Home Blog Page 6078

கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்

pon Radha photoசென்னை: நீங்கள் தாலியைக் கழட்டினால், நாங்கள் உங்கள் கருப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று தி.க.வுக்கு பாஜக பதிலடிகொடுத்துள்ளது, முன்னதாக தாலியறுக்கும் போராட்டத்தை அறிவித்து, தமிழர் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திருநாளில் தி.க. வினர் அறிவித்து, அதனை அவரசரம் அவசரமாக காலையில் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால், திராவிடர் கழகத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்றூ செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மதச் சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்தக் குடும்பப் பெண்ணும் தாலியை அடிமைத்தனமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனித அடையாளமாகத்தான் கருதி வருகிறார்கள். கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக் கொண்டு தாலியை அகற்ற வேண்டும் என்று பேசியதன் மூலம் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் என்பதை திகவினர் நிரூபித்த்ருக்கிறார்கள். திகவினரின் இந்தக் கலாச்சாரத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை. பெண்களுக்கு எதிரான, கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திராவிடக் கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றன. ஆனால்,. இதற்காக, கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை. கருப்புத் துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாகப் போட்டுக்கொள்வது… திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்கக் கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கரு;ப்புச் சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார்.

நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு

actress-bhuvaneshwari710710 சென்னை: சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரி தனது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூரில், 64 சென்ட் நிலத்தில் வீடு மற்றும் அஷ்டலட்சுமி என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2012இல் புவனேஸ்வரி, தனது வீட்டை விற்பதற்காக அன்னூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக நடந்த பத்திரப் பதிவின் போது, புவனேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலிருந்த திரையரங்கத்தையும் சேர்த்து, போலி கையெழுத்திட்டு, தனது பெயருக்கு சுப்பிரமணியம் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாகத் தெரிகிறது. சுப்பிரமணியம் ஏமாற்றி வாங்கிய திரையரங்கின் மதிப்பு ரூ.3 கோடி என தெரியவந்தது. இதை அடுத்து, இது குறித்து புவனேஸ்வரி கடந்த 2012ல் அன்னூர் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், அவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குப் புகார் மனு கொடுத்தார். இந்தப் புகார் மனு கோவை மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அன்னூர் போலீஸார், புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடம் இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம்

xi-xin-ping-wife புது தில்லி: சீன அதிபர் ஜீ ஜின் பிங் இன்று பாகிஸ்தான் செல்கிறார். இந்நிலையில், அவர் சி.பி.இ.சி. என்னும் சீன–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தின்கீழ் செய்யப்படும் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இதனை பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சி.பி.இ.சி. திட்டம், 3 ஆயிரம் கி.மீ. தொலைவிலானது. சீனாவின் மேற்குப் பகுதியையும், பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள கிவதார் துறைமுகத்தையும் இணைக்கும். சாலை, ரயில், எரிசக்தி, குழாய்கள், முதலீட்டுப் பூங்காக்கள் என பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய திட்டம் இது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இது அமையும். சீனா இதை நிராகரித்துள்ள போதும் இதற்கான யோசனை இல்லமலில்லை. ஜீ ஜின் பிங் பயணத்தின்போது, 5 பில்லியன் டாலர் மதிப்பிலான, அதாவது சுமார் ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு சப்ளை செய்வது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் கடற்படையின் பலம் அதிகரிக்கும். அதே நேரம் இது இந்தியாவுக்கு மிகவும் கவலை தரக்கூடிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோட்சே’க்கு தடையில்லை; நாதுராம் கோட்சேக்கு தடை: சுமித்ரா மகாஜன்

புதுதில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர் ஒன்றும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொல் இல்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். கோட்சே பெயர் ‘பயன்படுத்தக் கூடாத சொல்’ என்று நாடாளுமன்றம் தடை செய்திருந்தது. இந்நிலையில், இதனை நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில நாசிக் தொகுதி சிவசேனா எம்.பி., ஹேமந்த் துகாராம் கோட்சே தொடர்ந்து குரல் கொடுத்தார். எம்.பி.யாக உள்ள தனது பெயரின் கடைசிப் பெயரில் இடம் பெற்றிருக்கும் கோட்சே என்ற சொல்லை பயன்படுத்தவும் தடை விதிப்பதில் நியாயம் இல்லை என்று அவர் நாடாளுமன்றம், மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தத் தடையை நீக்கி மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் ‘நாதுராம் கோட்சே’ என்ற பெயர் பயன்படுத்தக்கூடாத சொல் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் எனத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

ஜப்பானில் 6.6 அலகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்குப் பகுதி மற்றும் தைவானுக்குக் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தெற்கு ஒகினாவா உட்பட பல தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறிந்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

குழந்தைகள் மரணம்-நல்வாழ்வுத் துறை திட்ட ஊழல்களே காரணம்: வைகோ

19-03-15 Vai.Ko News photo 03சென்னை:
தமிழக அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று
வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 13 பச்சிளம் குழந்தைகள் இறந்தன.
கடந்த 15 ஆம் தேதியில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 8 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு பெயரளவுக்குத்தான் இயங்கி வருகின்றது. குழந்தைகள் சிறப்புப் பிரிவுக்கு போதுமான அளவு மருத்துவக்கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட இன்றியமையாத கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையான அடிப்படை வசதிகள் இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் மலிந்தும் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இங்கு தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால் வழங்குவது கூட நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பால் வழங்கி வரும் ஆவின் நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால், ஆவின் நிறுவனம் பால் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் இங்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் வழங்குவதை கூட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்காக கவனிக்கவில்லை. ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றபோது, அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகளும், எடை குறைவும்தான் முதன்மைக் காரணம் என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு தெரிவித்து இருக்கின்றார். ஊட்டச்சத்து குறைபாடுகளால், எடைக் குறைந்த குழந்தைகள் பிறக்கும் போதே நோய் எதிர்ப்பு சக்தி இன்றி மரணம் அடைவது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது.
கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணித்து அவர்களுக்கு ஊட்டச் சத்துணவு கொடுப்பதற்காக தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனாலும், பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறப்பது ஏன்? அரசு நல்வாழ்வுத்துறையின் திட்ட செயல்பாடுகளில் ஊழல்கள் பெருகி உள்ளதே இதற்கு காரணம். இது தவிர, பெண்கள் கர்ப்பமடைந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு அவர்களுக்கு தடுப்பூசி போடுவது, சத்து உருண்டை தருவது, மாத்திரை வழங்குவது என்று கிராம செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். சுகாதாரத்துறையில் மருத்துவ பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் கிராமப்புற சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை களைந்தெறிய வேண்டும். ஏழை, எளிய மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்காகக் காத்திருக்கும் புது பஸ்கள்: உண்மையை அரசு மறைப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:
ஜெயல்லைதா மீண்டும் முத்லவராகி அவரால் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 430 புதிய பேரூந்துகள் முடக்கப்பட்டுள்ளது என்றும், இதில், உண்மையை மறைக்க அரசு முயல்கிறதா என்ற கேள்வியையும் எழுபியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 260 பேரூந்துகள், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிமனைகளில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 06.03.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். 6 மாதங்களாக அந்த பேரூந்துகள் இயக்கப்படாததால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2.88 கோடி இழப்பும், ரூ.58.50 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக முடங்கிக் கிடக்கும் பேரூந்துகள் தொடர்பாக வாரமிருமுறை இதழ் ஒன்றில் அண்மையில் செய்திக் கட்டுரை வெளியாகிருந்தது. கோடிக்கணக்கில் செலவழித்து வாங்கப்பட்ட பேரூந்துகள் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி அப்பத்திரிகையின் செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,‘‘ 10 பேரூந்துகள் வேலை முடிந்ததும் பயன்பாட்டுக்கு அனுப்பிவிட முடியாது. குறைந்தது 400 பேரூந்துகள் தயாரானாலே அவற்றை பயன்பாட்டுக்கு அனுப்பிவிடுவோம். எங்கள் மீது ஏதாவது குற்றச்சாற்றுகளை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்சங்கத்தினர் இப்படி சொல்கிறார்கள்.இதில் உண்மை இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் வெறும் 10 பேரூந்துகள் மட்டுமே இயக்கப் படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் தரப்பு முயன்றிருக்கிறது. இது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 260 பேரூந்துகள் மட்டுமே முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 15.04.2015 நிலவரப்படி மொத்தம் 430 பேரூந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் இருநூறுக்கும் அதிகமான பேரூந்துகள் கடந்த ஆகஸ்ட் முதல் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கும்பகோணம் கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பணிமனைகளில் மட்டும் 51 பேரூந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழையிலும், வெயிலிலும் பராமரிக்கப்படாமல் கிடப்பதால் பழுதடைந்து வரும் அப்பேரூந்துகள் இன்னும் சில மாதங்களில் ஓடும் திறனை இழந்துவிடும்.
மொத்தம் 460 பேரூந்துகள் 2 முதல் 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கான வட்டி, காலாண்டு வரி, தேய்மானம் ஆகிய வகையில் மட்டும் சுமார் ரூ.4.64 கோடி  இழப்பும், ரூ.91.35 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு  3 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை; விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேரூந்துகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கெல்லாம் காரணம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் போதிய நிதி இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தயார் நிலையில் உள்ள பேரூந்துகளை இயக்கி வருவாய் ஈட்டுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல்  ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தான் இயக்குவோம் என்று அடம்பிடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டம், சென்னை கோயம்பேடு தானியச் சந்தை வளாகம், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள், செயல்படுத்தி முடிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் என பல்லாயிரக்கணக்கான திட்டங்கள் ஜெயலலிதாவுக்காக  முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா தான். அதற்கான தண்டனையை அவர் தான் அனுபவிக்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்கி அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள்  நடத்தும் துதிபாடல்கள் மற்றும் ஊழல்களுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடும் தண்டனை வழங்குவார்கள்.- என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்

xi-xin-ping-wife சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தானுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார் ஜீ ஜின் பிங். ஆனால் அப்போது பாகிஸ்தானில் சூழ்நிலை சரியில்லாததால், அவரது பயணம் அப்போது ரத்தானது. அப்போது, பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிர் உல் காதிரி ஆகியோர் இஸ்லாமாபாத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். எனவே தனது பாகிஸ்தான் பயணத்தை அப்போது ஜீ ஜின் பிங் ரத்து செய்தார். இந்நிலையில் ஜீ ஜின் பிங், இன்று பாகிஸ்தான் வருகிறார். பாகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. மேலும், இந்த ஆண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுதான். இஸ்லாமாபாத்தில் ஜீ ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜின்பிங்குடன் அவரது மனைவி பெங் லி யுவான் மற்றும் உயர்மட்ட தூதுக்குழுவினரும் வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனை ஜின் பிங் சந்திக்கிறார். பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாகிஸ்தானின் முப்படை தளபதிகளையும் அவர் சந்திக்கிறார். பின்னர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்திலும் ஜீ ஜின் பிங் பேசுகிறார். பாகிஸ்தான் பயணத்தின் போது, பாகிஸ்தானின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘நிஷான் இ பாகிஸ்தான்’ என்ற விருது, ஜீ ஜின் பிங்கிற்கு வழங்கப்படுகிறது.

8 குழந்தைகள் மரணம்: இந்திய கம்யூ. இன்று மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது… விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 குழந்தைகள் இருதினங்களில் அடுத்தடுத்து இறந்திருப்பது மனதை ரணப்படுத்தும் வேதனை சம்பவமாகும். அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களின் உயிர் இழப்பது தொடர்வது வருத்தத்திற்குரியதாகும். இனிவருங்காலங்களிலாவது இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து உரிய குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் புரியவேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவனை முன்பாக 20–4–2015 அன்று (இன்று) இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசியக்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

700 அகதிகளுடன் படகு மூழ்கியது: லிபியாவில் சோகம்

boatdeath ஐரோப்பாவுக்கு சட்ட விரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் இத்தாலி மற்றும் மால்டா நாடுகளின் கடற்படை தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இத்தாலி நாட்டு கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் வடக்கு கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. விபத்துக்கு உள்ளான நேரத்தில், படகில் இருந்தவர்கள், அவ்வழியே சென்ற போர்ச்சுகல் நாட்டின் கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கோருவதற்காக, படகின் ஒரே பகுதியில் திரண்டனர். அதனால் அது மேலும் விபரீதமாகி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்து நடந்த கடற்பகுதிக்கு அருகே உள்ள மால்டா நாட்டு பிரதமர் ஜோசப் மஸ்கட், “50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்’ என்று தெரிவித்தார். இத்தாலியின் லாம்ப்துசா தீவில் இருந்து 193 கி.மீ. தொலைவிலும், லிபியாவின் கடற்பகுதியில் இருந்து 96 கி.மீ., தொலைவிலும் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஐரோப்பாவில் குடியேறும் எண்ணத்துடன் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தப் படகில் சட்ட விரோதமாகச் சென்றதாகத் தெரிகிறது. இதே பகுதியில்தான் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 2 படகுகள் விபத்துக்குள்ளானது. அப்போது, 450 பேர் பலியாயினர். இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்துகளில் மட்டும், 1,500 அகதிகள் வரை பலியாகியுள்ளனர்.