Home Blog Page 6063

சென்னை டி.ஜி.பி அலுவலகம் அருகே சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!

சென்னை: டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகி றார். இதேபோல் நேற்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு தனது தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரையும் மெரினா காவல் நிலைய ஆய்வாளர் சிபுகுமார் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற போதும், பிப்ரவரி 22-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைதானமை குறிப்பிடத்தகக்து.24-04-15 Law College Student Nandhini photo

ராகுலின் ஆன்மிகப் பயணம்: கேதார்நாத் கோவிலில் தரிசனம்

டேராடூன்: சுமார் 2 மாத கால நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆன்மிகப் பயணமாக கேதர்நாத் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது 56 நாள் ஓய்வுக்குப் பின்னர் ஏப். 16ஆம் தேதி தில்லி திரும்பிய ராகுல் காந்தி, பின்னர் ஏப். 19ல் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டார். அந்த சூட்டோடு, நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் பங்கேற்று, நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகப் பேசினார். இந்நிலையில் ராகுல்காந்தி திடீரென தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான புனிதம் வாய்ந்த 11ஆவது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள தலம் கேதர்நாத். இந்தத் தலத்துக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், டேராடூன் விமானநிலையத்தை காலை வந்தடைந்தார். அவரை மாநில முதல்ஜ்ஜ்வர் ஹரீஷ் ராவத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். 2013இல் கேதார்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கௌரிகுண்ட் பகுதிக்குப் புறப்பட்டார். அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதார்நாத் செல்லும் ராகுல், இன்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து கண் ஜாடை: இளைஞர் கைது!

mla-aap-delhiபுது தில்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவைப் பார்த்து கண் ஜாடை செய்த ஒரு ஆத்மியை (இளைஞரை) போலீசார் கைது செய்துள்ளனர். தில்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிஃப் பாரம்பரிய மாளிகையை, ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பா ஆய்வு செய்தார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரிடம் கண் ஜாடை காட்டி, தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞரை, அல்கா லாம்பா கன்னத்தில் அறைந்து விட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து அல்கா லாம்பா கூறுகையில், ”அந்த இளைஞர் என்னைப் பார்த்து கண் ஜாடை செய்து சைகை காட்டினார். என்னை தவறான வகையில் பார்த்தார். அந்த இளைஞர், நகராட்சி மன்றம் அருகே என்னை நெருக்கிவந்தார். உடனடியாக நான் அவரின் கன்னத்தில் அடித்து விட்டேன். இதை அடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் அவர், தான் மனநிலை சரியில்லாதவர் என்று கூறினார். ஆனால், அதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதற்கான சரியான ஆவணங்களை அவருடைய பெற்றோர் ஒப்படைக்கவில்லை. அதனால், போலீசாரிடம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார். இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரிலும் பதிவு செய்துள்ளார் அல்கா லம்பா. இந்நிலையில், அந்த இளைஞர், பால்ஜீத் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது என்று கூறிய போலீசார்,இது குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தனர்.

சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சாலை போக்குவரத்து & பாதுகாப்பு மசோதாவைக் கைவிட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு மாற்றாக சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட முன் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லாத நாடாக மாற்றவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படும் நாடு என்ற அவப்பெயரை நீண்ட காலமாக இந்தியா சுமந்து கொண்டிருக்கும் நிலையில், விபத்துக்களைத் தடுத்து அந்த அவப்பெயரை துடைத்தெறிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்நோக்கத்தை எட்டுவதற்காக புதிய சட்டத்திருத்த முன்வரைவில் மத்திய அரசு முன்வைத்துள்ள திட்டங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுடன், தனியாருக்கு சாதகமாகவும், வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன என்பது வேதனையான விஷயமாகும். மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத்தின்படி, போக்குவரத்துத்துறையில் மாநில அரசுகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். வாகனங்களுக்கு வரி நிர்ணயித்தல், வரி வசூலித்தல், பதிவு செய்தல், பெர்மிட் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தேசிய போக்குவரத்து ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதனிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணிகளை ஆணையம் நேரடியாக மேற்கொள்ளாது. மாறாக இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும். உதாரணமாக இப்போது வாகனங்களை பதிவு செய்யும் பணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செய்து வந்தன. இனி இந்த அலுவலகங்கள் மூடப்பட்டு விடும். அவற்றுக்கு பதிலாக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றை பதிவு செய்து தரும். இதற்காக இப்போது வசூலிக்கப்படுவதைப் போல சுமார் 10 மடங்குவரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆபத்துள்ளது. பேருந்து போன்ற போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான வழித்தட பெர்மிட்டை இனி தேசிய போக்குவரத்து ஆணையம் தான் வழங்கும். இவை ஏலம் கேட்கும் முறையில் வழங்கப்படுவதால் பெரு நிறுவனங்கள் அதிக தொகைக்கு வழித்தட பெர்மிட்டை ஏலத்தில் எடுக்கும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போட்டியிட முடியாது என்பதால், அரசுப் பேரூந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்; அதேநேரத்தில் தனியார் பேரூந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் பேரூந்து உரிமையாளர்களுக்கே வழங்கப்படுவதால் பேரூந்து கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியாது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பேரூந்து பயணம் எட்டாக் கனியாகி விடும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இப்போதுள்ள ஓட்டுனர் உரிமங்கள் அனைத்தும் செல்லாததாகி விடும். அவற்றுக்கு மாற்றாக அடுத்த 2 ஆண்டுகளில் புதிய உரிமங்களைப் பெற வேண்டும். இந்த உரிமங்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு நடத்தி வழங்கும். இதற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இப்போது சுமார் 30 கோடி பேர் உரிமம் வைத்திருப்பதாகவும், அவர்கள் ஒரு உரிமத்திற்கு ரூ. 5,000 வீதம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் வைத்துக் கொண்டால் உரிமம் வழங்கும் தனியார் நிறுவனங்கள் இரு ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் கொள்ளையடிக்கும். ஏற்கனவே உரிமம் பெற்ற மக்களுக்கு மீண்டும் ஒரு உரிமம் பெறுவது என்பது தேவையற்றது என்பதுடன், வீண் அலைச்சலையும், செலவையும் ஏற்படுத்தும். மேலும், இப்போதுள்ள உரிமங்கள் அனைத்து மாநில அரசுகளால் வழங்கப்பட்டவையாகும். அவை செல்லாது என்று அறிவிப்பது மாநில அரசுகளின் நேர்மையை சந்தேகிக்கும் செயலாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சிறப்பான நிர்வாகத்திற்கு அதிகாரப்பரவல் தான் சிறந்த வழி என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. திட்டமிடலில் பிரதமரும், முதலமைச்சர்களும் சம பங்குதாரர்களாக இருக்கும் ‘டீம் இந்தியா’ உருவாக்கப்படும்; மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவு நிலவ செயல்திட்டம் வகுக்கப்படும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அனைத்தையும் தனது அதிகார வரம்புக்குள் கொண்டு வர நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் பணியையையும், உரிமம் வழங்கும் நிறுவனங்களே கட்டணம் பெற்றுக் கொண்டு செய்யும் என்பதால் நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படும். இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகி விடும். புதிய சட்டத்தில் பேரூந்து நடத்துனர் பணி ஒழிக்கப்படுவதால் நடத்துனர் உரிமம் பெற்று வேலை செய்பவர்கள் வேலை இழக்க நேரிடும்; வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலையே கிடைக்காது. இதேபோல் வாகனக் காப்பீடு, உதிரி பாகம் தயாரிப்பு போன்றவை தொடர்பான பிரிவுகளும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். 10 லட்சம் பேருக்கு வேலை தருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் பல லட்சம் பேர் வேலையிழப்பர். மாநில அரசுகள் மட்டுமின்றி மக்களின் உரிமைகளையும் பறித்து தனியாருக்கு தாரை வார்க்கும் இந்தக் கருப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்கும் என்பதை கட்சியினர் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

வறட்சி, குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மே 15ல் போராட்டம்: பாமக., அறிவிப்பு

சென்னை: வறட்சி, குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மே 15ல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து 32 மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறட்சி நீடிக்கும் போதிலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிவாரண நடவடிக்கைகளில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மிகக் கடுமையான வறட்சி நிலவியது. அதை சமாளிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களில் எலிக்கறியை உண்ணும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அதன் பின்னர் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே தமிழகத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை அல்லது பயிரிட்டாலும் கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலை தான் காணப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் நடத்திய போராட்டத்தின் பயனாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று 19.03.2013 அன்று தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த நிவாரணத் திட்டத்தின் நடைமுறைக்கு பொருந்தாத நிபந்தனைகள் காரணமாக 50% விவசாயிகளுக்கு கூட நிவாரண உதவி கிடைக்கவில்லை. தொடர்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட கடன்சுமை காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் 623 உழவர்கள், 2012 ஆம் ஆண்டில் 499 பேர், 2013 ஆம் ஆண்டில் 105 பேர் என 3 ஆண்டுகளில் மொத்தம் 1227 உழவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டின் தற்கொலைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1500&ஐத் தாண்டும். இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள போதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த உதவியையும் தமிழக அரசு வழங்கவில்லை. வறட்சி தீவிரமடைந்ததன் விளைவாக அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக வேலூர் மாவட்டத்திற்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.10 கோடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.5 கோடி சென்னை தவிர மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல. குறிப்பாக தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், மதுரை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழக அரசு ஒதுக்கிய ரூ.50 லட்சத்தை வைத்துக் கொண்டு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.25 கோடி முதல் ரூ.60 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். பா.ம.க.வின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தருமபுரியிலும், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வேலூரிலும், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அரியலூரிலும் போராட்டத்திற்கு தலைமையேற்பார்கள். மற்ற மாவட்ட, வட்டத் தலை நகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீகாரில் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு

பீகாரில் புயல் பாதித்த பகுதிகளை இன்று ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார். பீகாரில் புயல் அதிகம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதை அடுத்து, இன்று அவர் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

‘கந்தர் சஷ்டி கவசம்-வரிகள் + ஆடியோ-சூலமங்கலம் சகோதரிகள்.

https://www.youtube.com/watch?v=mxhKjSBNpKg ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. நூல் சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் … … 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக … … 10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக … … 15 சரஹணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென … … 20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க … … 25 விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும் … … 30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் … … 35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் … … 40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும் … … 45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண … … 50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து … … 55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று … … 60 உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க … … 65 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க … … 70 முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க … … 75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க … … 80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க … … 85 வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க … … 90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க … … 95 எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க … … 100 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க … … 105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் … … 110 கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் … … 115 கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் … … 120 பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் … … 125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட … … 130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய … … 135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் … … 140 பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட … … 145 தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் … … 150 சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் … … 155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் … … 160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் … … 165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா … … 170 கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே … … 175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை … … 180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார் … … 185 சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் … … 190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் … … 195 பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய … … 200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் … … 205 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் … … 210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை … … 215 வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி … … 220 அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் … … 225 சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி … … 230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே … … 235 மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம். ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

கம்பன் கணக்கு சக்ரவர்த்தி

கம்பன் கணக்கு சக்ரவர்த்தி தமிழ் கவிஞர்களுக்கு கணக்கின் மேல் ஒரு மாளாத காதல்! கவிதைகள் மூலம் கணக்கைக் கற்பிக்கும் பாங்கு மிக நயமானது. தமிழ்ப் புலவர்கள் “பதினாங்கு உலகங்கள்’ என்று கூறமாட்டார்கள். “”ஈரேழு பதினான்கு உலகங்கள்” என்று வாய்ப்பாட்டைச் சொல்லித்தான் கூறுவார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. பலப்பல உதாரணங்களைக் கூறலாம். “சாதாரண கவிஞர்களே இப்படி என்றால் கவிச்சக்கரவர்த்தி எப்படி என்று பார்ப்போமா? வாலியும் மாயாவியும் கடும் சண்டை போடுகிறார்கள். சண்டை போட்டுக் கொண்டே மாயாவி ஒரு குகைக்குள் ஒளிந்து கொள்கிறான். வாலி தொடர்ந்து குகைக்குள் சென்று அரக்கன் மாயாவியை ஒழித்துக்கட்ட விரும்புகிறான். வாலி தனது தம்பி சுக்ரீவனை அழைத்து “”தம்பி! நீ குகை வாயிலில் காவல் இரு. மாயாவி தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள். நான் உள்ளே சென்று அக்கொடியவனைக் கொன்று வருகிறேன்” என்று சொல்லி குகைக்குள் சென்றான். பல நாட்கள் ஆகியும் வாலியோ, அரக்கனோ வெளியே வரவில்லை. எத்தனை நாட்கள்? கம்பனிடம் கேட்போமா? “”ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்” மாதம் போரிட்டான் என்கிறார் கம்பன். ஏழொடு ஏழ் என்றால் 7+7=14 இருது என்றால் இரு மடங்கு இருது ஏழொடு ஏழ் என்றால் 2ஙீ14=28 இருது என்பது, tதீடிஞிஞு, ஞீணிதஞடூஞு என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழகு தமிழ்ச் சொல். இருபத்து எட்டு மாதங்கள் என்று உப்புச் சப்பில்லாமல் கூறுவதற்கு மாறாக என்ன அருமையான கவிதைக் கணக்கு பாருங்கள்! சுக்ரீவன், இராமனுக்கு வாலியை எதிர்கொள்ளும் அளவிற்கு வலிமை இருக்கிறதா என்று சோதிக்க விரும்புகிறான். மராமரத்தில் ஒன்றைத் துளைத்து உன் வலிமையைக் காட்டு என இராமனை வேண்டுகிறான். மராமரங்கள் எத்தனை? இதோ கம்பனின் கூற்று: “”ஐந்தினொடு இரண்டின் ஒன்று உருவ உன் அம்பு போகவே!” ஏழு மராமரங்கள் என்பதை 5+2 என்கிறார் கம்பர். அனுமனை எதிர்த்துப் போரிட அக்ஷய குமாரன் பெரும்படையுடன் புறப்படுகிறான். அவனுடன் “நான்கு லக்ஷம்’ வீரர்கள் செல்கின்றனர். “”நான்கு லக்ஷம் என்று கூறினால் கம்பன் எப்படி கணக்குச் சக்ரவர்த்தி ஆக முடியும்! எனவே “”ஈர் இரண்டு இலக்கம்” வீரர்கள் என்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு பெரிய கணக்கையே போடுகிறார் கம்பர். ஜம்புமாலி அனுமனை எதிர்க்கச் செல்கிறான். அவனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என பின் தொடர்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் எத்தனை எண்ணிக்கை சென்றன? கம்பனின் அருமையான கணக்குக் கவிதை இதோ. “”ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடந்தேர் அத்தேர்க்கு ஏயின இரட்டியானை, யானையின் இரட்டிபாய் மா, போயின, பதாதி சொன்ன புரவியின் இரட்டிபோலாம் தீயவள், தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை” ஐந்தாயிரத்தொடு ஒரு ஐந்தாயிரம் = 10000/ தேர்கள். அதில் இரட்டி = 20000 யானை. அதில் இருது = 40000 பாயும் குதிரைகள். அதில் இருமடங்கு = 80000 பதாதிகள் அதாவது காலாட் படைகள்! எத்தனை அருமையான கணக்கு! *

படித்ததில் பிடித்தது

வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துருப் பிடிக்கத் தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச்செய்யும் பொருட்டு துணிவு என்ற எண்ணெயை அவ்வப்போது இடுவதோடு,நம்மைச் சார்ந்தவர்களுடைய சக்கரங்களுக்கும் இட்டால் தான் வாழ்க்கை என்ற வண்டி பழுதின்றி ஓடும் என்று,உருண்டோடும் வண்டிக்கு ஒப்பாக வாழ்க்கையை உருவகப்படுத்துவது சிறப்பு. இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும்,துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும். என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும்,இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல,சக்கரம் போல சுழன்று ,மாறி,மாறி வருவது தான் வாழ்க்கை என்ற சூட்சுமம் தெரிந்து கொண்டால்,துன்பங்கள் நம்மைத் துரத்தாது. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை,அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல் _ நாலடியார். மழையைப் பொழிய வைக்கவோ,அதிகமாகக் கொட்டும் மழையை நிறுத்தவோ ,வலிமையுள்ளவர்களால் கூட ஆகாது.அது போல வினைப் பயனால் வரக் கூடிய தீமைகளைத் தடுத்து நிறுத்தவோ,வர வேண்டிய நன்மைகளை வராமல் தடுக்கவோ யார் முயன்றாலும் முடியவே முடியாது என்று நாலடியார் கூறுகிறது. எனவே்,நமது வினைப்பயனால் வந்த தீமை என்று துன்பங்களை ஏற்கும் பக்குவம் பெற்று விட்டால்,துன்பம் அகன்றோடி விடும். மேலும்,வரவேண்டிய நன்மைகளை யார் முயன்றாலும் தடுக்கமுடியாது என்று மனதில் ஆறுதல் கொண்டால் வாழ்க்கைச் சக்கரம் வளமான பாதையை நோக்கிப் பழுதின்றி ஓடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மேலும் சேவை,தியாகம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் ,சொந்த சுகங்களைப் பற்றி எண்ணிக் காலத்தை வீணடிக்க மாட்டார்கள்.ஏனெனில் உலகப்பிரகாரமான வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாலும்,சொந்த பந்தங்களின் பாசப் பிணைப்பில்,பற்றுடன் இருப்பவர்களாலும்,சேவை,தியாகம் போன்ற சமூக நலனுக்கான ஆக்கப் பூர்வமான சிந்தனைகளோடு செயல்பட இயலாது.தன் சுக துக்கங்களையும்,தன்னைச் சார்ந்தோரின் குண நலன்களைப் பற்றியும்,பற்றற்று இருப்பவரால் மட்டுமே சேவையில் திறம்பட ஜொலிக்க முடியும். விருப்பு,வெறுப்பு,வெற்றி,தோல்வி,துக்கம்,சந்தோஷம் போன்ற நிலைகளில் தன்னிலையில் பிறழாதவர்களால் தான் ,தங்களையும் பேணிக் காத்து,மற்றவர்களுக்கும் மகிழ்வுடன் உதவிசெய்து சந்தோஷமாக இருப்பார்கள் என்பது மகாத்மா காந்தியின் வரிகள் . படித்ததில் பிடித்தது.

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

மதுரை: கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால் தேர்வானவர்கள் பட்டியலில் தமது பெயர் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 652 பணியிடங்களில் 130 பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படும் என அறிவித்துவிட்டு, 154 பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கணினி ஆசிரியருக்கான பணி நியமனங்கள் இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே அமையும் எனவும் அறிவித்தார்.