ராமானுஜரைப் பற்றி எழுதுவதால், அவரது ஆன்மிகக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டதாகப் பொருள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளர். இன்று வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான பேட்டியாக அவரது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி… கேள்வி :- இராமானுஜரைப் பற்றி இளம் வந்திலேயே தெரிந்து கொண்டீர்கள் என்றும், அவரது சீர்திருத்தச் சிந்தனையினால் கவரப்பட்டீர்கள் என்றும், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஆனாலும் இதுவரை இராமானுஜரைப் பற்றி எழுதாதற்குக் காரணம் உண்டா? பதில் :- குறிப்பிட்டு எந்தக் காரணமும் இல்லை. இராமானுஜரைப் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு அப்போது ஏற்படவில்லை. மதத்திலே புரட்சி செய்த மகான்களில் இராமானுஜரும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மாற்றத்திற்கு வித்திட்ட அப்படிப்பட்ட சம்பவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சிந்தனைக்கு விருந்தாக்கிட வேண்டுமென்ற கோரிக்கை வந்த போது, அதை ஏற்க முன் வந்தேனே தவிர, இராமானுஜரின் வரலாற்றில் ஒரு பகுதியை நான் எழுதுகிறேன் என்பதால், அவருடைய ஆத்திகக் கொள்கைகளில் நான் மூழ்கி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றோ, நான் நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் சுயமரியாதை – நாத்திகக் கொள்கைகளை விட்டு விட்டேன் என்றோ பொருள் அல்ல. கேள்வி :- திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர் என்ற வகையில் இந்த இயக்கம் எவ்வாறு இராமானுஜரைப் பார்க்கிறது என்று கூற முடியுமா? ஆன்மீக மற்றும் பிராமணீய சம்பிரதாயத்தில் வந்தவர் அவர். அப்படி இருந்தும் அவரைப் பற்றி ஏன் பெரியார் கூட உயர்வான எண்ணங்கள் கொண்டிருந்தார்? பதில் :- இராமானுஜர் அனுதினமும் ஆன்மீகம் போற்றியவர் – அதே நேரத்தில் மதங்களுக்கு அப்பாற்பட்டு எம்மதமும் சமம் என்ற உயரிய நெறியில் வாழ்க்கையை நடத்தியவர். அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறுத்து ஒதுக்கத் தக்கவர்கள் அல்லர் என்ற சீரிய எண்ணத்தோடு வாழ்ந்து காட்டியவர். திராவிட இயக்கத்தைச் சார்ந்து வளர்ந்தவன் என்ற வகையில் இராமானுஜரின் ஆன்மீகக் கொள்கைகளுடன் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் சமரசமும் இல்லை என்ற போதிலும், அவரது மதச் சார்பற்ற அணுகுமுறையைப் பாராட்டுகின்ற பண்பினைக் கொண்டுள்ளோம். அதனால் தான் அவர் ஆன்மீக, பிராமணீய சம்பிரதாயத்தில் வந்த போதிலும், அதையே முதன்மையாகக் கருதி நாங்கள் கவலை கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் மூதறிஞர் ராஜாஜி, அக்ரஹாரத்தில் தோன்றிய அதிசய மனிதர் வ.ரா., மூத்த வழக்கறிஞர் வி.பி. ராமன், பிரபல நரம்பியல் மருத்துவர் பி. ராமமூர்த்தி, திரைப்பட இயக்குனர் பஞ்சு (கிருஷ்ணன்-பஞ்சு), பத்திரிகையாளர் சாவி, சின்னக்குத்தூசி, காவியக்கவிஞர் வாலி என்று சொல்லிக் கொண்டே போகலாம்; அவர்கள் எல்லாம் பிராமணர்கள் எனினும், எங்கள் உணர்வுகளோடு ஒன்றி விட்டவர்கள்தான்!
கேள்வி :- இராமானுஜர் செய்த சமூக சீர்திருத்தங்களில் எதனை மிக முக்கியமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? பதில் :- மற்றெல்லோரையும் போலவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் பாகுபாடு காட்டாமல் சமமாக மதிக்க வேண்டும்; அவர்களைக் கை தூக்கி உயர்த்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதை அவர் செய்த சமூக சீர்திருத்தங்களிலேயே தலையாயது என்று நான் கருதுகிறேன். கேள்வி :- அவர் செய்த சீர்திருத்தங்கள், அவர் விரும்பிய விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி உள்ளனவா? அவர் தத்துவங்களைப் பின்பற்றுவோர்கள் அவரது சிந்தனைகளைச் செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல முடியுமா? பதில் :- இராமானுஜரும், திராவிட இயக்கமும் மிகவும் விரும்பிய அளவுக்கு, அவர் செய்த சீர்திருத்தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சமுதாயத்தில் அவர் வாழ்ந்த அந்தக் காலக் கட்டத்தில் ஓரளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. இராமானுஜருடைய தத்துவங்களைப் பின்பற்றுவோரில் பெரும்பாலோர் அவருடைய சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார்களா என்பதைக் காலம் தான் கணிக்க வேண்டும். கேள்வி :- ஆன்மீகக் குருக்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பவர்கள், அதனை மிகைப்படுத்தி சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. இராமானுஜரைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட படைப்புகளில் உண்மை நிகழ்வுகள் எவை? புனைந்து கூறப்பட்ட விவரங்கள் எவை? என்று ஒரு கதாசிரியர் என்ற வகையில் எப்படிப் பிரித்துப் பார்ப்பீர்கள்? பதில் :- “மதங்களில் புரட்சி செய்த மகான், இராமானுஜர்” என்ற தொடர் “கலைஞர் தொலைக்காட்சி”யில் ஒளி பரப்பப்படும்போது, உங்களுடைய இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். கேள்வி :- தி.மு.க. பிற மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தைப் பற்றி அதிகமான விமர்சனங்கள் வைக்கும் கட்சி என்ற ஒரு பரவலான கருத்து உண்டு. இந்தக் கருத்தை நீங்கள் எழுதும் இந்தத் தொலைக்காட்சி தொடர் தகர்க்குமா? பதில் :- தி.மு.க. வைப் பற்றி நீங்கள் கூறும் பரவலான கருத்து உண்மையானதல்ல; எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து. இன்னும் சொல்லப் போனால், தி.மு. கழகத்திலே உள்ள 90 சதவிகிதம் பேர் நீங்கள் கூறுகின்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் இந்து மதத்திற்கே தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரின் தீவிரவாதச் செயல்பாடுகளைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கேள்வி :- நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதனால், உங்கள் படைப்பு இராமானுஜர் வாழ்க்கை நிகழ்வுகளை திரித்துக் காட்டிவிடுமோ என்ற ஐயங்கள் எழுப்புவர்களுக்கு உங்கள் பதில் என்ன? பதில் :- என்னைப் போன்றோர் இறை மறுப்பாளர்களாக இருந்தாலும், என்னைச் சுற்றியிருப்போரில் சிலரும், எங்கள் இயக்கத்திலே உள்ளவர்களில் சிலரும் அதிலே முழு ஈடுபாட்டோடு இல்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய இந்தத் தொடர் வெளி வந்த பிறகு, இராமானுஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை நான் திரித்துக் காட்டியிருக்கிறேனா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எங்கள் இயக்கக் கருத்துகளை, குறிப்பாக இறை பற்றிய எண்ணங்களை நாங்கள் யார் மீதும், ஏன் எங்கள் குடும்பத்தினர் மீதும்கூடத் திணித்துப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. எனவே என்னைப் பொறுத்தவரையில், நான் இறை மறுப்பாளனாக இருப்பதால், இராமானுஜருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒருசில சம்பவங்களைத் தொடாமல் விட்டாலும் விடுவேனே தவிர, எதையும் திரித்தோ, இட்டுக்கட்டியோ எழுத மாட்டேன் என்பது மட்டும் உறுதி; திருத்தம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இதைத் தான் தங்களுடைய சந்தேகத்திற்கு விடையாக அளிக்க விரும்புகிறேன். கேள்வி :- தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, இராமானுஜரையும், அவரது சமூகச் சீர்திருத்தங்களையும் அரசாங்கம் பெரிதாக அங்கீகரித்ததாகத் தெரியவில்லையே; எடுத்துக்காட்டாக அவர் கோயில் வழிபாட்டில் தமிழை அறிமுகம் செய்தது. பதில் :- தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, இராமானுஜரைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக அங்கீகரிக்காவிட்டாலும், அவருடைய சமூகச் சீர்திருத்தங்களையெல்லாம் அங்கீகரிக்கும் வகையில் செயல்பட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமேயானால், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆணை” – “தமிழில் ஆகம நுhல்கள்” – “தமிழில் வழிபாடு” – “தமிழில் வேள்வி” – “தமிழ் போற்றி” புத்தகங்கள் வெளியீடு” – ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதியில் உள்ள திருக்கோவில் திருப்பணி – சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்வியப் பிரபந்த பயிற்சி மையங்கள் என்று கழக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றிய நீண்ட பட்டியலே உண்டு.
ராமானுஜரை எழுதுவதால், அவரது கொள்கையை ஏற்றதாகப் பொருள் இல்லை: கருணாநிதி
உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கோயில் குளத்தில் தெரிந்த பாதத் தடம்: அதிசயித்த பக்தர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அழியாத பாத தடங்கள் இரண்டு தெரிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து அதிசயித்தனர். புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். இந்தக் கோயில் அருகே சுப்பிரமணியர் தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம் உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு குளம் தூர் வாரப்பட்டது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் வற்றவேயில்லை. இக்குளத்திலிருந்து எடுத்து வரப்படும் நீரால்தான் பிடாரி அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இக்குளத்தில் இன்று வரை பெண்கள் யாரும் நீராடுவதில்லை. மேலும் அம்மன் நடமாட்டம் உள்ளது என்ற நம்பிக்கையால் குளக்கரைப் பகுதியில் யாரும் தனிமையிலும் செல்வதில்லை. இந்நிலையில் இந்தக் குளத்தில் தண்ணீருக்குள் இருக்கும் படிக்கட்டில் வெண்மை நிறத்திலான ஒரு ஜோடி பாதத்தின் தடப் பதிவை அவ்வழியாகச் சென்ற சிலர் பார்த்துள்ளனர். அதை அழிக்க சோப்பு முதலானவை கொண்டு முயன்றும் அந்தத் தடம் அழியவில்லையாம். இந்தச் செய்தி அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குளத்தின் படித்துறையில் பதிவான பாதத் தடத்தை அதிசயித்தபடி பார்த்துச் செல்கின்றனர். பொ.ஜெயச்சந்திரன்
அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தில்லியை மாற்ற திட்டம்
புது தில்லி: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தலைநகர் தில்லியை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொலைதூர ஏவுகணையைக் கண்டறியும் ரேடார் நிறுவப்பட்டு, அணுஆயுத ஏவுகணை வானில் வந்தால், 800 கி.மீ தொலைவுக்கு முன்பே அதைக் கண்டறிந்து செயல் இழக்கச் செய்யும். இவ்வாறு ஏவுகணை செயலிழப்பு தடுப்பு அமைப்பை அமைக்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தை மேம்படுத்தி, ஏவுகணையை 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு முன்பேயே கண்காணித்து செயலிழக்கச் செய்ய முடியும். தில்லியில் இதற்கான பணி வரும் 2016ம் ஆண்டுக்குள் முடிக்கப் பட்டுவிடும் என்றும், தில்லியைத் தொடர்ந்து மும்பை நகரிலும் இந்த அமைப்பை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் 14 வயதுடைய 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செரப்பணஞ்சேரியைச் சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அந்தப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் லோகநாதன்(45) பள்ளியின் கணினி அறையில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்றுள்ளார். இது குறித்து அந்த மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்ததில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் லோகநாதனைக் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கைதான ஆசிரியர் லோகநாதனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வித் துறையும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
எஞ்சின் கோளாறால் ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவில் அவசரத் தரையிறக்கம்
நியூஜெர்சி : எஞ்சின் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து 250 பயணிகளுடன் தில்லி நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 மணி நேரத்தில் நிவார்க் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமான எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், விமானி உடனே விமானத்தைத் தரையிறக்கியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் பத்திரமாக உள்ளனர்.
புகையிலைப் பொருட்களை ஆதரித்துப் பேசிய பாஜக., எம்.பி.க்கள் நீக்கப்படலாம்!
பெங்களூரு: புகையிலைப் பொருட்கள் மற்றும் புகை பிடிப்பதை ஆதரித்துப் பேசிய பாஜக எம்.பி.கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, வானொலி உரையிலும், வெளியிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்துவரும் நிலையில், பாஜக எம்.பி.க்கள் சிலர் புகை பிடித்தலால் புற்று நோய் வராது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புகை பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்டுகளின் மீது தற்போது சிறிய அளவில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த எச்சரிக்கைப் படங்கள், சிகரெட் அட்டைகளில் 85 சதவீத அளவுக்கு பெரிதுபடுத்தப்பட்டு படங்கள் அச்சிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதனிடையே சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டம் 2003 பற்றி மறு ஆய்வு செய்ய பாஜக எம்.பி. திலிப்காந்தி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் ‘‘புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை. வெளிநாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்துவிடக் கூடாது. எனவே இவ்வாறு 85% படத்தை பெரிதாக்கும் முடிவை ஒத்தி வைக்கலாம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஏப். 1 ஆம் தேதி அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகையிலைப் பொருட்கள் தயாரிப்பாளர்களின் நிர்பந்தம் காரணமாகவே இந்தக் குழு இவ்வாறு அறிக்கை அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது உடல்நலக்கேடு தொடர்பான எச்சரிக்கையை வெளிப்படுத்தும் படத்தை பெரிய அளவில் வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். மேலும் மக்கள் நலனுக்கு முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் எம்.பி.க்களை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்கவும் மோடி உத்தரவிட்டுள்ளாராம்.
கலக்குது தெற்கு ரெயில்வே – மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., ரெயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவசான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரெயில்வே கோட்
ட மேலாளர் அலுவலக வணிக பிரிவை அணுகலாம். இல்லையெனில், அந்தந்த ரெயில்வே கோட்ட மேலாளர் வணிக பிரிவின் அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களினை தபால் அனுப்பலாம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் அடையாள அட்டை வழங்கும் தேதி அறிவிக்கப்படும். இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காக பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரெயில் பயணத்தின் போதும் “ஒரிஜினல்” அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை பாஜக அலுவலக தாக்குதல்: காங்கிரஸார் வீடுகளில் நள்ளிரவுச் சோதனை
புதுச்சேரி: நள்ளிரவில் காங்கிரஸாரின் வீடுகளில் புகுந்து புதுச்சேரி போலீஸார் சோதனை செய்து வழக்கு போடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேடியது, காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் விமர்சித்ததைக் கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு அழுகிய முட்டை, தக்காளி வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப் படுத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் 8 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 50 காங்கிரசார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், புதுச்சேரியில், காங்கிரஸாரும் , பாஜகவினரும் போட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாஜக., அலுவலகத்தை சூறையாடிய காங்கிரசாரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட காங்கிரசார் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளுக்குள் போலீசார் புகுந்து ஒவ்வொரு அறையாகத் தேடினர். தலைமறைவாக உள்ள காங்கிரசாரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் காங்கிரசாரை கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிபிசிஐடி நடவடிக்கை- அதிகாரிகள் தற்கொலை தொடரவே வழி செய்யும்: டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை : நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிசிஐடி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் இதுபோன்று அதிகாரிகள் தற்கொலை தொடரத்தான் செய்யும். அவர்களும் இது போன்று இன்னும் நிறைய வழக்குகளை விசாரிக்க வேண்டி இருக்கும். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேண்டுமானால் சிபிசிஐடி கைது செய்திருக்கலாம். ஆனால் இவ்வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார்.

