Home Blog Page 6135

32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்

rape-victim புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, பட்டினி போட்டுள்ளது. அந்த 5 பேர் கும்பலின் முக்கிய நபர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. போலீஸார் 5 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது. குர்காவ்னில் உள்ள டிஎல்எப் 5வது ஃபேஸில் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார் ஒரு பெண். அவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு கும்பல் ஆட்டோ ரிக்சாவில் தூக்கிச் சென்று, வஸிராபாத் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தது. தலிப் என்ற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணை 5 பேரும் 3 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடைத்து வைத்திருந்த அந்த 3 நாட்களும் அந்தப் பெண்ணுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கண்டபடி தாக்கியுள்ளனர். இதில், அந்தப் பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுதும் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் வஸீராபாத் பகுதியில் செக்டார் 57ஐ ஒட்டிய பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கே சென்று அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, பெண் ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்தப் பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் கைது செய்தனர். கர்காவ்ன் ஏசிபி ராஜேஷ் குமார் இது குறித்துக் கூறியபோது, அந்தப் பெண்ணை அறையில் வைத்து, அறையை வெளியில் பூட்டியுள்ளனர். 24 மணி நேரமும் காவலுக்கு ஒருவர் இருந்து, அறையில் இருந்து அந்தப் பெண் வெளியேறிவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். தலிப் அந்தப் பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து அவரைத் தன்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்குமாறு கேட்டுள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தில் சிலர் கூறியபோது, அந்தப் பெண் அல்டாஃப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்டாஃப் பணத்தை தர மறுத்துள்ளார். பின்னர் அல்டாஃப் அந்தப் பெண்ணை முறைகேடாக நடத்தி அவரை மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பகுதியில் தாதா போன்று வலம் வந்த தலிப்பிடம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாடம் கற்பிக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகே, தலிப் அந்தப் பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார்… என்று கூறியுள்ளார் ஏசிபி குமார். இந்நிலையில் தலிப் உள்ளிட்ட 5 பேர் மீதும் சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாட்டு பட்ட பாடு

பாட்டு பட்ட பாடு கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில மேய்க்கனும்… இது பழமொழி… பாட்டு பாடி பழகனும்னா அரசாங்க போட்டில கலந்து பாடனுங்கறது புதுமொழி…. நம்ம கதையோட நாயகன் கண்ணனோட அலுவலகத்துல பாட்டு போட்டி வந்தது…. வருடாவருடம் நடைபெறும் போட்டிதான். சென்னையில இருக்கற அத்தனை அரசாங்க அலுவலகத்திலுருந்தும் பாடறவங்க வருவாங்க. பிரச்சினை என்னன்னா இந்த போட்டில ஹிந்தி பாட்டு பாடனும்…. அதுவும் ஆண்கள் முகேஷ், கிஷோர் குமார் மற்றும் பெண்கள் லதா மங்கேஷ்கர் பாட்டுதான் பாடனும். எப்படி பாடினாலும் பரவாயில்லை, இவங்க பாட்டைத்தான் பாடியாக வேண்டிய சூழ்நிலை. பெண் குரலுக்கு ஆள் ரொம்ப எளிமையா கிடைச்சுடுச்சு…. ஆனா பாருங்க… இந்த ஆண் குரலுக்குத்தான் ரொம்ப DEMAND. நல்ல பாடற கண்ணனோட நண்பனுக்கு வேற முக்கியமான வேலை, போட்டி நடைபெறும் நாளில் முக்கிய வேலை வருவதால போட்டியில கலந்துக்க முடியாத சூழ்நிலை… யாரை அனுப்பறது போட்டிக்கு…. கண்ணனோட மேற்பார்வையாளர் ஆள் பிடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பாடத்தெரிந்த கண்ணனின் சக ஊழியரை பாட சொல்லி கேட்டார். அவருக்கு என்ன மனநிலையோ தெரியலை… எப்புவும் பிறர் கேட்கறத்துக்கு முன்னாடியே நான் பாடறேன்னு ஒத்துக்கறவர் சொன்னார்…. இப்பல்லாம் நான் போட்டில பாடறதில்லை… பாட்டு எழுதுறது…. பாட்டுக்கு மெட்டு அமைச்சு…. இசை அமைச்சு…. நானே அதை பாடறதுதான் எனக்கு புடிச்சிருக்கு… என்னை பாட சொல்லி தொந்தரவு செய்யாதீங்க என்றார். இதை கேட்டதும் கண்ணனோட மேற்பார்வையாளர் வேற ஒருத்தரை பாட சொல்ல முயற்சியெடுக்க ஆரம்பித்தார். அவர் முயற்சி செய்த ஒவ்வொருத்தரும் மறுக்க மறுக்க கண்ணனோட மேற்பார்வையாளர் முகம் சுருங்கி போனது. அவங்க படும் கஷ்டத்தைப்பார்த்துட்டு கண்ணனால சும்மா இருக்க முடியலை. பல நிகழ்ச்சி பார்த்த கண்ணன் பாட்டு பாடும் தரம் ஓரளுவுக்கு அறிந்ததால் தானே பாட முடிவு செய்தார்… அந்த முடிவுக்கு அவர் பின்னாடி ரொம்ப வருத்தப்பட்டார்… அதைப்பற்றி பிறகு பார்ப்போம்….. கண்ணன் பாடறேன்னு சொன்னதும் அவரோடு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி…. கண்ணனுக்கு வாய் கொஞ்சம் அதிகம்…. தன்னடக்கத்தோட சொல்லனும்னா ரொம்ப அதிகம். எல்லோருக்கும் என்ன எண்ணம்… இவன் எங்கே பாடப்போறான்… எல்லோரையும் கிண்டல் கேலி செய்து மகிழும் இவனை நாமும் கொஞ்ச நாள் கேலி செய்ய வாய்ப்பு கிடைத்து என்று எண்ணி கண்ணனுக்கு முகேஷின் பாட்டை பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. கண்ணனுக்கு மனதில் தன்னைப்பற்றி தெரிந்தாலும் அலுவலகத்தில் ரொம்ப உதார்விடுபவர் என்பதால் அதை வெளியே சொல்லாமல் திருவள்ளுவர் சொன்ன உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதெற்கு ஏற்றவாறு முகேஷின் இக் தின் பிக் ஜாயேகா என்ற அருமையான பாடலை பாட… மன்னிக்கனும் பாட முயற்சி செய்ய முடிவு செய்தார். ரொம்ப சரியாக சொல்லனும்னா கொலை செய்ய முயற்சி செய்ய முடிவு செய்தார். கண்ணன் பெயர் பாட இருக்கின்றது என்று தெரிந்ததும் அவருக்கு பல போன் கால்கள்… என்னடா நீ பாடுவேன்னு எங்களுக்கு தெரியாது… இவ்வளவு நாள் எப்படி நீ பாடமா இருந்தே… இதற்கெல்லாம் அவர் பதில் அவருக்கே தான் பாடுவேன்றது இன்னிக்குத்தான் தெரியும் என்பது… கண்ணனின் நண்பர்கள் வட்டம் மிகவும் பெரியது… காட்டு தீயை விட வேகமாக பரவியது அவர் பாட்டை கொல்ல போற செய்தி… வீட்டிலும், அலுவலகத்திலும் அக்கறை உள்ள சிலர் வேண்டாம் என்று தடுத்தாலும் பலர் கொடுத்த நீ நல்லா பாடுவேன்ற பொய் போதை அவரை தடுமாற வைத்தது… கலி காலம் அல்லவா… பொய் வாய்மையை வென்றது. இது கண்ணனின் தன்மான பிரச்னை ஆனது…. பாட்டை ஒலி வடிவமாக எடுத்து தன் செல் போன், கம்ப்யூடரில் வைத்து பாட ஆரம்பித்தார். வீட்டிலும்…. அலுவலகத்திலும்… தன்னோட மற்றோறு பரிமாணம் பாடகன் ஆனது. 40 வருடம் மேடையேறி பாடாத அவர் பாட முயற்சி எடுத்தது வீணாய் போகக் கூடாது என்ற வைரக்கியத்துடன் karaoke யோடு பாட்டு பாட முடிவு செய்தார். பாட்டில் அவருக்கு நல்லா பாட வந்த இடம் லலாலல்லா என்ற கோரஸ் மட்டும்தான்… மத்த எல்லா இடமும் பிரச்சினைதான்… சரி வேற பாட்டு பாடலாம்னு பார்த்தா அதெல்லாம் இதைவிட கஷ்டமாக இருந்தது.. சரி முடிவு செய்து விட்டோம்…. பார்ப்போம் ஒரு கை.. என்று பாட்டை பாட முடிவு செய்தார். காலை, மாலை என்று பெருமாள் பெயரை ஜபம் செய்வதுபோல இந்த பாட்டை பாட ஆரம்பித்தார்… அவர் மனைவி சொன்னால் இதுக்கு நாலு ஸ்லோகம் சொன்னால் புண்ணியமாவது கிடைக்கும்… ஏன் இப்படி பாட்டு பாடி பல பேரின் பாவத்தை சம்பாதிக்கீறீங்க என்று.. அவர் அவளிடம் சொன்னார் – முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் தன் பரம்பரைக்கே கிடையாது என்று. அவள் சொன்னால் நான் சொல்லட்டா எத்தனை முறை நீங்க மாறியிருக்கீங்க என்றதும். வடிவேலு மாதிரி அது நேத்து… நான் இன்னிக்கு சொன்னேன் என்ற டயலாக்கை வீசி விட்டு தன் பாட்டு பாடும் முயற்சியை தொடர்ந்தார். வீட்டில் இருக்கும் அவருடைய பெரிய பையனுக்கு கூட பாட்டு நல்லா வந்துவிட்டது… அவருடைய மண்டைக்குத்தான் சரியா ஏறலை… தன் வீட்டில் குடித்தனம் இருப்பவர்கள் கூட கோரஸை சரியா பாடி… ஸார் அந்த பாட்டில கோரஸ் மட்டும் அருமையா பாடறீங்க என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். பழக பழக வரும் இசை என்பதை நம்பித்தான் அவர் பாட முயற்சி செய்தார். ஆனால் அது கொஞ்சமாவது பாட தெரிஞ்சவங்களுக்குத்தான் என்பது கண்ணனுக்கு புரிய ஆரம்பித்தது. உண்மைய சொல்லனும்னா பாடறது அவருக்கு சுகமாத்தான் இருந்தது… ஆனா அவர் பாடறது பிறருக்கு சுமையா இருந்தது என்பதை அவரால் உணர முடிந்தது. பாடறது தனக்கு சரிப்பட்டு வராது போல தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல ஹிந்தி பாட்டென்ற வேதாளத்தை தன் முதுகில் சுமக்க தொடங்கினேன். சுமந்தது வீண் போகவில்லை… கொஞ்சம்… கொஞ்சமா… பாட தொடங்கினார்…. ரொம்ப நல்லா பாடலைன்னாலும் சுமாரா பாட ஆரம்பிச்சார்…. இதன் நடுவில் அவர் பாடுவதை கேட்டே தீரவென்றுமென்ற முடிவோட அவரோட அலுவலகத்தில் வேலை செய்பவர்களும், அவரது மேலாளரும் முடிவு செய்தனர். கண்ணன் அதுக்கு சில நிபந்தனை போட்டார். மாலை 6 மணிக்கு மேலதான் பாடுவேன்… எல்லா கதைவையும் முடினபிறகுதான் பாடுவேன். ஒரே ஒரு முறைதான் பாடுவேன்… அதற்கு அவர் மேலாளர் கேட்டார் மற்ற நிபந்தைனைகள் எல்லாம் சரி, அதென்ன ஒரே ஒரு முறைதான் பாடுவேன் என்பதென்பது… அவர் சொன்னார் நீங்க என்னை எத்தனை தர பாட சொன்னாலும் அதே தப்புதான் வரும்… என் தரம் அவ்வளவுதான். என்று… பிண்ணனி இசையோடு கண்ணன் பாடினதும்… அவரோட வேலை செய்யும் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். என்னாட இவனை கொஞ்ச நாள் இதை வைத்து ஓட்டாலாமென்று பார்த்தால் சுமாரா பாடறானே…. பரிசு வேற வாங்கிட்டா… இவனை சமாளிக்க முடியாதே… என்ற மனக்கவலைகள் அவர்களை சூழ்ந்து கொண்டதை உணர முடிந்தது. அதை பார்த்தும் கண்ணன் சொன்னார் பாடி முடித்தும் தனக்கு முண்ணனி இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வரும் என்று… அவர் நண்பன் தைரியமாக சொன்னான் நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று. அவர் சொன்னார்… ஏன் அவசரப்படறே…. நான் இன்னும் முடிக்கலே… அவங்க சொல்வாங்க…. நாங்க மிருகங்களை வைத்து படம் பண்ணப்போறோம் நீங்க அதுல கழுதைக்கு குரல் குடுக்க முடியுமா என்று…. இதை கேட்டதும் அனைவரும் இன்னிக்குத்தான் இவன் உண்மை பேசறடான்னு கண்ணனை பாராட்டினாங்க… பாடும் தினமும் வந்தது… ஸிடியில பாட்டை எழதி கண்ணனா எடுத்துக்கொண்டார். பிறரின் பாடும் தரத்தைப்பற்றிய தன் கணிப்பு தவறென்று உணரும் நிலை வந்தது கண்ணனுக்கு… முதலில் பாடியவர் அசத்தினார். அடடா… தனக்கு மேல ஒருத்தர் என்று நினைக்கும் போது 16வதாக பாட வரும் தனக்கு முன்னால் பாடிய பலர் அருமையாக பாட கண்ணனுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பிறரை கிண்டல் செய்வதற்கும்… தாமே அந்த நிலைக்கு தள்ள படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தார். கண்ணனுக்கு ஒரு திறமை உண்டு தன் மனைவியை தவிர மற்ற எல்லாரையும் தன்னிடம் திறமை உண்டு என்று எளிமையாக ஏமாற்றிவிடுவார். அப்படி தன்னை நம்பும் ஒருவர்தான் போட்டிக்கு வந்த நடுவர்களில் ஒருவர். கண்ணனுக்கு நன்றாக தெரிந்தவர். அடடா தன்னுடைய சாயம் வெளுத்துடும் போலிருக்கே என்று வருத்தப்பட ஆரம்பிச்சார். பல வருடமா கட்டி காத்த கோட்டை பாட்டு மேல வந்த ஆசையால பாழா போயிடுமோயென்ற பயம் அவரை சூழ்ந்தது. அதுக்கும் மேல பிரச்சனைன்னு வந்தா எல்லாம் சேர்ந்து வரும் என்பார்கள்…. பட்ட காலிலேயே படும் என்பார்கள். ஆனால் பிரச்னை கண்ணன் பெரிய பையன் படிக்கும் பள்ளியிலிருந்து அவர் பாட ஆரம்பிக்கும்போது வந்த போனின் மூலம் வந்தது… கண்ணன் சொன்னார் நான் முக்கியமான போட்டியில் இருக்கிறேன், தயவுசெய்து 10 நிமிடம் கழித்து கூப்பிடுங்கள் என்று. சொல்லிவிட்டு தன் ஸிடியை தந்து பாட்டை போடச்சொன்னால் பாட்டின் இசை வரவில்லை. கண்ணனால் நன்கு அறிந்த கூட்டத்தின் ஒரு பகுதி இதுதான் நல்ல சந்தர்ப்பமென்று கூறி பாடதே என்றனர்.. மறு பகுதி அடுத்தாதாக பாடு என்றது…. ஆசை யாரை விட்டது…. சரி ஸிடியை சரி செய்து பாடுகிறேன் என்று கூறிய போது மீண்டும் பள்ளியிலிருந்து போன் கால். என்ன ஸார் உங்க பையன் காலை உடைத்துக் கொண்டிருக்கிறான்…. நீங்க போனை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று. கண்ணன் தன் பையனிடம் பேசினேன்…. என்னடா எப்படி இருக்கே… அவன் அந்த வலியிலும் கேட்டான்… அப்பா பாடிட்டியா என்று… நான் இன்னும் பாடலடா… கிளம்பி வரட்டுமா என்று கேட்க… இல்லப்பா நீ அங்க பாடிட்டு வா… நான் வீட்டில பட்ட வேதனை அனைவரும் படட்டும்னான். மேலும் சொன்னான் நான் என் நண்பனோட அப்பாவோட நம்ம வீட்டுக்கு போறேன்னு. கண்ணன் அக்கறையோட சொன்னார் வீட்டுக்கு போய் ஜஸ் வைச்சுக்கோ… 30 நிமிடத்துல வீக்கம் போலேன்னா அம்மாவோட போய் எக்ஸ்ரே எடுத்துக்கோ…. சரிப்பா என்றான் அவரின் மகன்… பாட போன கண்ணனுக்கு மீண்டும் சத்யசோதனை. ஸிடி மீண்டும் வேலை செய்யவில்லை. அதை சரி செய்ய எடுத்த பல முயற்சிகள் வீணானது… தன்னை பாடமால் இருக்க கடவுள் கொடுத்த பல வாய்ப்பை பயன்படுத்த தவறி, ஆனது ஆகட்டும் என்று பிண்ணனி இசையில்லாமல் பாட முடிவு செய்தார். பிறரையே டென்ஷன் செய்து பழகிய அவருக்கு டென்ஷன், பிரஸர் என்றால் என்ன என்று தெரிந்தது. 15 நாட்கள் காலை, மாலை, இரவு என்று நன்றாக மனப்பாடம் செய்த பாட்டு மறந்து, பார்த்து பாட ஆரம்பித்தார். எப்படியோ பாடி முடித்தார். கண்ணன் தெளிவாக அனைவரிடமும் தனக்கு பரிசு கிடைக்காததைப் பற்றி சொன்னார், இங்கு தன்னை விட பலர் நன்றாக பாடிய ஒரே காரணத்தினால்தான் தனக்கு பரிசு பெறும் வாய்ப்பை கிடைக்கவில்லையென்று. ஆனாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் நடுவே அவர் பாடியதால் பலரின் பாராட்டு கிடைத்தது. வெளியே மழைவேறு பெய்ய ஆரம்பித்தது… அனைவரும் உன் இசைமழையில் நனைய வருணபகவானே வந்துவிட்டார் என்றனர். நல்ல முயற்சி… நீ நல்லா பயிற்சி செய்தா பரிசு நிச்சயம் கிடைக்குமென்று உசுப்பிவிட்டார்கள். டென்ஷனில் பாதி மட்டுமே சரியாக பாடியதால் முழுமையாக அதை படுத்திவிட்டால்தான் திருப்தி என்ற நிலையை கண்ணன் எடுத்து அடுத்த விழாவில் தான் இந்த பாட்டை சரியாக பாடுவேன் என்று சபதம் எடுத்தார்.. தன் முயற்சியை பற்றி அவருடைய மேலாளர் சொன்ன வார்த்தைகள் நீங்கள் பாடியது நல்ல தைரியமான முயற்சியென்று சொன்னது மட்டும் கண்ணனின் நினைவில் நன்றாக பசுமரத்தானி போல் பதிந்து நின்றது……. பாட்டு கண்ணனிடம் பட்ட பாடு இதோட நிற்காது.

எய்தவன் – கதை சுஜாதா

எய்தவன்….. பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்… பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் ‘ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான். குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, சதுர முகம், மாநிறம், காலர் இல்லாத சட்டை, அதனுள் தெரிந்த சங்கிலி. மீசை ஏன்… அடர்த்தியான காதோர முடியைக்கூடக் கவனித்தார். ஒருவிதத்தில் இவனை உள் மனதில் எதிர்பார்த்திருந்தாரோ… ”யாருப்பா?” ”சாரைப் பார்க்கணும்.” ”என்ன விஷயமா?” ”கேஸ் விஷயமா.” ”அதுக்கெல்லாம் தம்புசெட்டித் தெருவில் ஆபீஸ் இருக்குது… அங்க வாப்பா…” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் ஒளித்துவைத்து இருந்த இரண்டு ஆயுதங்களை முதுகுப் பக்கத் தில் இருந்து எடுப்பதைப் பார்த்தார். வாசலில் ஆட்டோ ரிக்ஷா இன்ஜின் அணைக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது. ஆபத்து என்று அவருக்குள் அட்ரினலின் பாய்வதற்குள், அவன் நேராக மார்பைக் குறிவைத்துக் குத்தினான். சற்றே திரும்பிவிட, விலா எலும்புக்குள் தாக்குதலின் வேகத்தினாலும் பலத்தினாலும் மென்மையான தசைகளுக்குள் புகுந்து கத்தி யின் நீளத்துக்கு அதிகமாகவே கிழித்தது. தடுமாறி ”மரகதம், மரகதம், மணி…” என்று அலறுவதற்குள் மற்றொரு குத்து. இந்த முறை கழுத்தில் மற்றொரு ஆயுதத்தால் மண்டை மேல் பக்கவாட்டில் பாய்ந்து, நெற்றிக்கு அருகில் பட்டு, வலது கண்ணைச் சேதப்படுத்தி, தாடைக்குள் பாய்ந்து வராந்தாவில் அலங்காரத்துக்கு வைத்திருந்த ‘டெரகோட்டா’ குதிரை மேல் ரத்தம் தெறித்தது. ரத்த சேதத்தில் நினைவிழப்பதற்கு முன் அவன் முகத்தின் தழும்பையும் வியர்வை நாற்றத் தையும் மூச்சில் சாராய நெடி யையும் உணர்ந்தார். அக்கம்பக்கத்தினர் குரல் கேட்டு ஓடி வருவதற்குள் அவன் ஆட்டோ ரிக்ஷா ஏறி வேகமாகச் சென்றுவிட்டான். தெரு முனையில் மற்றொரு ஆட்டோ காத்திருந்தது. இந்த ஆட்டோ அவனை உதிர்த்துவிட்டுக் கூட்டத்தில் கரைந்து விட்டது. 40 தூரத்தில் ஒரு டி.வி. சீரியலுக்குப் படம்பிடிக்க டிபன் பாக்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தன. அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. சுந்தரலிங்கம் மயங்கிவிழுந்தார். அவர் மகன் முகச்சவரம் பண்ணிக்கொண்டு இருந்தவன் ஓடிவந்தான். கொஞ்ச நேரம் செய்வது அறியாமல் தடுமாறிய பின், மாருதியில் அவரைத் திணித்து (பின் சீட்எல்லாம் ரத்தம்) அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். ‘போலீஸ் கேஸ்’ என்று அவர்கள் எடுக்க மறுத்து, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொடுத்தார்கள். அடையாறில் இருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு மயக்க நிலையில் எடுத்துச் செல்கையில், மிகுந்த ரத்த சேதத்தில் அழுத்தம் குறைந்து, மூச்சு நூல்போல வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது. இதயம் நின்றுபோகும் அவசரத்தில் இருந்தது. எமர்ஜென்ஸியில் அவருக்கு ரத்தம் மணிவாசகம்தான் கொடுத்தான். வெளிப்புறக் காயங்களை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்… தையல் போட்டார்கள். மார்பில் பாய்ந்திருந்த கத்திக்குத்து அகலக் குறைவாக, ஆனால், எட்டு இன்ச்சுக்கு மேல் ஆழமாக இருந்த அதன் பாதையில் டிஷ்யூக்களை எல்லாம் சேதப் படுத்தியிருந்தது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாலை 5 மணி… அதே தினம் டெலிவிஷன் கேமராக்களும் நிருபர்களும் ஆஸ்பத்திரியைச் சூழ்ந்துகொள்ள… போலீஸ் டி.ஐ.ஜி. வந்தபோது, கேள்விக்கணை களால் துளைக்கப்பட்டபோது… ”மணிமோகன் ஆளுங்கதான் செய்திருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்களே.?” ”நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்…” ”கொலைகாரனைப் பிடிச்சுருவீங்களா?” ”முதல்ல இது கொலை இல்லை. கொலை முயற்சி… சுந்தரலிங்கம் உயிருடன் இருக்கார். ட்ரொமா வார்டில் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கார்…” ”இது ஏற்பாடு செய்த கொலைனு…” ”நாங்க எந்த முடிவுக்கும் வரலை…” ”கொலை முயற்சி செய்தவனைப் பிடிச்சுருவீங்களா?” ”அதுக்குத்தானே போலீஸ் இருக்கு.” ”பிடிக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?” ”எனக்குக் கோபம் வரலை” என்று சிரித்தார் டி.ஐ.ஜி. ”ஆட்டோ நம்பர் தெரியுமா?” ”முதல்ல ஆட்டோவான்னே ஊர்ஜிதமாகலை. அவருக்கு நினைவு வந்தப்புறம்தான் மேல் விவரம் தெரியும். அவர் குத்தப்பட்ட சமயத்தில் பக்கத்துல யாரும் இல்லை. 40 அடி தள்ளி ஷூட்டிங் செய்துக்கிட்டு இருங்காங்க… அவங்க யாரும் கவனிக்கலை. போலீஸ் என்ன செய்யும், சொல்லுங்க…” ”சுந்தரலிங்கம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, கொடுக்க வேணாம்னு மேலிடத்து உத்தரவு வந்தது உண்மையா?” ”பொய்… அவர் எங்ககிட்ட புரொட்டெக்ஷன் எதும் கேக்கவே இல்லை.” சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுந்தரலிங்கத்துக்கும் அவர் மனைவி மரகதத்துக்கும் நிகழ்ந்த உரையாடல்… மரகதம்: ”எதுக்காகங்க உங்களுக்கு வம்பு? அவன் ஆளைவெச்சு அடிப்பானாம். இப்பவே நீங்க பாட்டுக்கு கோர்ட்டுக்குப் போயிர்றீங்க. தெனம் ரெண்டு போன்கால் வருது… ‘தாலி அறுக்கணுமா… உம் புருஷனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு… கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’னு.” சுந்தரலிங்கம்: ”இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது மரகதம்…” மரக: ”பின்ன எதுக்குத்தான் பயப்படணும்?” சுந்: ”கடவுளுக்கும் மனசாட்சிக்கும்தான் பயப்படணும்.” மரக: ”எனக்கு மணிமோகன்கிட்டயும் பயம்.” சுந்: ”இவனெல்லாம் மந்திரியா இருக்க லாயக்கு இல்லை. சாராய சாம்ராஜ்யம், ஹவாலா மார்க் கெட்னு கோடி கோடியா சம்பா திச்சு வெச்சிருக்கான். இவன் தொழிற்சாலையில வொர்க்கர்ஸ் கேஸ்ல அப்பியர் ஆனேன். எத்தனை ஊழல் தெரியுமா..? ரிஜிஸ்தர்ல ஒரு சம்பளம்… கொடுக் கறது ஒரு சம்பளம். ‘லேபர் லா’வுக்குப் பயந்து பர்மனென்ட் ஆக்காம ஆறு மாசத்துக்கு ஒரு முறை டிஸ்மிஸ் செஞ்சு மறுபடி வேலைக்கு எடுத்துக்கற ட்ரிக்… 200 பேரை அப்படி வெச்சிருக் கான். சைல்டு லேபர்… வயசை அதிகமாகச் சொல்லி சைல்டு லேபர் பதினஞ்சு ரூபா சம்பளம் உயர்த்த அழறான். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை வெளிநாடு போறான். கட்சிக்காக ஓப்பனாவே இன்டர்வியூ ஒன்றுக்கு ஒரு லட்சம் வெச்சாத்தான் பேட்டியே உண்டு. தினம் 20 பேர்கிட்ட வாங்கறான் இப்படி.” மரக: ”அவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. இந்த உலகத்தையே திருத்துவீங்களா?” சுந்: ”இல்லை, மணிமோகன் ஒரு டெஸ்ட் கேஸ்… நான் எடுக்கறதெல்லாம் டெஸ்ட் கேஸ்தான். பப்ளிக் இன்ட்ரஸ்ட் கான்ஸ்டிட்யூஷனல் லா… கன்ஸ்யூமர் மேட்டர் இப்படித்தான் எடுப்பேன். மணிமோகன் மாதிரி ஆளுகளையெல்லாம் கேள்வி கேக்காம சுட்டுருவாங்க சைனாபோல நாட்ல.” மரக: ”அங்கேயும் கரப்ஷன் இருக்குன்னு கல்கண்டுல படிச்சேன்.” சுந்: ”கரப்ஷன் எல்லா இடத்துலயும்தான் இருக்கு. ஏன்… அமெரிக்காவுல இல்லையா? ஆனா, அதை எதிர்த்துப் போராடறவங்களும் எல்லா இடத்துலயும் என்னை மாதிரி நிறையப் பேர் இருப்பாங்க. இங்க நான் ஒருத்தன்தான்.” ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தன் டீனுடன் பேசிய பேச்சு… டீன்: ”என்ன ராம்… எப்படி இருக்கார். புரட்சி வக்கீலு?” ராம்குமார்: ”சுந்தரலிங்கம் ஸ்கல்ல அடிபட்டு கன்கஷன் உள்ளே கொஞ்சம் ரத்தம் கசிந்து, கட்டி தட்டிப் போயிருக்குது… ஸ்கேன்ல தெரியுது பாருங்க… காயங்கள்லாம் நல்லாவே ஆறிக்கிட்டு வருது… ஸுச்சர் போட்டது… நல்லவேளை டயாபட்டிக் இல்லை.” டீன்: ”தெரியுது. மூளைல கட்டி கரையறத்துக்கு மருந்து கொடுத்துருங்க. ரொம்ப பேஜார் கேஸுங்க… பத்திரிகைக்காரனுவ, போலீஸ்காரனுவ, ஜீ.டி.வி-லருந்து ஒரு பொம்பளை உயிரை எடுக்கறா… ‘பேட்டி கொடு, விவரம் எப்ப வரும்’னு.” ராம்: ”சுயநினைவு வந்து, யார் தாக்கினார்கள் என்கிற விவரம் வெளிப்பட ஒரு வாரமாவது ஆகும் சார்.” டீன்: ”பொழைச்சுருவார் இல்ல?” ராம்: ”பிழைச்சுருவார். ஆனா, ஒரு கண்ணு போயிருச்சு. க்ளாஸ் ஐதான் பொருத்தணும். முகத் துக்குக் குறுக்கே தழும்பு. ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். கத்திக்குத்து இதயத்தை அரை இன்ச்ல தவறவிட்டிருக்குது.” 22.1.96 பெசன்ட் அவென்யூ சுந்தரலிங்கத்தின் வீட்டில்… டிஸ்சார்ஜ் ஆகி காரில் இருந்து இறங்கியவரைக் கண்ணீருடன் வரவேற்றாள் மரகதம். ”உயிர் பிழைச்சு வந்தீங்களே… அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்துருவம்…” ”இல்லை, மரகதம் இப்ப டயர்டா இருக்குது… டி.ஐ.ஜி. வேற வரேன்னுசொல்லியிருக்காரு.” ”உங்க கண்ணு… உங்க கண்ணு..?” ”ஒரு கண்ணு போனது போனதுதான். எதையோ கோலிக்குண்டை வெச்சுப் பொருத்தியிருக்காங்க. ஊசிநூல் கோக்க சிரமமா இருக்கும்னாங்க. படிக்கறதுல அதிகம் ஸ்ட்ரெயின் வேண்டாம்னாங்க. அதும் இடது கண்ணு. அழுவாத கண்ணு. நீ சொன்னாப்பல உயிரோட திரும்பினதே பெரிசு. காயம் ஆறிடுச்சு. தழும்பு போயிடும்… இந்தத் தழும்பு! ஆனா, இன்னொரு தழும்பு போகாது.” ”ஐயோ! இந்த வக்கீல் வேலையே வேணாங்க. இருக்கறதை வெச்சுக்கிட்டு ஏதாவது கம்பெனியில லீகல் அட்வைஸர் வேலை பாத்துக்கங்க. பையனும் படிப்பை முடிச்சுருவான். ஊருக்காக பிராது கொடுத்து அலைஞ்சு உசிரைவிட்டது போதுங்க. என்னங்க… இத்தனை ஃபீல் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்… சிரிக்கிறீங்களே?” ”ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே. கடவுள் காப்பாத்துவார்.” ”உங்களைத் திருத்தவே முடியாதுங்க.” 23.1.96 பிற்பகல் – டி.ஐ.ஜி. வந்து நலம் விசாரித்தபோது… டி.ஐ.ஜி.: ”மிஸ்டர் சுந்தரலிங்கம்… சும்மா ஒரு கர்ட்டசி விசிட்தான். உங்க கேஸு ரொம்ப ஹாட் ஆயிருச்சு. நீங்க எப்ப ஐடென்டிபிகேஷனுக்கு வர முடியும்னு சொல்லுங்க. ஒரு மாதத்துக்கு செக்யூரிட்டி போட்டிருக்கோம். பார்த்திங்கல்ல…” சுந்தரலிங்கம்: ”கண்டுபிடிச்சுட்டீங்களா ஆளை?” டி.ஐ.ஜி.: ”நாலு பேரைப் புடிச்சுவெச்சிருக்கோம். இந்த மாதிரி காசு வாங்கிட்டுக் கொலை செய்யற நாலஞ்சு கும்பல் இருக்குதுங்க. எல்லாருக்கும் கான்டாக்ட் உண்டு. ஹிட்மென் போலீஸ்லயும் இவங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்க குத்துப்பட்டஉடனேயே அவங்கள்ல சேகர்னு ஒருத்தன் கன்னியாகுமரில தக்கலைன்னு ஒரு ஊர்க்காரன்… தலைமறைவாய்ட்டான். ஆறு இன்ச், எட்டு இன்ச் கத்திஎல்லாம் அவன்தான் பயன்படுத்திட்டு ஆட்டோ மாத்திப் போயிருவான். இப்பத்தான் ஒரு மாசம் விட்டு மெட்ராஸ் திரும்பியிருக்கான். அவனாத்தான் இருக்கும்னு தோணுது. உங்களைக் குத்தினவன், முகம் ஞாபகம் இருக்குமா உங்களுக்கு?” சுந்: ”கண்டிப்பா… அந்த முகத்தை மறக்கவே மாட்டேன்.” டி.ஐ.ஜி.: ”தட் மேக்ஸ் அவர் ஜாப் ஈஸி. மேலும், உங்க கேஸ் ரொம்ப பொலிட்டஸைஸ் ஆயிருச்சு. யாரையாவது கைது பண்ணியே ஆகணும்… பத்திரிகைக்காரங்க துளைக்கிறாங்க. அதும் தனியார் டி.வி-லருந்து மாயானு ஒரு பொண்ணு… என்னென்னவோ வரம்பில்லாமக் கேக்குது. என் மக வயசு தான் இருக்கும்.” சுந்: ”நீங்க சேகரோ எவனோ… அவனைப் பிடிச்சு என்னங்க பிரயோஜனம்? அவன் ஒரு அம்புங்க. எய்தவன் யாருனு.” டி.ஐ.ஜி.: ”முதல்ல அடையாளம்… அப்புறம் அவனைச் செலுத்தியது யாருனு கண்டுபிடிக்கறம்.” சுந்: ”அவனைச் செலுத்தியது மந்திரினு தெரிஞ்சா, மந்திரிய அரெஸ்ட் பண்ணுவீங்களா?” டி.ஐ.ஜி.: (சற்றுத் தயக்கத்துக்குப் பின்) ”நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியுது. ஆனா, மினிஸ்டர்ங்க எல்லாருமே தடயங்களை மறைச்சுருவாங்க. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்லயே திணர்றாங்களே. எதையும் கோர்ட்ல நிரூபிக்கறது கஷ்டம். என்னைக் கேட்டா, நீங்க இந்தக் கோணத்தை விட்டுர்றதுதான் நல்லது.” சுந்: ”மழுப்பறீங்க… நான் கேக்கறது, ‘ஒரு மந்திரிதான் குத்த வெச்சார்’னு அவன் சொன்னா, அந்த மந்திரியைக் கைது பண்ண மனோபலம் உங்களுக்கு இருக்கா? சந்திரலேகா கேஸ்ல என்ன ஆச்சு… ஏன் விட்டீங்க..?” டி.ஐ.ஜி.: ”நீங்களும் மாயா மாதிரியே கேள்வி கேக்கறீங்க. ஒருமுறை நான் அஃபீஷியலா இல்லாம தனியா வரேன். அப்ப பேசலாம்… அடுத்த சனிக்கிழமை வெச்சுக்கலாமா?” சுந்: ”என்ன?” டி.ஐ.ஜி.: ”அடையாள பரேடு. அஞ்சு பேர்ல யாருன்னு நீங்க அடையாளம் காட்டணும்.” சுந்: ”எய்தவன் இருக்க அம்பைக் கொண்டுவர்றீங்க.” டி.ஐ.ஜி.: ”அம்பையும் அடைக்கணும் இல்ல.” சுந்: ”ஒண்ணு பண்ணுங்க முதல்ல… அந்த சேகர்ங்கறவனை இங்க கூட்டிட்டு வாங்க.” டி.ஐ.ஜி.: (சற்று யோசித்து விட்டு) ”இல்லைங்க. அது முறைப்படி தவறுங்க. முதல்ல ஐ.டி. பரேடு ஆவட்டும். அப்புறம் அவன்தான்னு நிச்சயமா தெரிஞ்சா தனியா அழைச்சுட்டு வரேன். அவனை எல்லாம் அடிச்சுக் கிடிச்சு வழிக்குக் கொண்டுவர முடியாதுங்க. சரியான உதை தாங்கு வாங்க.” சுந்: ”அடிக்கிறதுக்கு இல்லைங்க…” எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அந்த பரேடு நடை பெற்றது. கொண்டுவந்த ஐந்து பேரில் சேகர் என்பவனைப் பார்த்த மாத்தி ரத்திலேயே கண்ணாடிக்குப் பின்னால் இருந்து ”இவன்தான்” என்றார். ”எப்படிச் சொல்றீங்க?” ”முகத்துல தழும்பை மறக்கவே மாட்டேன். அவ்வளவு கிட்டத்தில் பார்த்தேனே. கை வேத்திருக்கு பாருங்க. முகம்கூட… இவன்கூடக் கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்.” ”ஏற்பாடு பண்றேங்க. ப்ரஸ் கான்ஃபரன்ஸ் போட்டுச் சொல்லிரவா… நிஜ குற்றவாளியைக் கைது பண்ணிஆச்சுன்னு.” ”நான் பேசிடறேங்க முதல்ல…” என்றார் சுந்தரலிங்கம். கமிஷனர் அலுவலகத்தின் பின்பகுதி. கார் பார்க் அருகில் தனியான இருண்ட ஒற்றை பல்பு அறையில்… சேகர் என்பவன் அழைத்து வரப் பட்டான். வெளியே காவற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க, இருவருக்கும் நிகழ்ந்த, முழு உரை யாடலின் வடிவாக்கம் – சுந்தரலிங்கம்: ”உன் உண்மைப் பேரு என்ன?” சேகர்: ”என்னவா இருந்தா உனக்கென்ன… எனக்கு நிறையப் பேர் உண்டு.” சுந்: ”டிசம்பர் 5-ம் தேதி காலைல பெசன்ட் நகர்ல என் வீட்டுக்கு வந்து கத்தியால வயித்துல குத்திட்டு, மண்டை மேல கீறிட்டுப் போனியே… இதப் பாரு, என் கண்ணு போச்சு. (சட்டையைக் கழற்றி) தழும்பைப் பாரு. நான் சாவலைடா, என்னைச் சாவடிக்க முடியாது.” சே: ”இதெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்ற?” சுந்: ”எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருக்கே?” சே: ”எத்தனையாயிருந்தா உனக்குஎன்ன?” சுந்: ”நான் ஒரு வக்கீல். உன்னைப் பதினஞ்சு வருஷம் ஜெயிலுக்கு அனுப்ப முடியும். உன்னைப் பார்த்தது நான் ஒருத்தன்தான். நீதான்னு அடையாளம் காட்டிட்டா நீ காலி. உள்ள போனா வெளிய வரவே முடியாது. சொல்லு, உன்னை அனுப்பிச்சது மணிமோகன் ஆளுங்கதானே?” சே: ”எனக்கு எதும் தெரியாது. என்னை அடிச்சு உதைச்சாலும் எந்த வெவரமும் கெடைக்காது. நல்லா உதை தின்னுவேன்?” சுந்: ”என்ன செஞ்சா வெவரம் கெடைக்கும்?” சே: ”பாரு… எனக்கு மந்திரியும் தெரியாது, முந்திரியும் தெரியாது. காதர் பாச்சானு ஒரு பார்ட்டி வருவான். ‘இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்குது. இந்த விலாசத்தில் பார்ட்டி இருக்குது’னு காட்டி வுடுவான். ‘மூணு நா பார்த்து வெச்சுட்டுத் தீர்த்துரு’னு. கைல காசு மெய்ல குத்து. அவ்ளவ்தான். ஆளை வுடு.” சுந்: ”என்னைத் தீர்க்கச் சொன்னாங்களா, காயம்படுத்தச் சொன்னாங்களா?” சே: ”கட்சில உன்னைத் தீர்க்கத்தான் சொன்னாங்க. காயம்படுத்தணும்னா கதியே வேற. ரூட்டே வேற. பால் காட்டிக்கிட்டே நாலு தட்டு தட்டிரலாம். உன்னைய மார்லதான் வெச்சுக் குத்தினேன். கொஞ்சம் அதிகப்படியாவே சரக்கு ஏத்திருந்தனா… கை நடுங்கிருச்சு. தப்பிச்சுக்கிட்ட, சாவலை. மண்டைக்குத்தான் குறிவெச்சேன். நீதான் முட்டாத்தனமா திரும்பி கண்ல வாங்கிக்னே… அது உன் தப்பு. முதக்க சும்மா ஒரு கீறல் கீறிட்டுப் பயங்காட்டிட்டுத்தான் வரச் சொன்னாங்க. அன்னைக்குக் காலைலதான் சொன்னாங்க… ‘பார்ட்டி ரொம்ப பேஜார் பண்ணுது. தீர்த்துரு’னு.” சுந்: ”உனக்கு எத்தனை பணம் கொடுத்தாங்க?” சே: ”ஏளாயிரத்துச் சில்லறை. இன்னும் ஒரு ரெண்டு ரூபா வரணும்.” சுந்: ”இப்ப ‘மேன் ஸ்லாட்டர்’னு சட்டத்தில் உனக்குச் சிறை தண்டனை நிச்சயம் வாங்காம நான் உன்னை விடமாட்டேன்.” சே: ”எனக்கு வக்கீல் வெப்பாங்க. பெயில் அப்ளிகேஷன் போடுவாங்கனு காதர் பாய் சொன்னாரு. இதுக்கு மிந்தி செய்திருக்காங்க. பெங்களூர்ல ஒரு மார்வாடியைக் குத்தினப்ப.” சுந்: ”இப்ப மாட்டாங்க. கேஸ் சூடாயிருச்சு. யாரும் உனக்கு பெயில் அப்ளிகேஷன் கொடுக்க மாட்டாங்க. பாத்துக்கிட்டே இரு.” சே: ”அப்படிங்கறே நீ?” சுந்: ”பெயில் கேட்டாக்கூடக் கடுமையா அதை எதிர்ப்பேன். இந்த கேஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. நீதிபதிங்களே பயப்படுவாங்க. நீ தப்பிக்கிற துக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.” சே: ”என்ன வளி? மந்திரி யாருன்னே எனக்குத் தெரியாதுபா. சொல்றனில்லை. நான் ரொம்ப அடிமட்டத் தில் இருக்கற ‘பார்ட்டி’பா. பெரிய மனுசங்களுக்காகத் தொளில் செய்றம தவிர, பெரிய மனுசன் யாருன்னே தெரியாது. மிஞ்சிப் போனா, கட்சித் தொண்டனுங்க அல்லது அந்த அந்தப் பேட்டைக்குக் கட்சி ரவுடிங்க, கலெக்ஷன் மாஸ்டர்ங்க உண்டு. குடுமிங்களை வீட்டைக் காலி பண்ணவெக்க… கடையைக் கொளுத்தணும்… பொறம்போக்குல கடை போடறப்ப துணை வேணும்… கொருக்குப்பேட்டை, அபிராமபுரம்னெல்லாம் கூப்பிடுவாங்க… போவேன். எவனுக்குக் காரியம் செய்ய றோம்னுலாம் தெரியாது. ஏதோ வவுத்துப் பொயப்புக்கு அஞ்சு பத்துக்குப் பளுதில்லாம செய்யறன். அகஸ்தியர் கோயில்ல கலசம் திருடலாம், வரயான்னாங்க… போவலை. இந்த வருசம் மாலை போடலாம்னிருக்கேன்.” சுந்: ”பதினஞ்சு வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்காம விட மாட்டேன் உன்னை. கமிஷனரை வேணா கேட்டுப் பாரு. யோசிச்சுப் பாரு… இளமையா இருக்கே. உன் வாழ்க்கைல முக்கியமான பதினஞ்சு வருஷத்தை சிறைச்சாலையிலயே கழிக்கச் சம்மதமா?” சே: (கலவரத்துடன்) ”என்ன செய்யணுங்கறீங்க?” சுந்: ”சேகர், நீ செஞ்ச பாரு காரியம்? அரைகுறை. வெட்டுருத்தில இதைப் போல அமெச்சூர்த்தனமான முயற்சி இருக்க முடியாது. காலை வேளையில செய்திருக்கக் கூடாது. மேலும், மோடஸ் ஆப்பரண்டின்னு சொல்வாங்க. உன் முறை ஆறு இன்ச் கத்தியைப் பயன்படுத்தறது. ஆட்டோவுல ஓடிட்டு தெரு முனையில மற்றொரு ஆட்டோவுக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ மார்றது இதெல்லாத்தை யும் போலீஸ் கவனிக்கிறாங்க. சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.” சே: ”என்ன சொல்ற வாத்யாரே, புரியும்படி சொல்லு?” சுந்: ”ஒவ்வொரு தடவையும் முறைய மாத்தணும். அடுத்த கொலை செய்யறப்ப ராத்திரில போகணும். கத்தியால குத்தக் கூடாது… துப்பாக்கி பழகியிருக்கியா… ரைஃபிள் ஏகே-47?” சே: ”இல்ல, வாத்யாரே. நான் சில்ற ஆசாமி.. எனக்கென்னவோ நீ டமாஸு பண்றனு பச்சி சொல்லுது.” சுந்: ”தமாஷ் இல்லை சேகர்… நான் கத்துக்கொடுக்கறேன். போலீஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுக்கறப்ப உன்னைக் காட்டிக் கொடுக்கப்போறது இல்லை. ‘இவன்தானான்னு சந்தேகமா இருக்குது. ஐம் நாட் ஷ்யூர்’னு சொல்லி உன்னை விடுதலை செய்துடப்போறேன். ஒருத்தன் கெடுதல் செஞ்சாலும் அவன் வெக்கப்படும்படி நன்மை செய்து ரணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு… சேகர், நீ படிச்சிருக் கியா?” சே: ”ஆறு கிளாஸ், பாளையங்கோட்டைல இருக்கறப்ப… என்னைக் காப்பாத்தறியா? என்ன சொல்ற?” சுந்: ”ஆமாம், உன்னைக் காப்பாத்தறேன்.” சே: ”அதுக்கு நான் இன்னா செய்யணும்… திருந்திடணுமா… கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?” சுந்: ”அதெல்லாம் எதும் வேண்டாம். அடுத்தமுறை காரியத்தைச் சுத்தமா செய்யணும். யாரும் நீதான்னு கண்டுபிடிக்க முடியாதபடி. வேட்டைக்குப் போன தடயங்களை மறைக்கணும். நான்தான் உன்னை ஏவினேன்னு தெரியக் கூடாது. சரியான சந்தர்ப்பம் பார்த்து கிரீன்வேஸ் ரோட்டில அந்த வீட்டைக் கண்காணிக்கணும். எப்ப கோட்டைக்குப் போறான், எப்ப வாக் போறான், எப்ப சின்ன வீட்டுக்கு… எல்லாத்தையும் கவனிச்சு, ராத்திரியில ரைஃபிள் வெச்சுச் சுடணும். ஸ்தலத்தை விட்டு விசில் அடிச்சுட்டே நடந்து போகணும். எல்லாம் சொல்லித் தரேன்.” சே: ”யாரைச் சுடணும்!” சுந்: ”மணிமோகனை… அதுக்கு என்ன விலை தெரியுமா… உன் விடுதலை… பதினஞ்சு வருஷம் சுதந்திரம்.” சே: (யோசித்து!) ”சரிங்க…”   நன்றி – ஆனந்தவிகடன் ‘பொக்கிஷம்’

ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் ஆம் ஆத்மி., வி.ஐ.பி., ஆகிவிட்டனர்: அஜய் மக்கான்

aap-delhi-car-parkingபுதுதில்லி: ஆட்சிக்கு வந்து 50 நாட்களிலேயே ஏழைகளின் கட்சி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி, வி.ஐ.பி., கட்சியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறியுள்ளார். தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான புதிய உதவி எண்ணை அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தில்லி தல்கடோரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் துணை முதல்வருமான மனீஷ் சிஷோடியா உள்ளிட்ட தலைவர்கள், தங்களது கார்களை விஐபி., விவிஐபி பார்க்கிங்களில் நிறுத்தியிருந்தனர். இதற்கு, ஆம் ஆத்மியினரிடையே விஐபி கலாச்சாரம் உருவாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான உதவி எண் அறிவிக்கும் மாநாடு நடைபெறும் தல்கடோரா மைதானத்துக்கு வெளியே, விஐபி பார்க்கிங், விவிஐபி பார்க்கிங் பகுதிகள் என பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 நாட்களில் ஆம் ஆத்மி கட்சி விஐபி; விவிஐபி கட்சியாக மாறிவிட்டது எப்படி என்று கூறியுள்ளார். விஐபி கலாச்சாரத்தை இப்போது உருவாக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், முன்பு எங்களை இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதே கட்சிதான் விஐபி கலாச்சாரத்துக்கு நாங்கள் முற்றுப் புள்ளிவைப்போம் என்று கூறியது. தற்போது அவர்களே நுழைவுப் பகுதிகளில் விஐபிகள் செல்லும் இடம் என்று பலகைகள் வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் அஜய் மக்கான்.

மனிதாபிமானத்தை தேடி – ஹேமோ

எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது. நான் மட்டும் கொஞ்சம்…. இல்லை…. இல்லை… ரொம்ப சோம்பேறி….. காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்…. வெயில் தாங்காமல்… குளிர்சாதன வசதி இல்லாததால்…. மின்சாரம் சரியாக வரததால்… காற்றுக்காக ஏங்கி ஹாலில் தான் படுக்கை…. எப்பொழுதும் போல் ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கு அப்பா…. அம்மா….. இங்கே வாங்க…… என்று என் சின்ன சிங்கம் கர்ஜித்தது. பாருப்பா நம்ம ரூமுல பூனை குட்டி போட்டிருக்கு என்ற எனது மகனின் வியப்புக் குரலுடன் என் காலை பொழுது அன்று மட்டும் விடியல் காலையில் தொடங்கியது. இதை கேட்டதும் கிரிக்கெட் தவிர மற்றவற்றை பற்றி செவிசாய்க்காமல் என்னோடு தூங்கி கொண்டிருந்த என் முதல் மகனும் எழுந்தான். ஒன்றல்ல…. இரண்டல்ல….. அழகழகாக ஐந்து சின்னஞ்சிறு குட்டிகள்… அதன் அழகு எங்களை கவர்ந்தது உண்மை. ஆனாலும் நாங்கள் மனிதர்கள் அல்லவா. எண்ணங்கள் பறக்க தொடங்கியது. எங்களின் தூங்கும் அறை மிகப்பெரியதல்ல. அதில் எப்படி பூனைக்கும் இடம் அளிப்பது. பூனை வெளியே போனதும் குட்டிகளை வெளியேற்றலாம் என நான் முடிவு எடுத்ததை எனது இரண்டு மகன்களும் தடுத்தனர். நாட்டில் வேண்டுமானால் ஆட்சி மாறி மாறி வரும்…. வீட்டில் என்றும், எப்போதும் அம்மாவின் ஆட்சி என்பதால், அம்மாவிடம் முறையிட்டனர். அம்மா…. பாவம்மா குட்டி பூனைகளே…. நடக்க கூட முடியலே… வெளியே விட்டா அதை நாய் சாப்பிடும்…. இங்கேயே இருந்துட்டு போகட்டும்… கொஞ்சம் வளர்ந்ததும் வெளியே விடலாம்…. இதனை என் மனைவியும் ஆமோதித்து… மேலும் சொன்னால் இந்த கடுவன் பூனை வெளியே குட்டிகளை சாப்பிட காத்து கொண்டிருக்கு என்று கூறி, குட்டிகள் இன்னும் 10 நாளில் பெரிசாயிடும்… நாம எல்லாரும் அது வரை ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதும், மனைவியின் சொல்லே மந்திரம் என்று ஏற்று, சுற்று வட்டாரத்தின் அறிவுரைகளை மீறி எங்கள் வீட்டில் பூனைக்கு இடம் கொடுக்கப்பட்டது. எங்கள் அறையில் நன்று வளர்ந்து வந்த பூனைக்குட்டிகள் அறையில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் வரத் தொடங்கியது அறிவுரைகள். பூனை வீட்டில் இருந்தால் ஆகாது. அது வாழ்க்கையை அது பார்த்து கொள்ளட்டும்… மிருகத்தின் மேல உனக்கு என்ன திடீர் அக்கறை…. உனக்கு படுக்க இடம் இல்லை… பூனைக்கு இடம் தேவையா? உனக்கு ஏன்டா இந்த வம்பு… பேசாம வெளியே கொண்டு போய் விடு…. நல்ல விஷயங்கள் எதுவும் ஏறாத மரமண்டையில் இந்த அறிவுரைகள் நன்றாக ஏறியது… இருந்தாலும் குட்டிகளின் மேல் இருந்த என் மகன்களின் அன்பு என் மனைவியை யோசிக்க வைத்தது… மனைவிக்கோ என் இரண்டு மகன்களின் விருப்பத்தை மாற்றிட மனம் இல்லை. நன்கு வசம் கண்ட பூனை குட்டிகளின் அம்மாவோ எங்கள் வீட்டை விட்டு செல்ல மறுத்தது. என் மனைவியின் அறிவுரைப்படி குட்டிகளின் அம்மாவோட பூனை குட்டிகளை எங்கள் வீட்டின் மாடி படிக்கட்டின் கீழே குடித்தனம் வைத்தோம். நாய்களின் பசி வேட்டையிலிருந்து குட்டிகளை காப்பாற்ற இந்த இடம் தாய் பூனைக்கு உதவியது. எங்கள் வீட்டின் பாலை குடித்து நன்கு வளர்ந்தாலும் அதற்கு பூனைக்கு எலிகளையும், அணில்களையும் மிகவும் பிடித்திருந்தது. தாய் பூனை தினம் தினம் எலிகளையும், அணில்களையும் கொண்டுவர அதை பூனை குட்டிகள் சாப்பிட்டதை என் மனைவி, என் அம்மாவுடன் என்னையும் சேர்த்து என்னை சுற்றி இருந்த பலர் விரும்பவில்லை. எனது பிள்ளைகளுக்கு பூனை குட்டிகளின் மேல் இருந்த பாசம் எங்களை எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுத்தது. இப்படி 20 நாட்கள் ஓடியது. எல்லோரும் என்னை குடைய ஆரம்பித்தனர். இந்த பூனைகளின் தொல்லை தாங்க முடியவில்லை… அதை வெளியேற்று என்று தொந்தரவு செய்ய நானும் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பாக, எனது சுய அறிவை மறந்து இரண்டு குட்டிகளை பக்கத்தில் உள்ள பூங்காவில் விடவும் மற்ற இரண்டு குட்டிகளோடு தாய் பூனையை என் நா(வீ)ட்டை விட்டு கடத்தவும் முடிவு செய்தேன். எனது மனைவியும், மகன்களும் மனதில் குறையுடன் என்னுடன் உடன்பட்டனர். இருப்பினும் என் நா(வீ)ட்டை விட்டு வெளியேற மறுத்த தாய் பூனை வாசலிலேயே இருந்தது பிடிவாதம் பிடித்தது. விடப்பட்ட இரண்டு குட்டிகளில் ஒன்று என் வீடு திரும்பியது மற்றொன்றை பற்றிய விவரம் தெரியவில்லை. இது எங்களின் மனதை நெருடியது…..குட்டிகளின் ஆட்டம், ஓட்டம் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. அதனை கருத்தில் கொண்டு, வெளியே போரட்டம் நடத்திய பூனையின் போரட்டத்தை எங்கள் வீட்டின் அரசாங்கம் அதாவது என் மனைவி ஏற்றுக்கொண்டதால், பூனையின் பிடிவாதம் வெற்றி பெற்றது. மனைவி, மக்களின் அன்பு கட்டளையின் காரணமாக மீண்டும் எங்களது மாடிப்படிக்கட்டின் கீழேயே வெற்றிகரமாக பூனை தன் குட்டிகளுடன் குடியேறியது. குடும்பத்துடன் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பூனைகளை யாராவது வளர்க்க முன் வந்தால் தந்து விடலாம் எனவும், அதுவரை அவற்றை இங்கேயே வளர்ப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரிடமும் பூனைகுட்டி என் வீட்டில் இருப்பது சொல்லப்பட்டது. எங்களின் மகிழ்ச்சியை அன்று இரவு நடந்த சம்பவம் முடித்தது. நடக்க ஆரம்பித்த குட்டிகள் வெளியே செல்ல இரவு வேளையில் நாய் ஒரு குட்டியை கொன்று தனது நீண்ட நாள் தோல்வியை சரி செய்தது. இதை தொடர்ந்து மறுநாளே மற்றொரு குட்டியையும் தாய் பூனை நாயிடம் இழந்தது. ஒரு மாதம் வளர்த்த என் மனைவி, மக்களை இந்த தொடர் இழப்பு பாதித்தது. என் மகன்களின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்தது. வளர்ந்து மீதி இருந்த இரண்டு குட்டிகளோடு எங்களை பரிதாபமாக பார்த்து விட்டு இனியும் இங்கு பாதுகாப்பில்லை என்று தாய் பூனை குட்டியுடன் எங்களை விட்டு விலகி சென்றது. குற்ற உணர்ச்சியில் நான் தவித்த போது… எனக்கு பல அறிவுரைகள் கிடைத்தன… நாம என்ன பண்றது… அதுக்குத்தான் கடவுள் அதுக்கு பல குட்டிகளை தரான் என்றார் ஒருவர்… நம்மால ஆனத நாம செய்தாச்சு…. இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்றார் ஒருவர்… நாம என்ன கடவுளா? அது அது விதிப்படிதான் நடக்கும் என்றார் ஒருவர்… நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு…. இதுக்கு மேல எப்படி அதை காப்பாத்த முடியும் என்றார் ஒருவர்…. இந்த மனிதர்களின் வாதத்தில் தொலைந்து போன என் மனிதாபிமானத்தை தேடத்தொடங்கினேன் அமைதியாக…..

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் நடிகர் விஜய் மன்ற தலைவராகவும் உள்ளார். இன்று அதிகாலை பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் வீட்டின் முன்பு நின்ற பில்லா ஜெகன் மற்றும் அவரது வீட்டின் மாடியில் வசித்து வரும் அக்பர் ஷா என்பவரின் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் வீட்டின் முன்புறம் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதை அடுத்து பில்லா ஜெகனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. அருள்சக்தி குமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியை சேர்ந்த சிலருடன் பில்லா ஜெகனுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரம் பெட்ரோல் குண்டுவீச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பில்லா ஜெகன் மீது போலீஸ் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுகிறது!

moneyorderபுது தில்லி: பாரம்பரிய தந்தி சேவைக்கு மூடு விழா நடத்தப் பட்டது போல், 135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவைக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர் – பணவிடை அஞ்சல் அனுப்பும் முறை செல்வாக்கை இழந்து வருகிறது. கிராமங்களில் மட்டுமே இன்றும் ஓரளவு நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர்களின் இடத்தை வெறு சில நவீன தொழில்நுட்பங்கள் பிடித்து விட்டன. கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இன்றளவும் ஓரளவு பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும், மணி ஆர்டர் மூலம் அனுப்பப் படும் பணம் உரியவரைச் சென்று சேரும் கால அளவை விட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவில் பணத்தை சேர்த்து விட முடியும் என்பதால், அதன் செல்வாக்கு இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டரை முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்களில் மணி ஆர்டர்கள் மூலம் பண விநியோகம் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், தந்தி அனுப்பும் நடைமுறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கத்தில் இருந்து மறைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.”

“சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக உள்ளது நுனி.” (பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1234201_315112848661397_4724600860700186658_n பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில் கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த மகாபெரியவர்களிடம் “தாங்கள் அவசியம் வந்து பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்” என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில் ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே நுழைந்தார்கள். கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை நடந்து வந்தது. “இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது” என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு! ‘இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!’ என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார். “இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை அடிப்பாகமாகவும் மாற்றலாமா?”என்று கேட்டார்கள். ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும் இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித் தீர்மானம் செய்வாய்” என்று கேட்டார்கள் சுவாமிகள். ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார். “சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்”என்றார்கள். தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை. “மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும் சத்தத்தைக் கவனி” என்றார்கள். “கீழே சத்தம் ‘கணீர்’ என்று வருகிறது. மேலே செல்லச் செல்ல சத்தம் குறைகிறது” என்றார்,ஸ்தபதி. “மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள். அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப் பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி- மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும். அதிலிருந்து வெண்கலம் போல ‘கணீர்’ என்று சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். “சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய். உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்கள் பெரியவர்கள். ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தங்கள் அருளால்தான் எல்லாம் நன்றாக அமைய வேண்டும்” என்று பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள் பெரியவர்கள். எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில் சாமான்யமாக மதித்து,கடைசியில்,’இவர்களிடம் நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு’ என்ற முடிவுக்கு வருவார்கள். தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம்

11082919_885429011502671_483769145_n ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வீரம் வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தோல்வி நிலைக்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வெற்றி மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சக்தி குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் துன்பம் தொடராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் இன்பம் விலகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் சோகம் வாட்டாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் தேகம் வருந்தாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உடல் சோராது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உயிர் பிரியாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் உழைப்பு வீணாகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் பக்தி தோற்காது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் நம்பிக்கை மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் வாழ்க்கை வீழாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கல்வி போகாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் ஞானம் மாறாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் அன்பு குறையாது ராம மந்திரம் நாளும் சொன்னால் உன் கனவு தோற்காது ராம நாமம் அதன் மதுரம் தாரக மந்திரம் ராம நாமம் அதன் இனிமை வாழ்வினில் இன்பம் ராம நாமம் அதன் வலிமை தாரக மந்திரம் ராம நாமம் அதன் பெருமை பாரினில் இன்பம் ராமநாமம் நாளும் சொல்வோம் வாழ்வினில் வெல்வோம் ராம் ராம் ராம் சீதா ராம் ராம் ராம் ராம் தசரத ராம் ராம் ராம் ராம் கோசல ராம் ராம் ராம் ராம் ரகுகுல ராம் ராம் ராம் ராம் ஆனந்தராம் ராம் ராம் ராம் கோதண்ட ராம்

தில்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

புது தில்லி: தில்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 தாக்குதல் சம்பவங்கள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை நடத்திய தீவிர விசாரணையில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் இதேபோன்று தாக்குதல் நடத்த தில்லி நகரைக் குறி வைத்து சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தில்லி போலீசாருக்கு அறிவுரைக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தில்லியில் தாக்குதல் நடத்த திட்ட தீட்டி இருப்பதாக தெரியவந்து இருக்கிறது. அண்மையில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இது அமையக் கூடும். எனவே அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.