நாமக்கல்: படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், விபத்தில் மரணம் அடைந்தனர். ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் படியில் தொங்கியபடி, பயணம் செய்தனர். அவர்கள் சென்ற பஸ், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஐந்துபனை என்ற இடத்தின் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திடீரென உரசியுள்ளது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி வந்த தமிழ்ச்செல்வன், சரவணக்குமார், பிரேம்குமார் ஆகிய மூன்று மாணவர்களும் ஆட்டோ மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்பேத்கர் பிறந்த நாள்: இந்து முன்னணி மரியாதை
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை இந்துமுன்னணியினர் மரியாதை செலுத்தி கொண்டாடினர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டமேதை, தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியமேட்டில் உள்ள அவரது சிலைக்கு இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் க. பக்தவத்சலம் மற்றும் மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் முகுந்தன், சிவ. விஜயன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி பொறுப்பாளர்களால் அண்ணல் அம்பேத்கரின் உன்னத சேவை நினைவுகூரப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலை, (துறைமுகம் அருகில்) உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும் காஞ்சி மாவட்டச் செயலாருமான பாலவாக்கம் சோமு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், ஆபத்து உதவிக்குழுச் செயலாளர் பூவை கந்தன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புஹாரி, வெளியீட்டு அணி துணைச் செயலாளர் எம்.எல்.எப்.ஜார்ஜ், பகுதிச் செயலாளர் துறைமுகம் எம்.இ. நாசர் உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கரூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கரூர் நகர் மண்டலம் சார்பாக தலைவர் மு.தமிழ்வாணன் தலைமையில்,மாவட்ட தலைவர் கே.சிவசாமி முன்னிலையிலும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கரூர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழாவில் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பா.ஜ.க வினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி, ஐ.டி பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,அமைப்பு செயலாளர் நகுலன்,மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,நகர துணை தலைவர் செல்வம்,வடிவேல்,கண்ணன்,கோபி,பிரகாஷ்,சிவம் சக்திவேல், சி.கே.சரவணன், வசந்த், விஷ்ணுபாலாஜி, ராயனூர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: திராவிடர் கழகம் நடத்தவிருந்த தாலியறுக்கும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. திராவிடர் கழகத்தினர் இன்று பெரியார் திடலில் தாலியறுக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், காவல் துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நிபந்தனையுடன் தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், இதனால் இன்று தாலியறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெரியார் திடல் முன்னர் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாவிடில் வாக்குரிமையை பறிக்க வேண்டுமாம்!
புது தில்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தைக் கடைபிடிக்கவில்லை எனில், அத்தகையவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும்” – இவ்வாறு கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது…. “ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறியதற்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் (முஸ்லிம்கள்) 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் மூலம் 40 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து யாரும் எதுவும் சொல்வதில்லை” என்றார் அவர். மேலும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் தேவை. நாடு சுதந்திரம் அடைந்தபோது 30 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ள மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையை பின்பற்றும் வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தை கடைபிடிக்காதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்று சாக்ஷி மஹராஜ் கூறினார்.
இடைஞ்சல் தந்த மதுபானக் கடை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூட ஆட்சியர் நடவடிக்கை
கரூர்: கரூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடையை தாற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுத்தை அடுத்த எல்லை மேட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான காடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை சுற்றி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுவான பேருந்து நிறுத்தம் , கோவில்கள் , பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கே மது அருந்தும் இளைஞர்கள் சாலையில் செல்வோரை தகாத வார்த்தையில் திட்டுவதும் கோவிலுக்கு செல்லும் பாதையில் மது பாட்டில்களை உடைப்பதும் மற்றும் குடிநீர் குழாயில் அருகிலேயே மது அருந்துவதும் வழக்கமாக கொண்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பாலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காலை சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதுபான கடையின் முன்பு ஒன்று கூடி கடையை திறக்க விட்டாமல் முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தாற்காலிகமாக அரசு மதுபான கடையை மூட உத்தரவிட்டார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப் பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இனிமேல் டாஸ்மாக் கடை இதே பகுதியில் திறக்கப்பட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அம்மா ஆகிறார் சினேகா; பிரசன்னா மகிழ்ச்சி
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா – நடிகை சினேகா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இந்தத் தகவலை இன்று பிரசன்னா மகிழ்ச்சியுடன் அறிவித்தார். பிரசன்னா – சினேகா இருவரும் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று, விரைவில் சினேகா அம்மா ஆகப் போவதை பிரசன்னா மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்தச் சிறந்த நாளில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைப் பகிர விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறோம். என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து சினேகா, பிரசன்னா இருவருக்கும் ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
On this special day am extremely happy to share a Gud news with u all. we are awaiting a new member in the family
வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை : திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் கோயில்களின் முன்னர் போராட்டம் நடத்தினர். சித்திரைத் திருநாளில் தாலியறுப்பு, கறியுண்ணல் நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகரில் இந்து முன்னணியினர் 20க்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாக நகரில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கு முன்னரும் சென்று வெளிப்புறத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, கி.வீரமணி படத்தை செருப்பால் அடித்து, தீயிட்டு எரித்து கோஷம் எழுப்பினர். மேலும், கோயில்களின் முன்னர் அமர்ந்து கி.வீரமணிக்கு நல்ல புத்தியைக் கொடு என்று பிரார்த்தனை செய்து அங்கிருந்து நகர்ந்தனர். இன்று காலை செங்கோட்டை சுந்தர்ராஜப் பெருமாள் கோயில் முன்னர் சித்திரை முதல்நாளில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென இந்து முன்னணியினர் செய்த ஆர்ப்பாட்டத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் இறப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தல்
”இந்தியாவில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உழவர் உழைப்பாளர் சங்க நிறுவன தலைவர் பொங்கலூர் .இரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.., தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மூடப்படாத 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் இன்று இரண்டரை வயது சிறுவன் தமிழரசன் தவறி விழுந்து பல மணி நேரம் போராடி அவனை மீட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தண்ணீர் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகள், அஜாக்கிரதையாக மூடப்படாமல் விடுவதால் குழந்தைகளின் உயிரைக் குடித்து விடுகின்றன. ஏற்கனவே, ஆபத்தான, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உத்தர விட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் அநியாயமாக பல உயிர்கள் தொடர்ந்து காவு கொடுக்கப்படுகிறது. இதோ, சமீபத்தில் இந்தியாவில் ஆழ்துளை கிணறு விபத்துக்கள் பற்றிய தொகுப்பு: 2006 ஜூலை 21-ல் 5 வயது பிரின்ஸ் என்னும் சிறுவன் ஹரியாணா மாநிலத்தில் ஹாபாத் என்னுமிடத்தில், விவசாயப் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்தான். 50 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
- 2007 மார்ச் 11-ல், குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில், ஆர்த்தி என்னும் 4 வயது சிறுமி 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள்.
- இதே ஆண்டு, மார்ச் 22-ல் ராஜஸ்தானில் உள்ள ராணாபடா என்னுமிடத்தில், 200 அடி ஆழத்தில் விழுந்த, சுனில் என்னும் 3 வயது சிறுவன் மீட்கப்பட்டான்.
- ஜூலை 27-ல் ஜெய்ப்பூரில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
- 2008, ஜனவரி 30-ல் கர்நாடகாவில் பூஷனூர் என்னும் கிராமத்தில், 40 அடி ஆழத்தில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
- 2008, மார்ச் 28-ல், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில், 45 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
- 2009, ஜூன் 21-ல் ராஜஸ்தானில் டவுசா என்னும் இடத்தில் 48 அடி ஆழத்தில் விழுந்த 4 வயது குழந்தை, 19 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.
- 2010, ஜூன் 3-ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே 200 அடி ஆழத்தில் விழுந்த கெளர் என்னும் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
- 2011, மே 20-ம் தேதி, மகாராஷ்டிராவில் நாசிக் வயல்வெளியில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 மாதக் ஆண் குழந்தை உயிரிழந்தது.
- 2011 செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்.
- 2012, ஜூன் 25ம் தேதி குஜராத்தில் ஜஸ்டான் என்னுமிடத்தில், 30 அடி ஆழத்தில் ஒரு வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
- 2012 மார்ச் மாதம் இந்தூரில் பயால் என்ற குழந்தை, பயனற்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானது.
- 2012 ஜூன் 24ம் தேதி, ஹரியானாவில் குர்காவ்ன் அருகே கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி 70 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 24ம் தேதி சடலமாக மஹி மீட்கப்பட்டாள்.
- 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவலகிரி கிராமத்தில், 600 அடி கிணற்றில் குணா என்ற 3 வயது சிறுவன் தவறி விழுந்தான். 20 அடி ஆழத்தில் சிக்கித்தவித்த சிறுவன் 4 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு.
- 2013 ஏப்ரல் 27ம் தேதி கரூர் மாவட்டம் சூரிப்பாளையத்தில், 600 அடி ஆழ்துளை கிணற்றில் முத்துலட்சுமி என்ற சிறுமி தவறி விழுந்து இறந்தாள்.
- 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப் பட்டான்.
- 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 14 மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.
இந்தியாவில் முதுகெலும்பாக உள்ள விவசாய தொழில் ஒவ்வொரு நதியும் இணைக்கப்பட வேண்டிய சூழலில் தண்ணீர் தேவைக்காக மிகவும் பலர் படிப்பறிவில்லாமல் விவசாயமே குலத்தொழிலாளாக செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு விவசாயத்தில் முறையான வழிகாட்டல் இல்லாமல் தங்களின் தண்ணீர் தேவைக்காக பல அடி ஆழத்தில் ஆழ்துளை மூலம் கிணறுகள் தோண்டி நீரை எடுக்கின்றனர். பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது முறையான வழிகாட்டல் இல்லாமல் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் பல ஆயிரத்தில் செலவழித்தும் பயனில்லாமல் போவதால் போதிய விழிப்புணர்வு இல்லாத விவசாயிகள் விரக்தியில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் தான் ஏகப்பட்ட மாநிலங்களில் இந்த விவசாய நிலங்களில் ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அங்கேயே தங்கி விடுகின்றனர். இதில் விளையாட செல்லும் சிறுவர், சிறுமிகள் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலைகள் கடந்த 2006 ல் இருந்து இந்த நிலை ஏற்பட்டு வருகிறது. அதற்குமுன் மீடியாக்களின் வளர்ச்சி அடையாத காலத்தில் ஏகப்பட்ட இறப்புகள் மூடி மறைக்க்பட்டது. இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும், விவசாயத்தை சார்ந்த மக்களும் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளான இந்த விஷயத்தை முறையான மற்றும் மிக கடுமையான சட்டத்தை இயற்றுவதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய துறைக்கென அதிகாரிகள் பலர் இருந்தும் இவர்களுக்கு முதலில் இந்த ஆழ்குழாய் கிணற்றின் மூலம் ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது என்று மாதம் தோறும் நடைபெறும் விவசாய கூட்டத்திலும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொடுக்கப்படும் இடங்களில் முறையான எளிமையான படங்களுடன் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விளக்கியும்,நேரடி ஆழ்குழாய்க் கிணறுகள் பற்றிய விவரம் தெரிந்து வைத்து இருக்க வேண்டியவரான கிராம நிர்வாக அலுவலர் மூலம் பதிவேடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாப்பது கட்டாயக் கடமையாகும். அது மட்டுமில்லாமல் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத்திற்கு தகுந்த வாறு என்னென்ன சாகுபடி செய்யலாம், நவீன இயந்திரங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் தெரியப்படுத்தும் வகையில் குறும்படங்கள் மற்றும் கூட்டத்தின் வாயிலாக கண்டிப்பாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது இந்த ஆழ்குழாய் கிணறு பற்றி பாதுகாப்பான விஷயத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனை குறும்படமாக அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆகவே இது போல தொடரும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் இறப்பதை தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து இளம் அப்பாவிக் குழந்தைகளையும்,விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் .இரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

