Home Blog Page 6337

விருச்சிகம்

8-vruchikamவிருச்சிக ராசி : விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.  எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டில் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். இந்த ஆண்டு கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச் செய்வார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இது நாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும் ஏழரை நாட்டு சனி பகவான் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம். பரிகாரம்: முடிந்த போதெல்லாம், அல்லது செவ்வாய் கிழமைகளில் மட்டுமாவது துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும். செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகுகாலத்தில் படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.

துலாம்

7-thulamதுலா ராசி : சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம்-1, 2,3 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


“துலாத்தான் எங்கும் உண்டு” என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் வருஷம்: இந்த ஆண்டில் உங்களின் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டு எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. இந்த ஆண்டு வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள். பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.   மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.   பரிகாரம் : முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். முடிந்தவரை “ராமராம” மந்திரஜெபம் பாராயணம் செய்யவும். ஐந்தெழுத்து மந்திரத்தை அவ்வப்போது ஓதுதலும் நன்மையே. எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.  

கன்னி

6-kanniகன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


“கன்னியான் ஏய்க்கப்படுவான்” என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த வருடத்தில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். இந்த ஆண்டு உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.   மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.   பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள். புருஷ சூக்தம் பாராயணம் செய்யவும். துளசியை பெருமாளுக்கு படைத்துவர வாழ்வில் புத்தொளி பிறக்கும்.  

சிம்மம்

5-simmamசிம்ம ராசி : மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


“ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்” என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.  எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டு இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள். கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனாலும் முருகக் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இக்காலகட்டம், உங்களை கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பார் சனி பகவான். நெடு நாளைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும், பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும். த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும். செந்தாமரை மலரை அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும்.

கடகம்

4-katakamகடக ராசி : புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


“Cancer is Sensitive” என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள்.  எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டு கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும். உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகு உண்டாகும். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். தினசரி 108 முறையாவது “ராம’ நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும். மல்லிகை மலரை சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.

மிதுனம்

3-mithunamமிதுன ராசி : மிருகசீரிஷம் மூன்றாம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்-3ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டு, உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். “பங்குச் சந்தை’ முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க ஆறாமிட சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். “சாமர்த்தியசாலி’ என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் நாடி விதிப்படி சனி சஞ்சரிப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள். பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய விநாயகர் அகவல் துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும். மரிக்கொழுந்து மலரை ஏதேனும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் லக்ஷிமிக்கு சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

2-rishapamரிஷப ராசி : கார்த்திகை இரண்டாம் பாதம் முதல், ரோஹிணி, மிருகசீரிஷம்-2ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


“எருதொடு மாறேல்” என்ற கூற்றுப்படி – எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.  எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உங்களின் ஏழாம் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். அவரால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த ராசி வாசகர்களில் சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல “சாதகமான’ நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது. இந்த ஆண்டு உங்களின் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் தனது 11ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மை தோன்றும். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி பெரும்பாலான ரிஷப ராசி நேயர்களுக்கு உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். உங்களின் ஐந்தாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தை தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள். பரிகாரம் : முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும். “கோளறு திருப்பதிகத்தை’ அன்றாடம் பாராயணம் செய்வது நல்லது. தாமரை மலரை பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும்.

மேஷம்

1-meshamமேஷ ராசி : அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே, எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் வருஷம்: இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதிசாரமாக உங்கள் ஜன்ம ராசியில் இருந்து பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். புதியவர்களின் நட்பு ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இந்த  ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆனாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள். பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.  “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும். பாயாசம் செய்து அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும்.

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!

சில பொதுவான குறிப்புகள்:

  1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

  2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

  3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

  4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

  5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

  6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

  7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

  8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

  9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

  10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

  11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

  12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

  13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

  14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

  15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

  16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

  17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா – இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

  18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

  19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

  20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

  21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

  22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

  23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

  24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

  25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

  26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

பித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்!

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன. இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் – தேவர்கடனும் பிதிர் கடனும். நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்? நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தான் என்று ஐம்புலத்து ஆ(று) ஓம்பல் தலை

  • என்பது திருவள்ளுவர் வாக்கு

எனவே, பித்ருக்களின் ஆசி கிடைத்தால், நல்லது நடக்கும், அவர்களுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து, அவர்களின் ஆசிகளைப் பெறுதல் முக்கியம்.