தமிழக அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று
வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 13 பச்சிளம் குழந்தைகள் இறந்தன.
கடந்த 15 ஆம் தேதியில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 8 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு பெயரளவுக்குத்தான் இயங்கி வருகின்றது. குழந்தைகள் சிறப்புப் பிரிவுக்கு போதுமான அளவு மருத்துவக்கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட இன்றியமையாத கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையான அடிப்படை வசதிகள் இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் மலிந்தும் காணப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இங்கு தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால் வழங்குவது கூட நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பால் வழங்கி வரும் ஆவின் நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தொகை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால், ஆவின் நிறுவனம் பால் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் இங்கு சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் வழங்குவதை கூட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்காக கவனிக்கவில்லை. ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றபோது, அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகளும், எடை குறைவும்தான் முதன்மைக் காரணம் என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு தெரிவித்து இருக்கின்றார். ஊட்டச்சத்து குறைபாடுகளால், எடைக் குறைந்த குழந்தைகள் பிறக்கும் போதே நோய் எதிர்ப்பு சக்தி இன்றி மரணம் அடைவது தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது.
கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணித்து அவர்களுக்கு ஊட்டச் சத்துணவு கொடுப்பதற்காக தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனாலும், பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறப்பது ஏன்? அரசு நல்வாழ்வுத்துறையின் திட்ட செயல்பாடுகளில் ஊழல்கள் பெருகி உள்ளதே இதற்கு காரணம். இது தவிர, பெண்கள் கர்ப்பமடைந்த மூன்று மாதங்களுக்குப் பின்பு அவர்களுக்கு தடுப்பூசி போடுவது, சத்து உருண்டை தருவது, மாத்திரை வழங்குவது என்று கிராம செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். சுகாதாரத்துறையில் மருத்துவ பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் கிராமப்புற சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை களைந்தெறிய வேண்டும். ஏழை, எளிய மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கும், மருத்துவச் சிகிச்சைகளுக்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.



