பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குங்கய்யா..: கெஞ்சும் தென்மாவட்ட மக்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
train traffic issue - 2026

கடந்த வருடம் கொரோனா கால நெருக்கடி, ஊரடங்கு, தடைகளைத் தொடர்ந்து, ரயில் சேவைகளும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயின. தொடர்ந்து, நாடு முழுதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டது. இந்தக் கால கட்டத்தில் ரயில் பாதைகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஓரிரு மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கின என்றாலும் பாசஞ்சர் ரயில்கள் முற்றிலும் நின்று போயின.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டன. பொதுப்பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

பிற மாநிலங்களில் பாசஞ்சர் ரயில் சேவை தொடங்கினாலும், தெற்கு ரயில்வே தமிழகத்தில் பாசஞ்சர் ரயில்களை இன்னும் இயக்கவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப் படுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும், 200 கி.மீ. தொலைவுக்கு மேல் இயக்கப்பட்ட மதுரை-புனலூர் பாசஞ்சர் ரயில், மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் ரயில், நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரயில் ஆகியன எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இணைப்பு ரயிலாக இயக்கப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துக்குடிக்கான பெட்டிகள் இணைக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துக்குடி பெட்டிகள் இணைக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரயிலில் இரு மார்க்கங்களிலும் நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசிக்கு இணைப்பு ரயில், மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு இணைப்பு ரயில் என இயக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைந்தனர். ஆனால், இந்த இணைப்பு ரயில்கள் சேவை இப்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

train traffic issue1 - 2026

மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 3 சேவைகள், செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் 4 சேவைகள், திருநெல்வேலியில் இருந்து கொல்லத்துக்கு ஒரு சேவை, மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு 2 சேவைகள் என இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கும் இயக்கப் பட்டு வந்த பாசஞ்சர் ரயில்களும் நிறுத்தப் பட்டுவிட்டன.

கடந்த 2014-ம் ஆண்டு திருச்செந்தூரில் இருந்து பழனி வரை அகல ரயில்பாதையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது. அதுவும் நின்று போனது.

இந்நிலையில், காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லாத டெமு ரயில் சேவை தொடங்கியுள்ளது போல, பிற பகுதிகளுக்கும் பாசஞ்சர் ரயில் சேவையை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தொடங்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் ரயில்வேக்கு கோரிக்கைகள் கொடுக்கப் பட்டும், அழுத்தம் தரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பாசஞ்சர் ரயில்சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.