நெல்லை: கணவனும் கைவிட்டு, கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் தீக்குளித்தேன் என்று இளம்பெண் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கனக நாயனார் கம்புகிடை தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மனைவி தீபா(24). இவர்களுக்கு தர்ஷினி என்ற 2 வயதுக் குழந்தை உள்ளது. பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜ நகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் தீபா வேலை செய்து வந்தார். இந்நிலையில் தீபாவுக்கும், கீழநத்தத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(22) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வெற்றிவேல் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் முருகனுக்கு தெரிய வந்ததை அடுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், மனைவியைப் பிரிந்து சென்றார் முருகன். இதனால் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தீபா, வெற்றிவேலிடம் நமது பழக்கத்தால்தான் என் கணவர் என்னைப் பிரிந்து சென்றார். குழந்தையும் நானும் தனியாக உள்ளோம். நீதான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு வெற்றிவேல் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த தீபா நேற்று காலை வெற்றிவேல் வேலை செய்யும் பெருமாள்புரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையின் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீபா, மாஜிஸ்திரேட்டிம் அளித்த வாக்குமூலத்தில், வெற்றிவேல் என்பவரின் அம்மாவுக்கும், என் அம்மாவுக்கும் உள்ள பழக்கத்தில் எனது வீ்ட்டுக்கு வெற்றிவேல் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை நேசித்தேன். அவரும் என்னுடன் அன்பாகப் பேசிப் பழகினார். அவரை என்னால் மறக்க முடியவில்லை. அவருடன் சேர்ந்து வாழ விரும்பினேன். இதனால் என் கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். கணவர் பிரிந்து விட்ட நிலையில், வெற்றிவேலும் ஏற்க மறுத்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
250 இளைஞர்களுக்கு திறன் எய்தும் இலவசப் பயிற்சி: இன்றும், நாளையும் விண்ணப்பங்கள் விநியோகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கான திறன் எய்தும் இலவசப் பயிற்சி முகாமில் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட குறிப்பில், நாட்டில் அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள், தனி குடியிருப்புகல், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பல்வேறு வகைகளில் நகரங்கள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது பயிற்சி பெற்றவர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்த 21 நாள் திறன் எய்தும் பயிற்சியை இம் மாதம் 27-ம் தேதி முதல் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இப் பயிற்சி முழுவதும் இலவசம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை இப் பயிற்சி நடத்தப்படும். பணியை சிறப்பாக நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி நாட்களில் தினமும் தேனீர், மதிய உணவு இலவசம். இப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் தகுதியானவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக 250 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச்சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றுகள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை இன்று செவ்வாய்க்கிழமை நாளையும் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்: பாகிஸ்தானில் பயங்கரம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிருடன் எரித்து கௌரவக் கொலை செய்த கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முசாஃபர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சித்திக் மனைவி ஷபானா பீவி (25). இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அண்மையில் ஷபானா பீவி தனது தங்கையைச் சந்திக்க கணவர் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். இதனால் ஆத்திரமடைந்த சித்திக், வீடு திரும்பிய ஷபானாவை அடித்து உதைத்ததுடன், தனது தந்தையின் உதவியுடன் ஷபானா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த ஷபானா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முசாஃபர்கர் போலீசார், ஷபானாவின் கணவர் சித்திக் மற்றும் அவரது தந்தையைக் கைது செய்தனர். பாகிஸ்தானில் கௌரவக் கொலை என்ற பெயரில், இதுபோன்ற சாதாரண விஷயங்களுக் கெல்லாம் 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரம் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.
சீத்தாராம் யெச்சூரி தேர்வு: கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை:
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
2010ஆம் ஆண்டு, கழக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்டவர் நண்பர் சீதாராம் யெச்சூரி. செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை சிறப்பாகவும், ஆக்கப் பூர்வமானதாகவும் இருந்தது.
அவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தற்போது தேர்வு பெற்றதும் ஆற்றிய முதல் உரையிலேயே “நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பது தான்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் சாதாரணத் தொண்டராக இருந்து, தன்னுடைய ஆர்வம் மிக்க உழைப்பாலும், அறிவாற்றலாலும் படிப்படியாக அரசியலில் முன்னேற்றம் கண்ட அருமை நண்பர் யெச்சூரி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகியிருப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கை கணவனின் கொடுமை: பேஸ்புக்கில் எழுதிவிட்டு எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை
புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மூத்த டாக்டர் ஒருவர், அவரது மனைவியான பெண் டாக்டர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி, கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் டாக்டர், மத்திய தில்லியில் பாகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதுடன், தனது தற்கொலைக்கு ஓரினச் சேர்க்கையாளரான தனது கணவர் கொடுத்த உளவியல் ரீதியான நெருக்கடிதான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார். ப்ரியா வேதி. 31 வயதாகும் பெண் மருத்துவர். அவர் தனது தற்கொலை குறித்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், கடிதத்தில் அவர் எழுதியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர். ப்ரியா வேதிக்கு கமலுடனான திருமணத்துக்குப் பிறகே அவர் ஓரினச் சேர்க்கையாளார் என்பது தெரிந்ததாம். இருப்பினும் வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்ட போதிலும், உளவியல் ரீதியாக அவர் கொடுத்த எல்லைமீறிய நெருக்கடிகளே தன்னை தற்கொலை செய்யத் தூண்டியதாக ப்ரியா வேதி எழுதி வைத்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் சண்டையை அடுத்து ஹோட்டலுக்கு வந்துள்ளார் ப்ரியா வேதி. இதனிடையே தன் மனைவியைக் காணவில்லை என்று சனிக்கிழமை கமல் வேதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து மத்திய தில்லியில் போலீஸார் தேடியுள்ளனர். இருப்பினும் அவர் ஏதேனும் ஹோட்டலில் தங்கியிருக்கக் கூடும் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தேடியபோது, ப்ரியா வேதியின் உடல் கிடைத்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கமல் வேதி தோல் நோய் நிபுணர். ப்ரியா வேதி மயக்க மருந்துகளைக் கையாளும் அனஸ்தீஷியா நிபுணர். இருவருமே எய்ம்ஸ் மருத்துவமனையின் தெற்கு தில்லி குவார்ட்டர்ஸில் தங்கியிருந்துள்ளனர். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, பேஸ்புக்கில் இது குறித்து தகவல் எழுதியுள்ளார். நான் உன்னையும் உன் பாலியல் கொடுமைப் போக்கையும் ஏற்றுக் கொண்டேன். உன்னை நான் விரும்பியதால். ஆனால், நீ என்னை எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணரவேயில்லை. நீ ஒரு குற்றவாளி. என் வாழ்க்கையில் நுழைந்த கிரிமினல். கமல் – உன்னுடைய குடும்பம் அப்பாவியானது. ஆனால் நீ ஒரு பேய்” என்று எழுதி வைத்துள்ளார். அவரது பேஸ்புக் ஸ்டேடஸையும் அவர் எழுதிய கடிதத்தையும் வைத்து போலீஸார் கமல் வேதியைக் கைது செய்தனர்.
ப்ரியா வேதி எழுதியிருந்த கடிதம்… ஓரினச் சேர்கையாளரான எனது கணவர், என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் இடையில் எவ்வித உடல் ரீதியான தொடர்பும் ஏற்படவில்லை. திருமணம் ஆனதற்கு பின், எனது கணவர் தனது லேப்டாப் மூலம் போலி ஜி-மெயில் முகவரியை பயன்படுத்தி ஓரினச் சேர்க்கை நண்பர்களுடன் சாட்டிங் செய்ததைக் கண்டேன். இது தெரிந்ததும், மனைவி என்ற முறையில் அவருக்கு உதவ நான் முடிவு செய்தேன். ஆனால் நாளாக நாளாக என்னை அவர் மனரீதியாகக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். ஆகவே என்னால் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்பது தெரிந்தது. கமல் நீ மனிதப்பிறவியே அல்ல. எனது வாழ்க்கை கெடுத்த ஒரு சாத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வில் ஒளி ஏற்றிய கரூர் ஆட்சியர்: நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்
டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூரில் வசிக்கும் நரிக்குறவர்கள் 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் சார்பில் தலா ரூ 7 ஆயிரத்து 500 கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன், உ.துரைகண்ணன், கொ.இளங்கோ, வடிவேல், துரைராஜ், ராதா, சுகுமார் உள்ளிட்ட 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் மூலம் தலா ரூ 7 ஆயிரத்து 500 பேருக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்து நரிக்குறவர்களை குஷிப்படுத்தியுள்ளார். காசோலையை பெற்றுக்கொண்ட நரிக்குறவர்கள் அம்மா ஜெ வாழ்க என்று கோஷத்துடன் வெளி வந்தனர். மேலும் ஜெ வுக்கு நரிக்குறவர்கள் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க உள்ளதாகவும் நரிக்குறவர்கள் சங்க தலைவர் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி எவ்வித பாகுபாடும் இல்லாமல் தனது கடமையை சரியாகச் செய்வதாக அவர்களிடம் இருந்து பாராட்டும் பெற்றுள்ளார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
கும்பகர்ணத் தூக்கத்தில் அரசு; ஆசிரியர் கோரிக்கைக்கு தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் தமிழக அரசு இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் செய்தியில் ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணி வரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள். பிறகு ஏப்ரல் 19ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்க வேண்டியது நம் கடமையாகும். போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்… Posted by M. K. Stalin on Sunday, April 19, 2015
சோனியா நிறம் குறித்த விமர்சனம்: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார் கிரிராஜ் சிங்
புது தில்லி: சோனியா காந்தியின் நிறம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் முன்னர் கூறிய கருத்துக்கு இன்று நாடாலுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். அவரது இந்தக் கருத்துக்கு இன்று எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் வலியுறுத்தினர். அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், அவையை நண்பகல் 11.45 மணி வரை ஒத்தி வைத்தார் சுமித்ரா மகாஜன். பின்னர் அவை கூடியதும் சோனியா காந்தி குறித்த தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். சுமார் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மக்களவையில் இன்று கூடியது. மே மாதம் 8ஆம் தேதி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்
விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர் முடிவடைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு வாக்குறுதிகளை அளித்து சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. என்றாலும் பிரச்சினைகள் நீடிக்கின்றன. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை அரசு 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும். சிங்களர்களை போன்று தமிழர்களுக்கும் சமஉரிமை உரிமை வழங்க வேண்டும். தமிழர்கள் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். 2009-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி நம்பந்தகுந்த, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர்கள் குழு வழங்கிய சிபாரிசுகள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர்கள் அங்கு சென்று கவுரவத்துடன் வாழ்வதை இந்திய அரசும் இலங்கை அரசும் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாகி இருப்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.

