Home Blog Page 6133

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் போலீஸார் 3 பேர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் போலீஸார் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அம்ஷிபுரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் படைப் பிரிவு வீரர்கள் மீது அவ்வழியாகச் சென்ற பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் திடீரென சுட்டனர். இந்தத் தாக்குதலில் போலீஸார் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் போலீஸார் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க மறுப்பு

பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. டி.கே.ரவியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தின. முதலில் மாநில காவல் புலனாய்வு அமைப்பே இதனை நடத்தும் என்று மாநில அரசு அறிவித்தது. ஆனால் அரசியல் நெருக்கடிகள் இருந்ததால், மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. இதை அடுத்து, இந்த வழக்கினை விசாரிக்க எடுத்துக் கொள்வதாக சிபிஐ அறிவித்தது. ஆனால்,சிபிஐக்கு இந்த வழக்கை அனுப்பும் போதே, இன்னும் 3 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று மாநில அரசு சில நிபந்தனைகளை விதித்தது. ஆனால், இது போன்ற நிபந்தனைகளை எங்களுக்கு விதிக்க வேண்டாம், எனில் இந்த வழக்கை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று சிபிஐ இன்று அறிவித்தது. இருப்பினும் முதல்வர் சித்தராமையா, இதனை மீண்டும் சிபிஐக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளார்.

கரூர் பரணி பார்க் பள்ளியில் பட்டம் பெற்ற மழலைகள்

bharani photo கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் திருமதி பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் கே.சேகர் வரவேற்புரையாற்றினார். பரணி கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் விழா குறித்து சிறப்புரையாற்றுகையில், அறிவியல் கண்காட்சி மற்றும் மழலையர் திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பாராட்டி பேசினார். இவ்விழாவில் 180 மாணவர்களுக்கு பட்டமளிப்பும் 648 மாணவர்களுக்கு பரிசளிப்பும் பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் அவர்களால் வழங்கப்பட்டது. விழா முடிவில் துணை முதல்வர் கே.மகாலட்சுமி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், துணை முதல்வர்கள் கே.கௌசல்யா, பி.ரேணுகா தேவி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

பாஜக நிறுவன நாள்: அத்வானிக்கு அழைப்பில்லையாம்!

புதுதில்லி: பாஜகவின் தலைமை அலுவலகத்தில், பாஜக நிறுவன நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நேரத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைபினை பாஜக அனுப்பவில்லையாம். இதனை அத்வானியின் நெருங்கிய நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்

சென்னை: வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்துப் போடியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை, அம்பத்தூரில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் கலந்து கொண்டு பேசியபோது, 50 ஆண்டு கால திமுக., ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது? திமுக,, அதிமுக., இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை தான் ஏற்பட்டுள்ளது. அதிமுக., திமுக., காங்கிரஸ், பாஜக.வுக்கு நாமே மாற்று. நாம் தமிழரே மாற்று. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. என்றார் சீமான்.

பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வார மகப்பேறு விடுப்பு

லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த விடுப்பு அறிவிப்பில், பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது. பிரிட்டனில், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு கொடுப்பது போல, தந்தைக்கும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 50 வார விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுப்பை கணவன், மனைவி இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுப்பைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இருவரும் சேர்ந்து தங்கள் அன்பான குழந்தையை ஒருவர் மாற்றி ஒருவர் பராமரிக்கலாம். குழந்தையைத் தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுப்பினை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைப் பிறப்பை மையமாக வைத்து வரும்போது, பெரும்பாலான பெண்களும் தொடர்ந்து வேலையில் இருக்கலாமா அல்லது, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்ற ஒரு கேள்வியைத்தான் முன்வைப்பார்கள். காரணம் பெண்களின் வேலை பறிபோகக் கூடும் என்பதால், ஆனால், இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலையை விட்டு நீக்குவது சட்டவிரோதம் என பிரிட்டன் அரசு சட்டம் இயற்றியிருந்தது. இருப்பினும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்திட்டம், பெண்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை; எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக் கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, அரசு எடுத்துள்ள இம்முடிவு கணவன் மனைவி இருவருக்குமே மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறோம் என அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறியுள்ளார்.

1330 குறளையும் சொல்லும் திவ்யங்கா: பள்ளி முதல்வர் பொற்கிழி வழங்கி பாராட்டு!

கரூர்: தமிழகத்திலேயே மைய மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் பயில்பவர் சு.ர.திவ்யங்கா. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் திவ்யங்காவின் தகப்பனார் வி.எஸ்.ரவிச்சந்திரன், இவரது மனைவி கவிதா. இவர்களின் செல்லமகளான திவ்யங்கா உலகப் பொதுமறையாம் திருக்குறளை முழுமையாக படித்து 1330 குறளையும் எப்படி கேட்டாலும், சொல்லுகிற ஆற்றல் பெற்றுள்ளார். , 06-04-15 Karur thirukkural peravai News photo 03கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியின் முதல்வரான, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் அ.கோவிந்தராஜூ தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் யார் 1330 திருக்குறளையும் யார் சொல்லுகிறார்களோ ? அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒரு திருக்குறளுக்கு ரூ 10 வீதம் 1330 குறளுக்கு ரூ 13 ஆயிரத்து 300 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி முதன் முதலில் இத்திட்டத்தில் வெற்றி பெற்ற சு.ர.திவ்யங்காவிற்கு ரூ 13 ஆயிரத்து 300 பணத்தை பொற்கிழி வழங்கியும் பாராட்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் முனைவர்.அ.கோவிந்தராஜூ தலைமை தாங்கினார். ஆசிரியர் க.தங்கமணி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ரூ 13 ஆயிரத்து 300 ஐ முனைவர் அ.கோவிந்தராஜூ திருக்குறள் செல்வி திவ்யங்காவிற்கு வழங்கினார். கரூர் திருக்குறள் பேரவை சார்பில் செயலாளர் மேலை.பழநியப்பன் பரிசு வழங்கிய முதல்வர் அ.கோவிந்தராஜி, பரிசு பெற்ற திவ்யங்கா மற்றும் திவ்யங்காவின் பெற்றோர்களுக்கு நூலாடை அணிவித்து பாராட்டி பேசிய போது., 06-04-15 Karur thirukkural peravai News photo 02அரங்கநாதனாக சிதம்பரத்தில் வாழ்வை துவங்கிய உலகத்திருக்குறள் பேரவையின் தலைவர் குன்றக்குடி அடிகளாரை தங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்த போது ஒரு திருக்குறள் சொன்னால் காலன்னா பரிசு கொடுத்து திருக்குறள் ஆர்வத்தை வளர்த்த பேராசிரியர்கள் காரணமாக அமைந்தார்கள். அதை போல திவ்யங்காவின் திருக்குறள் ஆர்வத்தை வளர்த்த பெருமை, முதல்வர் கோவிந்தராஜூ, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களே சாரும் என்றார். மேலும் குருவை சாகுபடி மதித்து பணிந்து கல்வி கற்றால் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயரலாம் என்றார். பாராட்டுரை வழங்கிய பாவலர் எழில்வாணன், சிறந்த கவிஞரும், திருக்குறளை வாழ்வியலாக கொண்டவருமான முனைவர் அ.கோவிந்தரஜூம், அவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள திவ்யங்காவும், பாராட்டுக்குரியவர் என்றார்.06-04-15 Karur thirukkural peravai News photo 01 தொடர்ந்து பாராட்டு உரை வழங்கிய திருக்குறள் பயிலரங்குகள் நடத்துகிற ஈரோடு கைலாசம், பாராட்டுரை வழங்கிய போது 25 ஆண்டுகளாக தான் முதல்வராக பணியாற்றுகிற பள்ளிகளில் பயிலரங்குகளுக்கு வாய்ப்பளித்து பயிற்று விப்பாளராகவும் துணை நிற்பவர் முனைவர் அ.கோவிந்தராஜூ என்றும் திவ்யங்கா, தொடர்ந்து திருக்குறளை கற்றும் ஆய்வு செய்தும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுநல ஆர்வலருமான க.ந.சதாசிவம் திவ்யங்காவிற்கு நினைவு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் முனைவர் அ.கோவிந்தராஜூ எழுதிய திவ்யங்காவை பாராட்டும் வானமும் கூட கைக்கெட்டும் என்ற விசைப்பாடலை மாணவிகள் பாடினர். தமிழாசிரியை சு.ஜெயா நன்றியுரையாற்றினார். மேலும் பரிசு பெற்ற மாணவி சு.ர.திவ்யங்கா தனது எதிர்கால கனவு ஐ.ஏ.எஸ் படித்து திருக்குறள் வழியில் ஆட்சி நடத்துவதே எனது லட்சியம் என்றார்.

4½ வருடம் வாழ்ந்து ரூ.20 கோடி பறித்த திருமாவளவன்: மிரட்டுவதாக பெண் புகார்

kavitha-thirumavalaanசென்னை: சுமார் நான்கரை வருடங்கள் தன்னுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டு, தன்னிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பறித்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னை மிரட்டுவதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார் கோவையைச் சேர்ந்த பெண். கோவையைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். முன்னதாக இரு முறை கொடுத்த புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கு முன்னர், கோவை ஆணையர் அலுவலகத்திலும் பல முறை புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுக்களில், திருமாவளவன் தன்னுடன் பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக கவிதா கூறி இருந்தார். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்துள்ளார். அதில், திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த கவிதா, இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திருமாவளவன் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கிப் பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். ‘உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது’ என்கிறார். ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் பறித்து விட்டனர். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள். என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கே சென்றாலும் அந்தப் பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன். என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலீசில் 10 முறை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் தர்ணா போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் – என்று கூறிவிட்டு கவிதா தன் காரில் ஏறிச் சென்றார். கவிதா டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்ததை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கே திரண்டனர். அதனால் அங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார்: காயத்தில் இருந்து மீண்ட இஷாந்த் சர்மா

ishant-sharma பெங்களூர்: தோனி என்னை 24வது மாடியில் இருந்து குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவேன், யாருமே காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்தான். தோனியின் ஆறுதல்தான் என் காயத்தை விரைவில் ஆற்றியது என்று கூறியுள்ளார் இஷாந்த் சர்மா. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கனவு கண்ட இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது முழங்காலில் திடீரென ஏற்பட்ட காயத்தால் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பினார். தற்போது உடல்நலம் தேறியுள்ள இஷாந் சர்மா ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாடத் தயாராகி விட்டார். தன் காயம் சரியானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஷாந்த் சர்மா, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது 2015-ல் நான் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருந்தும் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. நான் மிகவும் வருத்தம் அடைந்தபோது, கேப்டன் தோனிதான் எனக்கு ஆறுதல் கூறி தேற்றினார். 24-வது மாடியில் இருந்து தோனி என்னை குதிக்கச் சொன்னால் சற்றும் தயங்காமல் மாடியில் இருந்து குதித்து விடுவேன். யாரும் காயம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்.ஆனால் நான் இதை தயங்காமல் தோனிக்காகச் செய்வேன். ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் பந்து வீசக்கூடாது என்று மருத்துவர்கள் என்னை எச்சரித்துள்ளனர். கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் தினமும் பந்து வீச்சில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது நான் குணமடைந்து விட்டேன். ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளேன் என்று கூறினார் இஷாந்த் சர்மா. ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணிகாக விளையாடுகிறார் இஷாந்த் சர்மா.

மேற்கு வங்க ஜாதவ்புர் பல்கலை இணையம் முடக்கம்

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அடையாளம் தெரியாத சிலரால் முடக்கப்பட்டது. காலை அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் சென்று பார்த்தபோது, அது, பாலியல் தொடர்பான போர்னோ தளங்களுக்கு இட்டுச் சென்றது. இது தொடர்பாக பல்கலையின் பதிவாளர் ப்ரதீப் கோஷ் கூறியபோது, இது குறித்து காலையில் நான் கேள்விப்பட்டேன். உடனே இது தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் கூறி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த வருடம் டிசம்பரிலும் இதேபோன்று பல்கலை இணையம் முடக்கப்பட்டது குறிபிடத்தக்கது.