Home Blog Page 6232

சுவரொட்டி விவகாரம் – கோவை காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள்

சென்னை: சுவரொட்டி விவகாரத்தில் கோவை காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் அறிக்கை: கோவை எஸ்டிபிஐ கட்சி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் வீசிய டிபன் பட்டாசை இந்து முன்னணியோடு சம்பந்தப்படுத்தி போஸ்டர் போட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை இந்து முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் அவர்கள் இந்த சம்பவத்திற்கும், சென்ற ஞாயிறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பத்திரிகையில் விளக்கம் கொடுத்துள்ளார். இப்படி அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும்.. இவர்களது அவதூறு போஸ்டர் பேஸ் புக்கிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.. ஈரோட்டில் ஒட்டாத போஸ்டருக்கு, எந்த முகாந்திரமும் இல்லாத விஷயத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் அழுத்தம் கொடுத்தது என்பதை காரணம் காட்டி காவல்துறை இந்து முன்னணி ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தது.. ஆனால் இங்கோ கோவை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உண்மைக்கு புறம்பாக போஸ்டர் போட்டு மதக்கலவரத்தை தூண்டும் எஸ்டிபிஐ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? பாரபட்சமான முறையில் காவல்துறை நடந்து கொள்ளுமேயானால்.. காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.. காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால்.. தமிழக முதல்வர் அவர்கள் தனக்குக் கீழ் வைத்துள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்..   https://www.youtube.com/watch?feature=player_embedded&v=wxYyUCdEmsU இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்…. நாய்க்கு கூட உங்கள் அமைப்பினர் தாலி கட்டுகிறார்களே.. அதனால் அதன் புனிதத்தை கேவலப்படுத்த வில்லையா? என்று கேட்டார்கள். கேட்டவர்கள் .. அக்கறையோடு கேட்டார்கள்.. அதற்கு அப்போது பதில் கொடுத்தாலும் சில விஷயங்கள் நமது பண்பாட்டில் ஆழ்ந்த அர்த்தம் உடையது.. சிந்தித்தால் வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.. சிந்தித்தால் தானே பிரச்னை..  அதனை மழுங்கடிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று சில ஊடக நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.. நண்பர்களோடு பேசிகொண்டிருந்த போது கிடைத்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.. தாலி என்பது உறவை ஏற்படுத்துவது என்பதால் அது புனிதமாகிறது.. தாய் மகன் என்பது தூப்பில் கொடி உறவு என்பார்கள்.. தந்தை உறவு என்பதை ரத்த சம்பந்தமான, தன்னிலிருந்து தோன்றிய உறவு என்பார்கள்.. சகோதர உறவு என்பது ஒரே வயிற்றில் தோன்றிய உறவு.. ஒரு தாயின் பாலைக் குடித்து வளர்ந்த உறவு என்பார்கள்.. ஆனால் கணவன், மனைவி என்பதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது எனக் கேட்டால்.. ஒருவன் கட்டிய தாலியை அந்தப் பெண் உயிரினும் மேலாக கருதுகிறாள்… விசித்திரமாக இருக்கும்.. பல நூறு படங்களில் தாலி செட்டிமெண்ட் விதவிதமாக காட்டியிருப்பார்கள்.. பிடிக்காவிட்டாலும் பந்தப்படுத்துவதை.. தெரியாமல் கட்டிவிட்டாலும் தாலி புனிதமானது.. தாலிக்கு ஏதாவது நேர்ந்தால் கணவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழுமோ.. தாலி வரம் கேட்பது.. கட்டாய திருமணத்தில் கூட தாலி கட்டிவிட்டால் பிறகு எதுவும் செய்யமாட்டாள் என்பதாக.. இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏன் படம் ஆக்கி வெற்றி படமாக்கினார்கள்.. காரணம் மக்களின் நம்பிக்கை.. அசைக்க முடியாத நம்பிக்கை.. இரண்டு படங்களில் மட்டுமே வித்தியாசப்படுத்தி காட்டினார்கள் .. ஒன்று நானே ராஜா நானே மந்திரி என்ற விஜயகாந்த் படம்.. அதில் கதாநாயகி முரடனான கதாநாயகனுக்குப் புத்தி புகட்ட அவன் வலுக்கட்டாயமாக கட்டிய தாலி அறுத்து அவன் மூஞ்சியிலேயே எறிவாள்.. அவனை அவளுக்கு பிடித்திருக்கும் ஆனாலும் அவன் முரட்டுத்தனமாக கட்டிய தாலி அவள் ஏற்கமாட்டாள்.. விஜயகாந்த் அந்தப் படத்தில் நன்றாக நடித்திருப்பார்.. படக்கதையும் நன்றாக இருக்கும்.. பாடல்கள் அருமை தான்.. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்டி கிளைமாக்ஸாக ஆனதால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.. அதேபோல் .. சாதாரண பட்ஜெட் படம் அந்த ஏழு நாட்கள்.. அந்தப் படத்தில் ஒருவனை விரும்பிய பெண்ணை தனது தாய் உயிருக்குப் போராடும் வேளையில், தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கல்யாணம் செய்துகொண்டு வந்தவர், தனது தாய் இறந்த பின் அந்தப் பெண் விரும்பியவருக்கே திருமணம் செய்து கொடுக்க எடுக்கும் முயற்சியில்.. ஒரு வசனம் வரும்.. எனது காதலி உங்கள் மனைவி ஆகலாம்.. ஆனால் உங்கள் மனைவி எனது காதலியாக முடியாது.. அப்படியே நான் ஏற்றுக்கொள்ள தயார்.. எப்படி அவள் உங்களிடம் வந்தாளோ அதேபோல் எனக்கு அவளை தாருங்கள் என்பார் கதாநாயகன்.. அதாவது நீங்கள் கட்டிய தாலியை எடுத்துக்கொண்டு அவளை தாருங்கள் என்பார்.. சரி என அந்த நபர் தாலியை கழற்ற முற்படும்போது அவள் உயிரே போனாலும் அதனை தொட விடமாட்டேன் என்பார்.. அப்போது, கதாநாயகனாக வரும் பாக்யராஜ் கூறுவார் இதுதான் தாலி பெண்கள் கொடுக்கும் மதிப்பு.. என்று.. சரி அதனால் நாய்க்கு, கழுதைக்குத் திருமணம் செய்து வைக்க தாலி கட்டலாமா? கட்டலாம்.. நாம் எல்லா உயிரினங்களையும் இறை வடிவமாககத்தானே காண்கிறோம்.. இதில் என்ன உயர்வு தாழ்வு.. சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கு என்பதால் வாழை மரத்திற்குத் தாலி கட்டச்சொல்வார்கள்.. சில இடங்களில் வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைப்பார்கள்.. சில கிராமங்களில் மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் நடத்தும் பழக்கம் இருக்கிறது என்பதை பத்திரிகையில் படித்திருப்போம்.. அப்படியானால் தாலியின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள் என்பதா அர்த்தம் திருமண பந்தத்தை மனிதர்கள்.. தமிழர்கள்.. தாலி எனும் பந்தத்தால் (கட்டால்) உறுதி படுத்துகிறார்கள்.. அதை புனிதமான சடங்காகக் கருதுகிறார்கள்.. காக்கை குருவி எங்கள் ஜாதி.. கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்றான் பாரதி.. அப்படியிருக்கையில் தாலியை தரக்குறைவாக நினைத்தால் அது மனிதனாக இருந்தாலும் தாலியை உயர்வாக நினைக்கும் தாய்குலம் மன்னிக்குமா? மற்றவர்களுடைய நம்பிக்கையை கொச்சைப்படுத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது..

  • இவ்வாறு ராம.கோபாலன்கூறியுள்ளார்.

காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்

karadaiyan காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்: 15.03.2015 அன்று அதிகாலை 3.30 – 4.00  

கருடன் பஞ்சாங்கம் : ஆன்ட்ராய்ட் ஆப்-இல்!

garudan-panchangam
கருடன் பஞ்சாங்க ஆசிரியர் SRYAS D முரளிபட்டாசாரியாரால் உருவாக்கப்பட்ட மன்மத வருஷ (2015-16) கருடன் பஞ்சாங்கம் ஆன்ட்ராய்டு APP – ஸ்ரீ வேளூக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது..
இலவசமாக அனைவரும் GOOGLE PLAY STOREல் DOWNLOAD செய்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு…
https://www.facebook.com/GarudanPanchangam?ref=hl
Garudan Panchangam

நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”

idayam-murali ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சக்கை போடு போட்டது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் நேற்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் “இதயம் முரளி” என்னும் புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்க, முதல் கட்ட வேலையாக அமேரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படபிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்ந்தெடுக்கும் வேளைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் இயக்குனர் அஹமது. படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தபின் சில தினங்களில் படக்குழுவினருடன் இந்தியா திரும்புகிறார் இயக்குனர். அனிருத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“கண்ணன்” – மீ.விசுவநாதன்

                     "கண்ணன்"                                 (மீ.விசுவநாதன்)  

கண்ணன் ஒருகுழந்தை; கண்ணன் பெருங்கள்ளன்;
கண்ணன் ஒருதேவன்; காட்சிக்கார் வண்ணனிவன் என்றெல்லாம் சொல்வர் இறைபக்தி யாளர்;அவன் இன்று வருவானென் இல்.. மாக்கோலப் பாதம் மனதுள்ளே துள்ளித்தான் பூக்கோலம் போட, புதியதோர் தாக்கத்தால் பூரித்தேன்! பாதம் புலர்கதிர் போல்மின்ன வாரித்தூக் கத்தா வரம்.

தெருப்பாடகன்

                                தெருப் பாடகன்                                                                         (மீ.விசுவநாதன்)              சங்கீதமும் பாட்டும் ஒன்று தானா? அது எப்படி ஒன்றாகும்? 

தன்னுடைய நாபிக்கமலத் திலிருந்து மெல்ல மெல்லக் குரலுக்காகத் தவம் இருந்து, ஒரு ராகத்தின் மொத்த அழகையும் தானே தன்னை இழந்து அனுபவித்துக் கண்ணீர் மல்கித் தன்னுடைய தொண்டையை நன்கு திறந்து வாயின் மூலமாக ஒரு உன்னத ஒலியைக் காற்றோடு கலக்க விடும் பொழுது அது கேட்ப்பவரை மெய்மறக்கச் செய்கின்றதே, அது சங்கீதம். பாட்டும் அப்படித் தானே? அப்படி ஒரு தோற்றத்தை அது கொடுக்கும். சங்கீதத்திற்கு வார்த்தைகள் பெற்றோர். ராகங்கள் குரு. அந்த ராகம் என்ற குரு மூலம் கேட்பவர் அனைவரையும் தெய்வ நிலைக்குக் கொண்டு செல்லவதுதான் நல்ல சங்கீதம். நல்ல சங்கீதத்தில் கொஞ்சம் மெல்லிசை சேர்ந்தால் அது பாட்டு. அதுவும் மனதை மயக்கத்தான் செய்யும்.

    காலை ஐந்து மணிக்கு எழுந்து தன்னுடைய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு  தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்று, தனது வேட்டியை அந்த அகன்ற பாறையின் மீது வைத்து நன்றாகச் சோப்புப் போட்டுத் துவைத்த பின், தனது அந்த அலுமினியத் தூக்கைக் கொஞ்சம் புளியையும், ஆற்று மணலையும் வைத்துத் தன்னுடைய இரண்டு கைகளாலும் அழுத்தித் தேய்த்து, நீரில் முக்கி நன்றாகக் கழுவித் தன் கண்களை அகலவிரித்து அந்த அலுமினியத் தூக்கு "வெள்ளி"யைப் போல மின்னுவதைப் பார்த்து மகிழ்ச்சியில் "என் மனம் வெள்ளுக்க வழி இல்லையே தேசமுத்து மாரி" என்று மெல்லிய குரலில் பாடிய படியே  

தண்ணீருள் தன்னுடைய முகத்தைப் பார்த்தார் தெருப் பாடகர் சட்டநாதன்.

      அவருடைய முகம் தெளிவாக்க அந்த நீரில் தெரிந்தது. மீன்கள் அவருடைய கால்களில் உள்ள அழுக்குகளைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்து,"ஊரெல்லாம் பிச்சை  எடுத்து உடம்ப வளக்கறேன்...நீ என் ஒடம்பு அழுக்கெல்லாம் பிச்சு எடுத்து உடம்ப வளக்கரே..." என்று சொல்லிக் கொண்டே இடுப்பளவு நீரில் நின்ற படியே வாய்விட்டு ஒரு மணிநேரம் பாடிய பின்பு, கரைக்கு வந்து தலையைத் துவட்டிக் கொண்டு, நெற்றியிலும் உடம்பிலும்  நிறையப் "பளீர்" என்று விபூதியைப் பூசி, தனது காய்ந்த வெள்ளை வெளேர் வேட்டியை  "வள்ளலார் சுவாமிகள்" பாணியில் கட்டிக் கொண்டு கிழக்கு திசையைப் பார்த்து, "ஓம்  நமச்சிவாய..தென்னாடுடைய சிவனே போற்றி..என்னாட் டவர்க்கும் இறைவா போற்றி.."  என்று மனதில் சொல்லிக் கொண்டு, கழுத்தில் ஒரு ருத்ராக்ஷ மாலையை அணிந்து, பாறையில் பிழிந்து வைத்திருந்த  வேட்டியை எடுத்து ஒரு துணிப்பையில் வைத்து இடது கையில் தொங்க விட்டுக்கொண்டு, ஒரு ஜோல்னாப் பையில் வைத்துள்ள டேபிள் டென்னிஸ்  மட்டைகளைப் போன்று மரத்தினால் செய்யப்பட்ட "கையிடுக்கி" என்ற இசைக் கருவியை எடுத்து வலது கையிலும், அலுமினியத் தூக்கினை அந்த ஜோல்னாப் பைக்குள் வைத்துத் தன்னுடைய இடது தோள்பட்டையிலும் மாட்டிக் கொண்டு, "மரக்கட்டை"யினால் செய்த செருப்புகளைக் காலில் மாட்டிகொண்டு புறப்படும் நேரம் அனேகமாகக் காலை மணி ஏழரைக்குக் குறையாது.      அப்படியே புறப்பட்டு சிவன் கோவில் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய அரசமரத்தை  மூன்று முறை சுற்றிவிட்டுக் கீழே இறங்கி வலது புறம் உள்ள சிவன் கோவிலுக்குள் நுழைந்துதரிசனம் செய்த பின்புதான் சட்டநாதன், அக்ரஹாரத்துக்குள் நுழைவான். அவனது கரகரத்த கம்பீரமான குரல் அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களில் சிலசிறுவர்கள் அவனுடனேயே அந்தத் தெருவின் கடேசிவரைச் செல்வதும் அதற்காக  அக்குழந்தைகள் அவர்களுடைய அம்மாவிடம் வசவு வாங்குவதும் வாடிக்கைதான். சில சிறுவர்கள் அவனிடம்" அழகென்ற சொல்லுக்கு முருகா"வைப் பாடச் சொல்லும். அவனும் ரசித்துப் பாடுவான். பாடும் பொழுது தன்னுடைய இரண்டு  கைகளாலும் "கையிடுக்கி" யினால்த் தாளம் போட்ட படியேதான் பாடுவான். அப்போது அவனுடைய கண்களின் ஒரத்தில்வழியும் கண்ணீரைப் பார்த்து,"ஏன் மாமா அழறேள்" என்று கேட்கும் சிறுவர்களும் இருந்தனர்.    அவனுடைய கம்பீரமான, நளினமான, அழகான தமிழ் உச்சரிப்பில் அவனது  தொண்டையில் இருந்து வெளியில் வரும் அத்தனை பாடல்களும் அதிலும் முக்கியமாக அந்தமுருகன் பாடல்கள் அத்தனையும் அந்தச் சிறுவர்களை மெய்மறக்கச் செய்யும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவன் நின்று பாடுவான். அந்த வீட்டுச் சிறுவர்கள்தான் அவர்களுடைய தாயாரிடம் கேட்டு அவனுக்கு ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் அரிசியைக் கொண்டு தருவார்கள். அதை அவன் தனது அலுமினியத் தூக்கில் குனிந்து வாங்கி கொள்வான். மதியம்ஒருமணிக் கெல்லாம் வடக்குத் தெருவுக்குப் பின்புறம் மிகத் தெளிவாக ஓடுகின்ற கன்னடியன்கால்வாயின் கரையில் உள்ள மண்டபத்தின் ஒரு மூலையில் அடுப்பு மூட்டிக் கொஞ்சம் அரிசிபோட்டு சோறு செய்து கொண்டு, அன்றைய  தினம் யாரேனும் தந்திருந்த ஏதேனும்  ஊறுகாயையோ, துவயலையோ சேர்த்துச் சாப்பிடுவான். அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை ஒன்றும் சொல்லமாட்டான். சாப்பிட்டு முடித்தவுடன்  அவனுக்குப் "பீடி" குடிக்க வேண்டும். அதை அச்சிறுவர்கள் பார்ப்பதை அவன் விரும்புவ தில்லை. "தம்பிகளா ....இனிமே நீங்க உங்க வீட்டுக்குப் போயிடனும்...நா கொஞ்சம் ஒய்வுஎடுக்கணும்" என்று சொல்லி அனுப்பி விடுவான்.      அன்றும் அப்படித் தான் அந்தத் தெருப் பாடகன் ஒரு பீடியைப் பற்ற வைத்து, வாய்க்கால் பாலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு,பாலத்தின் கீழே பாயும் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தான்.     அந்த நீரின் ஓசை அவனுக்கு அந்த கிராமத்தில் உள்ள ஒரு உன்னதமான சங்கீத மேதையை நினைவு படுத்தியது. அந்த மேதையின் குரலைக் கேட்டுக் கேட்டேதான் தனக்கு இந்தக் கொஞ்சம் இசை அறிவும் வந்தது என்று நினைத்த பொழுது அவனுக்குக் கண்ணீர் பெருகியது.    கோகுலாஷ்டமித் திருவிழாக்களில் அந்த மேதை பாடுவதைக் கேட்கப் பெரிய வித்வான்கள் எல்லாம் முன் வரிசையில் அமர்ந்திருந்து ரசித்த தெல்லாம் இப்பொழுது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே.   அவர் குரலில் இருந்த ஈர்ப்பு சக்தியை ஏன் பராசக்தி திரும்ப எடுத்துக் கொண்டாள். அவரிடம், சங்கீதம் தவம் செய்தல்லவா அவரது நாபியில் குடிகொண்டது. தொண்டையில் சங்கீதம் தொலைந்ததில் அவருக்கு வருத்தம் இல்லை. அதைவிட அவருடனேயே இருந்து  அவரை விட்டுப் போன சங்கீதம் போலவே அவரது கிராமத்துப் பெரிய மனிதர்களும் அவரைக்கவனிகாம லேயே இருந்ததுதான் மிகவும் வருத்தம் தந்தது. அந்த மேதையின் குரலில் கரகரப்பு வரத்துவங்கிய பொழுதே, அவர் தான் ஒதுக்கப் பட்டதை உணர்ந்து விட்டார். இனி கச்சேரிகள் இல்லை. தெருவில் பாட்டுக் கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஆரம்பித்து, அதுவும் இப்போது ஒன்று இரண்டாகக் குறைந்துபோனது. ஒருநாள் காலையில் சட்டநாதன் அவர் வீட்டு வாசலில் நின்று,"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா"   என்று தனது கரகரத்த குரலில் பாடியதை கேட்ட அந்த மேதை, தனது வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து," அப்பா  உன்பாட்டக் கேட்டு...என்ன இவன் சங்கீதத்தக் கரகரக் குரலாலேயே கொல்லரானே.... பராசக்தி உனக்கு ஞானம் இல்லையான்னு கேட்டேன்...அவள் எனக்கு பதில்  சொல்லிட்டாப்பா... " என்று தழுதழுத்த குரலுடன் அந்தத் தெருப்பாடகன் சட்டநாதனின் அலுமினியத் தூக்கில் தன்னுடைய இரண்டு கைகளாலும் "அக்ஷதையை" அள்ளிப் போட்டு விட்டு இருகை கூப்பி வணங்கினார்.          "சாமி.. நீங்க..பெரிய மேதை ..." ஒங்க ஆசீர்வாதமும் அந்த முருகனும் தந்தது தான் சாமி என்னோட குரலு....தேவைக்கு மேல நான் பிச்சை எடுத்து அத கெடுத்துக்க விரும்பல சாமி.." 

என்று தெருப் பாடகன் அந்த இசை மேதையின் காலின் விழுந்தான். ” நீ சொன்னது ரொம்ப சரி…தேவைக்கு அதிகமா ஆசைப்பட்டுக் கச்சேரி கச்சேரி என்று சங்கீதத்த வைச்சுப் பிச்சை எடுத்ததுனால அந்த அம்பாளே என் குரலை எடுத்துட்டா…நீ பாடறது சங்கீதம்…உன்ன மறந்து நீ பாடற குரல் கரகரப்பா இருந்தாலும் ….அதுதான் அம்பாளுக்குக் “கரஹரப்ரியா”. நீ எடுக்கறது பிச்சை இல்லை…”பிக்ஷை” இதுதான் உஞ்சவிருத்தி….ஒனக்குத் தரது ரொம்பப் புண்ணியம்…” என்று கைகளைக் குவித்து அந்த மேதை விலகி நின்ற பொழுது தெருப்பாடகன் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என்று பாடிக்கொண்டே அடுத்த வீட்டின் வாசலுக்குப் போய் விட்டான்.

      தெருப்பாடகன் சட்டநாதன் கையில் இருந்த பீடியின் நெருப்பு அவன் கையைச் சுடும் முன்பே, எதோ ஒரு விழிப்புணர்வுடன் அந்தப் பீடித்துண்டை அந்தக் கன்னடியன் கால்வாய்த் தண்ணீரில் வீசி எறிந்தான்.   அது அந்தத் தண்ணீரின் சுழலில் சிக்கிக் கொண்டு உள்ளேயே போய் விட்டது. இனி பீடி குடிப்பது இல்லை என்றும், எடுப்பது பிச்சை இல்லை "பிக்ஷை" என்றும் அந்த வித்வான் சொன்னதை அவன் நினைத்த படியே அந்த கிராமத்திற்குள் தன்னுடைய கம்பீரக் குரலால் "ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்"  என்று யார் வீட்டின் முன்பும் நிற்காமல் பாடிக்கொண்டே மெல்ல நடந்தபடி  தனது "உஞ்சவிருத்தி" யைத் துவங்கினான்.        

இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலை திறப்பு

london-gandhi-statue-cameron
லண்டன் பார்லிமென்ட் வளாகத்தில் அமைந்த காந்திஜி சிலைத் திறப்பு நிகழ்ச்சியில்…
லண்டன்: இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இங்கு காந்தியடிகளின் சிலையும் தற்போது நிறுவப்பட்டுள்ளது. 9 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலை, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைத் திறப்பு விழாவில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தனர். அப்போது காந்திஜிக்கு மிகவும் விருப்பமான ’ரகுபதி ராகவ ராஜாராம்’  பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த சிலைத் திறப்பு விழாவில்   அமிதாப் பச்சன், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை கேமரூன் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்….  

சபரிமலை நடைதிறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக 24-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும். மாசி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை கடந்த மாதம் 17-ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5.30-க்கு திறக்கிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபூஜை, சகரஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற பூஜைகளும் நடைபெறும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக வரும் 24-ம் தேதி மாலை நடை திறக்கிறது. 25-ம் தேதி காலையில் கொடியேற்று விழா நடக்கிறது, தொடர்ந்து விழாவில் தினமும் இரவு ஸ்ரீபூதபலி என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 26-ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் ஏப்ரல் 2ஆம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உற்சவபலி நடக்கிறது, 9ஆம் நாள் விழாவில் இரவு சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். 3ஆம் தேதி காலை எட்டு மணிக்கு யானை மீது சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

நம்பிக்கை அளித்த மோடியின் யாழ். பயணம்: நூலகத்துக்கு நூல்கள் வழங்க உறுதி

modi-lanka1
யாழ்ப்பாணம் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்ப் பாரம்பரியப்படி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு
 யாழ்ப்பாணம்: இலங்கையில் அனைத்து மக்களும் சம வாய்ப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கொழும்புவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வந்தார். அப்போது, முன்னர் சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட மோடி, யாழ். நூலகம் மீண்டும் சிறப்பைப் பெற தேவையான நூல்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். முன்னதாக, காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தினர்.  

முன்னதாக, இலங்கையில் அனுராதபுரத்தில், அசோக மன்னரின் மகளால் நடப்பட்ட போதி மரத்தின் அடியில் மோடி பிரார்த்தனை செய்தார். புத்தர் ஞானமடைந்த போதி மர கிளையை அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரை 2500 ஆண்டுகளுக்கு முன்பு அனுராதபுரத்தில் நட்டார். இந்தப் புகழ்பெற்ற மகா போதி மரத்தடிக்கு பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் சென்றனர்.அங்கு இருவரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். காவி வண்ண ஆடையை மரத்தின் மீது போர்த்தினர். அப்போது ஏராளமான புத்த பிட்சுகள் மோடியை வரவேற்றனர். பின்னர் கி.பி.140-ம் ஆண்டில் ருவான் வெலிசேயா என்ற இடத்தில் நிறுவப்பட்ட ஸ்தூபியையும் அவர் பார்வையிட்டார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அனுராதபுரம் போகிறேன். அத்துடன் தலைமன்னார், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிக சிறப்பான நாள்’ என்று கூறினார். அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் சென்ற மோடி, அங்கே மதவாச்சி-தலைமன்னார் இடையிலான புதிய ரயில் பாதையைத் துவக்கிவைத்தார். இந்த ரயில் பாதையை இந்தியன் ரயில்வே அமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த ஆகியவற்றை விளக்கி, பிரதமர் மோடியிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலத்துக்குப் பின்னர் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், யாழ்ப்பாணம் வந்த மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கே யாழ். பொது நூலகம் அருகே அமையவுள்ள கலாச்சார நிலைய தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

modi-house-pongal
யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பொங்கப்பட்ட பொங்கல் பானையில் என்னவெல்லாம் போட்டீர்கள் என்று கேட்டபடி….
பின்னர் இந்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டத்தை பார்வையிட்டு, வீடிழந்தவர்கள், ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார். இந்திய அரசின் சார்பில் யாழ்பாணத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 27,000 வீடுகளை வழங்கிய மோடி, “இது மிகவும் அருமையான திட்டம். இது போன்ற திட்டம் குஜராத்தில் 2001ம் ஆண்டு பூகம்பத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 27,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 27,000 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சி.
modi-girl-wish
வீடு வழங்கும் திட்டத்தில், வீட்டினை ஒப்படைத்தபோது, பயனாளியின் சிறுமி தான் ஆசிரியை ஆக விருப்பம் தெரிவித்ததைக் கேட்டு மகிழும் மோடி…
modi-srilanka
வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், பயனாளி ஒருவரின் குழந்தையின் கன்னத்தை கிள்ளி மகிழும் மோடி!
இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்… என்றார் மோடி. முன்னதாக, தனது பேச்சின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் துவக்கினார். அது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய மோடி, இன்னும் அதிக அளவில் இந்திய அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசின் உறுதியையும் எடுத்துரைத்தார்.

கொழும்பு திரும்பும் முன்னர், தமிழர் பிரதிநிதிகள், முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள், இந்திய வம்சாவளி தலைவர்கள் என பலரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக்கேட்டறிந்தார். இது குறித்து தங்களது மகிழ்ச்சியை பிரேமசந்திரன் வெளிப்படுத்தினார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தம்முடன் பேசிய மோடி, தங்களின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பொறுமையாகக் கேட்டதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தம்மிடம் கூறியாதாகத் தெரிவித்தார். மோடியின் பயணம் தங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்து ரூ. 10 லட்சத்துடன் கும்பல் ஓட்டம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு

crimeகோல்கத்தா: 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை ஆசிரமத்துக்குள் புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அங்கிருந்து ரூ. 10 லட்சத்தையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதுகுறித்து மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஆசிரமம் ஒன்று உள்ளது. சனிக்கிழமை இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அந்த கான்வென்டுக்குள் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், புகுந்தது. அப்போது அங்கிருந்த ஓர் ஆசிரியை அவர்களை மறித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அந்த ஆசிரியையை கட்டிப் போட்டு உள்ளே சென்றது. இந்த ஆசிரியை, கான்வென்டுக்கு அருகே உள்ள பள்ளியில் பணி செய்கிறாராம். பின்னர், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியை அந்த ஆசிரியையின் கண் முன்பே தாக்கியது. அவரது கழுத்தை நெரித்து அவரை கொடூரமான நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது. அந்த கன்னியாஸ்திரி மயங்கிய நிலையில் கிடந்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ. 10 லட்சத்தைக் கொள்ளயடித்து ஓடிவிட்டது. பின்னர் அந்த கன்னியாஸ்திரி நாடியா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். கோல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம். காலையில் கான்வென்டுக்கு வந்த மற்றவர்கள் மூலம் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது. இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் இந்தக் கொடூரத்தைக் கண்டு கொதித்தெழுந்த உள்ளூர் மக்கள், கோல்கத்தாவையும் சிலிகுரியையும் இணைக்கும் எண் 34 தேசிய நெடுஞ்சாலையிலும், சீல்டா – ரனாகட் ரயில் பாதையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்துக்கு மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஃபிர்ஹத் ஹகிம், கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னர் 2012 பிப்.யில் பார்க் தெருவில் நிகழ்ந்த ஒரு பலாத்காரச் சம்பவத்தில் ஒரு பெண் பலியானது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, தனது அரசுக்கு எதிராக வேண்டுமென்றே புழுதி வாரித் தூற்ற இந்தச் சம்பவத்தை ஜோடிப்பதாக கூறியிருந்தார்.