மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நான் நாட்டில் இருந்து கிளம்பும் முன் சந்தித்தேன் என்று மல்லையா கூற, அது அரசியல் ஆனது. தொடர்ந்து நான் அப்படி அவரை சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் அவர் எம்பி., என்ற முறையில் வெறுமனே பார்த்ததுண்டு என்றும் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.
அருண்ஜேட்லியின் விளக்கத்தை தொடர்ந்து, அவருடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை என விஜய் மல்லையா இப்போது மாற்றிக் கூறியுள்ளார். நாட்டில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், கடனை திருப்பி செலுத்துவது குறித்து பேசியதாகவும் மல்லையா நேற்று லண்டனில் தெரிவித்ததன் அடிப்படையில் அரசின் மீது எதிர்க் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன.
ஆனால் மல்லையாவை சந்திக்க தாம் ஒருபோதும் நேரம் ஒதுக்கவில்லை என்றார் அருண் ஜேட்லி. மாநிலங்களவை எம்.பியாக இருந்த மல்லையா, ஒரு நாள், அவை முடிந்து தாம் அறைக்கு திரும்பிய போது, தமக்கு பின்னால் ஓடி வந்து ஏதோ பேசியதாக அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
வங்கி கடன்களை செலுத்த சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாக மல்லையா கூறியதாகவும், அதை வங்கி நிர்வாகங்களிடம் பேசிக் கொள்ளுமாறும் தாம் கூறியதாக அருண் ஜேட்லி கூறினார். இதைத் தொடர்ந்து, அருண்ஜேட்லியை தாம் முறைப் படி சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் எதேச்சையாக சந்திக்க நேரிட்டது என்றும் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார்.