உலகக் கோப்பையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி இன்று எதிர் கொண்டது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதிக்கு தகுதிப் பெற்றுவிட்டதாலும் ஜிம்பாப்வே அணி காலிறுதிக்கு செல்லும் தகுதியை இழந்துவிட்டதாலும் ஆட்டத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.
நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானம் சிறிய பவுண்டரிகளுக்குப் பெயர் பெற்றது. எனவே இந்திய அணி டாஸ் வெற்றி பெற்றால் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் டாஸ் வென்ற தோனி ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இந்த உலகக் கோப்பை முழுவதும் நன்றாக பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இதிலும் அருமையாகத் துவங்கினர். சிறிய மைதானம் என்றாலும், துவக்கத்தில் அவர்களால் ரன்கள் அடிக்க இயலவில்லை. ஹேமில்டன் மசக்ட்ஷா யாதவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுக்க அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க ஆட்டக்கரார் சிபாப்வா ஸ்லிப்பில் இருந்த தவனிடம் கேட்ச் கொடுத்தார்.
வழக்கமான பேட்டிங்கை மாற்றி பந்துவீச்சாளரான மிரே மூன்றாவது ஆட்டக்காரராக களம் புகுந்தார். ஆனால் இந்த யுக்தியும் பலிக்கவில்லை. அவரை மொஹித் சர்மா பெவிலியன் அனுப்பினார். இதன் பின் சென்ற ஆட்டத்தில் சதமடித்த பிரெண்டன் டைலரும் , ஷான் வில்லியம்சும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்க்கத் துவங்கினர். கடந்த ஐந்து ஆட்டங்களாக சுழலில் கலக்கிய அஸ்வினின் பந்து வீச்சு ஆக்லாந்தின் சிறிய மைதானத்தில் எடுபடவில்லை. மேலும் வழக்கமாய் பந்து வீசுவதை விட வேகமாய் பந்து வீச , அது பேட்ஸ்மேனுக்கு உதவியாக அமைந்தது.
இருவரும் இணைந்து 93 ரன்கள் எடுத்திருந்த பொழுது வில்லியம் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் அது டைலரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை . தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 99 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி 138 ரன்கள் எடுத்த நிலையில் மொஹித் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்தவர்களில் யாரும் நின்று ஆடாதக் காரணத்தால் 287 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஷமி , யாதவ், மொஹித் மூவரும் தலா மூன்று விக்கெட்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் சதமடித்த டைலர் இதோடு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறார் என்பதுக் குறிப்பிடத்தக்கதாகும்
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் புகுந்த இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சிக் கொடுத்தனர் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள். ரோஹித் ஷர்மா விக்கெட்டையும் தவான் விக்கெட்டையும் பன்யங்கரா கைப்பற்றினார். அதன் பின் களம் இறங்கிய விராத் கொஹ்லி , ரஹானே ஜோடி நிலைமையறிந்து நிதனாமாக ஆடத் துவங்கினர். இருவரும் நிலைத்து ஆடத் துவங்கிய நேரத்தில் ரன்னே இல்லாத இடத்தில் ரன் எடுக்க முயன்ற ரஹானே ஒழுங்காக பேட்டை க்ரீசினுள் வைக்காதக் காரணத்தினால் நூலிழையில் ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் கொஹ்லியும் ராஜாவின் பந்தில் ஆட்டமிழக்க இந்த உலகக் கோப்பையில் முதல் தோல்வியை இந்தியா சந்திக்குமோ என்று எண்ணத் துவங்கினர் இந்திய ரசிகர்கள்.
இதன் பின்னர் ஐந்தாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தோனியும் ரைனாவும் முதலில் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக சேர்த்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து சிக்ஸ் அடிக்க முயன்ற ரைனாவின் பேட்டின் மேல் விளிம்பில் பட்டு பைன் லெக் திசையை நோக்கி செல்ல , எளிதான ஒரு கேட்சை மசக்ட்ஷா கோட்டை விட்டார். அதன் பின் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி தேவையான ரன்களை குவித்தனர். ஓவருக்கு எட்டு ரன்கள் தேவை என்ற கட்டத்தில் இருந்து சரிக்கு சரியாக மாறிய நிலையில் ரைனா உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் சதம் அடித்தார். அவர் சதம் அடித்தப் பின் தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா தனது ஆறாவது வெற்றியை ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் ருசித்தது.
மெல்போர்ன் மைதானத்தில் அடுத்த வியாழனன்று நடக்க இருக்கும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணியை எதிர்த்து விளையாட உள்ளது.



