Home Blog Page 6233

ரெய்னாவின் அசத்தல் சதத்தில் இந்தியா வெற்றி

suresh-dhonyஉலகக் கோப்பையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி இன்று எதிர் கொண்டது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதிக்கு  தகுதிப் பெற்றுவிட்டதாலும் ஜிம்பாப்வே அணி காலிறுதிக்கு செல்லும் தகுதியை இழந்துவிட்டதாலும் ஆட்டத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில்  இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானம் சிறிய பவுண்டரிகளுக்குப் பெயர் பெற்றது. எனவே இந்திய அணி டாஸ்  வெற்றி பெற்றால் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் டாஸ் வென்ற தோனி  ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்த உலகக் கோப்பை முழுவதும் நன்றாக பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இதிலும் அருமையாகத் துவங்கினர். சிறிய மைதானம் என்றாலும், துவக்கத்தில் அவர்களால் ரன்கள் அடிக்க இயலவில்லை.  ஹேமில்டன் மசக்ட்ஷா யாதவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க ஆட்டக்கரார் சிபாப்வா ஸ்லிப்பில் இருந்த தவனிடம்  கேட்ச் கொடுத்தார்.

வழக்கமான பேட்டிங்கை மாற்றி பந்துவீச்சாளரான மிரே மூன்றாவது ஆட்டக்காரராக களம் புகுந்தார். ஆனால் இந்த யுக்தியும் பலிக்கவில்லை. அவரை மொஹித் சர்மா பெவிலியன் அனுப்பினார். இதன் பின் சென்ற ஆட்டத்தில் சதமடித்த பிரெண்டன் டைலரும் , ஷான் வில்லியம்சும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்க்கத் துவங்கினர். கடந்த ஐந்து ஆட்டங்களாக சுழலில் கலக்கிய அஸ்வினின் பந்து வீச்சு ஆக்லாந்தின் சிறிய மைதானத்தில் எடுபடவில்லை. மேலும் வழக்கமாய் பந்து வீசுவதை விட வேகமாய் பந்து வீச , அது பேட்ஸ்மேனுக்கு உதவியாக அமைந்தது.

இருவரும் இணைந்து 93  ரன்கள் எடுத்திருந்த பொழுது வில்லியம் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் அது டைலரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை . தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 99 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 138 ரன்கள் எடுத்த நிலையில் மொஹித்  ஷர்மா  பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்தவர்களில் யாரும் நின்று ஆடாதக் காரணத்தால் 287 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஷமி , யாதவ், மொஹித் மூவரும் தலா மூன்று விக்கெட்களையும் அஸ்வின்  ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் சதமடித்த டைலர் இதோடு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறார் என்பதுக் குறிப்பிடத்தக்கதாகும்

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் புகுந்த இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சிக் கொடுத்தனர் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள். ரோஹித் ஷர்மா விக்கெட்டையும் தவான் விக்கெட்டையும் பன்யங்கரா  கைப்பற்றினார். அதன் பின் களம் இறங்கிய  விராத் கொஹ்லி , ரஹானே ஜோடி நிலைமையறிந்து நிதனாமாக ஆடத் துவங்கினர். இருவரும் நிலைத்து ஆடத் துவங்கிய நேரத்தில் ரன்னே இல்லாத இடத்தில் ரன் எடுக்க முயன்ற ரஹானே ஒழுங்காக பேட்டை க்ரீசினுள் வைக்காதக் காரணத்தினால் நூலிழையில் ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் கொஹ்லியும் ராஜாவின்  பந்தில் ஆட்டமிழக்க இந்த உலகக்  கோப்பையில் முதல் தோல்வியை இந்தியா சந்திக்குமோ என்று எண்ணத் துவங்கினர் இந்திய ரசிகர்கள்.

இதன் பின்னர் ஐந்தாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தோனியும்  ரைனாவும் முதலில் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக சேர்த்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து சிக்ஸ் அடிக்க முயன்ற ரைனாவின் பேட்டின் மேல் விளிம்பில் பட்டு பைன் லெக் திசையை நோக்கி செல்ல , எளிதான ஒரு கேட்சை  மசக்ட்ஷா கோட்டை விட்டார். அதன் பின் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி தேவையான ரன்களை குவித்தனர். ஓவருக்கு எட்டு ரன்கள் தேவை என்ற கட்டத்தில் இருந்து சரிக்கு சரியாக மாறிய நிலையில் ரைனா உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் சதம் அடித்தார். அவர் சதம் அடித்தப் பின் தோனி  தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா தனது ஆறாவது வெற்றியை ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் ருசித்தது.

மெல்போர்ன் மைதானத்தில் அடுத்த வியாழனன்று நடக்க இருக்கும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்தியா தொடர் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

ஆக்லாந்து: இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப்பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகள்லும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து இந்திய அணி தொடர் வெற்றியைப் பதிவு செய்ததுடன், விளையாடிய 6 போட்டிகளிலும் எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும்பதிவு செய்துள்ளது. இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிலம் கையகப் படுத்தும் சட்டம்: காங்கிரஸ் 17ம் தேதி பேரணி

புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக வரும் 17ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால் அவை தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் பாணியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பீகாரில் இன்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் உண்ணாவிரதம் இருக்கிறார். நாளை லாலு பிரசாத் யாதவ் பீகார் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தில்லியில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வரும் மார்ச் 17 செவ்வாய்க்கிழமைஅன்று பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளாராம்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம்: துவக்கினார் நிதிஷ் குமார்

பாட்னா: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்று காலை ஐக்கிய ஜனதா தளக் கட்சி அலுவலகத்துக்கு வந்த நிதிஷ் குமார், அங்கு யோகா பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். நிதிஷ்குமாருடன் கட்சியின் மூத்த தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர்.

ஒரு ஸ்மார்ட்போன்கூட நான் வைத்துக் கொள்ளவில்லை: ஒபாமா

அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கூட நான் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இதுகுறித்து ஒபாமா கூறியபோது, நான் பொதுவாக டிவிட்டர்களில் டிவிட்(குறுந்தகவல்) செய்வதில்லை. யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை, இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி ( கைபேசி) போன் மட்டுமே உள்ளது…. ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடனும் நண்பர்களுடனும் தகவல்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். நான் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட கைபேசிகளையும் நான் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=AXxnbZbzYXs”]

சங்கராபரணம் விமர்சனம்

sangarabaranamசுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும் செறிவும் இருந்துள்ளது தான் படத்தின்சிறப்பு. ‘சங்கராபரணம்’ சங்கர சாஸ்திரிகள். ஒரு சங்கீத மாமேதை. நாதம் அவர் நாவில் குடியிருக்கும் சங்கீதம் சாரீரத்தில் கொலுவிருக்கும். தன் வித்தை மீது அவருக்கு கர்வமுண்டு இசையே வாழ்க்கை என்பதால் குடும்பம் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு மகள் உண்டு பெயர் சாரதா. கௌரவமும் பெருமிதமும் கொண்ட அவர், வெளியூருக்குக் கச்சேரிக்கு போகிறார். அங்கு அவரைப் பார்க்க துளசிஎன்பவள்  வருகிறாள். அவளுக்கு அவருடைய சங்கீதம் மீது ஈர்ப்பு ,காதல் ,மோகம் மதிப்பு எல்லாம் உண்டு.நடனம் அவளது தனிச்சிறப்பு.அவர் பாடும் போதெல்லாம் அவள் அதைக்கேட்டு ஆடுவாள்.  சங்கர சாஸ்திரிகளைத் தன்  மானசீக குருவாக்கி அவரைத் தொடர்கிறாள் .அவர்களுக்குள் இருப்பது குரு சிஷ்யை என்கிற புனித உறவுதான். அவளது அம்மாவோ மகளுக்கு கலைகளைக் கற்றுக் கொடுத்துத் தாசியாக்கி காம வியாபாரம் செய்ய முயல்கிறாள். அச்சூழலில் அவளை ஒரு ஜமீன் கெடுத்து விடுகிறான். தீண்டியவன். தொடர்கிறான்.  தீண்ட முயன்ற  ஜமீனை தாங்க முடியாமல்  கண்ணாடியை உடைத்து குத்தி விடுகிறாள் துளசி. தன்னை நாடி வந்த அப்படிப்பட்ட துளசியை அழைத்துக் கொண்டு வீடு வருகிறார் சங்கர சாஸ்திரிகள். துளசி பற்றி ஊர் தூற்றுகிறது. வீட்டிலிருந்த மனைவி இது அபச்சாரம் என்று கூறி வெளியேறி விடுகிறாள். தன்னால் குருவுக்கு அவமானம் என்று கூறி  ஒருகட்டத்தில் விலகிச் சென்று விடுகிறாள் துளசி..தன் வயிற்றிலிருக்கும் கொடியவன் கொடுத்த பிள்ளையை வளர்த்து, தெரியாமல் குருவின் வீட்டுக்கு அனுப்பி தன்பிள்ளை என்று யாருக்கும் தெரியாமல்  சாஸ்திரியின் சங்கீத சீடனாக்குகிறாள். தன் மானசீக பீடத்தில் இருக்கும் குருவின் பெயரால் ஒரு கலையரங்கம் கட்டி அவரை பாட வைக்கிறாள் துளசி. குருவின் இழந்த பெயர் மீட்கப் படுகிறது. அது துளசியின் மண்டபம், சீடன் துளசியின் பிள்ளை என்று கடைசியில்தான் தெரிகிறது. தெரியும் போது சாஸ்திரியின் உயிர்பிரிய. தொடர்ந்து துளசியும் உயிர்விட. படம் முடிகிறது. ‘சங்கராபரணம்’என்றால் விஷப் பாம்பு என்று பொருள். சங்கரனாகிய சிவன் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்பு என்று பொருள். படத்தில் சங்கர சாஸ்திரிகளாக சோமயாஜுலு வாழ்ந்திருக்கிறார். நடை உடை பாவனை பார்வை உடல்மொழி என எல்லாவற்றிலும் கச்சிதமான நடிப்பு. சங்கீத திறமை காட்டும் காட்சிகளிலும், இசை பற்றிய சீண்டலின் போது சீற்றம் கொள்ளும் கட்டத்திலும் நிரபராதியான துளசிக்கு அடைக்கலம் தரும் போதும் நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் சோமயாஜுலு  . இது போன்று நிறைய இடங்கள் உண்டு. தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிற மாப்பிள்ளை என்ற போதும் ரிஷபம் என்பதை சரியாகச் சொல்லத் தெரியாததால் இந்த சம்பந்தமே வேண்டாம் என்று ஒதுக்கும் கோபம் அட டா.. கர்நாடக சங்கீதமா மேற்கத்திய சங்கீதமா என்று இளைஞர்கள் சவால் விடும் காட்சியில் சவாலை எதிர்கொண்டு பதில் சவால் விடும் காட்சியில் அதிர வைக்கிறார். பெண் பார்க்கும் தருணத்தில் மகள் ராகத்தை மாற்றிப் பாடிவிட வெகுண்டெழுகிறார். இப்படி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் சோமயாஜுலு. துளசியாக வரும் மஞ்சுபார்கவி, படத்தில் முதல் 40 நிமிடங்கள்  பேசவே மாட்டார்.  அந்தக் குறை எதுவும் தெரியாத படி அவரது பாத்திரம் பற்றி அவரது கண்களே பேசி விடுகின்றன. மஞ்சுபார்கவி இடத்தில் யாரையும் யோசிக்க முடியவில்லை.அப்படி ஒரு பொருத்தம்.அவர் படத்தில் பேசும் வசனங்களே மிகக் குறைவுதான் .ஆனால் இறுக்கமும் மௌனமும் பெரிய மொழி என்று நிரூபிக்கிறார் ..அந்தக் குறையை அவரது மகனாக சுட்டி குட்டிப் பையனாக வரும் துளசி போக்குகிறார். துறுதுறுவென நடை பேச்சு என கொள்ளை கொண்டு விடுகிறார் நடிகைதுளசி. ‘சங்கராபரணம்’ராஜலட்சுமி இதில்தான் அறிமுகம். சோமயாஜுலுவின் மகளாக வருகிறார். மனதில் பதிகிறார். மாப்பிள்ளையாக வருபவர் நண்பராக வருகிறவர் என எல்லாருமே தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்கள். படத்தின் பாடல்கள் இன்றும் இனிப்வை எஸ்.பிபி,வாணி ஜெயராம், ஜானகி குரல்களில்  தேன் சொட்டுகின்றன பாடல்கள் . சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை அழகுணர்ச்சி வழியும் காட்சிகளால் மெய்ப்பிக்கிறார் கேமராமேதை பாலுமகேந்திரா. சீர்திருத்தக் கருத்து, சங்கீதப் பெருமை ,மேற்கத்திய மோகம் என எல்லாமும் பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறுப்பு குன்றாத மொழிமாற்று முயற்சி. சோமயாஜுலுவுக் குரல் கொடுத்துள்ள ராமு துல்லியமாக குரல் மூலம் நடிப்பையும் வழங்கியுள்ளார். இப்போதெல்லாம் ஒருபாபடலுக்கே கழிப்பறை தேடி வெளிநடப்பு செய்கிறார்கள் ரசிகர்கள். இக்காலத்திலும் அனைத்துப் பாடல்களும் இனிக்கின்றன .உட்கார வைக்கின்றன காரணம் எல்லாமே சூழலுடன் வருகின்றன. படம் பார்த்து முடிந்ததும் இயக்குநர் கே.விஸ்வநாத், இசைமேதை கே.வி. மகாதேவன்,கேமராமேதை பாலுமகேந்திரா. ஆகியோரை வணக்கம் செய்யத் தோன்றுகிறது.

மேகதாது- தமிழகத்துடன் பேச விரும்பவில்லை; காவிரி நீர் உரிய முறையில் வழங்கப் படும்: எம்.பி. பாட்டீல்

பெங்களூரு: மேகதாது அணைத் திட்டங்கள் குறித்து, தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால், தமிழகத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறினார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல். நேற்று கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை குறித்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் இது குறித்து கூறியபோது, கர்நாடக பட்ஜெட்டில் நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.12,956 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு தேவைப்படும் திட்டங்களை கொண்டு வருவோம். காவிரியின் உபரிநீரை கர்நாடகம் முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பாக புதிய நீர்க் கொள்கை வகுக்கப்படும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறியுள்ள அளவுப்படி, தமிழ்நாட்டுக்கு உரிய நீர் வழங்கப்படும். ஆனால், மேகதாதுவில் புதிய‌ தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிப்ப‌து சரியல்ல. மேகதாது விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகளின் போராட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே மேகதாது திட்டம் குறித்து தமிழக அரசுட‌ன் கர்நாடகா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. க‌ர்நாடக எல்லைக்குள் மக்களின் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவது கர்நாடக அரசின் உரிமை. இதில் தமிழ்நாடு தலையிட முடியாது. மேகதாது கூட்டுக் குடிநீர் திட்ட வரைவு கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு, மத்திய சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்தவுடன் அங்கே தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்படும். அணை கட்டுமானப் பணிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் 6 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்துள்ளன என்று கூறினார்.

மேகதாது அணை – கர்நாடகத்தின் அத்துமீறலை வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் போதிலும், தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், மேகதாது அணை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது களமிறங்கியுள்ள கர்நாடக அரசு, புதிய அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 நிறுவனங்களை முதற்கட்டமாக தேர்வு செய்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதியை நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஒதுக்கியுள்ளார். புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்த பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானவை என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியவையாகும். கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு அனுமதிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணையில் 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. தமிழகத்தில் வடக்கே சென்னையில் தொடங்கி, தெற்கே மதுரை, இராமநாதபுரம் வரை உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரி நீர் தான் நிறைவேற்றுகிறது. மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால், இத்திட்டங்கள் பயனற்றுப் போய்விடும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நீர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பது தான். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 8 ஆண்டுகளும், மத்திய அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு இரு ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்தியில் ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் முன்வராதது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற அடுத்த வாரமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அறிவித்தார். ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து அமைச்சர் உமாபாரதியின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமைக்கப்படாது என்பதையும், காவிரி பிரச்சினை தொடர்பாக எந்த சிக்கல் வந்தாலும் மத்திய அரசு தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டு தான் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஆணையையும் மதிக்காமல் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் செயல்படும் நிலையில், தமிழகத்தில் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது தான் தமிழகத்தின் சாபக்கேடு. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்படி பலமுறை வலியுறுத்தியும் ‘எல்லாம் தெரிந்த முதலமைச்சர்’ அந்த யோசனையை ஏற்கவில்லை. மேகதாது அணை கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் அக்கறையை புரிந்து கொள்ளலாம். காவிரி நீர் இல்லை என்றால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் இல்லை என்பதை உணர்ந்து கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீதியின் நோக்கில் பார்த்து மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

மேகதாது அணை- கர்நாடகம் மும்முரம்: சித்தராமையாவின் அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்டுவதில், மாநில அரசு மும்முரமாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணைகள் கட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவத‌ற்காக‌ உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எதிரணியை ‘ஆல் அவுட்’ செய்து இந்தியா சாதனை

ஆக்லாந்து: உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக எதிரணியினரை ஆல் அவுட்செய்து சாதனை படைத்து வருகிறது. இன்று ஆக்லாந்தில் நடைபெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 48.5 ஓவரில் ஜிம்பாப்வேயின் அனைத்து விக்கெட்களையும் இந்திய அணி கைப்பற்றியது. ஜிம்பாப்வே அணி 287 ரன் எடுத்து 288 ரன்னை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது.