பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் அதிகமான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். ஆண் பிள்ளைகளுக்கும், 5ம் வகுப்பு வரை படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர். இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன. இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளருக்கு பத்திரிகைத் துறையின் புலிட்சர் பரிசு
அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, எழுத்து, இசை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண்டுக்கான விருதுகள் புதன் அன்று அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மென்பொருள் பொறியாளர் பழனி குமணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணியாற்றிவரும் பழனி குமணன், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் துறையின் மூலம் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையிலான சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க தேவையான தகவல் தொகுப்பாக ஒரு டேட்டா பேஸ் உருவாக்கியதற்காக இதே பத்திரிகையைச் சேர்ந்த கிராபிக்ஸ் குழுவினருடன் இணைந்து இந்த உயரிய புலிட்ஸர் விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.
கோத்தபய மீதான ஊழல் வழக்கு: ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று ஆஜர்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜரானார். முன்னதாக,மகிந்தவின் இன்னொரு சகோதரர் பசில் ராஜபட்ச மீது சுமத்தப் பட்டிருந்த ஊழல்குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், அவர் பின்னர் கைதானார். அது போல கோத்தபயவும் விசாரணைக்குப் பின் கைதாவார் என்று கூறப்படுகிறது. இவர் ராஜபட்ச ஆட்சியில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார். அப்போது அவன்கார்ட், லக்னலங்கா நிறுவனங்களில் நடந்ததாகக் குறப்பட்ட ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணைய குழு ஹைதராபாத் வருகை
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகளை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையக் குழு, அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஹைதராபாத் வந்தது. இந்தக் குழு அடுத்த 3 நாட்கள் ஹைதராபாத் தில் தங்கி திருப்பதி வனப்பகுதியில் நடைபெற்ற செம்மரக் கடத்தல் என்கவுன்ட்டர் உட்பட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளது. ஹைதராபாத்தில் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகளில் மனித உரிமை மீறல் குறித்து நேரடி விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணைக்கு முன்னர், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசியபோது, நாட்டில் மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமைகளை மீறாமல் காக்க வேண்டியது அரசுகளின் பொறுப்பு. ஆந்திர அரசுக்கு தலைநகர் முக்கியம். தெலங்கானா அரசுக்கு வளர்ச்சி முக்கியம். ஆனால் இதர விஷயங்களில் அலட்சியம் கூடாது. இந்த 3 நாட்களில் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்து வந்துள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும். பின்னர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். என்றார்.
ஆத்விக்… இதுதான் குட்டி ‘தல’யோட பெயர்
இன்னும் சில நாட்களில் 43 வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் அஜித்திற்கு கடந்த மார்ச் 2ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே 8 வயதில் அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார். அஜித்தின் ஆண் வாரிசுக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற ஆவல் அனைத்து ரசிகர்களிடமும் அதிகமாகவே இருந்தது.
தற்போது அஜித் மகனின் பெயர் தெரிய வந்துள்ளது. ஆத்விக் அஜித்குமார் என்பதுதான் ‘குட்டி தல’யின் பெயர். ஆத்விக் என்றால் ‘தனித்துவம்’ என அர்த்தமாம்.
முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்
ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில்தான் டிக்கெட் பெற வேண்டும். இதனால், பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நின்றுபயணச்சீட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் செல்போன் மூலம் பெறும் புதிய முறையை ரயில்வே அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டுகளை பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போன்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் பயணச்சீட்டை பிரிண்ட் எடுக்கத் தேவையில்லை. செல்போனில் தோன்றும் தகவலைக் காட்டினாலே போதும். மேலும், பயணச்சீட்டைப் பெறுவதற்காக பணத்தை இருப்பில் வைத்து செலுத்தும் வசதியும் உள்ளது. இந்தத் தொகையை இணையதளம் மூலமாகவோ, ரயில் நிலையங்களில் நேரிலோ செலுத்திக் கொள்ளலாம். அதேபோல், மாதாந்திர ரயில் பயணச் சீட்டுகளை புதுப்பித்து கொள்ளும் வசதியும் இந்த வகையில் இடம் பெற்றுள்ளது.
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி உள்பட 8 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். களக்காடு அருகே கீழப்பத்தைபண்டிதன்குறிச்சியில் அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே பள்ளி கழிவறையில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யுமாறு மாணவ, மாணவியரை ஆசிரியைகள் வியாழக்கிழமை வற்புறுத்தினராம். இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கவே, கீழவடகரை, கீழப்பத்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகி மற்றும் 7 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’
சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில், பம்மல், மூங்கில் ஏரி, பொன்னி நகர், பாரதியார் தெருவை சேர்ந்த பாண்டி மகன் பாலச்சந்தர், 18, என்பவரும் இருந்தார். படப்பை தனியார் பொறியியல் கல்லூரி, மூன்றாமாண்டு மாணவரான அவர், போலீசார் பாதுகாப்புக்காகப் போட்டிருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலை, மாணவரை தடுத்து நிறுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மாணவர், திருமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரை அங்கிருந்த போலீசார் பிடித்து, சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் சிபாரிசில், மாணவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவு சென்றதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம், மாணவர் பாலச்சந்தர் தகராறில் ஈடுபட்டதாக சிறிய வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்பட்டதாம். இது குறித்து போலீசார் சிலர் கூறுகையில், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை, கல்லூரி மாணவர் ஒருவர், பொது இடத்தில் தாக்கியதற்கு, வழக்கு பதிவு செய்ய இயலவில்லை எனில், கீழ் நிலையில் உள்ள எங்களை போன்ற சாதாரண காவலர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லை எனப் புலம்பினர்.
சுங்கத்துறையில் 15கிலோ தங்கம் மாயமான விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்
திருச்சி: திருச்சி சுங்கத் துறையில், சுங்கத் துறை அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமானது கடந்த சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதை அடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப் படும் தங்கம், விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அதைக் கடத்தி வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு முடியும் வரை அந்த தங்கம் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அவ்வகையில், சில மாதங்களுக்கு முன்னர் முத்துப்பேட்டையில் காரில் ஒருவர் கடத்தி வந்த 22 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதுவரை 75 கிலோ தங்கம் வரை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்த நவாஸ்கான் என்பவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை சுங்கத் துறை ஆணையர் கே.சி. ஜானி சனிக்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கச் சென்றார். அப்போது, ஏற்கெனவே அதில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ தங்கத்தில் 14.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து அவர், சனிக்கிழமை நள்ளிரவு 12.30க்கு திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரை அடுத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கே சென்று அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், சுங்கத் துறை அலுவலகத்தில் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 3.50 கோடி ரூபாய் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை என்பதால், அங்கே பணிபுரியும் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அலுவலகத்தில் உதவி ஆணையர் வெங்கடேசலு அளித்த புகாரையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக சுங்கத்துறை ஆய்வாளர் செந்தில்குமார், பாதுகாப்பு பெட்டக கண்காணிப்பாளர் முகமது பரூக் ஆகிய 2 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லிட்டருக்கு ரூ.2: தனியார் பால் விலைக் குறைப்பு
சென்னை: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் தேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவன பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைப்படும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பாலில், தனியார் பால் நிறுவனங்களே 1 கோடியே 25 லட்சம் லிட்டர் பால் தேவையை பூர்த்தி செய்கிறது என்றும், கடந்த ஆண்டு ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 வரை உயர்ந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனமான டோட்லா, பால் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிற தனியார் பால் நிறுவனங்களும் விலையைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

