யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (மாலை மாற்று-என்ற தலைப்பில் போன வருடம் கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம். (பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது) ‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும். இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள். காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு. காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே.இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார். ‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்கமாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத் தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டி விடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே? திருஞானஸம்பந்தர் ஸாக்ஷபத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனைவிதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார். படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும். …………………………………………………………… கூடுதல் தகவல்; யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா யாம் ஆமா – யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா நீ ஆம் மாமா – நீ பெரிய ஆன்மா, பரமாத்மா யாழ் ஈ காமா – யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே காணாகா – இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று காணாகா – இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று காழீயா – சீர்காழியானே மாமாயா நீ – அம்மை அம்மை ஆம் நீ மாமாயா – (இப்படி) பெரிய மாயமானவனே
மாலை மாற்று- Palindrome
மாணவி ஊஞ்சல் ஆடியதில் சுவர் இடிந்ததாம்! : மாணவிகள் இருவர் பலியான சோகச் சம்பவம்
சென்னை: சென்னையில் நேற்று மாணவிகள் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவத்துக்குக் காரணம், ஒரு மாணவி அந்த சுவரில் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சல் ஆடியதுதான் என்றும், சுமார் 40 வருட பழைமையான சுவர் இடிந்து விழுந்தது என்றும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை பள்ளிக்கூட ஆயா சீத்தாம்மா நேரில் பார்த்துள்ளார். சுவர் இடிந்ததும் முதலில் ஓடிச் சென்று மாணவிகளைத் தூக்கி கதறி அழுதுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் சீத்தாம்மா கூறிய போது… பகல் 1 மணி அளவில் மோனிஷா, நந்தினி, சந்தியா மூன்று மாணவிகளும் அப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தனர். அந்த சுவர் பகுதி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அங்கே தண்ணீர் மோட்டார் ஒன்று உள்ளது. அங்குள்ள 2 சுவர்களையும் இணைத்து நடுவில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். அதை துணி உலர்த்த பயன்படுத்துவர். அந்தக் கயிற்றில் சில மாணவிகள் ஒருவர் மாற்றி ஓருவர் ஊஞ்சல் ஆடுவதும் உண்டு. அதுபோல் ஒரு மாணவி ஊஞ்சல் ஆடிய போது, அந்த மாணவிகள் இருவரும் சுவர் ஓரம் ஒதுங்கி அமர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் பலவீனமான சுவர் இடிந்து விழுந்துள்ளது. மாணவிகள் இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். சற்று தள்ளி நின்ற மாணவி சந்தியா காயத்துடன் தப்பிவிட்டார் என்று கூறியுள்ளார். 1976-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், அப்போது 10 அறைகளுடன் கூடிய பள்ளிக்கூடம் மற்றும் சமையல் அறை கட்டப்பட்டது. அதில் சமையல் அறை தற்போது பயன்படுத்தாமல் கிடந்தது. இதனால் அந்த சமையல் அறை சுவர்களுக்கு நடுவில் கயிறு கட்டி துணி காயப்போட்டுள்ளனர். பலியான மாணவிகள் மோனிஷா, நந்தினி இருவரும் ஏழை மீனவர் குடும்பத்துக் குழந்தைகள். நந்தினியின் தந்தை மூர்த்தி இறந்துவிட்டார். தாயார் தேசமணி. நந்தினிக்கு ஒரு அக்காள் மற்றும் தங்கை. மோனிஷாவின் தந்தை கதிரேசன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தார். மகள் மோனிஷா இறந்த தகவலை அறிந்து அவரது தாயார் லட்சுமி கதறி அழுதார். காயம் அடைந்த சந்தியாவின் தந்தை பெயர் சக்திவேல். இதனிடையே சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் நேரில் சென்று மாணவிகள் இறந்த பள்ளியைப் பார்வையிட்டார். பள்ளியின் நிர்வாகி சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் பழைமையான சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சொல்ல முடியும் என்றார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை கே.கே. நகர் பகுதியில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகே 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கே.கே.நகர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். கே.கே.நகர் பேக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: கே.கே.நகர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட லோகநாதன் தெரு மற்றும் ராஜீ தெருவில் வாணி வித்யாலயா பள்ளி மற்றும் மீனாட்சி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் மாணவ, மாணவிகள் போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகள் இன்றி செல்லும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் நேரம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், அதேபோல் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதையடுத்து சோதனை முறையில் வரும் 15ம் தேதி காலை 7 மணி முதல் ஒரு வார காலத்திற்கு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும்படி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வேம்புலி அம்மன் கோயில் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி லோகநாதன் தெரு, ருக்மணியம்மாள் தெரு வழியாக வலது புறம் திரும்பி கிழக்கு வன்னியர் தெருவில் சென்று மீண்டும் வலது புறம் ராஜீ தெருவில் முருகேசன் தெருவில் சென்று வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள வாணி வித்யாலயா பள்ளி மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு செல்லலாம்.
65 வயதில் கர்ப்பம்: 13 குழந்தைகளைப் பெற்று, 4 குழந்தைகளை கருவில் சுமக்கும் பெண்
13 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் ஒருவர், தனது 65 ஆவது வயதில் கர்ப்பம் அடைந்து, 4 குழந்தைகளை கருவில் சுமந்து கொண்டு அதிசயிக்க வைத்துள்ளார். ஜெர்மனி நாட்டின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55ஆவது வயதில் 13ஆவது குழந்தை லேலியாவை பெற்றெடுத்தபோது தலைப்பு செய்தியில் இடம்பிடித்தார். தற்போது ஒன்பது வயதை எட்டியுள்ள லேலியா தனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று தாயிடம் கூறினார். பெற்ற மகள் ஆசைப்படுகிறாளே என நினைத்த அன்னெகிரெக், அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இதையடுத்து கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு கர்ப்பமானார். சில மாதங்களுக்குப் பின் கர்ப்பப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அன்னெகிரெக் 4 குழந்தைகளை சுமப்பது தெரிந்தது. இதனால் மருத்துவர்களும், அன்னெகிரெக்கும் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் 13 குழந்தைகளை பெற்றெடுத்த தனக்கு 4 குழந்தைகளை சுமப்பது பெரிய விஷயமல்ல என் அன்னெகிரெக் தெரிவித்தார். இவ்வாறு நான்கு குழந்தைகளை கர்ப்பம் தரித்தால், அவை குறைப் பிரசவத்தில் பிறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் போது குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது வரை நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்னையுமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம்: ரூ.3 லட்சம் நிதியுதவி
சென்னை: சென்னையில் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில், இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் ‘அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி’-யில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் அடையாறிலுள்ள மலர் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டனர். இதில் மாணவியர் நந்தினி மற்றும் மோனிஷா ஆகியோர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர் என்று மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டு, அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டது. காலில் பலத்த காயமடைந்துள்ள சந்தியா என்ற மாணவி உள்நோயாளியாக அடையாறிலுள்ள மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவியர் நந்தினி மற்றும் மோனிஷா ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மலர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி சந்தியாவின் முழு மருத்துவ செலவினையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். முதற்கட்டமாக ரூ.30,000 தமிழக அரசால் மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டுள்ளது.- என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா? : ராமதாஸ் கேள்வி
சென்னை: போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்திய தமிழக அரசு, ஊதிய உயர்வு குறித்த தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரித்து தன்னிச்சையாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதை ஏற்க பெரும்பான்மை தொழிற்சங்கங்கள் மறுத்து விட்ட நிலையில் அரசு ஆதரவு சங்கங்களுடன் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் 2013&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதற்குள் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு கால தாமதம் செய்தது. கடைசியாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த திசம்பர் மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுக்களில், 50% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில், அதை ஏற்காத தமிழக அரசு 5.5% ஊதிய உயர்வு வழங்குவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து தொழிற்சங்கங்கள் மீது திணித்திருக்கிறது. இந்த ஊதிய உயர்வின்படி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கு அதிகபட்சமாக ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் நிலையில், வெறும் ரூ.1350 மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவது அநியாயத்தின் உச்சமாகும். இது கண்டிக்கத்தக்கதாகும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையே இது வரை 11 முறை ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட 11-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் போது 14% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் தொழிலாளர்கள் மன நிறைவடையும் அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை விலைவாசி சுமார் 60% அதிகரித்துள்ள நிலையில், கடந்த முறை வழங்கப்பட்டதில் பாதிக்கும் குறைவாக 5.5% ஊதிய உயர்வு அளிப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். அ.தி.மு.க. அரசின் இந்த துரோகத்தை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட 42 சங்கங்களில் பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படாத அரசு, தங்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஆளில்லாத 25 தொழிற்சங்கங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியம் தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் சித்திரைத் திருநாளான நாளை அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கைவிட்டு, ஊதிய உயர்வு தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
சென்னை: தமிழ் புத்தாண்டுக்கான சிறப்பு விருதுகள் மற்றும் தமிழ் தாய் விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி நவி மும்பை தமிழ் சங்கத்துக்கு தமிழ் தாய் விருது கிடைக்கிறது. இது குறித்துஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- 2014ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கபிலர் விருது – முனைவர் அ. இலலிதா சுந்தரம், உ.வே.சா. விருது – மருது அழகுராஜ், கம்பர் விருது -முனைவர் செ.வை. சண்முகம்,சொல்லின் செல்வர் விருது -மருத்துவர் சுதா சேசையன்,ஜி.யு.போப் விருது -ஜெ. நாராயணசாமி, உமறுப்புலவர் விருது -முனைவர் சே.மு. முகம்மதலி, இத்துடன் 2013ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு முனைவர் ந. தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.2015ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.மேலும் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது – கவிஞர் பிறைசூடன்,உ.வே.சா. விருது -குடவாயில் பாலசுப்பிரமணியன், கம்பர் விருது – கோ. செல்வம், சொல்லின் செல்வர் விருது – சோ. சத்தியசீலன், ஜி.யு.போப் விருது -மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி), உமறுப்புலவர் விருது -மு. சாய்பு மரைக்காயர், இளங்கோவடிகள் விருது- நிர்மலா மோகன்,2014ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு து. குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மவுஸ் பிடித்தவரெல்லாம் சினிமா விமர்சனம்: ‘ஓகே கண்மணி’யில் ஓகே ஆகாத சுஹாசினி
சென்னை: ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னத்தின் மனைவி என்ற முறையில் சுஹாசினியும் கலந்து கொண்டார். அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை… இணையத்தில் திரை விமர்சனம் எழுதுகிறவர்களை ஒரு பிடி பிடித்தார். ஒரு படத்தை விமர்சிக்கிற தகுதி பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆனால், சோஷியல் மீடியாவில் மவுசை நகர்த்தத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள். இதை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தடுக்க வேண்டும். விமர்சனம் எழுதுகிற தகுதியும் உரிமையும் உங்களுக்குதான் உண்டு என்றார். ஆனால், மணிரத்னமோ, முன்பு டீக்கடையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். நானும், பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து, யாருக்குமே படம் எடுக்க தெரியலை என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது மக்களுக்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் தங்களின் கருத்தைக் கூறுகிறார்கள். அதைத் தடுக்க முடியாது என்று பேசினார்.
பஸ்ஸில் சென்றவர்களை இழுத்துச் சென்று சுட்டனர்: தப்பிய 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்
புது தில்லி: ஆந்திர என்கவுண்டர் சம்பவத்தில், தப்பி வந்த 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்று சுட்டு என்கவுன்டர் கணக்கு காட்டியுள்ளனர் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அங்கிருந்து உயிர் தப்பிய இருவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். இதனால், ஆந்திர அரசுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்காக திருவண்ணாமலையைச் சேர்ந்த சேகர், தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், தில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். நேற்று இரவே சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்ற இவர்களை மதுரையைச் சேர்ந்த பீப்பிள் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு பாதுகாத்து வருகிறது. இதனிடையே மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த இளங்கோ, அடையாள அட்டை பிரச்னை காரணமாக அங்கே வாக்குமூலம் அளிக்கச் செல்லவில்லையாம். இவர்கள் மூவரும், மேலும் 7 பேருடன் சேர்ந்து மரம் வெட்டுவதற்காக திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ்சை வழிமறித்து நிறுத்திய ஆந்திர மாநில போலீசார், 7 பேரை இழுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததால் வேறு யாரோ பயணிகள் போலும் என்று நினைத்து அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில்தான், பிடித்துச் செல்லப்பட்ட 7 பேரும் என்கவுண்டரில் இறந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளது ஆந்திர அரசு. ஆனால், அவர்கள் பஸ்சில் இருந்து போலீஸாரால் இறக்கிக் கொண்டு செல்லப்பட்டதை, சாட்சியங்கள் மனித உரிமை ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், சாட்சிகளிடம் முழுமையாக விசாரித்துவிட்டு, நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த வழக்கில், என்கவுன்டரில் இருந்து தப்பியுள்ள இந்த மூவரின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை” காப்பீடு விவகாரத்தில், லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக கடந்த 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாற்றியிருந்தேன். அதற்குப் பிறகும் தனியார் மருத்துவமனைகளிடம் நவீன வடிவத்தில் கையூட்டு பெறுவதும், கையூட்டு தர மறுக்கும் மருத்துவமனைகளை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 650-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் பெரிய அளவிலான மருத்துவமனைகளின் உரிமையாளர்களை மட்டும் கடந்த 31-ஆம் தேதி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒவ்வொரு மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டப்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இதை ஏற்றுக்கொண்ட பல தனியார் மருத்துவமனைகள் ஆளுங்கட்சித் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன. அமைச்சரின் அழைப்பை ஏற்று சந்திக்க வராத தனியார் மருத்துவமனைகளை இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூன்றாம் நபர் நிர்வாகத்தை (Third Party Administration) கவனித்துக் கொள்ளும் விடால் ஹெல்த் (Vidal Health), எம்.டி. இந்தியா (MDIndia), மெடி அசிஸ்ட் (Medi Assist ) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு அமைச்சரின் விருப்பத்தை தெரிவித்து அதை செயல்படுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அதிக அளவில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவமனை ரூ.4.00 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்க அம்மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலுள்ள சில மருத்துவமனைகளும் கையூட்டு தர மறுத்துவிட்டன. இதையடுத்து இம்மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு மூன்றாம் தரப்பு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் நிறுவனங்கள் மூலம் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் விருப்பத்தை நிறைவேற்றாத மருத்துவமனைகளை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளின் நிலை இப்படியென்றால் அரசு மருத்துவமனைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ரூ.764 கோடியில் 15% தொகையை அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், அதற்குப் பணிந்து கையூட்டாகத் தரப்பட்ட பணத்தை ஈடுகட்டுவதற்காக தரம் குறைந்த மருந்துகளும், மருத்துவக் கருவிகளும் வாங்கப்படுகின்றன. சேலம் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தரம் குறைந்த மருந்துகளை அதிக விலைக்கு வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் நடப்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைபெறும் ஊழலால் சுகாதாரத்துறை அமைச்சரும், அவருக்கு மேல் உள்ளவர்களும் பயனடையும் நிலையில், ஊழல்கள் அம்பலமாகும் போது கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் சிக்க வைக்கப்படுகிறார்கள். சேலம் அரசு மருத்துவமனை ஊழல் இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு முன் இத்துறையை கவனித்த கே.சி. வீரமணி ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையிலுள்ள ஊழியர்களை மட்டும் கைது செய்துவிட்டு மேல்மட்டத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு துடிக்கிறது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளிடமிருந்து கையூட்டு வாங்குவதற்கு தடையாக இருந்த சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குனர் சண்முகத்தை மாற்றி விட்டு, தமக்கு சாதகமான அதிகாரிகளின் உதவியுடன் தனது விருப்பத்தை சுகாதாரத்துறை அமைச்சர் நிறைவேற்றிக் கொள்கிறார். இதற்கு முடிவு கட்டும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக இதில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட, அமைச்சரால் அச்சுறுத்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரை தற்கொலையிலிருந்து காக்க வேண்டும். – என்று கோரியுள்ளார்.

