திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது

Published:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கந்தசஷ்டி திருவிழா

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

தங்க ரதத்தில் வீதி உலா

முதலாம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

2-ம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.

5-ந் தேதி சூரசம்ஹாரம்

6-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

திருக்கல்யாணம்

7-ம் திருநாளான 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img