கொழும்பு; ஜனவரியில் நடந்த தேர்தலில் என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவை தேவையற்ற வகையில் இலங்கை அரசியலுக்குள் இழுப்பதன் மூலம், இலங்கையின் புதிய அரசு நாட்டுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘சௌத் சீனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குறிப்பிட்டுள்ள விஷயங்கள்… அது மிகவும் வெளிப்படையான ஒன்று. அமெரிக்க, நார்வே, ஐரோப்பியர்கள் மிகவும் வெளிப்படையாகவே வேலை செய்தார்கள். இந்திய உளவு அமைப்பு ‘ரா’ வும் தான்! இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது தூதரகங்களை எனக்கு எதிராக பயன்படுத்தின. – என்று அந்தப் பேட்டியில் ராஜபட்ச கூறியுள்ளார். முன்னதாக கொழும்புவில் இருந்து வெளியாகும் ஊடகத்தில் ராஜபட்சவைத் தோற்கடிக்க, அவருக்கு எதிரான கட்சிகளை (எஸ் எல் எஃப் பி, யு என் பி) ஒன்றிணைக்கும் வேலையில் ரா அமைப்பின் அதிகாரி ஈடுபட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவரை அந்நாட்டை விட்டு வெளியேறக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஊடக செய்திகளை இந்தியா அதிகாரபூர்வமாக மறுத்தது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அதிகாரிகள் மாற்றப்படுவர் என்றும், அவ்வாறு மாற்றப்பட்ட அதிகாரிகள் தங்களது 3 வருட பணிக்காலத்தை நிறைவு செய்தவர்கள் என்றும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டியில் மேலும், நான் இந்தியர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளேன். ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறீர்கள்? என்று. அவர்கள் செய்தது வெளிப்படையான ரகசியம். நான் அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன்… எக்காரணம் கொண்டும் இலங்கையின் மண்ணை நட்பு நாடுகளுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று. ஆனால் அவர்களுக்கு வேறு ஏதோ நோக்கம் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் மேலும் ராஜபட்ச குறிப்பிட்டுள்ளது… சீனா அளித்த உதவிகளுக்காக அந்த நாட்டுக்கு இலங்கை நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக இவர்கள் சீனாவை ஒரு குற்றவாளி போன்று நடத்த முயல்கின்றனர். இது தனது நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என சீனா கருதவேண்டாம் என நான் சீனாவைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என் மீது தாக்குதல் தொடுப்பதற்காக சீனாவைத் தாக்குகின்றனர். ஆனால், இதன் காரணமாக இலங்கைக்கு உதவுவதை சீனா நிறுத்தக்கூடாது. நான் சீனா சார்பான நபர் என்கின்றனர். நான் அப்படி யார் சார்பான நபரும் இல்லை. நான் இலங்கையை வளரச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த வளர்ச்சிக்கான விஷயத்தில் எனக்கு உதவ வளங்களையும், விருப்பத்தையும் அந் நேரத்தில் சீனா மட்டுமே கொண்டிருந்தது. உதாரணத்துக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் நான் இந்தியாவுக்கு வழங்க முன்வந்தேன், ஆனால் அவர்கள் அதில் அப்போது ஆர்வம் காட்டவில்லை. அப்போது, எனக்குத் தேவையான நிதியை சீனா மட்டுமே தரக் கூடியதாக இருந்தது. இப்போது ஒன்றைச் சொல்ல வேண்டும், கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்துக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்டது என அவர்கள் தெரிவிப்பதில் உண்மையில்லை.. என்று கூறியுள்ளார் ராஜபட்ச. இனி சீன நீர்மூழ்கிகளுக்கு இடமில்லை என்று சீனாவில் வைத்து மங்கள சமரவீர கூறியது குறித்த பதிலாக, சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வந்த விவகாரத்தில், சீன நீர்மூழ்கிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு அது குறித்து தெரிவிப்போம். சீன அதிபர் இங்கு வந்ததால் அப்போது நீர்மூழ்கிகள் வந்தன. சார்க் மாநாட்டுக்காக 2008 இல் இந்தியப் பிரதமர் இங்கு வந்தபோது எத்தனை கப்பல்களும், நீர்மூழ்கிகளும் இலங்கைக்க்குள் வந்தன என்பதைப் பாருங்கள்…. என்று கேட்டுள்ளார் ராஜபட்ச. தன்னை மீண்டும் அரசியலுக்கு வரச் செய்ய பலரும் முயற்சி செய்வதாகக் கூறுகிறார் ராஜபட்ச. அதிகாலையிலிருந்து இரவு வரை மக்கள் என்னைப் பார்க்க வருகின்றனர். இதுவே எனது புதுவாழ்க்கை. அவர்கள் என்னை அரசியலுக்கு மீண்டும் வருமாறு கோருகின்றனர். எனக்கு எதிராக வாக்களித்ததற்காக மன்னிப்பு கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நான் அவர்களிடம் என்னை ஓய்வெடுக்க விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்கிறார் ராஜ்பட்ச. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள ராஜபட்ச, நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாத நிலையை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. மக்கள் தங்கள் துயரங்களை தெரிவிப்பதற்கு எங்கே செல்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ராஜபட்ச, மக்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம். நான் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கெனவே தனது தோல்விக்கு இந்திய அமெரிக்க நாடுகளைக் குற்றம் சாட்டிவரும் ராஜபட்ச, சீனாவில் இருந்து வெளியாகும் ஊடகத்தில் இத்தகைய திடீர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பயணம் செய்து வரும் நிலையில், ராஜபட்சவின் பேட்டி சீன ஊடகத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என் தோல்விக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தூதரகங்களை பயன்படுத்தின: ராஜபட்ச
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories