Home Blog Page 6234

நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

jayalalitha சென்னை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது தவறு எனவும், இது பெரும் பண முதலாளிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான சட்டத் திருத்தங்கள் என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். இச் சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அதிமுக, என்ன காரணத்தினாலோ, ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் உள்ள பாஜக அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்களை அவசரச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு கொண்டு வந்தது. மக்களவையில் இந்த மசோதா கடந்த 9-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில், பாஜக அரசு மேலும் 9 திருத்தங்களை கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்தச் சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அதிமுகவின் முடிவாகும். அதன்படி, இந்தச் சட்டத் திருத்தத்தை எனது உத்தரவின்படி அதிமுக முன்மொழிந்தது. இதை ஏற்றுக் கொண்ட பாஜக அரசு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது. இதைத் தொடர்ந்து, எனது உத்தரவின்பேரில் நில கையக சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. நன்மைக்கு மட்டுமே ஆதரவு: அதிமுகவைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை ஏற்படுத்தக் கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரானவற்றை எதிர்ப்பது என்பதும்தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும். அந்த அடிப்படையில் இந்த சட்டத் திருத்தத்தையும் அதிமுக ஆதரித்தது. என்னைப் பொருத்தவரை, விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதைச் செயல்படுவத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்பதால் அதை தமிழகத்தில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபடத் தெரிவித்தேன். அதன்படி, அது தடுத்து நிறுத்தப்பட்டது. மரபணு மாற்றப் பயிர்களுக்கும் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, மீத்தேன் எரிவாயுத் திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசின் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், தமிழக மக்களின் நன்மைக்காவே நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்தது என்பதை இப்போதாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயின் டெய்லர் தனது கடைசிப் போட்டியில் அசத்தல் சதம்!

ஆக்லாந்து: ஜிம்பாப்வேயின் டெய்லர், இந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அருமையான சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டியின் 39-வது லீக் சுற்று ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில், இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. துவக்கத்தில் பந்துவீச்சில் அசத்தினர் சமி, உமேஷ் யாதவ், மோகித் சர்மா ஆகியோர். இதனால் ஜிம்பாப்வே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டெய்லர் வில்லியம்ஸ் இணை சிறப்பாக விளையாடியது. வில்லியம்ஸ் 57 பந்தில் 50 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். அவர் 110 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுன்டரிகளுடன் 138 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் அளித்தனர். இது அவருக்கு கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.

லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை: அருண் ஜேட்லி திறக்கிறார்

லண்டன்: லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை இன்று திறந்து வைக்கிறார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அந்நாட்டின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனை சந்தித்து பேசினார். பின்னர் சனிக்கிழமை இன்று பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையைத் திறந்து வைக்கும் அருண் ஜேட்லி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய100-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் லண்டன் பார்லிமென்ட் வளாகத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள காந்தியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கிறார்.

எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனுக்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்

15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ? (லக்னோ: எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்.) உ.பி., மாநிலம் கான்பூர் அருகே உளள ரசூலாபாத்தி்ல் வசித்து வரும் இரு குடும்பத்தினரிடையே கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண தினம் நெருங்கி வந்த வேளையில் மணமகள் மணமகனிடம் விளையாட்டாக எளிய கணக்கு ஒன்றை கேட்டார். கணக்கிற்கான பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் எளிய வகை கணக்கிற்கு கூட விடை சொல்ல தெரியாதவனை திருமணம் செய்ய முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியது மட்டு மல்லாமல் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகனின் வீ்ட்டார் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத மணமகளின் தந்தை போலீசார் மூலம் மணமகனிற்கு அளித்த வரதட்சனை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார். 15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ?மணப்பெண் கேட்ட கேள்வி இது தான். மாப்பிள்ளை உடனடியாக அளித்த பதில் 17 என்பதாகும்.

என் தோல்விக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தூதரகங்களை பயன்படுத்தின: ராஜபட்ச

rajapaksha கொழும்பு; ஜனவரியில் நடந்த தேர்தலில் என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவை தேவையற்ற வகையில் இலங்கை அரசியலுக்குள் இழுப்பதன் மூலம், இலங்கையின் புதிய அரசு நாட்டுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘சௌத் சீனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குறிப்பிட்டுள்ள விஷயங்கள்… அது மிகவும் வெளிப்படையான ஒன்று. அமெரிக்க, நார்வே, ஐரோப்பியர்கள் மிகவும் வெளிப்படையாகவே வேலை செய்தார்கள். இந்திய உளவு அமைப்பு ‘ரா’ வும் தான்! இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது தூதரகங்களை எனக்கு எதிராக பயன்படுத்தின. – என்று அந்தப் பேட்டியில் ராஜபட்ச கூறியுள்ளார். முன்னதாக கொழும்புவில் இருந்து வெளியாகும் ஊடகத்தில் ராஜபட்சவைத் தோற்கடிக்க, அவருக்கு எதிரான கட்சிகளை (எஸ் எல் எஃப் பி, யு என் பி) ஒன்றிணைக்கும் வேலையில் ரா அமைப்பின் அதிகாரி ஈடுபட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவரை அந்நாட்டை விட்டு வெளியேறக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஊடக செய்திகளை இந்தியா அதிகாரபூர்வமாக மறுத்தது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அதிகாரிகள் மாற்றப்படுவர் என்றும், அவ்வாறு மாற்றப்பட்ட அதிகாரிகள் தங்களது 3 வருட பணிக்காலத்தை நிறைவு செய்தவர்கள் என்றும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியில் மேலும், நான் இந்தியர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளேன். ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்? என்று. அவர்கள் செய்தது வெளிப்படையான ரகசியம். நான் அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன்… எக்காரணம் கொண்டும் இலங்கையின் மண்ணை நட்பு நாடுகளுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று. ஆனால் அவர்களுக்கு வேறு ஏதோ நோக்கம் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் மேலும் ராஜபட்ச குறிப்பிட்டுள்ளது… சீனா அளித்த உதவிகளுக்காக அந்த நாட்டுக்கு இலங்கை நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.  அதற்கு மாறாக இவர்கள் சீனாவை ஒரு குற்றவாளி போன்று நடத்த முயல்கின்றனர். இது தனது நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என சீனா கருதவேண்டாம் என நான் சீனாவைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என் மீது தாக்குதல் தொடுப்பதற்காக சீனாவைத் தாக்குகின்றனர். ஆனால், இதன் காரணமாக இலங்கைக்கு உதவுவதை சீனா நிறுத்தக்கூடாது. நான் சீனா சார்பான நபர் என்கின்றனர். நான் அப்படி யார் சார்பான நபரும் இல்லை. நான் இலங்கையை வளரச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த வளர்ச்சிக்கான விஷயத்தில் எனக்கு உதவ வளங்களையும், விருப்பத்தையும் அந் நேரத்தில் சீனா மட்டுமே கொண்டிருந்தது. உதாரணத்துக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் நான் இந்தியாவுக்கு வழங்க முன்வந்தேன், ஆனால் அவர்கள் அதில் அப்போது ஆர்வம் காட்டவில்லை. அப்போது, எனக்குத் தேவையான நிதியை சீனா மட்டுமே தரக் கூடியதாக இருந்தது. இப்போது ஒன்றைச் சொல்ல வேண்டும், கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்துக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்டது என அவர்கள் தெரிவிப்பதில் உண்மையில்லை.. என்று கூறியுள்ளார் ராஜபட்ச. இனி சீன நீர்மூழ்கிகளுக்கு இடமில்லை என்று சீனாவில் வைத்து மங்கள சமரவீர கூறியது குறித்த பதிலாக,  சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வந்த விவகாரத்தில், சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு அது குறித்து தெரிவிப்போம். சீன அதிபர் இங்கு வந்ததால் அப்போது நீர்மூழ்கிகள் வந்தன. சார்க் மாநாட்டுக்காக 2008 இல் இந்தியப் பிரதமர் இங்கு வந்தபோது எத்தனை கப்பல்களும், நீர்மூழ்கிகளும் இலங்கைக்க்குள் வந்தன என்பதைப் பாருங்கள்…. என்று கேட்டுள்ளார் ராஜபட்ச. தன்னை மீண்டும் அரசியலுக்கு வரச் செய்ய பலரும் முயற்சி செய்வதாகக் கூறுகிறார் ராஜபட்ச. அதிகாலையிலிருந்து இரவு வரை மக்கள் என்னைப் பார்க்க வருகின்றனர். இதுவே எனது புதுவாழ்க்கை. அவர்கள் என்னை அரசியலுக்கு மீண்டும் வருமாறு கோருகின்றனர். எனக்கு எதிராக வாக்களித்ததற்காக மன்னிப்பு கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நான் அவர்களிடம் என்னை ஓய்வெடுக்க விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்கிறார் ராஜ்பட்ச. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள ராஜபட்ச, நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாத நிலையை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. மக்கள் தங்கள் துயரங்களை தெரிவிப்பதற்கு எங்கே செல்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ராஜபட்ச, மக்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம். நான் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கெனவே தனது தோல்விக்கு இந்திய அமெரிக்க நாடுகளைக் குற்றம் சாட்டிவரும் ராஜபட்ச, சீனாவில் இருந்து வெளியாகும் ஊடகத்தில் இத்தகைய திடீர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பயணம் செய்து வரும் நிலையில், ராஜபட்சவின் பேட்டி சீன ஊடகத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிள்ளிவளவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன்  சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (13.03.2015) காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர்; இணைந்து பணியாற்றியவர். எனக்கும் நல்ல நண்பராக திகழ்ந்தார். ஊழல், பணத்தாசை ஆகியவற்றின் நிழல் கூட தம்மை நெருங்காமல் பார்த்துக் கொண்டவர். இளம் வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதி வரை அரசியலில் இருந்தாலும் எளிமை ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் தமது விரல் நுனியில் வைத்திருந்தவர். அவரது மறைவு தமிழக அரசியல் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் தி.சு. கிள்ளிவளவன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு
தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
 மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழக அரசு வரும் மார்ச் 15ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்துவதாக அரசாணை பிறப்பித்துள்ளது.  தமிழக அரசின் இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள்  வரவேற்கிறது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அவலம் இந்தியாவில்  நீடித்து வருவது சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்குப் பெரும் தலைகுனிவாகும். உயர் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், மனிதக் கழிவுகளை அகற்றுவதில் உயர்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியதாகும். தனிநபர் இல்லங்களில் இத்தகைய நடைமுறை நீடிப்பது ஒருபுறமிருந்தாலும், இந்திய இரயில்வே துறையில் இந்தப் போக்கு நீடிப்பது அவமானத்துக்குரியதாகும்.
அரசின் புள்ளி விவரப்படி சுமார் 3 இலட்சம் பேர் இத்தொழிலில்  ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இரயில்வே துறையில் எத்தனையோ உயர்தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செலுத்தாதது ஏன் என்று விளங்கவில்லை.
 இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாடாளுமன்றத்தில் பலமுறை வலுவாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரையில் இதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் குறிப்பிடப்படுவதோடு மட்டும் சரி. மேற்கொண்டு அரசு அதை நடைமுறைப்படுத்துவதற்காக எந்தச் செயல்திட்டங்களையும் அறிவிப்பது இல்லை.
ரயில்வே துறையின் நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையிலும் அமைச்சர் உரிய விடையளிக்கவில்லை. அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்தது.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த இழிவை ஒழிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்துவரும் நிலையில், தமிழக அரசு இச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாதது ஏற்புடையதல்ல.
 உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்பாவது நடைமுறைக்குக் கொண்டுவருவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் மக்களை இந்த அவலத்திலிருந்து மீட்பதற்கேற்ற வகையில் இந்திய அரசு தீவிரமாக நடவடக்கை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் நிலம் கையப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்த முனையும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்க முன்வராதது மிகுந்த வேதனையளிக்கிறது.
மேலும், ‘தூய்மை இந்தியா’ எனும் பெயரில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டும் இந்திய அரசு கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றிக் கவலைப்படாதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மலக் குழியில் அன்றாடம் மூழ்கி எழும் மனிதனின் வாழ்வைப் பார்த்த பிறகும் அவன் மீது கருணை காட்டுவதற்கு நெஞ்சில் ஈரமில்லாப் போக்கினையே வெளிப்படுத்துகிறது. அவனையும் மீட்பதிலிருந்துதானே தூய்மை இந்தியாவை முழுமை செய்ய முடியும்.  இல்லையேல் அது வெறும் விளம்பரத் திட்டமாகவே இருக்கும்.
எனவே, இந்திய அரசு, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடைசெய்யும் சட்டத்தை இந்தியா முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  அத்துடன், தமிழக அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத் தக்கது : ராமதாஸ்

டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை புரசைவாக்கத்தில் இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
82 வயதான டிராபிக் ராமசாமி மகிழுந்தின் கண்ணாடியை உடைத்தார் என்பதும், தொழிலதிபரை மிரட்டினார் என்பதும் நம்பவே முடியாத குற்றச்சாற்றுகள் ஆகும். இவற்றின் அடிப்படையில் அவரை காவல்துறை கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி சென்னையின் பல பகுதிகளில் ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றுவதில் டிராபிக் இராமசாமி தீவிரம் காட்டி வந்தார்.
கிரானைட் ஊழல் குறித்து சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரை பழிவாங்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அரசும், காவல்துறையும் நடக்காத ஒரு நிகழ்வுக்காக தொழிலதிபரிடம் புகார் பெற்று கைது செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இராமசாமி கைது செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது இதை உறுதி செய்கிறது. கைது செய்யப்பட்ட இராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ரத்தக் கசிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரை விடுதலை செய்வதுடன், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்.

காவல்துறையைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகரக் காவல் துறையைக் கண்டித்து, மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை இந்து முன்னணி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்…. புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்த இருந்த இந்துக்களின் புனிதமான தாலியை கேவபப்படுத்தும் நிகழ்ச்சியை ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 10 பேரைக் கைது செய்து, இதுவரை ஜாமினில் வெளியிட தாமதப்படுத்தும் சென்னை மாநகரக் காவல்துறையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெற இருக்கிறது. இதில் மாவட்ட, மாநகர, வட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வரும் 15.3.2015 ஞாயிறு அன்று காலை 10.30 மணி முதல்  இந்து முன்னணி தலைமை அலுவலக வாயில் முன்பு இந்தப் போராட்டம் நடைபெறும். மாநகரச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் உரை நிகழ்த்துவார்.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும்?

indianflag ஹாமில்டன்: இந்த உலகக் கோப்பை போட்டியில், காலிறுதியில் வங்க தேச அணியுடன் இந்திய அணி மோதும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிகள், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்று ஓரளவு கடந்து விட்ட நிலையில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அது காலிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்தப் பிரிவில், இலங்கை, ஆஸ்திரேலியா வங்கதேச அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. பி பிரிவில், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் அடுத்த இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தீர்மானம் ஆகவில்லை. ஒரு பிரிவில் முதலிடம் வகிக்கும் அணி மற்றொரு பிரிவில் கடைசி இடம் வகிக்கும் அணியோடு மோத வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது ஏ பிரிவில் வங்கதேச அணி கடைசி இடத்தில் உள்ளது. எனவே பி பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதக் கூடும்!