
சுவாமி மணவாள மாமுநிகள் அவதரித்த அழகு திகழ்ந்திடும் ஐப்பசி திருமூலம் திருநாளான இன்று சகல வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாய்மொழி ஈடு முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை, திருவரங்கம் பெரிய கோயிலில் சுவாமி நம்பெருமாளுக்கு, மாமுநிகள் சாதித்தது, சுவாமியின் வைபவத்தில் முக்கியமானது. பரிதாபி ஆண்டு, ஆவணி 31-ம் தேதி, சுக்ல சதுர்த்தி, சுவாதி நட்சத்திரம் கூடிய, வெள்ளிக்கிழமை (16.9.1432) அன்று சுவாமியின் காலட்சேபம் தொடங்கியது. பிரமாதிச ஆண்டு, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், பவுர்ணமி திதி, ஞாயிற்றுக்கிழமை (9.7.1433) அன்று காலட்சேபம் நிறைவுற்றது. அன்று எம்பெருமான் ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ற ஸ்லோகத்தை வெளிப்படுத்தினார். பின்பு மூலஸ்தானத்துக்குள் சென்று அந்த சிறுவன் மறைந்தான்.
மாமுநிகளை குருவாக ஏற்று, தாம் சீடராக ஓராண்டுக்கு இருந்து ஈடு முப்பத்து ஆறாயிரப்படியைக் கேட்ட சுவாமி நம்பெருமாள், அந்த நிகழ்வு நிறைவுற்ற நாளில், மாமுநிகளை வணங்குகிறேன் என்று இந்த ஸ்லோகம் மூலம் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய பெருமை மணவாள மாமுநிகளைத் தவிர வேறு எந்த ஆசார்யருக்கும் கிட்டாதது.
உடையவரின் மறு அவதாரமாக வைணவர்களால் போற்றப்பட்ட ஸ்ரீ மணவாளமாமுனிகள் அவதரித்த தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கம் உட்பட சகல வைணவத் தலங்களில் சிறப்பு மங்களாசாசனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கநாதரின் குருவாக பார்க்கப்படுகின்றவர், அதனால் தான் தன் குருவான மணவாள மாமுனிகளுக்கு அரங்கநாதனே மணவாளனாக சிறு குழந்தை வடிவில் வந்து தனியன் சமர்பித்தார்.நம்மாழ்வார் உலகுக்கு அருளிய நாலியிரத்தை நிறைவு செய்தது இவர் தான்.சமய பேதம் இருந்த பொழுது வைணவத்தை உலகில் தழைக்கச் செய்தவர்
ஆதிசேஷனின் அம்சம், உடையவரின் மறு அவதாரம் என போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகளை போற்றுவோம், வணங்குவோம்….
ஆச்சார்யான் திருவடிகளே சரணம்,கருணை பொங்கிய கண்ணினை வாழியே!!பொய்யில்லாத மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என பலரும் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தியது கண்கொள்ளாக் காட்சியாகும்.