவர்களை உருவாக்கலாம். ஆனால், அதை செய்வதை விடுத்து தனது சொந்த லாபத்திற்காக, செய்யாத தியாகத்தை விளம்பரப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் ஜெயலலிதா தான் தமிழக மக்களின் முதன்மை எதிரி ஆவார். வரும் தேர்தலில் அவரை வீழ்த்துவது தான் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

அரசின் சொத்துக்களையெல்லாம் தமது சொந்த சொத்துக்களாக ஜெயலலிதா நினைத்துக் கொள்வது இது முதல் முறையல்ல. நேற்று கூட, அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை கட்சி அலுவலகத்திற்கோ அல்லது தமது இல்லத்திற்கோ அழைக்காமல் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து தான் ஆசி வழங்கியிருக்கிறார். இதற்கு முன்பு கூட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் தான் அவர் நடத்தினார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் பெரும்பாலானவற்றை அரசு செலவில் செய்ததுடன், புகைப்படம் எடுப்பது, பொதுக்குழு குறித்த செய்திகளை வெளியிடுவது ஆகியவற்றுக்காக தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகளை பயன்படுத்திக் கொண்ட புதிய பொதுவுடைமைவாதி தான் ஜெயலலிதா.

அ.தி.மு.க.வின் அருவறுக்கத்தக்க இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு உண்மைகளை மூடி மறைத்தாலும், அவை தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் காலம் வந்து விட்டது. இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதாவை வரும் தேர்தலில் வீழ்த்தி தமிழகத்தை மக்கள் மீட்டெடுப்பது உறுதி!

மதிமுக., மா.செ., கார் கண்ணாடி உடைப்பு: கொலைமிரட்டல் வருவதாக புகார்

சென்னை:

மதிமுக., வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவருடைய காரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துச் சென்றனராம். மேலும், அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் காரையும் சேர்த்து உடைத்து விட்டு அவர்கள் தப்பியோடி விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னைக் கொலை செய்து விடுவதாக, தினமும் தொடர்ந்து மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் ஜீவன் புகார் அளித்துள்ளார்.