அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்து… கொடுக்க முடியாத சோகத்தில் திரும்பிய போஸ்ட்மென்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
postman in anbazhagan house - 2026

இன்று காலமான திமுக.,வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் இன்று அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பினாராம்.

அன்பழகன் அண்ணாநகர் வீட்டில் இருந்தாலும் சரி, தற்போது இருக்கும் கீழ்பாக்கம் வீட்டிலும் சரி தினசரி தபால் கொண்டு வருபவர், போஸ்ட்மேன் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் அன்பழகனுக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை பணிக்கு வந்தபோதுதான் க.அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு, அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு சோகத்துடன் வந்தார் சிதம்பரம்.

ஆனால் அங்கே ஏகத்துக்கும் கூட்டம். தாமும் அவர்களைப் போல், வரிசையில் நின்று சென்றால் தனது வேலை பாதிக்கும்; மற்ற தபால்களை விநியோகிக்க முடியாது என்பதால், போலீஸாரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

ஆனால் போலீசாரும் உள்ளே விடவில்லை, கட்சிக்காரர்களும் அவருக்காக பரிந்து கொண்டு வரவில்லை! 20 வருட அன்னியோன்னியத்தை எடுத்துக் காட்ட வழியின்றி சோகத்துடன் இருந்த சிதம்பரம், எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு மீண்டும் மீண்டும் போலீசாரிடம் கெஞ்சினார். ஆனால் பலன் கிட்டவில்லை.

வேறு வழியின்றி, தன் கையில் இருந்த மாலையையும் அன்பழகனுக்கு வந்த தபாலையும் போலீசாரிடம் கொடுத்துவிட்டு, நீங்களே என் சார்பில் இந்த மாலையைப் போட்டு விடுங்கள்… என்று கூறிவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தார் போஸ்ட்மேன் சிதம்பரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.