
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே இருக்கிறது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டை. இங்கு ஸ்ரீ ராமானுஜரால் மறுஉருவாக்கப்பட்ட ஸ்ரீ செல்வநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி வைரமுடி சேவை உற்சவம் மிக முக்கியமானது.இவ் விழா இன்று இரவு துவங்கி நாளை வரை நடைபெறும்.
பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் விழா இது. நடப்பாண்டு இவ்விழா மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை பெருமாள் வைரமுடி சேவை கண்டருள்வார். அரசு கருவூலத்தில் இருந்து இரு நாட்களுக்கு முன் பாதுகாப்புடன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்ட வைரமுடியை வழிநெடுக மக்கள் தரிசித்தனர்.
இன்று மாலை இக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் சன்னதியில் வைரமுடி வைக்கப்படும். பின்னர் கருட வாகனத்தில் வீற்றிருக்கும், உற்சவர் ஸ்ரீ செல்லப்பிள்ளை பெருமாளின் திருத்தலையில் வைரமுடி பொருத்தப்படும். நாளை அதிகாலை 3 மணியளவில் திருவீதி உலா நிறைவுற்றதும், மீண்டும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
தொடர்ந்து ஏப்ரல் 8-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கருடசேவை, கல்யாண உத்சவம், நாகவல்லி மகோத்சவம், மகரோத்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.