சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெப்பம் இருக்கும். வெப்பத்தின் தாக்கத்தால், வெப்பம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என்றும், மக்கள் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது,. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே, வேலூரில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 104.18 டிகிரி, மதுரையில் 102.20 டிகிரி, கரூரில் 104 டிகிரி, பாளையங்கோட்டையில் 100.40 டிகிரி, தருமபுரியில் 103.10 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
சிபிஐ.,க்கு கெடு விதிப்பு: தவறை உணர்ந்து கர்நாடகம் மறு அறிவிப்புக் கடிதம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கேட்டு மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிபிஐ விசாரிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டு கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த வழக்கை 3 மாத காலக் கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது கர்நாடக மாநில அரசு. ஆனால், சிபிஐக்கு எந்த மாநில அரசும் இவ்வாறு காலக்கெடுவெல்லாம் விதிக்கமுடியாது என்று சிபிஐ, ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இவ்வாறு காலக் கெடு விதித்தால் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும், இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்றும் கூறி மறுப்பு தெரிவித்தது. தங்கள் தவறை தாமதமாக உணர்ந்த கர்நாடக அரசு, இப்போது காலக்கெடு இல்லாமல், வழக்கமான பரிந்துரையாக ஒரு அறிவிப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த ஒரு சிறிய விஷயம் கூடத் தெரியாமல் கர்நாடக மாநில அரசு சிபிஐக்கு கடிதம் அனுப்பியிருக்குமா, அப்படியென்றால் கர்நாடக அரசில் யாரோ வேண்டுமென்றே இத்தகைய தவறை உள்நோக்கத்துடன் செய்திருப்பாரோ என்ற பரபரப்புப் பேச்சும் அங்கே இல்லாமலில்லை!
பவுர்ணமியில் பவர்கட்; ஞாயிறுகளில் சைக்கிள்: சுற்றுச்சூழல் மாநாட்டில் மோடி
புது தில்லி: தில்லியில் இன்று மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரச்னை குறித்து உலகமே கவலை கொண்டு பேசுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அக்கறை இல்லை எனும் விதமாக உலக நாடுகள் நம்மைப் பற்றி நினைக்கின்றன. ஆனால், இயற்கையைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இந்தியாவை யாரும் கேள்வி கேட்கவே முடியாது. காரணம், இயற்கையை உலக நாடுகள் மாசு படுத்தும் போது, அதில், இந்தியாவின் பங்களிப்பு மிகமிகக் குறைவுதான். இந்திய கலாசாரத்தில் மட்டும்தான் சுற்றுச்சூழல் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கார்பன் கசடுகளை வெளியேற்றுவதில் இந்தியாவுக்கு எப்போதுமே கடைசி இடம்தான். பூமி வெப்பமயமாவதை தடுப்பது எப்படி என்று உலக நாடுகளுக்குத் தெரியவில்லை. கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே பூமி வெப்பமயமாதலை தடுக்க முடியும் என நினைக்கின்றனர். இதற்கு வேறு வழியும் இருக்கிறது. நாம் நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டாலும், பூமி வெப்பமயமாதலை தடுக்க முடியும். மனிதனின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வராத வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல. முன்பெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. பௌர்ணமி தினத்தன்று சிறு பிள்ளைகளை நிலவு ஒளியில் ஊசியில் நூல் கோக்குமாறு பாட்டிகள் சொல்வார்கள். குழந்தைகளும் அதை ஆர்வத்துடன் செய்வர். நாமும், முழுநிலவு நாளன்று மின் விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுக்கலாம். இதை நான் கூறியதற்காக மேலைநாட்டவர் என்னைப் பார்த்து சிரிக்கக்கூடும். அதே போல், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிளை மட்டுமே நாம் பயன்படுத்தலாம். அப்படிச் சொல்வதால், நான் ஒரு சைக்கிள் கம்பெனியின் ஏஜென்டாக செயல்படுவதாக என்னைக் கேலி செய்யலாம். சுற்றுச்சூழலைப் பேணியபடியே வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது சாத்தியமற்றது என்ற வாதத்தை சிலர் முன்வைக்கலாம். ஆனால், அதை நான் மறுக்கிறேன். வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றாகவே இருக்க முடியும். நகராட்சி அமைப்புகள் திடக் கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அணு சக்தியை பயன்படுத்துவதில் சுற்றுச்சூழலைப் பேண வேண்டும். ஆனால், நாம் இயற்கையைப் பேணுவதில்லை என விமர்சிக்கும் மேலை நாடுகள்தான், நமக்கு அணு சக்தியில் உதவ மறுத்து இரட்டை வேடம் போடுகின்றன” என்று பேசினார் மோடி.
When it comes to mitigating climate change, India can show the way to the entire world. https://t.co/IPZZH4MTkI — Narendra Modi (@narendramodi) April 6, 2015
पर्यावरण और विकास दोनों को साथ साथ आगे बढ़ाया जा सकता है https://t.co/makLDtrUFc — Narendra Modi (@narendramodi) April 6, 2015
மோடியின் கிராமத்துக்குச் செல்ல ரூ.600: குஜராத் சுற்றுலா ஏற்பாடு
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி பிறந்து வளர்ந்த கிராமமான குஜராத்தின் வட்நகருக்குச் சென்று வர ரூ.600 கட்டணத்தை நிர்ணையித்துள்ளது குஜராத் மாநில சுற்றுலாக் கழகம். அதில் ஒரு அம்சமாக அங்கே உள்ள ரயில் நிலையத்தையும், அதில் மோடி ஒரு சிறுவனாக டீ விற்ற இடத்தையும் பார்த்து வரலாம். மோடியின் கிராமத்தில் இருந்து என்ற திட்டமாக குஜராத் சுற்றுலாக் கழகம் ஒரு திட்டத்தை அமல் படுத்தியுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ.600 போக்குவரத்துக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் சுற்றுலாவில், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வட்நகர் கிராமத்தில் மோடி குறித்த இடங்களுடன், ரயில் நிலையமும் ஒரு சுற்றுலா மையம் ஆகியுள்ளது. இதில், குஜராத் மாநில சுற்றுலாக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஆமதாபாத்தைச் சேர்ந்த அக்ஷர் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் இதற்கான பேருந்துகளை இயக்குகிறது. வைப்ரண்ட் குஜராத் என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஜன.2015ல் இருந்து இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப் பட்டது. அதில் இருந்து, மிகப் பெரும் வெற்றி அடைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களில் இருந்து வட்நகர் செல்லும் வழியில், பல்வேறு பொது இடங்களும் காட்டப்படுகின்றன. மேலும், மோடி பிறந்த இடம், படித்த பள்ளி ஆகியவையும் இந்த சுற்றுலாவில் அடங்கும். இது குஜராத் சுற்றுலாக் கழகத்தின் இணையத்திலும் இடம்பெற்றுள்ளது. https://www.gujarattourism.com/tour-packages/offered-by-travel-agents https://www.gujarattourism.com/file-manager/tours/109/rise-from-modis-village.pdf
ஷேர் ஆட்டோ மோதி அதிமுக., எம்.பி., படுகாயம்
திருச்சி: பெரம்பலூரில் அதிமுக எம்.பி மருதைராஜா மீது ஷேர் ஆட்டோ ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக.,வைச் சேர்ந்தவரான பெரம்பலூர் தொகுதி எம்.பி., ஆர்.பி.மருதைராஜா(51) பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நடைப்பயிற்சிக்காக, நேற்று காலை தன் மகன் பிரசன்னாவுடன் துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்புறம் வந்த ஷேர் ஆட்டோ இருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மருதைராஜாவுக்கு தலையின் பின்பக்கம், கை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது. பிரசன்னா லேசான காயத்துடன் தப்பினார். உடனே இருவருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. பின்னர் இருவரும், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்நிலையில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் செஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன்(29) போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அரியலூர் கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில் திருவிழாவுக்குச் சென்று திரும்பும்போது, ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த மணிகண்டன் களைப்பில் கண்ணயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு
புது தில்லி: போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்கள் மற்றும் இந்தியர் அல்லாதார் என பலரை மீட்டுக் கொண்டு வந்த, இந்திய அதிகாரிகளின் தடையற்ற பணிக்காக மனந்திறந்து பாராட்டுவதாகக் கூறினார் பிரதமர் மோடி. தனது டிவிட்டர் பதிவுகளில், அவர் அடிக்கடி இந்த விவரங்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, மற்றவர்கள் மனங்கலங்கி தவித்து நிற்கும்போது, இந்தியர்களின் தியாகமும் உதவியும் உடனே அவர்களை ஆபத்தில் இருந்து காக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்திய வெளியுறவுத் துறை, கடற்படை, விமானப் படை, ஏர் இந்தியா, கப்பல் போக்குவரத்து, ரயில்வேத் துறை, மீட்புப் பணியில் உடனே கைகோத்த மாநில அரசுகள் இவற்றுக்கிடையே உள்ள உடனடி ஒருங்கிணைப்புத் திறனையும் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார் மோடி. இந்த ஆபரேஷனில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ராணுவத் தளபதியும் வெளியுறவு இணை அமைச்சருமான வி.கே.சிங் ஆகியோரின் துடிப்பான செயல்பாடுகள் தனித்துவம் வாய்ந்ததாக் இருந்தது என்றும், தம்மைக் கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மோடி. ஏமனில் இருந்து சுமார் 2300 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை வரையில் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஜனதா பரிவார்: முடிவு எடுக்கும் அதிகாரம் முலாயம் கையில்!
உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஜனதா பெயரை தங்கள் கட்சிகளில் வைத்துக் கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் என மூவரும் தங்கள் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ராஷ்ட்ரீய, ஐக்கிய, மதசார்பற்ற பெயர்கள் எல்லாம் மறைந்து, அவற்றில் உள்ள தளங்களும் மறைந்து, ஜனதா பரிவாராக உருவெடுக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை இதற்காக, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லாலுவும், முலாயமும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். எனினும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், முலாயம் சிங் கையில் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பிலான ராஷ்ட்ரீய சேவா சங்க தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் ப்ரேம்ஜி. இந்த விழாவுக்கு அவர் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அஸிம் பிரேம்ஜி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன இந்நிலையில், தாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளித்துள்ள அஸிம் பிரேம்ஜி, “எனது பங்கேற்பு பலரால் விரும்பத்தகாத ஒன்றாகப் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் நான் அவர்களது கொள்கைகளை பரப்புவதற்கு வந்திருப்பதைப் போல பேசுகிறார்கள். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நாட்டை நான் நேசிக்கிறேன். மனிதநேய உதவிகளை அளிக்கும் அந்த அமைப்பின் நிகழ்ச்சி என்ற காரணத்தால் மட்டுமே நான் இதில் பங்கேற்றேன். நான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் இல்லை” என்று கூறியுள்ளார். இதனிடையே அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், ஆர்.எஸ்.எஸ்., ஒரு மதிப்புமிக்க, சமூகப் பணிகளில் ஈடுபடும் அமைப்பு. அதில் கலந்து கொள்வது ஒன்றும் மோசமான செயல் அல்ல என்று பதில் விமர்சனம் செய்துள்ளார்.
ஜப்பானில் பின்னோக்கி நீச்சலடித்து 100 வயது மூதாட்டி உலக சாதனை
டோக்கியோ: ஜப்பானில் தனது 100 ஆவது வயதில் பின் புறமாக நீச்சல் அடித்து, போட்டியில் மிய்க்கோ நகோக்கா என்ற மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் மட்சுயாமா என்ற நகரில் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் பெண்கள் பிரிவுக்கான பின்புறமாக நீச்சல் அடிக்கும் போட்டியில் 100 வயது மூதாட்டி மிய்க்கோ நகோக்கா கலந்து கொண்டார். அவர், 1500 மீட்டர் தொலைவை 1 மணி நேரம் 15 நிமிடம் 54 விநாடிகளில் பின்புறமாகவே நீச்சலடித்து உலக சாதனை படைத்தார்.. 1914ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு துவக்கத்தில் நீச்சல் தெரியாதாம். ஒருநாள், அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 82-வது வயதில் நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டார். ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நடனக் கலையான ‘நோ’-வை நாடக மேடைகளில் காட்சிப் படுத்துவது அவரது வேலையாக இருந்துள்ளது. இந்நிலையில், நாடகங்களில் தனது உடலை மெலிவானதாக வைத்துக் கொள்ளவும் நீச்சல் பயன்பட்டுள்ளது. ஆனால், அதுவே பழக்கமாகி, பிடித்துப் போய், தொடர்ந்து நீச்சலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாகக் கலந்துகொண்டு 50 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தாராம். தற்போது, 24 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்த மூதாட்டி.
வார இறுதி மக்கள் சபைகள் நடத்த கேஜ்ரிவால் திட்டம்
புது தில்லி: ஆம் ஆத்மிக்கு சரிந்து வரும் இமேஜை தூக்கி நிறுத்த, வார இறுதியில் ’ஜன் சபா’ என்ற மக்கள் சபைகளை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், தற்போது ஊடகங்கள் மூலம், ஆம் ஆத்மி கட்சிக்குள் நடக்கும் சண்டைகள் வெளித்தெரிவதால் ஏற்பட்ட இமேஜை மக்களிடம் சரிசெய்ய, வார இறுதியில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வார இறுதியில் முதல் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் கேஜ்ரிவால். அதன்படி சனிக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும். புது தில்லி முந்த்கா பகுதியில், சனிக்கிழமை அன்று விவசாயிகள் குறித்த மாநில அரசின் கொள்கைகளை விளக்கியும், ஞாயிறு அன்று, பண்ட்லி பகுதியில் அங்கீகாரமற்ற காலனி குடியிருப்புகள் குறித்த விவாதத்தையும் நடத்த உள்ளார்.

