Home Blog Page 6065

ரூ.20 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்

tippusultan-swordலண்டன்: மைசூர் திவான் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் வைத்திருந்தது. அது, இரு தினங்களுக்கு முன்னர், திப்பு சுல்தானின் வாள் உள்ளிட்ட 30 பொருள்களை ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் 30 ஆயுதங்களும் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக ஏலம் போனது. திப்பு சுல்தான் தனது ஆட்சியில் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களிலும் புலிச் சின்னத்தை வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த மணிகள் பதித்த புலித் தலையோடு கூடிய வாள் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது. முன்னதாக இந்த வாள் ரூ.37 லட்சம் முதல் ரூ. 56 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. திப்புவின் படைப் பிரிவினர் பயன்படுத்திய மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி ரூ. 13 கோடிக்கு ஏலம் போனது. அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய துப்பாக்கி ரூ.7 கோடிக்கு ஏலம் போனது. திப்புவின் ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக் கவசங்கள், பிஸ்டல்கள் ஆகியவையும் இந்த ஏலத்தில் விடப்பட்டன.

நடிகை அல்போன்சாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: பெண் புகார்

alfonsa2 சென்னை: நடிகை அல்போன்ஸாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று பட்டதாரிப் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்த பட்டதாரிப் பெண் ஒருவர், தனது கணவரை கவர்ச்சி நடிகை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத் தருமாறு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்து, புகார் மனு ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த வயதுடைய அந்தப் பெண், எம்.சி.ஏ. படித்துள்ளாராம். இவர் நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு கண்களில் நீர் பொங்க வந்தார். போலீஸாரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அதில், நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரைக் காதலித்தேன். அவரும் நானும், ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எங்கள் காதலை வெளியில் சொல்லவில்லை. 8 ஆண்டுகள் நாங்கள் உயிருக்கு உயிராகக் காதலித்தோம். அதன்பிறகு எங்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் பச்சைக் கொடி காட்ட, மருதமலை முருகன் கோவிலில் எங்கள் திருமணம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. எங்கள் திருமணத்தை முறையாக பதிவும் செய்து கொண்டோம். எனது கணவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். அவருடன் நான் 15 நாட்கள்தான் சேர்ந்து வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் துபாயில் வேலை கிடைத்து சென்று விட்டார். என்னை துபாய்க்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் என்னை அழைத்து போகவில்லை. செல்போனில் பேசினால் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். பின்னர் அவர் என்னுடன் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார். இதனால் சைதாப்பேட்டை காவல் துறையினர் புகார் கொடுத்தோம். எனது கணவர் சென்னை வந்திருந்தபோது விசாரணை நடத்தினர். அவர் என்னை துபாய் அழைத்துச் செல்வதாக காவல்துறையிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பிறகும் அவர் என்னை துபாய்க்கு அழைத்துப் போகவில்லை. தற்போது ஃபேஸ்புக்கில் எனது கணவர் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பதுபோல புகைப்படம் வந்தது. அந்தப் பெண்ணை தனது மனைவி என்றும், எனது கணவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். என் கணவருடன் இருக்கும் பெண், பிரபல சினிமா கவர்ச்சி நடன நடிகை அல்போன்சா என்று தெரிய வந்துள்ளது. அல்போன்சா எனக்கு போனில் பேசி மிரட்டுகிறார். அவர்தான் எனது கணவரை முதலில் திருமணம் செய்தாராம். இதனால் எனது கணவரை அவருக்கு விட்டுக் கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக்கொள்ள வேண்டுமாம், இல்லாவிட்டால் என்னைத் தொலைத்துக் கட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துப் பேசுகிறார். எனது கணவர் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். எனது கணவர் எனக்கு வேண்டும். எனது 8 வருட காதல் பொய் ஆகாது. எங்கள் திருமண வரவேற்பின் போது, நடிகை அல்போன்சா வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார். அப்படியானால் எப்படி அவர், எனக்கு முன்பே எனது கணவரை திருமணம் செய்திருக்க முடியும். எனது உயிரான காதல் கணவரை நான் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நடிகை அல்போன்சாவிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தருவதோடு, அல்போன்சா மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்தப் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். புகார் கொடுத்த உடன், ஆணயர் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்

பனாஜி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகரின் அதிகார பூர்வ இல்லத்தை சோதனை செய்யுமாறு கூறிய உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது. 2006-ஆம் ஆண்டில் அரசு ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், கோவா மாநில அரசில் அமைச்சராக இருந்த பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தில்தான் தலைமறைவாக இருப்பதாகக் கூறி சமூக ஆர்வலர் எய்ர்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் பனாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மிக்கி பச்சேக்கோவைத் தேட, தில்லி அக்பர் சாலையில் உள்ள பாரிக்கரின் வீட்டில் சோதனை செய்யுமாறு பனாஜி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தை சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்றம் சோதனையிட உத்தரவிட்ட அந்த இல்லம் ராணுவச் சொத்து என்பதால் எங்களால் சோதனையிட இயலாது என்று கோவா மாநில அரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பாரிக்கரின் இல்லத்தில் சோதனையிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

சென்னையில் தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலியானார். சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர், அங்குள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி யாக வேலை பார்த்து வரு கிறார். இவரது மனைவி மேரி. இவர்களின் மகள் ஐஸ்வர்யா(18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று காலை வழக்கம் போல சேகர் வேலைக்குச் சென்றுவிட, மேரி கடைக்கு செல்ல, ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, திடீரென வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த, அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது உள்ளே ஐஸ்வர்யா உடல் கருகி இறந்த நிலையில் இருந்தார். வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருந்தன. இதைத் தொடர்ந்து திருவான்மியூர் காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யா தனக்கு தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா அல்லது இது ஏதாவது சதிச்செயலா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். .

ஒரிஜினல் படத்த சிறுவனுடன் சேர்த்துட்டாங்க! ஐஸ்வர்யா ராய்

aishwarya rai2கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன் சமீபத்திய விளம்பரம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய், மகாராணி போன்று ஒரு ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் கருப்பு நிறத்திலான சிறுவர் ஒருவர் குடை பிடித்து கொண்டு நிற்கிறார். உலகமே இனப்பிரச்சனைகளின்றி மாறிவரும் நிலையில் இப்படி இனப்பிரிவினை மற்றும் இதற்கெல்லாம் மேல் குழந்தைத் தொழிலை ஊக்குவிப்பது போலவும் அந்த விளம்பரம் அமைந்துள்ளது என பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன். இதில் நான் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் படத்தையும் இணைத்துள்ளேன். பின்னர் இதை அந்த சிறுவன் படத்தோடு இணைத்துள்ளனர்.

ஒரு விளம்பரம் எப்படி அமைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிரியேட்டர் தான் முடிவு செய்கிறார். இதில் நான் என்ன செய்ய முடியும். இருந்தாலும், உங்களது கருத்துக்களை சம்பந்தப்பட குழுவினருக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்கும்படி கேட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

சவுதி அரேபியாவில் முதலாளியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

  சவுதியில் முதலாளியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு இன்று ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். சஜாதா அன்சாரி என்பவர் சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் பணியில் இருந்தார். அவரது முதலாளியை அவரது வீட்டில் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டிக்கப்பட்டு, இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர, சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாதர் அல்-ரோவீலி என்பவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது .அவர் அவரது முன்னாள் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கைப் படி, 2014-ல் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதல் 5 இடங்களில் இருந்தது.

ஆம் ஆத்மியுடன் இணைந்து விசாரணையா? தில்லி போலீஸார் மறுப்பு

புது தில்லி தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தின்போது, ஜந்தர் மந்தர் மைதானத்தில் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் விவசாயி கஜேந்திர சிங். இந்நிலையில் இது விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள தில்லி போலீஸாருக்கு மத்திய உள்துறை தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டது. இதை ஏற்று, தில்லி போலீஸார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், தில்லி போலீஸாரின் அஜாக்கிரதை மற்றும் அலட்சியத்தால்தான் இந்தத் தற்கொலை நிகழ்ந்ததாகவும், தில்லி போலீஸாரின் பாதுகாப்புக் குறைபாடே காரணம் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், கஜேந்திர சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் ஆம்ஆத்மி குழுவுடன் இணைந்து விசாரணை நடத்த தில்லி போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தில்லி காவல் துறை ஆணையர், தில்லி மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

குற்றாலம் அருவியில் கோடையில் கொட்டும் நீர்

courtallam-falls-apr23 செங்கோட்டை நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் கோடைக்காலத்திலும் நீர் கொட்டுவது இப்பகுதியில் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் குற்றாலம் அருவியில் நீர் இன்றி வறண்டு காணப்படும். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக, வெயிலின் சுவடு இன்றி, கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருகிறது. அண்மையில் பெய்த பலத்த மழையில், அருவியில் நீர் பெருகிக் கொட்டத் தொடங்கியது. நீர் வரத்து அதிகரித்ததால், கடந்த வாரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  பின்னர் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு சிறுமி, அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது உள்ளூர் மக்களின் கூட்டம் ஓரளவு அருவிப் பகுதியில் காணப்படுகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: இடம் தேர்வு செய்ய மத்தியக் குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய, மத்திய அரசின் 5 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்தனர். தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் – AIMS) அமைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அனுப்பும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிபட்டி, ஈரோடு – பெருந்துறை மற்றும் மதுரையை அடுத்த தோப்பூர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. இந்நிலையில் இடத்தைத் தேர்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலர் தாய்த்ரி பாண்டா தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் ஜெ. பாலசந்தர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டிடக் கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்புச் செயலாளர் எல். சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழு நேற்று கோவை வந்தது. இந்தக் குழு முதலில் ஈரோடு- பெருந்துறையில் ஆய்வு செய்தது. பின்னர் தோப்பூர், புதுக்கோட்டை, செங்கிப்பட்டி ஆகிய இடங்களிலும் பார்வையிடுகிறது. மதுரை தோப்பூரில் இன்று ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு, வரும் 25-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இடத்தைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறது.

அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை

புது தில்லி: அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டி வரும் அல் ஜஸீரா டி.வி., இந்தியாவில் தனது நிகழ்ச்சிகளை 5 நாட்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. அல் ஜஸீரா டிவி ஒளிபரப்பான இடத்தில் தற்போது “இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த அலைவரிசை ஒளிபரப்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை தடை விதித்துள்ளது” என்ற தகவல் மட்டுமே பதிவு செய்யப் பட்டுள்ளது. அல் ஜஸீரா டிவியின் நிகழ்ச்சிகளில் இந்தியாவின் வரைபடம் தவறாகக் காட்டப்பட்டதே இந்த நடவடிக்கைக்கு காரணமாம்.