Home Blog Page 6076

கரூர் அருகே சிறுவர்கள் சாப்பிடும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து – சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் மேல்பாகம் பகுதியில் சிறுவர்களுக்கான உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் கவின் (42), இவர் இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக இதே பகுதியில் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை திடீர் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் சுமார் 2 மணிநேரம் தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 1.50 கோடி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்து கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Fire Photo 03 Fire Photo 01 Fire Photo 02

வெளிநாடுகளில் ஆயிரம் கோடிகளில் பதுக்கல்: ஏப்.23ல் நேரில் ஆஜராக ராஜபட்சவுக்கு உத்தரவு

கொழும்பு: ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கி உள்ளதாகவும், துபாயில் மட்டும் ரூ. 6500 கோடி பதுக்கியுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் ராஜபட்ச கைதாகக் கூடும் என்றும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் ராஜபட் சமற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அப்போது, ரூ.6500 கோடி அளவுக்கு ராஜபட்ச குடும்பத்தினர் ஷெசல்ஸ் மற்றும் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரி ந்த நாடுகளில் பதுக்கியுள்ளதாகாவும், முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு மீட்டு வரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் ஏப்.23 , 24ஆம் தேதிகளில் ராஜபட்ச இலங்கையின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ராஜபட்ச கைதாவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ராஜபட்சவின் சகோதாரரும், பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சருமான கோத்தபய ராஜபட்சவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும். ஏப். 26, 27ஆம் தேதிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜபட்ச அதிபராக இருந்தபோது திஸ்ஸ அத்த நாயகவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்தும் ராஜபட்சவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் ராஜபட்ச குடும்பத்தினர் வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கியுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் சர்வதேச ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் விவரங்களை அளிக்கும் பட்சத்தில், ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து ராஜபட்ச போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இப்போது, ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரூ. 6500 கோடி பதுக்கல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்’ என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது.  தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது. இந்த ஆண்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அந்த பணியின் அடிப்படையில், ‘ரிசல்ட்’ வெளியாகும் தேதி முடிவாகும் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலும் மே முதல் வாரத்தில் அதாவது,  மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், ‘ரிசல்ட்’ வெளியாகலாம். என கூறப்படுகிறது.

ஏப். 28ல் நெல்லையில் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல்ற 28ம்தேதி எரிவாயு  நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம்  வருகிற 28ம்தேதி அன்று பிற்பகல் 4 மணியளவில் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் மக்கள் குறை தீர் கூட்டம்

நெல்லையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ. 12.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுகன்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சம்பத், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,80,000 வீதம் மொத்தம் ரூ.3,60,000 க்கான காசோலைகளையும், 2 பயனாளிகளுக்கு  தலா ரூ.22,500 வீதம் மொத்தம்  ரூ.45,000 க்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.15000 வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.4,65,000 க்கான காசோலைகளையும்,
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  திருநெல்வேலி வட்டத்தைச் சார்ந்த 6 பயனாளிகளுக்கு நலிந்தோர் உதவித்தொகையாக தலா ரூ.10,000-வீதம் மொத்தம் ரூ.60,000 க்கான காசோலைகளையும், விபத்து உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ.15,000க்கான காசோலையினையும், ஆக மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.75,000 க்கான காசோலைகளையும்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வெள்ளாங்குழி, சிவந்திபுரம், அடைச்சாணி, வீராசமுத்திரம், கீழநத்தம், மருதூர், பத்மனேரி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7,00,000 க்கான காசோலைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு  விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 9 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும்,
மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 1 மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கும், 1 நரிக்குறவர்  குடும்பத்திற்கும் ஆக மொத்தம் 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மீன்வளத்துறையின்  சார்பாக மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு கடல்சார் கல்வி ஊக்கத்தொகையாக ராதாபுரம் வட்டம், கூட்டப்புளி கிராமத்தைச் சார்ந்த ஜிவிக்கு   ரூ.50,000க்கான காசோலையினையும் ஆக மொத்தம் ரூ.12 லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.

சுஷ்மாவிடம் நலம் விசாரித்த சோனியா, ராகுல்: அமளிக்கு இடையே அனுசரணை

புது தில்லி: இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியபோது, கிடைத்த சிறிது நேர இடைவெளியில், அரசியல் வேறுபாடுகளை மறந்து, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நலம் விசாரித்தனர். சோனியா காந்தி நிறம் மீதான விமர்சனத்துக்காக அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளி காரணமாக மக்களவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கிடைத்த இடைவேளையில், சுஷ்மாவை சந்தித்து சோனியாவும், ராகுலும் நலம் விசாரித்தனர். மேலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரிய சூலே ஆகியோரும் சுஷ்மாவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்

Actress priyanka (2) சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  ‘சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 24ல் 150 திரையரங்குகளில் வெளியாகிறது .

அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம் என்று கேட்டவுடன் மனிதர் குமுறிக் கொட்டித்தீர்த்து  விட்டார். ”சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்களுக்கே    சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள்தான். அனைவருக்கும் ஊதியம் வழங்கும் அந்த தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.
தயாரிப்பாளர் படும் பாடுகளை அவர்கள் சந்திக்கிற சவால்களை சொல்லி மாளாது. ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.” என்றவர் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார். பட்ஜெட்டில் பிரச்சினை! ஒரு படக்குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அதற்குள் சொன்னஅந்த தேதிக்குள் சொன்ன செலவுக்குள் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும் வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும். சொன்னதேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப்பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால் மட்டும் விடமாட்டார்கள். படப்பிடிப்பில் பிரச்சினை! படப்பிடிப்பு தொடங்கினால் தினம்தினம் செலவு தான் அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். .இப்படி 24 கிராப்டுக்கும் சம்பளம் தர வேண்டும். 2, 3நாள் கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேன் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும். ஒரு ஹேர் டிரஸ்ஸர் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும்.ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால் எதுவுமே செய்ய முடியாது.
அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நடந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள். கொடைக்கானலில் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர முன்னேபின்னே ஆகலாம்.  2 நாள் கூட பொறுக்க முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர் வர்க்கம் மட்டும்தான். சங்கங்களின் அச்சுறுத்தல்! திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளை பெற ஊதியப் பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். நான் ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்கள் சொல்லமுடியாது நான் சங்கங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லையென்று .. பேட்டா தாமதமானால் யார் யாரோ  போனில் மிரட்டுகிறான். உன் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான். முன்னே பின்னே பார்க்காத யார் யாரோ  படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான் . படப்பிடிப்பு நிறுத்தப் பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா? 24 கிராப்ட்டையும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன.   ஆனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்? லைட் மேனுக்குக் கூட குறைந்த பட்ச உத்திரவாதம் உண்டு. தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் எப்போது திரும்பி வரும் எப்படி வரும்? எந்த உத்திரவாதமுமில்லை. வியாபாரத்தில் போராட்டம்! ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால் அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்வது பெரிய போராட்டம்தான் .ஆளாளுக்கு ஒவ்வொன்றைக் கூறுவார்கள். இந்தச் சூழலில் ஒருதயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்காகஎடுக்க வேண்டு மா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்குஎடுக்க வேண்டுமா?விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா ? குழம்பிப் போவார் .ஒன்றுமே புரியாது.பேசியபடி வியாபாரம் நடப்பதில்லை. சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது  சினிமாவில். எங்களால்தான்  தொழில் நடக்கிறது, ஆனால் எங்களுக்குத்தான் மரியாதை இல்லை.
பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் என்றால்தான் விநியோகஸ்தர்கள் வருகிறார்கள்,வியாபாரம் பேசுகிறார்கள். அவர்களின் முதல் கேள்வியே பெரிய நடிகர்கள் இருக்கிறார்களா என்பதுதான். பெரிய நடிகர்கள் ஆறு, ஏழு பேர்தானே இருக்கிறார்கள். அவர்களை வைத்து வருஷத்துக்கு எத்தனை படம் எடுக்க முடியும்? ஆறு, ஏழுபடம் தானே எடுக்க முடியும். மற்ற நாட்களில் யார் படங்களை திரையரங்கில் வெளியிடுவது? பெரிய தயாரிப்பாளர்கள்  10 பேர்தான் இருக்கிறார்கள். மற்றபடங்கள் தயாரிப்பது சின்ன தயாரிப்பாளர்கள்தானே? திருட்டு விசிடி பிரச்சினை! ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் திருட்டு நோகாமல் விசிடி   போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை. சென்சார் பிரச்சினை! ஒரு படத்துக்கு ‘யூ’ சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார்யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாககேட்பார்கள் அப்பாடா ‘யூ’ சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்று நாக்கு தள்ளி விடுகிறது.
 இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.”
   இப்போ சொல்லுங்க தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா இல்லையா என்று நம்மையே  கேட்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. இத்தனை புள்ளி விபரங்களை எடுத்து வைத்தபிறகு நம்மால் மறுக்க முடியவில்லை. பேசுகையில் சினிமா மீது அவர் கொண்டுள்ள காதல் அழுத்தமாக தெரிகிறது. சரி  கங்காரு பற்றி என்ன கூறுகிறார்? ”’கங்காரு’படம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டன. எந்தப் போட்டியுமின்றி ஏப்ரல் 24ல் வெளிவருகிறது. படத்தின் மீது அதன் தரத்தின் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

விகிதாச்சார தேர்தல் முறையில் மாற்றம்?: இலங்கை சிறுபான்மையினர் எதிர்ப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதை இலங்கையின் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக சந்தித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட சிறிய கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. இலங்கையின் தற்போதைய தேர்தல் முறையை ஒப்பிடும்போது, சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு அது சாதகமானது என்றும், எனவே அதனை மாற்றக்கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணத்தில் மக்கள் போரினால் வேறு இடங்களுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் அங்கே உறுப்பினர்களின் தொகையை உடனடியாகக் குறைக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தஞ்சை பெரியகோவில் தேர் வெள்ளோட்டம்!

car-tanjore தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் தேர் வெள்ளோட்டம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து இழுக்க நடைபெற்றது. சுமார் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர் வெள்ளோட்டத்தின்போது, நமச்சிவாய என கோஷம் இட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்ஸவ விழா 18 நாட்கள் கொண்டாடப்படும். சித்திரை பிரமோற்ஸவ விழாவின் 15ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், தேர் பழுதானதால், தஞ்சாவூரில் தேரோட்டம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாம். இந்நிலையில் இன்றுதேர் புதிதாக செய்யப்பட்டு வெள்ளோட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மின்விசிறி கப்பில் மறைத்துவைத்த நகைகளையும் லவட்டிக் கொண்டுபோன திருடர்கள்

புதுச்சேரி: திருட்டு பயம் அதிகம் என்பதால், வீட்டின் பீரோ உள்ளிட்ட இடங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணி, யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மின் விசிறியின் கப்பைக் கழற்றி அதனுள் நகைகளை வைத்துவிட்டுப் போயும், அதையும் திருடர்கள் கண்டறிந்து சுமார் 85 பவுன்நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டனர். புதுச்சேரி சண்முகாபுரம், அண்ணாவீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர் காரைக்காலில் புதுவை அரசின் கால்நடைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி வேல்முருகன் குடும்பத்துடன் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, மின்விசிறிகளில் உள்ள கப்புகளைத் திறந்து அதனுள் போட்டு, டேப் சுற்றி ஒளித்து வைத்துள்ளார். நகைகள் அதில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க டேப் போட்டு ஒட்டினாராம். இந்நிலையில், திருப்பதியில் இருந்து நேற்று காலை வீடு திரும்பிய வேல்முருகன், தன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போயுள்ளார். பின்னர் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும், நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்தபோது, அவற்றின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்ததைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீடு முழுவதும் நகைகளைத் தேடிய திருடர்கள், அனைத்து மின்விசிறியிலும் டேப்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகப்பட்டு அவற்றைப் பிரித்து பார்த்து நகைகளைத் திருடியிருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு 85 பவுன் நகைகள் திருடப் பட்டிருப்பதாக வேல்முருகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்களும் போலீஸார்ம், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். என்னதான் பாதுகாப்பு என்ற பெயரில் நகைகளை பத்திரப்படுத்தி வைத்தாலும் அதையும் மோப்பம் பிடித்து திருடிச் சென்ற திருடர்களைக் குறித்தும் இந்தத் திருட்டு குறித்தும் புதுச்சேரியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.