சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப் பட்டது உண்மை: விசாரணை ஆணையம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
DIG Rupa SASIKALA - 2026

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டியிருந்தார். 

இதை அடுத்து, இது குறித்த விசாரணைக்கு அப்போதைய கர்நாடக முதலவர் சித்தராமையா உத்தரவிட்டார். பரபரப்பான குற்றச் சாட்டு தெரிவித்ததால், டி.ஐ.ஜி. ரூபாவை பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக பணி மாற்றம் செய்தது அரசு.

தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான விசாரணைக் குழு, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில்…

சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஓர் அறைக்கு 4 பெண் கைதிகள் இருக்க வேண்டிய சூழலில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியதால் மற்ற அறைகளில் கூடுதலாக பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர்..

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

சசிகலா இருந்த அறைக்கு திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தது ஏன் என்ற கேள்விக்கு, அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுப்பதற்காகத்தான் திரைசீலைகள் போடப்பட்டது என சிறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

சமையலுக்கு தேவையான குக்கர் உள்ளிட்ட பொருள்கள் சசிகலா அறையில் இருந்ததாக ரூபா கூறிய புகார் குறித்து ஆய்வு நடத்தப் பட்டது. ஆய்வு நடந்த போது குக்கர் உள்ளிட்ட பொருள்கள் இல்லை என்றாலும், அறையில் சமையலுக்கான மஞ்சள் தூள் உள்ளிட்டவை காணப்பட்டன. இதன் மூலம் சிறையில் சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சசிகலா, இளவரசி ஆகியோர் கைப்பையுடன் வெளியே சென்று வந்த வீடியோ குறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடத்தியது. அதன்படி அவர்கள் பார்வையாளர்களை சந்தித்தாகக் கூறி சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு இருந்தது. 

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எண்ணி சலுகைகள் வழங்கப் பட்டதாக சிறைத்துறையினர் கூறினர். எனவே சிறை வளாகத்தில் சொந்த உடை அணிய சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது… என்று விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதுபோன்று பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் விசாரணைக் குழு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.