Home Blog Page 6079

சீத்தாராம் யெச்சூரிக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை:
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
மார்க்சீய பொதுவுடமைக் கட்சியின் ஐந்தாவது பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் இக்கட்டான சூழலில் இந்த புதிய  பொறுப்பேற்றுள்ள யெச்சூரி அவரது அனைத்துக் கடமைகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்டை மாநிலமான ஆந்திரத்தைச் சேர்ந்த யெச்சூரி சென்னையில் பிறந்தவர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே மார்க்சீய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். 2004 ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய ஆட்சிக்கு எதிராக  வலுவான அணி அமையவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதிய அரசு அமைக்கவும் மார்க்க்சீய பொதுவுடமைக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் மறைந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களுடன் இணைந்து உழைத்தவர். அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்ட இவரது தலைமை மார்க்சீய பொதுவுடமைக் கட்சிக்கு வலுசேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல், மார்க்சீய பொதுடமைக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த அமைப்பான அரசியல் விவகாரக் குழுவின்(பொலிட்பீரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜி. ராமகிருஷ்ணனுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 14ல் சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

d-raja-cpiபுதுச்சேரி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் மே மாதம் 14ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் ரயில் மறியலும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு குறித்த மறு ஆய்வுக் கூட்டம் புதுச்சேரியில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது… மத்திய அரசு விவசாயி விரோதப் போக்குடன் செயல்படுகிறது. விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை நிரப்புதல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களையும் மே 14 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும். நிலம் கையகப் படுத்தும் சட்டம் மட்டுமல்லாது, வகுப்புவாதக் கொள்கையைப் புகுத்த முயற்சி செய்து வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ். விஎச்பி, சங் பரிவார் அமைப்புகள் தங்கள் வகுப்புவாதக் கொள்கைகளை தீவிரமாக பரப்ப முனைந்துள்ளன. மதவாத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ.க. அரசு ஊக்குவிக்கிறது. எனவே, அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார் ராஜா.

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை இன்று துவங்குகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,298 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதினர். இந்த விடைத்தாள்களைத் திருத்த மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் மே மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 முடிவுகள் மே 9 ஆம் தேதிக்குள் வெளியாகிறது

சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அடுத்து, மே 9ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது. மே 7ஆம் தேதி வெளியாகலாம் என்று முன்னர் தகவல் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 67 மையங்களில் நடந்து முடிந்து, பாடவாரியாக மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதிப்பெண் விவரங்கள் மே 1ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. எனவே, மே 9ஆம் தேதியோ அல்லது அதற்கு இரு தினங்கள் முன் மே 7ஆம் தேதியோ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாகவே தொடங்கும் பருவமழை: தயாராகிறது குற்றாலம்

  seess திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறி தென்படுகிறது.  முன்னதாகவே  பருவமழை தொடங்குவதை ஒட்டி, குற்றாலமும் சீசனுக்குத் தயாராகி வருகிறது.

 கேரளாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் எனவும்,எப்போதுமே மே இறுதியில் தொடங்கும் மழையானது 3 ஆவது  வாரத்தில் தொடங்கும் எனவும், இந்த முறை 2ஆவது வாரத்தில் உறுதியாக தெரியும் என்றும் திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கும் பட்சத்தில் குற்றாலத்தில் சீசனும் முன்னதாகவே தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கோவை ரேஸ்கோர்ஸ், டி.எஃப்.ஓ., காம்பவுண்ட் வளாக வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்தவர் தட்சிணாமூர்த்தி(43). கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஆர்.ஐ. – வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குருபிரசாத்(8), தனு வசந்த்(6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, ‘வாக்கிங்’ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற தட்சணாமூர்த்தி காலை 7 மணி அளவில், கோவை ரயில் நிலையம் சென்றார். அங்கே 6 ஆம் எண் பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்த கோவை- மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ் முன், திடீரென பிளாட்பாரத்தில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். நொடிப் பொழுதில், அவர் மீது ரயில் சக்கரம் ஏறி, தலை துண்டாக்கி துடிதுடித்து பலியானார். இந்த ‘பகீர்’ காட்சியைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.ஐ.யின் திடீர் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தட்சிணாமூர்த்தி பலரிடம் ரூ.3௦ லட்சம் வரை கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதால், இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பவானி சிங்கை நீக்கக்கோரும் மனு மீது நாளை விசாரணை

புது தில்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்ச நீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் அன்பழகன் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

ஐஎஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 28 கிறிஸ்துவர்கள் படுகொலை

isis-ethiopiaதிரிபோலி: தலை துண்டித்துப் படுகொலை செய்ய எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் அழைத்து வரப்படும் காட்சி ஒன்றை பதிவு செய்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 28 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யும் வீடியோ பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 12 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொரு இடத்தில் 16 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை எப்போது நிகழ்ந்தன என்பது குறித்த விவரம் இல்லாவிடினும், 29 நிமிடம் ஓடக் கூடிய இந்த விடியோவில், முகமூடியிட்ட பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் காட்சியும், “எத்தியோப்பிய சர்ச்சைச் சேர்ந்த எதிரிகள்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் கொடி, சின்னம் போன்றவை அந்த விடியோ பதிவில் உள்ளன. அதில், முஸ்லிம்களாக மதம் மாறாத கிறிஸ்தவர்களை மிரட்டுகிறார் முகமூடி அணிந்த நபர். எகிப்தைச் சேர்ந்த 21 கிறிஸ்துவர்களின் தலைகளை லிபியா கடற்பகுதியில் துண்டித்துப் படுகொலை செய்யும் விடியோவை கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட ஐ.எஸ். இயக்கத்தினர், தற்போது எத்தியோப்பியாவைச் சேர்ந்த 28 கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்து விடியோ வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள கிறிஸ்துவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல்

 pavoorchathram  பாவூர்சத்திரம் பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள்  தாக்குதல் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாப்பேரி வடக்கு தெருவில் பெந்தேகோஸ்தே சபை உள்ளது. இங்கு  பெந்தகோஸ்தே அமைப்பைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் ஜெபம் செய்து வருகின்றனர். இந்த சபையில் 25வது பிரதிஷ்டை பண்டிகைக்காக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சண்முகம் மகன் பவுல் துரைராஜ் (39) வந்திருந்தார். சம்பவத்தன்று  பவுல் துரைராஜூம் முத்துக்கிருஷ்ணப்பேரி காமராஜ்நகர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பன் மகன் முருகன் என்ற தினகரன் (56) ஆகியோர் நின்று பேசி கொண்டிருந்தனர். அந்தநேரத்தில்  சபையின் பின்புறத்தில் இருந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் கம்பி மற்றும் கம்புடன் வந்து அங்கிருந்த டியூப்லைட்யை உடைத்தனர். இதை தடுக்க முயன்ற இருவரையும் சரமாரியாக தாக்யுள்ளனர் இதுகுறித்து  வெளியில் சொன்னால்  கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துதுள்ளனர் இந்த தாக்குதலில் பவுல் துரைராஜ், தினகரன் இருவரும்  பலத்த காயமடைந்தனர். இவர்களை உடனிருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் கைதுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் கைது செய்யபப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் சனிக்கிழமை ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடந்தபோது பத்காம் மாவட்டத்தில் நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் அதிகரித்து வரும் மனிதஉரிமை மீறல்களை பாகிஸ்தான் கவனித்து வருகிறது. ஆயுதம் இன்றி அமைதியான முறையில் போராடி வருபவர்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதில் 2 காஷ்மீர் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.