Home Blog Page 6136

நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் கிராம மக்கள் வழிபாடு

தேனி: நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆடிப்பாடி வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், அங்கே தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாததால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பணசாரிபட்டி ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைக்குச் சென்றனர். அங்கே மலையடிவாரத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் கோவிலில் 501 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்பு தேவராட்டம் ஆடி, பாடியபடியே வழிபட்டனர். ஊர்வலத்தில் வந்த பெண்கள் இங்கு நியூட்ரினோ ஆய்வு மையம் வரவே கூடாது. இங்கு ஆய்வுமையம் அமைத்திட நிரந்தரமாக தடை விதிப்பதுடன் மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுமையம் அமைந்தால் எதிர்கால சந்ததி பாதிக்கப்படும் என்று கூறினர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம்: ஆம் ஆத்மி போராட்டம்

ashok-khemkaகர்காவ்ன்: அரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹரியானா மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டதுடன், முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராவ் மஹாவீர் சிங் சௌக்கில் கூடிய ஆம் ஆத்மி தொண்டர்கள், அரசுக்கு எதிராகவும் கட்டாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். மேலும், கெம்காவின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சி கூறியபோது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இல்லாத போது, அப்போதைய காங்கிரஸ் அரசு அடிக்கடி கெம்காவை இடமாற்றம் செய்தபோது, விமர்சித்தது. இப்போது பாஜகவே அதைச் செய்கிறது என்று கூறினர். ஐ.ஐ.டி. காரக்புரில் பயின்ற அசோக் கெம்கா, அரியானாவின் நிகழ்ந்த சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் நிலபேர ஊழல் வழக்கை வெளிக் கொண்டு வந்தவர். இதனால் அவர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். 24 வருடங்களில் 46 இடமாற்றங்களைச் சந்தித்தவர் அசோக் கெம்கா. கடந்த நவம்பரில் கட்டார், பாஜக சார்பில் புதிய அரசு அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அரியானா மாநில போக்குவரத்துத் துறை ஆணையர், மற்றும் செயலராகப் பதவியில் அமர்த்தப் பட்டார். இந்நிலையில் 6 மாதங்களுக்குள் அவர் ஏப்.1ம் தேதி முக்கியத்துவம் அதிகம் இல்லாத தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகத் துறையின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஏமனில் இருந்து 670 இந்தியர்கள் நாடு திரும்பினர்; இதுவரை 2,300 பேர் மீட்பு

yeman-rescued-indiansபுது தில்லி: உள்நாட்டுப் போர் மூண்டுள்ள ஏமன் நாட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இன்று 670 பேர் நாடு திரும்பினர். இவர்களில் 488 பேர் சனாவில் இருந்து மூன்று ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதுவரை 2300 பேர் ஏமன் நாட்டில் இருந்து பத்திரமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். அவற்றில் இன்றைய தினம் மிக அதிக அளவிலான நபர்கள் அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நடவடிக்கைக்காக, ஏர் இந்தியாவுக்கு வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதற்கு ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த போது, 3 விமானங்களில் 488 பேர் சனாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இது ஒரே நாளில் நிகழ்ந்த மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை என்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் முலம் ஏழு நாடுகளில் இருந்து 182 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மதியத்தில் இந்தக் கப்பல் இந்திய எல்லையை அடையுமாம். முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய எம்.பி.யுமான வி.கே.சிங் ட்விட்டரில் தெரிவித்த தகவல்….  

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 8

“இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்த தினுஷு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்மா வெறும் நாள்லயே ஏறக்கொறைய தெவச மடி பாக்றவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்ரேளே, அந்த மாதிரி. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கிறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயசானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.” பிறிதொரு ஸமயம் சொன்னார் “ஆசார்யளோட பீடத்துல ஓக்காரனும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவு எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டேயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோஜிச்சுப் பாத்திருக்கிறேன். முடிவா, என்ன தோணித்துனா, வரப்போற அவைதிக ப்ரளய சமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யாப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஓக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டு தான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது. காந்தன் அத்யயனம் ஆரம்பித்துச் சிறிது காலத்திலேயே அவருடைய பிதா பித்ருலோகம் ஏகிவிட்டார். துர்பாக்வதியான லக்ஷ்மியம்மாள் – அதிதுர்பாக்யவதியும் ஆகப்போகிறோம் என்று அப்போது அறியாதவள் – ஏக புத்திரனுக்குக் காப்பு அன்றய காமகோடி பீடாதிபர்களே என்ற நல்லறிவுடன் அக் காலங்களில் ஸ்ரீ மடத்தின் ராஜதானியாயிருந்த கும்பகோணத்துக்கு அவனை அனுப்பிவிட்டார். ஆசார்ய ஸ்வாமிகள் – கலவை பெரிய பெரியவர் என்றோமே, அவர் – பாலனிடம் பேரன்பும் பெருங் கருணையும் பூண்டார். அக் காலத்தில் வெகு சிறப்பாக வேத அப்யாஸம் அளித்து வந்த சிதம்பரம் பாடசாலையில் பாலன் அத்யயனம் தொடர ஏற்பாடு செய்து அங்கு அனுப்பி வைத்தார். காந்தனின் சிதம்பர வாஸ காலத்தின் ஒரு கட்டத்தில் ஸ்ரீ சரணாளின் தந்தையும் சிதம்பரத்தில் உத்தியோகம் பார்த்ததுண்டு. அப்போது காந்தன் அங்கு அடிக்கடி வருவான். சரியாச் சொல்லவேண்டுமாயின் அதுவே இந்த இருபதாம் நூற்றாண்டின் வெளி வாயிலான 1900. காந்தனுக்கு நேராக உடன் பிறந்தோர் யாருமில்லாததால் சித்தியின் மக்களையோ அப்படி நேசித்தான். ஆயினும் அந்தப் பாசத்தையும் ஒரு கௌரவமான சாந்தம் மூடியிருக்கும். “நான் எத்தனை வளவளாவோ, அத்தனை ‘கொயட்’ அண்ணா” என்றார் ஸ்ரீ சரணர். இவர்களுக்கும் அவனிடம் தனியானதொரு ப்ரியம். தந்தையில்லாக் குழந்தை என்று சித்தி மஹாலக்ஷ்மி – நமது மஹானை ஈந்த மாதரசி – காந்தன் மீது தனியான வாஞ்சை காட்டுவாள். எல்லோருக்கும் நல்லவராக இருந்த பெரியவாளின் தந்தை சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளும் அப்படியே! பாலன் காந்தன் பல தினங்கள் இவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொண்டு, பாடசாலை சென்று வந்திருக்கிறான். சில ஆண்டுகளுக்குப் பின்னரும் – விழுப்புரம், திண்டிவனம் முதலிய இடங்களுக்கு ஸ்ரீ சரணரின் பூர்வாச்ரமத் தந்தை மாற்றல் பெற்று, அக்குடும்பம் இடம் பெயர்ந்த பின்னரும் – காந்தன் அங்கெல்லாம் சென்று தங்கியிருக்கின்றான். “எங்கள்-ள ஒத்தராவேதான் அண்ணா இருந்தார். நான் ஆத்துக்கே செல்லம்னு பேரு, அதை விட்டா அண்ணாவுக்குத்தான் ஜாஸ்தி அட்டென்ஷன்” என்றார் ஸ்ரீ சரணர். இவ்வாறு வேத வேத்யனான நடராஜனின் திருத்தலமான சிதம்பரத்தில் இருந்த நாள்களில், காந்தன் வேதஸூக்தங்கள் சொல்வான். சில, மனப்பாடம் ஆவதற்காக உருப்போடுவான், மனப்பாடம் ஆன சிலவும் பாராயணமாகச் சொல்வான். அந்தப் பத்து வயசு சுத்த பிரஹ்மசாரி இவ்விதம் வேதம் ஓத, ஆறு வயஸூ கிணி அமரிக்கையாக உடன் உட்கார்ந்து ஆசையாகக் கேட்ட நாட்கள் உண்டு. அந்தக் ‘கிணி’ யாரென்று புரிந்திருக்கும். ஆம், உத்தர ஆச்ரமத்தில் நமது ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதிகளான ஸ்வாமிநாதன்தான். கிணி அவனது செல்லப்பெயர். ‘கிணி’ என்பது கிளி என்பதற்கு கன்னட வார்த்தை. அதிலிருந்து அவன் எத்தனை செல்லமென்று ஊஹிக்கலாம். துருதுருபையனான கிணிக்கு வேத சப்தத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு லயம் இருந்துதான் அப்படி அமரிக்கையாய் அமர்ந்து அத்யயனம் கேட்டிருக்க வேண்டும். வேதத்துக்குப் புது வாழ்வு தரவே பிறந்த அவதாரனுக்குள்ளே அந்தப் பொறி அன்றே சற்றுக் கனன்றிருக்கிறது! கேட்டதை அப்படியே பிடித்து ஜ்வலிக்கச் செய்யும் கற்பூர மூளையானதால், புரியாத அந்த வேதபாஷையின் வேத மந்திரம் சிலவும் கிணிக்கு மனப்பாடமாகிவிட்டது! -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்: மத்திய சுற்றுலா அமைச்சர்

புது தில்லி; பயங்கரவாதத்தை சுற்றுலா மூலம் எதிர்கொள்வோம் என்று (டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்) என்று கூறினார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா என்பது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா ஒரு வரப் பிரசாதம், அதன் பலமும் அதுதான். இதையே பிரதமர் நரேந்திர மோடியும் நம்புகிறார் என்றார் மகேஷ் சர்மா.

குழந்தை ஸிவாவை கட்டிச் சுமந்து விமான நிலையம் வந்த தோனி

dhoni-child இந்திய கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகள் ஸிவாவை வயிற்றுப் பகுதியில் கட்டிச் சுமந்து பொறுப்பான அப்பாவாக தன் சொந்த ஊர் ராஞ்சிக்கு வந்தார். விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். எம்.எஸ். தோனி 2010 ஜூலை 4ஆம் தேதி தனது தோழி சாக்‌ஷியை மணந்தார். இந்தத் தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸிவா என்று பெயர் வைத்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுற்றுப் பயணத்தில் இருந்த தோனி தனது மகளைப் பார்க்க இயலாத சூழல் இருந்தது. இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார் தோனி. அவர் இன்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்தார். தனது குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றதை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிப்.6ம் தேதி ஸிவா பிறந்தபோது, தோனி ஆஸ்திரேலியாவில் இருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை, வெளிப்படையாக எல்லோர் முன்பும் முதல் முறையாக தன் குழந்தை ஸிவாவை காட்டியுள்ளார் தோனி. முன்னர், ஸிவா பிறந்த சில நாட்களில் தோனி ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு விடியோ இணையதளங்களில் உலவியது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார் தோனியின் மனைவி சாக்‌ஷி.

‘புனித வெள்ளியில் கூட்டம்’ சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து

H.L.Dattuபுதுதில்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது, அது  தங்களின் குடும்ப விவகாரம் என்றும், அதனை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கு பெறும் மாநாடு, புனித வெள்ளியான ஏப். 3-ஆம் தேதி அன்று தில்லியில் தொடங்கி நடந்தது. அப்போது, நீதிபதிகளுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் புனித வெள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாது என கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்தார். குரியனின் இந்தக் கடிதமும் அவர் காரணமும் பலத்த சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த போது, ‘ ஜோசப் குரியன் பிரச்னை எதிர்பார்க்காதது, துரதிர்ஷ்டவசமானது. நான்தான் குடும்பத்தின் தலைவர். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றினால், அதை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடந்தது, ஒரு கருத்தரங்கு அல்ல, மாறாக நீதிபதிகளுக்குள்ளே நடக்கும் முக்கியமான கூட்டம். நீதித்துறைக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன்வைத்து நடத்தும் கூட்டம்…  என்று கூறினார்.

புனித வெள்ளியில் கூட்டம்: பிரதமரின் விருந்தைப் புறக்கணித்த உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன்

புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள் புனித நாட்களாகக் கருதும், புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரை இந்த நீதிபதிகள் மாநாடு நடத்தப் பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே நீதிபதி குரியன் விருந்தில் பங்கேற்க மறுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குரியன் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தான் விருந்தில் பங்கேற்க இயலாமல் போவதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். அதே போல், தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அந்த விருந்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில், கிறிஸ்துவ மக்களின் விரத நாட்களான புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரையில் மாநாடு நடத்துவது வேதனை அளிக்கிறது. மற்ற மதத்தினரின் தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான் ஆகிய புனித நாட்களில் மாநாடு ஏதும் நடப்பதில்லை. இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்று கடிதத்தில், விருந்தில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு எச்.எல்.தத்து எழுதிய பதில் கடிதத்தில், “நீதிமன்றத்தின் நலன் முக்கியமா, தனிநபர் நலன் முக்கியமா” என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் 2007, 2009-ஆம் ஆண்டுகளிலும் பொது விடுமுறை தினங்களிலும், புனித வெள்ளியிலும் மாநாடுகள் நடந்துள்ளன என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் ஒரு விவாதப் பொருள் ஆகியிருந்தது.

ஸ்ரீயோக ந்ருஸிம்ஹர் ஸ்லோகம்

yoganarasimhar ஸ்ரீ யோக நரசிம்ஹர் ஸ்லோகம்.. எல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜபிக்கவும்..

ஸிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித கருணா மூர்த்தே ஸர்வ வ்யாபிதம் லோக ரக்ஷகாம் பாப விமோசன துரித நிவாரணம் லட்சுமி கடாட்ச சர்வா பீஷ்டம் அநேகம் தேஹி லட்சுமி ந்ருஸிம்ஹா ஐயனே! லட்சுமி நரசிம்ம பிரபோ! மிக பயங்கரமான உருவமும் சிங்க முகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடியாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.

3 நாள் அறையில் அடைத்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்: கடன் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, பட்டினி போட்டுள்ளது. அந்த 5 பேர் கும்பலின் முக்கிய நபர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. போலீஸார் 5 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது. குர்காவ்னில் உள்ள டிஎல்எப் 5வது ஃபேஸில் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார் ஒரு பெண். அவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு கும்பல் ஆட்டோ ரிக்சாவில் தூக்கிச் சென்று, வஸிராபாத் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தது. தலிப் என்ற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணை 5 பேரும் 3 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடைத்து வைத்திருந்த அந்த 3 நாட்களும் அந்தப் பெண்ணுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கண்டபடி தாக்கியுள்ளனர். இதில், அந்தப் பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுதும் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் வஸீராபாத் பகுதியில் செக்டார் 57ஐ ஒட்டிய பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கே சென்று அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, பெண் ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்தப் பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் கைது செய்தனர். கர்காவ்ன் ஏசிபி ராஜேஷ் குமார் இது குறித்துக் கூறியபோது, அந்தப் பெண்ணை அறையில் வைத்து, அறையை வெளியில் பூட்டியுள்ளனர். 24 மணி நேரமும் காவலுக்கு ஒருவர் இருந்து, அறையில் இருந்து அந்தப் பெண் வெளியேறிவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். தலிப் அந்தப் பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து அவரைத் தன்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்குமாறு கேட்டுள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தில் சிலர் கூறியபோது, அந்தப் பெண் அல்டாஃப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்டாஃப் பணத்தை தர மறுத்துள்ளார். பின்னர் அல்டாஃப் அந்தப் பெண்ணை முறைகேடாக நடத்தி அவரை மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பகுதியில் தாதா போன்று வலம் வந்த தலிப்பிடம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாடம் கற்பிக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகே, தலிப் அந்தப் பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார்… என்று கூறியுள்ளார் ஏசிபி குமார். இந்நிலையில் தலிப் உள்ளிட்ட 5 பேர் மீதும் சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.