thangatamilselvan admk - 2026

சென்னை: கரூரைச் சேர்ந்த செந்தில்பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் ஐக்கியமான சூழலில், தினகரனின் அமமுக.,வின் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன், அமமுக.,வை கலைப்பதற்கு ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார்.

திமுக., பக்கம் போவாரா அல்லது அதிமுக.,வுக்கு தாவுவாரா என்று பலத்த விவாதங்களுக்கு மத்தியில், நேற்று தாம் அதிமுக.,வுக்கு போக மாட்டேன், என்றுமே அமமுக.,தான் என்றார். இந்நிலையில் புதிதாக ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ‘சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம்’ என்பதுதான் அவரது இன்றைய வேண்டுகோள்!

பதவிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து தங்களது அரசியல் நிலைபாடு குறித்து விவாதித்தனர்.

அமமுக.,வில் தினகரனின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக திமுகவில் இணைந்தார். இதனால், அமமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்கள்தான் இப்போது சசிகலாவுடனான சந்திப்பு வரை சென்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அமமுக கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் நிலைபாடு என்ன என்றும் விவாதிக்கப் பட்டதாம்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

இதனிடையே, செந்தில் பாலாஜியை தொடர்ந்து தினகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரரான தங்க தமிழ்செல்வன் குறித்து ஒரு செய்தி உலா வந்தது. சசிகலாவுடனான இந்த சந்திப்பில் திருப்தி இல்லை என்றால் அவர் திமுக பக்கம் சாய்வதா? அல்லது அதிமுக பக்கம் சாய்வதா? என்ற குழப்பத்தில் உள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், தங்க தமிழ்செல்வனோ நான் சசிகலா, தினகரனின் விசுவாசி. எனவே அதிமுகவுக்கோ திமுகவுக்கோ தாவ மாட்டேன். என் பணி அமமுகவில் தொடரும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் ‘சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் சசிகலா, தினகரன் தவிர அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்ற யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள் என்று கூறியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending