Home Blog Page 6104

மாணவனுடன் காணாமல் போன ஆசிரியை: தேடும் பணி தீவிரம்

teacher-kothai-sengottai செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். மனைவி மாரியம்மாள். இவர்களின் மகன், தென்காசி – கடையநல்லூர் சாலையில் குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தான். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் அந்த மாணவனைக் காணவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். செங்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி (வயது 23) இவர் திடீரென மாயமானார். இவர் காணாமல் போனது குறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே வயது வித்தியாசத்தையும் ஆசிரியை மாணவன் முறையை மீறி காதல் ஏற்பட்டதாகவும், 2 பேரும் வெளியூருக்கு தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பல்வேறு கோணங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவர் குறித்தும் நேற்று மேலும் பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 பேரும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2 பேரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சில புகைப்படங்கள் வெளியாயின. ஆனால் இவற்றில் பெரும்பாலான படங்கள், இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளின் படம் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. வாட்ஸ் அப்பில் போலியான படங்கள் மற்றும் தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே ஆசிரியை மற்றும் மாணவனைக் கண்டுபிடிக்க செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரையும் மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

வக்கீல், எஞ்சினியர் சான்றிதழ்கள் போலியாக விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது

fake-certificate1 சென்னை: வக்கீல், (எல்.எல்.பி.,) பொறியாளர் (பி.இ.) சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண், மாநில பாமக மகளிர் அணி துணைத் தலைவி. தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சென்னையைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்திருந்ததாகவும், அவர்கள் போலியான சான்றிதழ்களை வழங்கியதாகவும் புகார் அளித்தார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது பெரம்பூரைச் சேர்ந்த அருண்குமார் (36), கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி (32), சேலம் குரங்குச் சாவடியைச் சேர்ந்த கணேஷ்பிரபு (28) ஆகியோர் போலி சான்றிதழ்களை தயாரித்து அளித்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி எல்.எல்.பி. படிப்பு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து அருண்குமார் அவரை அணுகியுள்ளார். வகுப்புக்குச் செல்லாமல், தேர்வு எழுதாமல் எல்.எல்.பி. சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறிய சண்முகசுந்தரி, ரூ. 3.5 லட்சம் பெற்றுக் கொண்டு போலியாக பந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது போன்ற போலி சான்றிதழை வழங்கியுள்ளார். மேலும் சண்முகசுந்தரியும் அவரது கணவர் குமாரும் போலியான சான்றிதழ்கள் மூலம் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்றுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த கணேஷ்பிரபுவும் இவர்களுடன் சேர்ந்து எல்.எல்.பி., பி.இ., பி.எஸ்சி, பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இந்த மோசடி சம்பவத்தில் மாநிலம் முழுவதும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 10 பேருக்கு எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரி பா.ம.க.வின் மாநில மகளிர் அணி துணைத் தலைவியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். fake-certificate

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி

சென்னை: போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான 12–வது ஊதிய ஒப்பந்தம் 1–9–2013 முதலே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. அரசு பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உட்பட 11 போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் பிறகு தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவே முன் வந்தார். கூடுதல் நிதித் துறைச் செயலாளர், உமாநாத், ஐ.ஏ.எஸ்., தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்தது. இந்தக் குழுவினரும், பேச்சு வார்த்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பினைக் கொடுத்தன. அதன் பிறகு, குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடந்தது. 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிலே பங்கேற்றார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும், முக்கிய பிரச்சினைகளில் உடன்பாடு வராததால், மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடருவதென்றும், வேலை நிறுத்தத்தை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டு, தொழிற்சங்கத்தினர் வெளியே வந்தார்கள். அப்போது கூட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு காணப்பட வில்லை. அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தனர். அதனால் பிரச்சினை இழுபறியாகவே நீடித்தது. இந்தநிலையில் தான் 10–4–2015 அன்று ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலே அந்தத் துறையின் அமைச்சரும் கலந்து கொண்ட போதிலும், அதிலும் முடியாமல், கோரிக்கையை ஏற்க தமிழக அரசிடம் நிதியில்லை என்று அமைச்சர் அரசின் மோசமான நிதி நிலைக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து, மீண்டும் 13ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாகக் குறைத்ததோடு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் 25 ஆயிரம் பேரைக் குறைத்தார்கள். போக்குவரத்துக் கழகங்கள் என்றாலே அ.தி.மு.க. அரசுக்கு என்ன காரணத்தாலோ எழும் வெறுப்புணர்வு காரணமாக, பேருந்துகளையும், தொழிலாளர்களையும் குறைத்த காரணத்தால், போக்குவரத்துக் கழகங்களில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ், ஒப்பந்தம் பறிப்பு, சலுகை உரிமை பறிப்பு மூலம் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் இருபதாயிரம் ரூபாய் வரை பறித்து பழி வாங்கிய ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன என்பதையும், 2013ஆம் ஆண்டிலேயே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை இரண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டு போவதையும் மனதிலே கொண்டு, 13ஆம் தேதியன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமானதொரு முடிவினைக் காண வேண்டும். தமிழக அரசிடம் நிதியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அ.தி.மு.க. அரசு எப்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததோ, அப்போதே இந்த ஆட்சியில் அந்த நிலைமை தான் வரும் என்பது பொது மக்களுக்குத் தெரியாதா என்ன? எனவே அதையே சொல்லிக் கொண்டிராமல், பேச்சுவார்த்தையையும் நீடித்துக் கொண்டே போகாமல் தொழிலாளர்களின் மனம் குளிர்ந்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக நடைபெறும் என்பதை மனதிலே கொண்டு தமிழக அரசு 13ஆம் தேதிய பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவினை அறிவிக்க முன்வர வேண்டும்.

பிரிட்டன் சைவத் திருக்கோவில்கள் மாநாட்டில் சிங்கள அமைச்சர்: தமிழர்கள் எதிர்ப்பு

பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் சிங்கள அமைச்சர் கலந்துகொள்வதற்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லண்டனில் வரும் 18ஆம், 19ஆம் நாட்களில் நடைபெறவுள்ள பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் முதன்மை விருந்தினராக இலங்கை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அழைக்கப்பட்டிருப்பதற்கு பிரிட்டன் வாழ் தமிழீழ மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சுவாமிநாதன், சிங்கள-பௌத்த இனவாதிகளான டி.பி.விஜேதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்ததோடு, 1994ஆம் ஆண்டு யூன் மாதம் விஜேதுங்கவால் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைமை மேலாளராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், 2004ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கலைக்கப்படும் வரை அப்பதவியை வகித்தார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகள் எவற்றையும் சுவாமிநாதன் பெறாதபோதும், அவருக்கு ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மனோ கணேசன் அவர்களுக்குத் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க மறுத்த அதே ரணில் விக்கிரமசிங்க, தனது தனிப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் அப்பொழுது அதே பதவியை சுவாமிநாதனுக்கு வழங்கியிருந்தார்.
இவ்வாறு சிங்கள இனவாதிகளுக்கு அடித்தொண்டு புரியும் ஒருவரைப் பிரதம அதிதியாக பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் அழைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்று பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் மத்தியிலும், அமைப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
இது குறித்து இலண்டன் முதல் ஜெனீவா வரை அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த முன்னணி தமிழ்த் தேசிய மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளரிடம் கருத்து வெளியிடுகையில், பிரித்தானியாவில் உள்ள சைவ ஆலயங்களுக்குள் ஊடுருவும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதற்குத் துணைபோகும் வகையிலேயே பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் செயற்பாடு அமைந்திருப்பதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேநேரத்தில் இது தொடர்பாகப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செந்தில் என்பவர் கருத்து வெளியிடுகையில், சுவாமிநாதனை பிரதம அதிதியாக அழைக்கும் முடிவை பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் மீளப்பெறத் தவறும் பட்சத்தில், சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் மாநாடு நடைபெறும் இடங்களின் முன்பாக முற்றுகைப் போராட்டங்களை பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் முன்னெடுக்கும் நிலைதோன்றும் என்று தெரிவித்துள்ளார்.photo (3)

ரெப்கோ வங்கியில் மோசடிகளைக் களைய நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை

ரெப்கோ வங்கியில் நடைபெறும் மோசடிகளைக் களைய தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்….

    சென்னை, தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில், தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ (ஸிணிறிசிளி) வங்கியில், பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், பணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மக்கள் மத்தியில் செய்திகள் பரவியுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக தாயகத்துக்கு வந்த தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ரெப்கோ வங்கி. அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கத்தான் இந்த வங்கி செயல்பட வேண்டும். ஆனால், மறுவாழ்வு கொடுக்க, தொழில்-வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரம் உயர்ந்திடப் பாடுபட வேண்டிய வங்கி தற்போது வங்கி சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது வருந்தத்தக்கதாகும்.
இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள தியாகராயநகர் தலைமை வங்கியில், முழு நிர்வாகத்தையும் நடத்தி வரும் உயர் அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக சிலரும் வங்கி சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வருவதும், இவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் பல நேர்மையான வங்கி ஊழியர்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதும் கண்டனத்துக் குரியதாகும்.
இந்திய அரசு ஊழியர்களின் பணிமுதிர்வு வயது 60தான். ஆனால், மேல்மட்டத்தின் துணையோடு 60 வயதைக் கடந்த நிலையிலும், மேலாண்மை இயக்குனர் திரு. வரதராஜன், செயல் இயக்குனர் திரு. ராஜேந்திரன் ஆகியோர் ரெப்கோ வங்கியில் தொடர்ந்து பணியாற்றி வருவது விதிகளை மீறிய குற்றமாகும்.  இந்த வங்கி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் மட்டுமே உள்ளது.  இதன் துணை நிறுவனமான, இந்தியாவெங்கும் இயங்கும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதால், மோசடிக்காரர்கள் மோசடிகள் செய்திட வசதியாக உள்ளது எனச் சொல்லப்படுகிறது.
இப்போது, பணிநியமனத்தின்போது, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கடந்த மார்ச் 26ஆம் நாள் காலை சுமார் 12 மணிக்கே சென்னை உயர்நீதிமன்றம் பணிநியமன ஆணைக்கும், நேர்காணலுக்கும் தடையாணை விதித்த பிறகும், வங்கியின் நிர்வாகம் இரவு வரை நேர்காணல் நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இப்படி பல்வேறு வகையில்  ஊழல் செய்துள்ளதாகவும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வங்கியை தனியாருக்குத் தாரை வார்க்கத் தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடப் பாடுபட வேண்டிய ரெப்கோ வங்கி, ஊழல்வாதிகளின் கையில் சிக்கிக் கொண்டுள்ளதை மீட்டு மறு சீரமைப்புச் செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பழிவாங்கும் நோக்கத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  –  என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏப்.14 போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சட்டப் பரிகாரம் தேடப் போவதாக கி.வீரமணி அறிவிப்பு

ki-veeramani சென்னை: ஏப்.14 அன்று தி.க., நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, சட்டப் பரிகாரம் தேடப் போவதாக தி.க. தலைவர் கி.வீரமணி இன்று அறிவித்தார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ஏப்.14- அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு உரிய முறையில் நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும் சென்னை பெரியார் திடலில் வரும் 14ஆம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார். உதவி ஆணையரின் ஆணை சென்னை மாநகர காவல் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளரின் செயல்முறை ஆணை முன்னிலை:- ஜெ.அய்யப்பன். ந.க.எண்.15/உ.ஆ.(வேப்பேரி) முகாம் /2015 நாள்: 12.4.2015 சிறுதலைப்பு: திராவிடர் கழகம் – 14.4.2015 அன்று மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது – தொடர்பாக. பார்வை: திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண்.84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -7 அவரது 29.3.2015 நாளிட்ட மனு. *** ஆணை: சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை நகரில் தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி, 9.4.2015 அன்று காலை 8.00 மணி முதல் 24.4.2015 அன்று காலை 8 மணி வரை (இரு நாட்களும் உட்பட), சென்னை நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும், சட்டம், ஒழுங்கு பொது அமைதி மற்றும் போக்குவரத்தை கருத்திற்கொண்டு 15 நாட்களுக்கு தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-உட்பிரிவு 3(அ)ன் படி இந்நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 5 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பித்தால், உட்பிரிவு (ஆ)-வின்படி அம்மனுவை பரிசீலனை செய்து அனுமதி/மறுப்பு ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 18.3.2015 அன்று காவல் அனுமதி பெற்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது திரு. கே. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் கீழ்க்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். “பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை பெண்கள், எங்கள் பெண்கள் நிகழ்த்தி முன்னாலே நடத்துவார்கள், வந்து பார், ஒத்தக் கருத்துள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றியவுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். யார் யார் வரனும்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்குங்க இடம் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உண்டு. ஏன்னா நான் என்ன சாப்பிடனும்கிறத இராம கோபாலன் அய்யர் முடிவு பண்றதா?” 3. மேலும், 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் பத்திரிகைகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் (25), தனி நபர்களும் மனு அளித்துள்ளனர். 4. மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் ஜி.1 வேப்பேரி காவல் நிலைய கு.எண்.634/2015 ச/பி 153(A), 295(A), 505 (i) (b) (c) & 505 (2) இதச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு (W.P.No. 10585/2015) நிலுவையில் உள்ளது. 5. திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7 அவரது 29.3.2015 நாளிட்ட மனுவில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில், மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதைக் கொச்சைப்படுத்தியும், எதிர்த்து போராடுபவர்கள்மீதும், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார். 6. மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை. 7. இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. காவல் உதவி ஆணையாளர் வேப்பேரி, சரகம், சென்னை – 7 பெறுநர்: திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7 தகவலுக்காக காவல்துணை ஆணையாளர்கள், கீழ்ப்பாக்கம் மாவட்டம் மற்றும் போக்குவரத்து (கிழக்கு). காவல் இணை ஆணையாளர்கள், கிழக்கு மண்டலம், நுண்ணறிவுப் பிரிவு மற்றும் போக்குவரத்து (தெற்கு) காவல்கூடுதல் ஆணையாளர்கள், தெற்கு, வடக்கு மண்டலம் மற்றும் போக்குவரத்து, சென்னை காவல். காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை காவல். இவ்வாறு அந்த ஆணை கூறுகிறது. இந்த ஆணையை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைக் கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு

exam-students

         கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
             அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ராமானுஜன் கணினி மையம் ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை காலத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு “சி” புரோகிராமிங் கணினிப் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கணினி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இப்பயிற்சி ஒரு வார காலம் நடைபெறும். ஏப்ரல் 15, 22, 29, மே 7, 14 என 5 கட்டங்களாக பயிற்சி நடத்தப்படும். (இந்த தேதிகளில் பயிற்சி தொடங்கும்) தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும். சேர்க்கை கட்டணம் ரூ.1,000. இதை “Co-ordinator, C Programming” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் இயங்கும் (கேண்டீன் அருகில்) ராமானுஜன் கணினி மையத்துக்கு மாணவர்கள் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

childசென்னை: வேலூர் அருகே ஆற்காடு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும், மூச்சுத்திணறலால் உயிரிழந்தது. ஆற்காட்டை அடுத்த சாம்பவசிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது இரண்டரை வயது மகன் தமிழரசன் இன்று காலை 8.30 மணி அளவில் வீட்டின் அருகே மூடப்படாமல் வைத்திருந்த ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து ஆற்காடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பல மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை மீட்டனர். பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 பேர் கொலை: ஆந்திர காவலர்களிடம் பா.ம.க. உண்மை கண்டறியும் குழு விசாரணை

06-04-15 pmk Ramadhas photo 01சென்னை: 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திர காவலர்களிடம் பாமக அமைத்துள்ள குழு உண்மை கண்டறியும் விசாரணை மேற்கொண்டதாக பாமக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் ஆந்திரக் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக பா.ம.க. சார்பில் உண்மை அறியும் குழுவை அமைத்திருந்தேன். பா.ம.க. வழக்கறிஞர் அணித்தலைவர் க.பாலு தலைமையிலான இக்குழு இன்று ஆந்திரா சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மைக் கண்டறியும் குழுவில், இப்படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சிவில் உரிமைகள் குழுவின் உறுப்பினர் சந்திரசேகர், ஆந்திர வழக்கறிஞர் திருமலை ரெட்டி, பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சரவணன், கஜேந்திரன், குமார், கணல் கதிரவன், பாலாஜி, ஜானகிராமன், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். பா.ம.க. குழுவினர் இன்று காலை திருப்பதியில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சந்திரகிரி காவல் நிலையத்திற்கு பா.ம.க. குழு சென்றது. அவர்களுடன் பா.ம.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிரொலி மணியன், கீ.லோ. இளவழகன் ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்லப்பட்ட சசிக்குமாரின் மனைவி முனியம்மாள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ‘‘ செம்மரக் கடத்தலுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத எனது கணவர் சசிக்குமாரை ஆந்திரக் காவல்துறையினர் கடத்திச் சென்று படுகொலை செய்து விட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று மனுவில் முனியம்மாள் கூறியிருந்தார். ஆனால், இதுகுறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னொரு புகார் தேவையில்லை என்று ஆந்திரக் காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள்.பா.ம.க.வின் உண்மை கண்டறியும் குழு அதை ஏற்க மறுத்ததுடன், ‘‘இந்த படுகொலைகள் குறித்து ஆந்திர வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகொலைகளுக்கு மூலகாரணமே அவர்கள் தான் எனும்போது அதனடிப்படையில் நடத்தப்படும் விசாரணை நியாயமாக இருக்காது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் மனுவைப் பெற்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இதையடுத்து முனியம்ம்மாளின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அதற்கான ரசீதை கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்கு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். அதையேற்று சம்பவ இடத்திற்கு செல்லும் திட்டத்தை பா.ம.க. உண்மையறியும் குழு தற்காலிகமாக ஒத்தி வைத்தது. தொடர்ந்து திருப்பதி நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் ஜாட்டி, திருப்பதி மேற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு, திருப்பதி கிழக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிஷங்கர் ரெட்டி , சந்திரகிரி காவல் நிலைய அதிகாரி சிவப்பிரசாத் ஆகியோரிடமும், மாவட்ட வனத்துறை அதிகாரி சீனிவாசனிடமும் பா.ம.க. குழு விசாரணை நடத்தியது. கொல்லப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ம.க. குழுவினர் பெற்றுத் தந்தனர். கொல்லப்பட்டோரின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வு செய்ய ஆணையிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக சென்னை திரும்பும் உண்மை கண்டறியும் குழு, மீண்டும் ஆந்திரா சென்று விசாரணையைத் தொடரும். மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பிறகு விசாரணை அறிக்கையை பா.ம.க. தலைமையிடம் இக்குழு ஒப்படைக்கும். அதனடிப்படையில் தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் கொலையில் சி.பி.ஐ விசாரணைக்கு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த ராமதாஸ் கோரிக்கை

20 தமிழர் கொலையில் சி.பி.ஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் எனகுடியரசு தலைவரிடம் வலியுறுத்துமாறு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
திருப்பதி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமைக்கு ஆந்திர அரசிடமிருந்து இயற்கையான நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு தென்படவில்லை. கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான எந்த ஒரு முன்முயற்சியையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
இந்தியாவையே உலுக்கிய ஆந்திர போலி மோதல் படுகொலைகள் நிகழ்ந்து இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை இந்த படுகொலைகளின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வருவதற்கான விசாரணையை நடத்த ஆந்திர அரசு முன்வரவில்லை. மற்ற காவல்துறை  கொலைகளைப் போலவே இந்த படுகொலைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
இதுபோன்ற எந்த விசாரணையிலும் காவல்துறைக்கு எதிராக தீர்ப்பு வந்ததில்லை என்பது நாடறிந்த உண்மையாகும். அதுமட்டுமின்றி 20 தமிழர்கள் படுகொலைகளை ஆந்திர காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தா ராவ் என்ற காவல்துறை துணைத் தலைவர் (DIG) நிலையிலுள்ள அதிகாரி தான் முன்னின்று நடத்தியுள்ளார். காவல்துறையின் மற்ற உயரதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உண்டு என்றும், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒப்புதலுடன் தான் இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
அதிகார மட்டத்தின் உயரதிகாரிகள் தொடங்கி ஆட்சி மட்டத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் வரை  அனைவரும் சம்பந்தப்பட்ட இவ்வழக்கை அதிகார படிநிலையின் தொடக்கத்தில் உள்ள கோட்டாட்சியர்  விசாரித்து எந்த அளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும்? என்பது மில்லியன் டாலர் வினா? ஆகும். பொதுவாக இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் அது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடப்படுவது தான் வழக்கம். ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.யிடமோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமோ ஒப்படைக்கப்படக் கூடாது என்பதில் ஆந்திர அரசு தெளிவாக உள்ளது.
இதற்காக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில்  பொய்யான தகவல்களை கொடுத்து வழக்கை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இன்னொரு புறம் மத்திய அமைச்சர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றி, மத்திய அரசிடமிருந்து எந்த நெருக்கடியும்  வராமல் பார்த்துக் கொள்கிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம்  ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே தொலைபேசியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி வனப்பகுதியில் நடந்தது திட்டமிடப்பட்ட படுகொலை என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆந்திராவிலுள்ள பல்வேறு மனித உரிமை மற்றும் சிவில் உரிமை  அமைப்புகளும் இது படுகொலை என்பதை உறுதி செய்துள்ளன. திருவண்ணாமலையில் இருந்து சித்தூருக்கு பேரூந்தில் சென்றவர்களை நகரி என்ற இடத்தில் ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று படுகொலை செய்ததை காவல்துறையிடமிருந்து தப்பி வந்த சேகர் என்பவர் உறுதி செய்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் தொடங்கி தலைநகர் தில்லி வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட மறுக்கிறது. மத்திய அரசின் இப்போக்கு வேதனையளிக்கிறது.
இத்தகைய சூழலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியர் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு தான் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இத்தகைய சூழலில் தமிழக அரசு இரு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலாவதாக, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்திலும், ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் தமிழக அரசு தன்னையும் வாதியாக இணைத்துக் கொண்டு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.
இரண்டாவதாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அழைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆந்திரப் படுகொலைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தோ அல்லது சி.பி.ஐ.யின் சிறப்பு விசாரணைக் குழு மூலமாகவோ விசாரணை நடத்த ஆணையிடும்படி கோர வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பணியாளர் நலத்துறை மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் 20 தமிழர் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று தான் கருத வேண்டியிருக்கும்.