pola festival1 - 2026

மஹராஷ்டிரா மாநிலத்தில் சிராவண அமாவாசையன்று விவசாயிகள் காளை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘போளா’ திருவிழா கொண்டாடுகின்றனர்.

காளை மாடுகளுக்கு அற்புதமாக அலங்காரம் செய்து அமாவாசையன்று மாலை பொது இடத்தில் கூடி காளை மாடுகளுக்கு பூஜை செய்வர். மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற பிரசாதமான ‘பூரண் போளி’ யை மாடுகளுக்கு பிரசாதமாக வழங்குவர்.

சிறந்த காளை மாடுகளுக்கு பரிசும் வழங்குவர். பின்னர், விவசாயிகள் தங்கள் காளை மாடுகளை ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்து வருவர்.

மக்கள் காளை மாடுகளுக்கு பூஜை செய்து, விவசாயிகளுக்கும் இனாம் கொடுப்பர். விவசாயிகளுக்கு எத்தனை துயரம் இருந்தாலும், போளா பண்டிகையை மிகவும் உற்சாகமாகவே கொண்டாடுவர்.

அமாவாசையின் அடுத்த நாள், குழந்தைகள் பங்கேற்கும் ‘தான்ஹா போளா’, குறிப்பாக விதர்பா பகுதியில் ( இந்த வருடம் இன்று) கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மரத்தாலான காளை பொம்மைகளை, அலங்காரம் செய்து பொது இடத்தில் கூடுவர். மிக அருமையான அலங்காரத்துடன் சிறார்கள், பண்டிகையை கொண்டாடுவதே, கண்ணிற்கு விருந்து.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
pola festival - 2026

தற்போது, சமுதாய விழிப்புணர்வு வாசகங்களையும் ‘தான்ஹா போளா’வின் வாயிலாக வலியுறுத்துகின்றனர். சிறந்த அலங்காரம் செய்த குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.

இத்திருவிழா மூலம் குழந்தைகளுக்கு விவசாயத்தில் காளை மாட்டின் பங்கினை அறியச் செய்கின்றனர். குழந்தைகளும் தத்தம் நந்திகளுடன் எல்லோர் வீட்டிற்கும் விஜயம் செய்வர்.

  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending