Home Blog Page 6066

பீகார் புயல்: பலியானோர் குடும்பத்துக்கு மோடி இரங்கல்

புது தில்லி : பீகார் மாநிலத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மோடி தனது டிவிட்டரில்… இயற்கைச் சீற்றத்தால் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலைமை குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேட்டறிந்ததாகவும், மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நிதிஷிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கூறி, பீகாருக்குச் சென்று நிலையை தீவிரமாகக் கண்காணிக்கும் படி கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னா, பூர்னியா மற்றும் மாதேபுரா பகுதிகளில் வீசிய புயலில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

விவசாயி தற்கொலை ஒரு எச்சரிக்கை மணி: மு.க.ஸ்டாலின்

சென்னை: தில்லியில், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பிறகாவது அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், எழுதிய குறிப்பில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்று கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலம் பொருளாதாரம் சார்ந்த சொத்து மட்டுமல்ல விவசாய குடும்பங்களுக்கு வாழ்வாதரத்திற்குமான ஆதாரமாகும். பணத்தைக் கொடுத்து ஈடுகட்ட முடியாத அளவிற்கு நிலம் என்பது அந்த நில உரிமையாளர்களின் உணர்வோடு தொடர்புள்ளது. இந்த தற்கொலை மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி. ஆகவே உரிய முறையில் செயல்பட்டு விவசாயிகள் விரோத நில எடுப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் விரோத மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் – என்று கூறியுள்ளார்.

என்கவுன்டர் தொடர்பில் நீதி விசாரணை ஏன் இல்லை?: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

ஹைதராபாத்: திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை? என்று ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசார் மற்றும் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் என்றும் போலீசார் அவர்களை முன்கூட்டியே பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, உச்ச நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 3 பேர் கொண்ட மனித உரிமை ஆணைய அமர்வு, ஹைதராபாத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது. ஆணையத்தின் முன்னர், ஆந்திர அரசு சார்பில் கூடுதல் டி.ஜி.பி. வினய் ரஞ்சன் ரே ஆஜரானார். அவரிடம் மனித உரிமை ஆணைய அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இதில் குளறுபடி உள்ளது. வருவாய்த் துறையினர் ஏன் விசாரணை நடத்தவில்லை. வருவாய்த்துறை விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை. இந்தப் படுகொலை குறித்து, ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்று கேள்விகளை எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவுசெய்ய காலதாமதம் ஆனது ஏன் என்றும் கேள்வி எழுப்பி, ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனத்தைத் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு ஆந்திர அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் கோத்தய ராஜபட்ச !

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக,மகிந்தவின் இன்னொரு சகோதரர் பசில் ராஜபட்ச மீது சுமத்தப் பட்டிருந்த ஊழல்குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், அவர் பின்னர் கைதானார். அது போல கோத்தபயவும் விசாரணைக்குப் பின் கைதாவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். அவர் மீது விசாரணை மேலும் நடைபெறும் என்று தெரிகிறது. மகிந்த ராஜபட்ச ஆட்சியில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார் கோத்தபட ராஜபட்ச. அப்போது அவன்கார்ட், லக்னலங்கா நிறுவனங்களில் நடந்ததாகக் கூறப்பட்ட ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாகத்தான் தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் மே.2ல் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு: ஈ.வி.கே.எஸ்.,

நாகர்கோவில்: சென்னையில் வரும் மே மாதம் 2 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று ஆளுனரை சந்தித்து தமிழகத்தில் உள்ள முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புகார் மனுவாக அளிக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்கா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் மீது ஊழல் புகார்கள் அதிக அளவில் உள்ளன. இவர்கள் மீதான ஊழல் புகார் அடங்கிய பட்டியலை வரும் மே மாதம் 2 ம் தேதி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகச் சென்று தமிழக ஆளுனரை சந்தித்து கொடுக்க உள்ளோம். கொக்கோ கோலாவிற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அனுமதி கொடுத்திருந்தால்தான் அதனை ரத்து செய்ய முடியும். ஆனால் தொழிற் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சட்டசபையில் அனுமதியே கொடுக்கவில்லை என்று அறிவித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரை செய்தியாளர்கள் சொன்ன உடன்தான் அப்படி ஓன்று இருக்கிறதா என்று ஞாபகம் வருகிறது. அந்தக் கட்சியை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.அரசு ஒரு கோமாளி அரசாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடித்தால் அவர்களது படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க காங்கிரஸ் அரசு நடவவடிக்கை எடுத்தது, ஆனால் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க முடியவில்லை. தமிழக அமைச்சர்கள் தினமும் கோவில்களில் உருண்டு புரண்டு, பால்குடம் ஏந்தி ஜெயலலிதா முதல்வர் ஆகவேண்டும் என்று வெளிப்படையாக வழிபாடுகள் செய்வதாக கூறினாலும் அதிமுக வினரை அழைத்துக் கேட்டால் ஜெயலலிதா வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகதான் இவற்றை எல்லாம் செய்வதாக கூறுகின்றனர். ஆகா ஊழலில் கிடைத்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள்… என்று கூறினார். மேலும் ,மீன்பிடி தடைக் காலத்தில் பாண்டிச்சேரி அரசு 5 ஆயிரம் ரூபாய் மீனவர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசும் 5 ஆயிரம் ரூ வழங்க வேண்டும் என்று கூறினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

விவசாயி தற்கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; அவை ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று அவை கூடியதும், விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உடனடியாக விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால் ஒத்திவைப்புத் தீர்மானக் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இடதுசாரி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவிய போது குறுக்கிட்டுப் பேசிய அவைத்தலைவர், “விவசாயி தற்கொலை சம்பவம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஆனால், இங்கு விவசாயிகள் பிரச்னை குறித்து யாருக்குமே அக்கறை இல்லை. இவ்விவகாரத்தை அரசியலாக்க முற்பட வேண்டாம்” என்று கூறினார். ஆனால் தொடர்ந்து அவையில் அமளி நிலவியதால், மக்களவையை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, “விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவாக ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயி தற்கொலைச் சம்பவம் தொடர்பாக மீண்டும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.

விவசாயி தற்கொலையில் மர்மம்: கடிதம் கிளப்பும் சந்தேகம்

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலைக்குக் காரணமாக, உரிய நிவாரணம் கிடைக்காததுதான் என கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தக் கடிதத்தை கஜேந்திர சிங் எழுதவில்லை எனவும் அதில் உள்ளது அவரது கையெழுத்து இல்லை எனவும் கஜேந்திர சிங்கின் சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கஜேந்திர சிங் தற்கொலை விவகாரத்தில், இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி தற்கொலை: ஷாருக் கான் அறிவுரையுடன் கூடிய அனுதாபம்

தில்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு ஆவன செய்யுமாறு நடிகர் ஷாருக்கான் வலியுறுத்தியுள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில், கேஜ்ரிவால் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று பழி சுமத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது ட்விட்டர் பதிவில், “தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக யாரும் தற்கொலை செய்வதில்லை, தங்கள் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர்கள் அவ்வாறு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நொடி சிந்தியுங்கள். அவர்கள் வேதனையை உணர்ந்து பாருங்கள். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

பீகார் சூறாவளிக்கு 65 பேர் உயிரிழப்பு: தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாயினர். பீகார் மாநிலம், பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு திடீரென சூறாவளி வீசியது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறாவளியில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டது. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளும் இதில் சேதமடைந்தன. மேலும், கோதுமை, உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன. சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் பலத்த காயமடைந்த 80 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டர் மூலமாகப் பார்வையிட்டு, நிவாரணப்பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் இதில் பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேத விவரங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயது- 18 வயது வரை உள்ள சிறார்களையும் வயது வந்தவர்களாகக் கருதி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை சிறார் நீதிச் சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 18 வயதுக்குக் குறைவானவர்கள் சிறார்களாகக் (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் – 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதுமானது. இந்நிலையில் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு, சிறார் நீதிச் சட்டப் பாதுகாப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியதால், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இது தொடர்பாக அனுப்பிய வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தை தெரிவிக்குமாறு அனுப்பியிருந்தது. இந்நிலையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது