Home Blog Page 6102

ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: கோவையில் மாணவர்கள் 20 பேர் கைது

andhra-cm-coimbatoreகோவை: திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் ஆந்திர முதலமைச்சர் உருவ பொம்மை, வனத்துறை அமைச்சரின் உருவப்படம் ஆகியவற்றை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 7ல் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது. செம்மரக்கடத்தல் மாஃபியாக்களை சுட்டுக்கொல்லாமல் அப்பாவி தமிழகத் தொழிலாளர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது திட்டமிட்ட சதி என்றுகுற்றம் சாட்டிய மாணவர்கள், ஆந்திர அரசுக்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் திங்கள் கிழமை இன்று சாலைமறியல் செய்தனர். மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை-சத்தி சாலை கோவில்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களைப் பாதுகாக்கும் ஆந்திர முதலமைச்சரின் உருவ பொம்மையையும் வனத்துறை அமைச்சரின் உருவ படத்தையும் தீயிட்டு எரித்தனர். அவர்களை பின்னர் போலிஸார் கைது செய்தனர்.

பழைய டீசல் வாகனங்களுக்கான தடை: இரு வாரங்களுக்கு நிறுத்திவைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

delhi-Traffic புதுதில்லி: தில்லியில், 10 வருடங்கள் பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்கள் மீதான தடையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது பசுமைத் தீர்ப்பாயம். காற்றில் பரவும் மாசு, எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதால் பசுமைத் தீர்ப்பாயம் இந்த முடிவை எடுத்தது. நாட்டின் தலைநகர் தில்லியில் 10 வருடங்கள் சாலையில் ஓடி பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்களைத் தடை செய்து உத்தரவிட்ட தனது தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இரு வாரங்களுக்கு அதை ஒத்திவைத்துள்ளது. 10 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தவுடன், தில்லி மாநில அரசு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் டீசலை பயன்படுத்தி இயங்கும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் சிறை வாகனங்களுக்கு மட்டும் 10 வருட கால தடையை நீக்கவேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தீர்ப்பாய விசாரணைக்கு பின் தங்கள் தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நோயாளியை ஏற்றி வந்து மரத்தில் மோடி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 3 பேர் பலி

  ambulanceஈரோடு: நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே உள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல் (65) என்ற விவசாயியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அந்த ஆம்புலன்ஸை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். விவசாயி கதிர்வேலுடன் அவரது மனைவி லட்சுமி, மகன் பாலசுப்ரமணி, லட்சுமியின் தாய் செல்லம்மாள் ஆகியோரும் ஆம்புலன்ஸில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் ஈரோடு அருகே மொடக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததைப் பார்த்த கிராம மக்கள் ஓடி வந்து வேனை உடைத்து அதில் சிக்கியிருந்த கதிர்வேல் மற்றும் பாலசுப்ரமணியத்தை மீட்டனர். அதற்குள் ஆம்புலன்ஸ் வேன் முழுவதும் தீ பரவியது. இதில், ஓட்டுநர் சங்கர், லட்சுமி, செல்லம்மாள் ஆகியோர் உடல் கருகி பலியாயினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து மாணவிகள் இருவர் பலி

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். பெசன்ட் நகரில் உள்ள அவ்வை இல்லத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப் பட்டு வருகிறது. இந்த இல்லம், இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்டப் பெண்மணியாகவும், சமூகப் போராளியாகவும் விளங்கிய முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இன்று திடீரென அப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவிகள் இருவர் பலியாயினர். திடீரென அந்த சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும், சிகிச்சை பலனின்றி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றொரு மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் படுகொலை குறித்துப் பேச ஆந்திர காவல் துறைக்கு தடை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துப் பேச ஆந்திர காவல்துறைக்கு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்கவுன்டர் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது எனவும் ஆந்திர காவல்துறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான என்கவுன்டர் வழக்கு விசாரணையை ஆந்திர உயர்நீதிமன்றம் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழக அரசைக் குறை கூறுவதா?: ஆந்திர அரசுக்கு தமிழக அமைச்சர் பதில்

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தீவிர சோதனையை அம்மாநில அரசு மேற்கொள்ள வேண்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், எங்களால் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கருத்து தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன், தமிழக வனப்பகுதிகளில் எந்த விதமான சட்டவிரோத செயல்களையும் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆந்திர வனப்பகுதியில் சட்ட விரோதமான செயல்களை தடுக்க வேண்டியது ஆந்திர அரசின் பொறுப்பு. அதை விட்டுவிட்டு, தமிழக அரசைக் குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து முதல் அமைச்சரிடம் கலந்தாலோசித்து உரிய அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரும்: ஆந்திர அமைச்சர்

ஹைதராபாத்: சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று ஆந்திர மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி, பணத்தாசை பிடித்தவர்கள்தான் ஆந்திராவுக்கு வருகின்றனர். எங்களால் அவர்களைத் தடுக்க முடியாது. தமிழக அரசதான் தடுக்க வேண்டும். மீறி வந்தால் எங்களின் நடவடிக்கை தொடரும் என கூறினார்.

சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக 20 தமிழர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினரும் தங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினருக்குச் சொந்தமான ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் வி.பி.காலனி, தெற்குத் தெருவில் உள்ளது ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட். இங்கே நேற்று இரவு 11 மணி அளவில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வெளியே சென்ற பின்னர், கடை மேலாளர் சுதாகர் மற்றும் 3 ஊழியர்கள் விற்பனை விவரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். பெட்ரோல் குண்டுகள் விழுந்து உடைந்தது என்றாலும் தீப்பிடிக்கவில்லை. திடீரென குண்டு வீசப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த கடைமேலாளர் அயனாவரம் போலீஸில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிராவில் பைக்குகளில் வந்த 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் செல்வது தெரிந்தது. நேற்று இரவு அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே நாம் தமிழர் கட்சியின் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆந்திர அரசை கண்டித்து ஆவேசமாக பேசினர். கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தியபோது நாம் தமிழர் கட்சியினர் இதில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கை

  திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பலியான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போர்க்குரல் எழுப்பியுள்ளன. நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஆந்திர மாநில போலீசார் கலக்கத்தில் உள்ளனர். எனவே கடத்தல்காரர்கள் முன்னை விட தீவிரமாக செயல்படக்கூடும் என ஆந்திர வனத் துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில், தங்கள் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களைப் பாதுகாக்கவும், கடத்தல்காரர்களின் தாக்குதலில் இருந்து அதிரடிப் படையினரைப் பாதுகாக்கவும் விரிவான திட்டத்தை ஆந்திர மாநில போலீசாரும் வனத்துறையினரும் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர். இதன்படி செம்மரக்காடுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இஸ்ரோவின் உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வனப்பகுதியில் பொருத்த்தவும், அதன் மூலம் இருட்டிலும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை வனப்பகுதி மற்றும் செம்மரக்கட்டை குடோன்களில் பொருத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றைக் கண்காணிக்க திருப்பதியை மையமாகக் கொண்டு கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. மேலும், அதிரடிப்படையைப் போல சிறப்புச்செயற் படையும் அமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், கடத்தல்காரர்கள் பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் வழங்கப்படும். இதன் மூலம் எந்தக் கடத்தல் குழு வனத்துக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையினரின் சிறப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க வழிசெய்யப்படும். ஏற்கெனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, அதன் மூலமே தப்பிய கடத்தல்காரர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும் ; அன்பே அவனுடை மொழியாகும்“ என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை யின் கருத்திற்கிணங்க, தொன் மையிலும், பன்முகத்தன் மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக உற்சாகமாய்க் கொண்டாடி வருகிறார்கள்.தொன்றுதொட்டு இருந்து வந்த இந்த நடைமுறை மாற்றப்பட்டதைச் சரி செய்து, முன்னோர் வகுத்த வழிமுறையின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாளாய் தொடரும் என்பதை மீண்டும் நிலைநாட்டியதை நினைவு கூர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களின் உள்ளத் திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழ கத்தை உருவாக்கிட உறுதி யேற்போம். இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனை வருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.