
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்து நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து, புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை முழுவதும் கரையை கடந்தது.
அப்போது, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
புயல் கரையைக் கடந்ததை அடுத்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…
புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது. புயல் தற்போதுவரை தமிழகத்தின் நிலப்பகுதியில் தான் உள்ளது. காற்றும், மழையும் தொடரும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிர புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும் என்று கூறினார்.

மேலும், அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து நிலப்பகுதிக்கு செல்லும். வட தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என அவர் அறிவித்தார்.
மழை புயல் சேத நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்த விவரங்கள் அறிய குழுக்கள் அமைக்கப்பட்டு முதல்வர் பின்னர் அறிவிப்பு வெளியிடுவார் என்றார் அமைச்சர் உதயகுமார்.
புயல் கரையைக் கடந்தாலும், சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
நிவர் புயல் கரையைக் கடந்த போது, கனமழை காரணமாக, சென்னையில் பல குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதை அடுத்து, மக்கள் வீட்டின் மேற்பகுதியில் பாதுகாப்பாக தங்கினர். முடிச்சூரில், வரதராஜபுரம், லட்சுமிநகர், மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் மின்கம்பிகளில் விழுந்து, அவை அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், பெரம்பூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே ஏரி நிரம்பி ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, மழை நீர் ஊருக்குள் புகுந்தது. அதிகாலையில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஏரி நீர், கால்வாய் போன்று ஓடுவதால், மக்களால் வெளியே வரஇயலவில்லை.
இதனிடையே இன்று காலை, நிவர் புயல் பாதிப்புகள் குறித்தும் நிவாரண உதவிகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என இரு மாநில முதல்வர்களிடம் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியுடன் பேசினேன். மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணியில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.