ஆன்லைன்ல டாஸ்மாக் சரக்கு விக்கிறாங்கன்னு நம்பி ஏமாந்துடாதீங்க…! TASMAC இல்ல… அது போலியாம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
tasmac 2 - 2026

போலி டாஸ்மாக் லிங்க் குறித்த செய்திதான் இப்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்று இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் ‘லிங்க்’ போலியானது என்று தெரிவித்துள்ள சென்னை காவல் துறையினர், மதுவிற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு, தொடர்ந்து பொதுமுடக்கம், பல்வேறு கடைகளும் மூடப்பட்ட நிலையில், குடிமகன்கள் ரொம்பவே திண்டாடிப் போய்விட்டனர். இது பலருக்கு மனநலம் சார்ந்த மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சிலர் கவலை தெரிவித்தனர்.

tasmac shop at kumari
tasmac shop at kumari

இந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் கடைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டதால் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் மனு முழுமையாக நிரப்பப் படவில்லை என்றும், கோளாறு இருப்பதாகவும் கூறப் பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மதுபான விற்பனை ஆன்லைனில் தொடங்கி விட்டதாகவும், அதற்காக இணையதள முகவரி இதுதான் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு லிங்க் வைரலாகப் பரவியது.

இது குறித்து தகவல் தெரிவித்த டாஸ்மாக் நிறுவனம், ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் ‘லிங்க்’ போலியானது என்றும் தெரிவித்தது.

இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலியான லிங்கை தடை செய்துள்ளனர். எனவே இது போன்று யாரும் போலியாக மதுபானங்கள் வாங்கித் தருவதாகவோ, ஆன்லைனில் பதிவு செய்தால் வீடு தேடி வரும் என்றோ கூறினால் அதனை நம்பவேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.