பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் பாஜகவினரின் போராட்டத்தால் அவை முடங்கியது. திங்கள் கிழமை இன்று காலை அவை கூடியதும், பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதை அடுத்து, அவைத்தலைவர் பேரவையை ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் அவைத்தலைவர். பாஜக உறுபினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், வாயில் கறுப்பு துணிகளைக் கட்டி வந்தனர். தங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியை ஆளும் தரப்பு மேற்கொண்டு வருவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் பாஜக உறுப்பினர்கள் தங்கள் மௌன விரதத்தை கடைபிடிப்பர் என்று தெரிவித்தார். இதை அடுத்து, அமைதியாக அனைத்து வாயில்கள், இருக்கைகளுக்குச் செல்லும் வழி, முதல்வர் இருக்கை செல்லும் வழி என அனைத்தின் முன்னும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அவையில் இல்லை. அவர் தில்லியில் இருந்து இன்று மாலைதான் பாட்னா திரும்புகிறார்.
இன்னும் சில அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர்; மேகதாதுவுக்கு சோனியா தீர்வு தருவார்: விஜயகாந்த்
சேலம்: கர்நாடகா மேகதாதுவில் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; இன்னும் சில அதிமுக அமைச்சர்களும் சிறை செல்வர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிக மகளிர் அணி சார்பில் சேலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தவறு எங்கு நடந்தாலும், அதனைத் தட்டிக் கேட்பதற்கு தான் தயாராக இருக்கிறேன். தற்போது பெங்களூரில் நடந்துவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். அந்த வழக்கில் அவர் சிறை செல்வது உறுதி. அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்குப் போய்விட்டார். விரைவில் இன்னும் சில அதிமுக. அமைச்சர்களும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்விடுவார்கள். கர்நாடகாவில் இப்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில்தான் காவிரி பிரச்சனை குறித்து பேசி தீர்வு காண முடிந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியால் எதுவும் செய்ய முடியாது. நாம் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க வேண்டும். அவரை சந்திக்க ஒரு குழுவை நானே அழைத்துச் செல்லத் தயார். தில்லி சென்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பேசுவோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் சோனியாதான் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தித் தர முடியும். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடந்தது. நாம் இப்படி நாம் எடுத்துச் சொன்ன பிறகும் சோனியா காந்தி நம்மை சந்திக்க மறுத்தால் அவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டமும் நடத்துவோம். மேகதாது அணை பிரச்னையில் அரசியல் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டுமெனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள் முறையிட வேண்டும்.. என்று பேசினார்.
காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வதேரா?: சல்மான் குர்ஷித் பதில்
ராகுல் காந்தி சில நாட்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன,. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், “பிரியங்காவை தலைவர் ஆக்குவதா வேண்டாமா என்பதை கட்சி மேலிடமே முடிவு செய்யும்” என்று கூறிச் சென்றார். அவரது பதிலில் இருந்து அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
பாதுகாப்பாக இருக்கிறார் ராகுல்: சல்மான் குர்ஷித்
புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கமாகக் கூறியுள்ளார். ராகுல் காந்தி எங்கே போனார், என்ன செய்கிறார் என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளாலும், தொகுதி மக்களாலும் எழுப்பப் பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித், “ராகுல் காந்தி எங்கிருக்கிறாரோ அங்கு பாதுகாப்பாகவே இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. ராகுல் காந்தி விரைவில் திரும்பி வருவார். ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் கமாண்டர். அவர் ஊர் திரும்புவதை உலகமே கூர்ந்து கவனிக்கும். ஏனெனில் அவர் சிறப்பான சாதனை படைத்து திரும்புவார்” என செய்தியாளர்களிடம் கூறினார்.
குளியலறையில் வழுக்கி விழுந்தார் ராகுல்? உருகுவே நாட்டில் சிகிச்சை!
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அதற்காக உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நீண்ட விடுப்பில் வெளிநாடு சென்றுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு நீதிமன்றங்களில் மனு போட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டு, பின்னர் ராகுலைக் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காததால், மக்களிடம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு சரிவை சரி செய்யவும், கட்சியை மறுசீரமைக்கவும் கட்சித் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில், கலந்துகொள்ளாமல் துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென நீண்ட விடுப்பில் சென்றார். அவர் எங்கே சென்றார்? எப்படிச் சென்றார் என்ற விவரத்தைத் தெரிவிக்காமல், மர்மமாகவே வைத்துள்ளது காங்கிரஸ் கட்சித் தலைமை. இதனிடையே ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாக ஒரு தகவல் உலவியது. இல்லை இல்லை, அவர் சிகிச்சைக்குச் சென்றுள்ளார் என்று சில தகவல்கள்… வெளிநாட்டில் உள்ள தனக்கு விருப்பமானவரைச் சந்திப்பதற்காக அவர் சென்றுள்ளார் என்று சில தகவல்கள்…. மனைவியுடன் அவர் திரும்புவார் என்று சில வதந்திகள் என, ராகுல் குறித்த பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராகுல் காந்தி குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அதில் படுகாயம் அடைந்து, அதற்கு சிகிச்சை பெற உருகுவே நாட்டுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தத் தகவலை ராகுல் காந்தியின் அலுவலக வட்டரங்கள் மறுத்துள்ளன.
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: வெங்கய்ய நாயுடு
ஹைதராபாத்: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கான தடைகள் அகற்றப்பட்டு விட்டன. மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் நிலக்கரி மசோதா, சுரங்கம் மற்றும் கனிமங்கள் மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவில் மக்களவையில் 9 திருத்தங்கள் செய்துவிட்டோம். இதற்கு மேல் ஆட்சேபிக்க அதில் ஏதுமில்லை. எனவே, இந்த மசோதா விவகாரத்தில் நாங்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. விரிவாகவே ஆலோசனை மேற்கொண்டோம். காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் வளர்ச்சியை விரும்பவில்லை. அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை விரும்பவில்லை. அவர்கள் நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டு நீடிப்பதையே விரும்புகின்றனர். ஆனால், இதற்கு நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் விரைவாக செயல்பட விரும்புகிறோம். இந்த மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு ஆவலாக உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் எங்கள் பாதை தடைபட்டுள்ளது. சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகளும் நாட்டின் வளர்ச்சியும் நாடாளுமன்றத்தால் தடுக்கப்படுகிறது என்றார் அவர்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை – ராமதாஸ் அறிக்கை
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால், உயிர் காக்கும் துறையையும் அது விட்டு வைக்கவில்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல் ஆகும். தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெறுகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழக மக்களுக்கான இலவசக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அப்போதைய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாற்றுக்கள் எழுந்தன. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 11.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இன்றைய நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 650-க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகள் ஆகும். புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் போதிலும், இவற்றைவிட பெரிய நோயாக ஊழல் உருவெடுத்து வருகிறது என்பது தான் பெரும் சோகமாகும். இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பெரிய மருத்துவமனைகளின் உரிமையாளர்களை சென்னைக்கு அழைத்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அதாவது ஒரு மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இத்திட்டத்தால் பெரிய அளவில் வருவாய் ஈட்டவில்லை என்று ஏதேனும் மருத்துவமனை உரிமையாளர்கள் கூறினால், அதை ஏற்க மறுக்கும் அமைச்சர், ‘‘அப்படியானால் இதுவரை ஈட்டிய தொகையில் 10% அளவுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்துவிட்டு இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்&உங்களைவிட அதிக தொகை கொடுத்து இந்தத் திட்டத்தில் சேர ஏராளமான மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன’’ என்று பேரம் பேசுகிறார். குறிப்பிட்டத் தொகைக்கு விளம்பரம் தர மறுத்தால் அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை வாங்க முடியாது என்று அமைச்சரே மருத்துவமனைகளை மிரட்டுவதாக கூறப்படுகிறது. கையூட்டுத் தராத சில மருத்துவமனைகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அமைச்சரின் அறிவுரைப்படி கையூட்டுத் தர ஒப்புக்கொண்ட பல மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பெருமைகளை விளக்கும் விளம்பரங்களை தங்களது பெயரில் ஜெயா தொலைக்காட்சியில் வெளியிட்டு அதற்கான கட்டணத்தை வரைவோலையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது ஆளுங்கட்சிக்கு லஞ்சமாக திரைமறைவில் கொடுக்கப்பட வேண்டிய பணம் விளம்பரக் கட்டணம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு வெளிப்படையாக கொடுக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான ஊழல் என்று நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டதை விட புத்திசாலித்தனமாக அ.தி.மு.க.வினர் ஊழல் செய்கின்றனர். முதலமைச்சரின் விரிவானக் காப்பீட்டுத் திட்டத்திற்காக இதுவரை ரூ.2110.64 கோடி செலவழிக்கப் பட்டிருக்கிறது. நடப்பாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.781 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2891.64 கோடி செலவழிக்கப்படுகிறது. இதில் 10% அளவுக்கு அதாவது சுமார் ரூ.300 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பதற்கான திட்டத்தில் ஊழல் செய்வதை விட இவ்வுலகில் ஈனத்தனமான செயல் வேறு எதுவும் இருக்குமா? என்பது தெரியவில்லை. இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற போதிலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, விஞ்ஞான முறையில் நடந்த காப்பீட்டுத் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கோவில் திருவிழா – வெடி விபத்தில் 2 பேர் பலி பலர் படுகாயம்
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை சின்னனூர் நாடு பகுதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. இதை பக்தர்கள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக ஒரு வாண வெடி வெடித்து சிதறி கோவில் அருகில் உள்ள பழைய மோட்டார் அறையில் விழுந்தது. அங்கு ஏற்கனவே வெடிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த வெடிகளும் சேர்ந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மங்களம் பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் கதிர்வேல்(6) மற்றும் வயல் நாடு புதுவளசு பகுதியைச் சேர்ந்நத சின்னசாமி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேய உயிர் இழந்தனர் . மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர் . படுகாயம் அடைந்த, சந்திரமோகன் செல்லத்துரை ராஜமாணிக்கம் மாரிமுத்து ராஜீ , ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றன . மேலும் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் கொல்லிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தொலைநோக்கின்றி தொலைக்கலாமா வாழ்க்கையை ? சிந்திப்பார்களா பெற்றோர்கள் ? – மேலை-பழநியப்பன் – கரூர்
”ஆயிரம் காலத்துப்பயிர்”, இருமனம் ஒருமித்து காணும் திருமணம் ! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது, திருமணங்களில் இசை பிடிமானம் உண்டு, கோயில் மாலை உண்டு, ஜாதகப்பரிவர்த்தனை உண்டு, மந்திரங்கள் ஓத ஐயர் உண்டு, யாகமும் உண்டு, வேதமும் உண்டு, பெரியோர்களின் நல்வாழ்த்தும் உண்டு. இவற்றிற்கெல்லாம் முன்னால் ஏழெட்டுப் பொருத்தம் என்ற சான்றிதழும் உண்டு. சில நூறு பேர் கூடி, தடபுடலான விருந்துடன் நடக்கும் திருமணங்கள் அண்மைக்காலமாக சில சதவிகித திருமணங்கள் மணமுறிவாகி, இயல்பாக நடக்கும் திருமண வரன் தேடல் போல, மணமுறவு வரம் தேடலும் நம் இதழ்களில் பெருகி வருகிறதே என்ன காரணம். உறவுகளை மதித்து பலரோடும் பழகி, கலகலப்பு இல்லாமல் தனித்து வாழ்வது காரணமா ? இதற்கு பெண்கள் மட்டுமே காரணமா ? இல்லை பெற்றோர்கள் காரணமா ? அவசர அவசியமாக சிந்திக்க வேண்டிய செய்தி இது. இந்த கேள்விக்கு பதில் பெரும்பாலான மனமுறிவுகளில் பெற்றோர்களே காரணமாகிறார்கள். ஒருவரை ஒருவர் ஒரு குடும்பத்தை மற்றொரு குடும்பம் முழுவதுமாக புரிந்து கொள்ளாமலும், கலந்து பேசி, சரி செய்யாமலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என சில, சில கருத்து மாற்றங்களை கூட விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமல் எந்த குடும்பம் பெரிய குடும்பம் என்ற ஈகோ -வும் யார் சொல்வதை, யார் கேட்பது என்ற ஈகோ –வும் குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி எடுக்காத முடிவும் குழந்தைகளை அறிவுரை சொல்லி நெறிப்படுத்தாமல் பெற்றோர்கள் அவர்கள் கருத்துக்கு துணை நிற்பதும். சில வீடுகளில் பெண்ணின் சம்பாதியத்தை வைத்து பெற்றோரும் வாழ்க்கையை ஓட்டுகிற நிலையும், தொலைநோக்கோடு எதிர்காலத்தை சிந்திக்காமல் பெற்றோர்களுக்கு பின் அந்த குழந்தையின் வாழ்க்கையை பற்றி கவலை படாமல், மனமுறிவுக்கு துணை நிற்பது சரியா ? என்பதை சிந்திக்க வேண்டும், பாலூட்டி, சீராட்டி பத்து மாத காலம் கருவில் சுமந்து பெற்றெடுத்து வளர்த்த பையனின் பெற்றோருக்கு உதவி வாழ்வதும், அவர்களோடு சேர்ந்து வாழ்வதும் கூடத்தவறு என இதையே ஒரு பிரச்சினையாக்கி பணமே பிரதானம் என்று பணத்தை வைத்தே வாழ்ந்து விடலாம் என்பது எவ்வளவு குருட்டுத்தனமானது. பணம் மட்டுமே வாழ்க்கையை, வாழ்க்கையில் மகிழ்ச்சியை, நிறைவை தருமா ? என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி என்கிறார் வள்ளுவர். மாற்றம் என்பது மானிடத்தத்துவம் வாழ்க்கையின் எந்த நிலைப்பாடும் நிலைத்ததல்ல, இதுவும் கடந்து போம் என்பது தான் மிகச்சிறந்த முன்னோட்டமாகும். இல்லெதன் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை பெருமைதரும் குணங்கள் இல்லத்தரசியாகிய மனைவியிடம் அமையுமேயானால் வேறு எதுவும் இல்லாவிட்டாலும் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை என்று பேசப்படும். அக்குணம், இல்லையென்றால் எவ்வளவு பிற செல்வங்கள் இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போலத்தான் என்கிறது வள்ளுவம். எனவே, பெற்றோர்கள் பதறி, சினங்கொண்டு, இளம் சிட்டுக்களின் வாழ்க்கையை தாங்களும் துணைபுரிந்து சிதறடிக்க விடாமல், இளம் தம்பதியினரை நெறிப்படுத்தி, சிறகடிக்கச் செய்வோமே, கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், தாத்தா, பாட்டியின் அறிவுரையும், அருகிப் போனதும் இவைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அவர்களுடைய மனோ நிலையை செம்மைப் படுத்தி மனமுறிவு எனும் நோயை வேரொடு, வேரடி மண்ணொடு கலைவோமாக
- மேலை-பழநியப்பன் – கரூர்
பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் மஹ்மூத் ஹுசைனையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது சில ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களூம் கையெழுத்திட உள்ளதாகவும் பிரதமர் நவாஸ் ஷெரிப் அளிக்கும் மதிய விருந்தில் சிறிசேன பங்கேற்க உள்ளதகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நேற்று மதியம், கராச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைத்ரீபால சிறீசேனவை, சிந்து மாகாண முதல்வர் சையது காயிம் அலி ஷா வரவேற்றார்.

