ஓரினச் சேர்க்கை கணவனின் கொடுமை: பேஸ்புக்கில் எழுதிவிட்டு எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை

priya-vedi புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மூத்த டாக்டர் ஒருவர், அவரது மனைவியான பெண் டாக்டர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி, கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் டாக்டர், மத்திய தில்லியில் பாகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதுடன், தனது தற்கொலைக்கு ஓரினச் சேர்க்கையாளரான தனது கணவர் கொடுத்த உளவியல் ரீதியான நெருக்கடிதான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார். ப்ரியா வேதி. 31 வயதாகும் பெண் மருத்துவர். அவர் தனது தற்கொலை குறித்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், கடிதத்தில் அவர் எழுதியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர். ப்ரியா வேதிக்கு கமலுடனான திருமணத்துக்குப் பிறகே அவர் ஓரினச் சேர்க்கையாளார் என்பது தெரிந்ததாம். இருப்பினும் வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்ட போதிலும், உளவியல் ரீதியாக அவர் கொடுத்த எல்லைமீறிய நெருக்கடிகளே தன்னை தற்கொலை செய்யத் தூண்டியதாக ப்ரியா வேதி எழுதி வைத்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் சண்டையை அடுத்து ஹோட்டலுக்கு வந்துள்ளார் ப்ரியா வேதி. இதனிடையே தன் மனைவியைக் காணவில்லை என்று சனிக்கிழமை கமல் வேதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து மத்திய தில்லியில் போலீஸார் தேடியுள்ளனர். இருப்பினும் அவர் ஏதேனும் ஹோட்டலில் தங்கியிருக்கக் கூடும் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் தேடியபோது, ப்ரியா வேதியின் உடல் கிடைத்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கமல் வேதி தோல் நோய் நிபுணர். ப்ரியா வேதி மயக்க மருந்துகளைக் கையாளும் அனஸ்தீஷியா நிபுணர். இருவருமே எய்ம்ஸ் மருத்துவமனையின் தெற்கு தில்லி குவார்ட்டர்ஸில் தங்கியிருந்துள்ளனர். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, பேஸ்புக்கில் இது குறித்து தகவல் எழுதியுள்ளார். நான் உன்னையும் உன் பாலியல் கொடுமைப் போக்கையும் ஏற்றுக் கொண்டேன். உன்னை நான் விரும்பியதால். ஆனால், நீ என்னை எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணரவேயில்லை. நீ ஒரு குற்றவாளி. என் வாழ்க்கையில் நுழைந்த கிரிமினல். கமல் – உன்னுடைய குடும்பம் அப்பாவியானது. ஆனால் நீ ஒரு பேய்” என்று எழுதி வைத்துள்ளார். அவரது பேஸ்புக் ஸ்டேடஸையும் அவர் எழுதிய கடிதத்தையும் வைத்து போலீஸார் கமல் வேதியைக் கைது செய்தனர். priya-vedifb ப்ரியா வேதி எழுதியிருந்த கடிதம்… ஓரினச் சேர்கையாளரான எனது கணவர், என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் இடையில் எவ்வித உடல் ரீதியான தொடர்பும் ஏற்படவில்லை. திருமணம் ஆனதற்கு பின், எனது கணவர் தனது லேப்டாப் மூலம் போலி ஜி-மெயில் முகவரியை பயன்படுத்தி ஓரினச் சேர்க்கை நண்பர்களுடன் சாட்டிங் செய்ததைக் கண்டேன். இது தெரிந்ததும், மனைவி என்ற முறையில் அவருக்கு உதவ நான் முடிவு செய்தேன். ஆனால் நாளாக நாளாக என்னை அவர் மனரீதியாகக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். ஆகவே என்னால் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்பது தெரிந்தது. கமல் நீ மனிதப்பிறவியே அல்ல. எனது வாழ்க்கை கெடுத்த ஒரு சாத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.