வாக்கு சேகரிப்பில் இறங்கிய சுந்தர் சி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
sundar c - 2026

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.

கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளரான குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குஷ்பு திமுக, காங்கிரஸில் இருந்த போது அரசியல் ரீதியாக தலைகாட்டாமல் இருந்து வந்த அவருடைய கணவர் சுந்தர் சி, முதன் முறையாக குஷ்பு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளதால் அவருக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே மனைவி குஷ்புவுடன் சேர்ந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்த சுந்தர் சி, நேற்று ஆயிரம் விளக்கிற்குட்பட்ட சூளைமேட்டில் தனி ஆளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்த சுந்தர் சி, அங்கிருந்த பெண்களிடம் தனது மனைவிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

மற்றொருபுறம் பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளரான குஷ்பு நமச்சிவாயபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரைக்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ‘ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடையே தனக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இப்பொழுது தான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் என மக்கள் தன்னிடம் கூறியதாகவும்” தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.